அன்பு நண்பர்களே, வணக்கம்.
மந்திரமும் மாந்த்ரீகமும் என்பதனை பற்றி பார்க்கலாம் .
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமசிவாயமே என்றார்கள் மேலோர்.
வேதங்கள் நான்கினையும் உள் ஆய்ந்து பார்க்கையில் அதிலே மெய்ப்பொருளாக காணப்படுவதும்,
வேதம் முழுமைக்கும் காரணமாக இருப்பதுவும் கால தேவனாகிய சிவபெருமானின் பஞ்சாட்சரமே என்கிறார்கள் மேலோர் .
அப்படி என்றால் வேதம் என்பதே முழுக்க முழுக்க மந்திரமானது எனப் பொருளாகின்றது .
ரிக் வேதம் காலத்தால் மிகவும் முன்னதானது, தொடர்ந்து யஜுர் வேதம் , சாம வேதம், அதர்வண வேதம் ஆகியவை சேர நான்கும் வேதங்களானது, இதனை நான்மறை என்பர்.
முழுக்க முழுக்க தேவநாகரி மற்றும் சமஸ்க்ருத மொழியால் உருவானவை நான்கு வேதங்களாகும், இன்றைக்கும் ஒருசில நாடி ஜோதிட நூல்கள் தேவநாகரி மற்றும் க்ரந்த எழுத்துக்களால் அமைந்திருப்பதை காணலாம்.
உயிர் சொல்லின் உருவாக்கமாகவே அனைத்து மந்த்ரங்களும் அமைந்திருக் கின்றது.
ஐம்பூத அசைவினை வகைப்படுத்தியும், வசப்படுத்தியும் தரவல்லதாக உள்ள எழுத்துக்களின் தொகுப்பாக மந்திரங்கள் உருவாகி இருக்கிறது.
இயற்கையின் ஒவ்வொரு அணுவிலும் இலகுவில் கலந்து கொள்ளக் கூடியதாக மந்திர சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளதை உணர முடிகின்றது.
பல்லாயிரம் கோடி எழுத்துக்களை உலகுக்கு அருளிய மேலோர்கள், அதனை செயலாக்கம் தரும் வண்ணம் வகைப்படுத்தினார்கள், அவையே நான்கு வேதங்களாக பரிணமிக்கின்றன.
நான்கு வேதங்களும், இறைவனை போற்றிப் புகழும் பொருள் தருபவையாக அமைந்துள்ளதாக தோன்றிய போதிலும், அவை பூமியின் சுற்றுச்சூழலையே மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி கொண்டவையாக அமைந்து இருக்கின்றன.
உதாரணமாக , போபால் விஷவாயு கசிவின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு குடும்பம் மட்டும் (அந்த வீட்டில் ஏதோ ஹோமம் நடந்ததால் அவர்களை அந்த விஷவாயு சிறிதேனும் கூட தாக்கவில்லை) தப்பித்ததை சொல்லலாம்.
இதுபோல் இன்னும் எத்தனையோ இருக்கலாம் ஆனால் நமக்கு தெரியவில்லை.
ஒவ்வொரு மந்திர சொற்றொடருக்கும், ஒவ்வொரு கிரஹம் முழு காரணியாகின்றது,
ஒவ்வொரு க்ரஹத்திற்கும் ஒவ்வொரு தாவரம் இசைவாகின்றது அதாவது கட்டுப்படுகின்றது.
தாவரங்களைப் போலவே அதனுடைய விதைகள் , கொடிகள் , கிளைகள், தண்டுகள் , இலைகள் , வேர்கள் என அனைத்தும் அதற்குரிய க்ரஹத்திற்கு முழுமையாக கட்டுப்படுகின்றது.
இதனை வெகுகால ஆய்விற்கு பின் கண்டறிந்த மேலோர்கள் , நான்கு வேதங்களுக்கும் அதனை வகை பிரித்து அளித்துள்ளார்கள்.
இதன் வாயிலாகவே அவர்கள் இந்த அதி சூட்சுமத்தை உள் நிறுத்தி அஷ்டமா சக்திகளை இரண்டாக வகை பிரித்தார்கள்.
அவை , மோகனம் , பேதனம் , வசீகரம் , வித்துவேஷணம் , ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம் , மாரணம் போன்றவை அஷ்டமா கர்மாவாகவும் ,
அனிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பவை அஷ்டமா சித்தியாகவும் பிரித்தளித்தனர்.
இந்த அஷ்டமாசக்திகளில் , அஷ்டகர்மாக்களைப் பெற மந்திரங்கள் , தாவரங்கள் மூலமாகவும் , அஷ்டசித்தியைப் பெற மந்திரங்கள் , யோக நிலைப்பயிற்சி களினாலும் பெற முடியும் என்று கண்டுணர்ந்தார்கள்.
