அன்பு நண்பர்களே, வணக்கம்.
அனுபவம் ஒரு கவிதை ,
அனுபவம் ஒரு ஆசான் ,
அனுபவம் ஒரு வாழ்வின் தத்துவம்,
அனுபவம் ஒரு எச்சரிக்கை மணி ,
அனுபவமே குரு என்றெல்லாம்
சொல்லப்படுகின்ற
அனுபவம் என்பதை என்னென்று பார்ப்போம்.
அனுபவம் என்பது மனிதர்களின் ஒவ்வொரு
செயலுக்கும் , ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி உண்டாவது ஆகும்.
இருந்த போதிலும் அனுபவமுள்ளவர்களை
கேட்டு அதன்படி செயல்படுவதுதான் சிறந்ததாகும்.
மேலும் , அனைத்தையும் நாமே
அனுபவித்து அறிவதென்பது இயலாததாகும்.
அனுபவத்தின் வாயில்படி (செயல்பாடு)
வெவ்வேறாக அமைந்தாலும் , வெளியேற்றம் (முடிவு) ஒன்றாகத் தான் அமைகிறது.
உதாரணமாக ஒரு துறையில் , பயிலும்
மாணாக்கர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உயர்நிலையை அடைவதில்லை. அனுபவங்கள்
வித்தியாசப்படுவதால்தான் இந்நிலை ஏற்படுகிறது .
அனுபவச் சொல்லை அப்படியே கேட்டு
நடக்கும் மனோபாவம் தற்போது இல்லை என்றாலும் , தங்களுடைய சிற்றனுபவங்களை சேர்த்து
செயல்படுத்தும் போது அவை சில சமயங்களில் வெற்றியையும், பல சமயங்களில் எதிர்பார்த்த
பயன் தராமலும் முடிகின்றன.
இதனை, ஔவையார் “மூத்தோர் சொல் கேள்” என சொல்லிச்
சென்றாள்.
நாம்தான் கேட்கவில்லை , கேட்டிருந்தால் இதனை எழுதும்
அவசியமேற்பட்டிருக்காது.
மூத்தோர் என்பதினை, இப்போது நாம் செயல்படுத்த என்னும்
செயலை இதற்கு முன் செய்தவர்கள் எனக் கொள்ளவேண்டும்.
அதனால் வீட்டில் அல்லது வெளியில் உள்ள வயது
முதிர்ந்தோர் சொல் கேளாதே எனவும் அர்த்தமில்லை.
இதனை இடத்திற்கு தகுந்தார்ப்போல் அமைத்துக்
கொள்ளவேண்டும்.
ஏனென்றால் இப்போதெல்லாம் நாம் அர்த்தங்களை
அனர்த்தங்களாக்கிப் பழகிக் கொண்டோம் .
அப்படிப் பழகியதையே வாழ்க்கையாக்கி கொண்டுள்ளோம்.
ஒருவரின் அனுபவம் என்பது , மற்றவருக்கு தெரியாத ஒரு
விஷயத்தை அவருக்கு தெரிவிக்கின்றதாகும் . அதனை நாமே அனுபவித்து அறிவதென்பது மிக
காலதாமதத்தையும், பொருள் இழப்பையும் உருவாக்கும்.
அதன் பொருட்டே அனுபவம் பெற்றவரிடம் தகவல் பெறுவது நலம்
தரும் எனப்படுகிறது.
ஒருவரிடமே நமக்கு தேவையான எல்லாவிதமான அனுபவ தகவல்களும்
கிடைக்காது , அப்படி கிடைப்பது அபூர்வம்.
தேவையான தகவலுக்கேற்ப அனுபவஸ்தர்களை நாட
கூச்சப்படக்கூடாது , அவர்களும் தகவல்களை தருவதற்கு மறுக்க மாட்டார்கள் , காரணம் அவர்கள் அனுபவஸ்தர்கள்.
தெய்வீக அனுபவம் , வாழ்வியல் அனுபவம் , செய்தொழில் அனுபவம்
, செய்ய என்னும் தொழிலின் அனுபவம் என எந்த வகையிலான அனுபவங்களாக இருந்தாலும் அதனை
கண்டறிந்தவர்களின் அனுபவம் புதியவர்களுக்கு தேவை.
மேலும் அனுபவம் என்பது மிக சிறந்த பயன்தரவல்லதாகும். ஏதும்
அறியாதவர்கள் கூட அனுபவப்பட்டவர்களை நாடி அவர்களின் அனுபவம் பெற்று மிக சிறந்த
நிலையினை அடைந்துள்ளார்கள் .
இந்த நிலையினை ஒரு பாடலில் கவிஞர் ஒருவர் “அகரம் இப்போ
சிகரம் ஆச்சு – தகரம் இப்போ தங்கம் ஆச்சு – காட்டு மூங்கில் பாட்டுப்பாடும்
புல்லாங்குழலாச்சு “ என்கிறார்.
கோடிக்கணக்கான மூங்கில்களில் எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல் ஆவதில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட
மூங்கில்களே புல்லாங்குழலாகின்றன, பிறந்த எல்லோரும் சிறந்த வாழ்வெனும்
வெற்றிக்கனியை சுவைப்பதில்லை, சுவைத்தவர்களின் அனுபவத்தினை கேட்டு அதன்படி
செயல்பட்டவர்களும் வெற்றியடைந்துள்ளார்கள்.
ஆனால் அனுபவம் இல்லாதவர்கள் வெற்றி பெற்றதில்லை, வெற்றி
பெற்றால் அது நிலைப்பதில்லை, காரணம் முன் அனுபவம் இல்லாத காரணத்தினால் வெற்றியை
தொடர்ந்து தனதாக்கிக் கொள்ள தெரிவதில்லை.
அனுபவம் என்றவுடன் பெரிதாக கற்பனையெல்லாம் வேண்டாம் ,
வெறும் சுடுதண்ணீர் வைப்பதற்கு கூட அனுபவம் வேண்டும் இல்லையென்றால் கையை சுட்டுக்
கொள்வோம் எனும் போது மற்றவற்றை எப்படி அனுபவமின்றி செய்வது ?
எல்லாவகையிலும் முதன்மையும், முக்கியத்துவத்தையும்
பெற்றுள்ள அனுபவம் என்பது என்ன ?
என்று மண்டையை குடைந்து யோசித்து பார்த்ததில் கவியரசர்
கண்ணதாசன் அவர்களின் கவிதையை காண நேர்ந்தது ,
அவர் சொல்கிறார்.
இதோ அவரது அனுபவமிக்க அனுபவக் கவிதை :
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான் அறிவது
வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் ? எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
"அனுபவம் என்பதே நான்தான்"
என்றான்!
-கவியரசு கண்ணதாசன்
அடடா
, அனுபவம் என்பது ஆண்டவனுக்கு நிகரானது எனப் புரிந்ததும்
மனம்
நிம்மதி பெற்றது , அதனால்தான் அனுபவம் அதிமுக்கியமானது.
இனி
எந்த செயலையும் அனுபவம் பெற்றோரிடம் கேட்டு செய்வோம் .
எதிலும்
வெற்றி பெறுவோம் ,
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
அன்புடன் கருணாகரன்.
No comments:
Post a Comment