அவர்கள் கண்டு வென்றதையே உலகிற்களித்தார்கள்.
முதல் மூன்று வேதங்களினின்றும் முற்றிலுமாக மாறுபட்டது அதர்வண வேதமாகும்.
முதல் மூன்று வேதங்களையும் மிக ஆழமாக உள்ளார்ந்த ஜீவனாக உணர்ந்து பயிலும் போது மாணாக்கனின் மன நிலையில் பலவிதமான சோதனைகளும் , துன்பங்களும் தொடர்கதையாக வந்து வாட்டும் ,
அவ்வாறான வேளையில் மாணாக்கன் மனம் தளர்ந்து விடாமல், ஒரே பிடியாக வேதப் பயில்வினை தொடர்ந்து பற்றிக் கொள்ளும் மனோபலம் பெற மாணாக்கனின் மன வலிமையை கூட்டும் பொருட்டு உருவாக்கப்பட்டதே அதர்வண வேதமாகும்.
அதர்வண வேதம் முற்றிலுமாக தீயவற்றை அழிப்பதே ஆகும்.
அதாவது . .
மாணவனின் பயிற்சியில் மன சஞ்சலப்படாமல் இருக்கும் பொருட்டு பேதனமும், வித்துவேஷணமும் ,
அவனுக்கு அவன் விரும்பும் மந்திரங்களும் அதன் தேவதைகளும் வசமாகும் பொருட்டு வசீகரமும் , மோகனமும் ,
மாணவனின் பயிற்சியின் இடையில் மாணவனுக்கு காற்று, மழை போன்ற இயற்கையின் தாக்குதல்களை நிறுத்தும் வகையில் ஆகர்ஷணமும், ஸ்தம்பனமும்,
மிருகம் , விஷ ஜந்துக்களிடமிருந்து காக்கும் பொருட்டு உச்சாடனமும் , மாரணமும் அருளப்பட்டதுவாம்.
ஏன் இரண்டு, ஒன்றே போதாதா என ஒரு வினா எழுகிறதல்லவா ?
எதிர்ப்பின் தன்மையை பொறுத்து இவைகள் மாறுபடுகின்றன.
பேதனத்திற்கு வித்துவேஷணமும் , வசீகரத்திற்கு மோகனமும், ஆகர்ஷணதிற்கு ஸ்தம்பனமும் , உச்சாடனத்திற்கு மாரணமும் ஒன்றிற்கொன்று வலிதாம்.
இதனை இடம் பொருள் ஏவல் என்பர் , அதாவது தனது பயிற்சிக்கு தடையாக வரும் சக்தியை அதற்கேற்ற வகையில் தடுத்து தனது பயிற்சியை தொடர்தல்
.
இந்த அஷ்டமாசக்திகளை முறையாக பயிலாத சில துன்மார்க்க மாணவர்கள் பின்னாளில் மந்திரவாதிகள் என உலாவருகின்றார்கள் , இவர்கள் பணம் , பொருள் மீது தாம் கொண்ட தீராத அவாவினால் மேலே சொல்லப்பட்ட சித்திகளை தவறாக பயன் படுத்துகின்றார்கள் , தன்னை நாடி வருபவர்களுக்கு ஏற்றாற் போல் நண்பன் , மனைவி , எதிர்ப்பாளர்கள் போன்றவர்களை பிரித்து விடவும், மயக்கவும் , அடக்கவும் , அழிக்கவும் பயன் படுத்துகின்றார்கள் .
இதனை தற்போது மாந்திரீகம் , ஏவல் என்கிறார்கள். இவர்களின் முறையற்ற இந்த செய்கையினால் இவர்களுக்கே பின்னாளில் கடினமான தோஷமும், சாபமும் ஏற்படும்.
இன்று உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து கோடி மந்திரங்களும் வேதத்தின் துளிகளே , இவை உலக மாந்தருக்கு நன்மையை தருவதற்காகவே உருவாக்கப் பட்டவையாகும்.
பொருளுணர்ந்து சொல்லப்படும் மந்திரங்கள் , நம்மை தரம் உயர்த்தும் என்பதில் வேறு கருத்தில்லை .
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
அஷ்டமாசக்திகளை தரும் மூலிகைகள் , மந்திரங்கள் , திசைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
2 comments:
இன்று உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து கோடி மந்திரங்களும் வேதத்தின் துளிகளே , இவை உலக மாந்தருக்கு நன்மையை தருவதற்காகவே உருவாக்கப் பட்டவையாகும்.
சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி , மணிராஜ் .
Post a Comment