என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, October 3, 2013

கால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


அன்பு நண்பர்களே வணக்கம்.
கால்பங்கு விதியும் , முக்கால்பங்கு மதியும்.

இந்த தலைப்பு எந்தகாலமும் பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத, பொருட்செறிவான நடைமுறை செயல் காரண சொல்லாகும் .

விதியும் மதியும் எனபது நமது வாழ்வின் முக்யமான சொற்றொடர்கள் , இந்த வார்த்தைகளை  பயன்படுத்தாத மனிதர்களோ , ஞானிகளோ , சித்தர்களோ , ரிஷிகளோ , தேவர்களோ ஏன் தெய்வங்களோ கூட இல்லை என்றே கூறலாம்.

அந்தஅளவிற்கு விதியும், மதியும் அனைவரின் வாழ்விலும் பங்கெடுக்கின்றது.

கண்ணுக்கு புலப்படாத விதியின் பேரில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அளவில்லை , யாரேனும் விதியினை பார்த்து கேட்க போகிறார்களா அல்லது விதிதான் நம்மை நேரில் பார்த்து கேட்குமா என்னும் அசட்டு தைரியம்தான் .

எல்லாம் என் கிரக அமைப்பு , கர்மா , விதி , தலையெழுத்து , தலை விதி என்பதெல்லாம் ஒரே அர்த்தத்தைத் தரக் கூடிய அல்லது ஒரே செயலின் வெவ்வேறு பெயர்கள் ஆகும்.

ஒருவன் அல்லது ஒருத்தி  இப்படித்தான் வாழ்வார்கள் , வாழவேண்டும்  என்பது தீர்மானிக்கப்பட்டு அதன்படி அவர்கள் வாழக்கூடிய அல்லது அவர்களை வாழ வைக்கக்கூடிய பெற்றோர் அமையப்பெற்ற குடும்பத்தில்  அவர்கள் பிறந்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட முறைமையோடு வாழ்வார்கள் என்பது ஜோதிட சாஸ்திர விதியாக உள்ளபோதும் ,

வல்லான் வகுத்த விதியினை மீறி எதுவும் நடக்க இயலாது , அதுவே தான் முடிவானது என்றபோதும்,

மனிதர்களுக்கு விதிக்கப்பட விதியினை மாற்றி எழுத, அதை எழுதிய பிரம்மனாலேயே முடியாது என்பது சத்யமான சொல் எனும்போதும் ,

முற்பிறப்பில் உயிரினங்கள் செய்த செய்கைகளின் விளைவே இப்பிறப்பின் உயர்வும் , தாழ்வும். ஆகவே அதனை ஒவ்வொரு உயிரினமும் அனுபவித்தே தீர வேண்டும் என்பது சரியான தீர்ப்பென்றபோதும் ,

ஒரு கர்ப்பவதியானவள் தான் கொண்ட கர்ப்பத்தினை தானேதான் பிரசவிக்க வேண்டும் ,. அதனை எவ்வளவு நெருங்கிய உறவானபோதும் யாருக்கும் மாற்றித் தர இயலாது என்பது போல , தனது வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை மனிதர்கள் தானேதான் அனுபவிக்க வேண்டும் என்பதனை மனிதர்கள் எல்லோரும் நன்குணர்ந்த போதிலும் கூட ,
       
அந்த விதி என்னவென்றே தெரியாமல், உலகில் வாழும் ஒருவன் அல்லது ஒருத்தி, தன்னுடைய எல்லாவகையான தோல்விகளுக்கு மட்டும் விதியின் பால் குறை சொல்வதை,

ஆமாம் விதிதான் காரணம் என்று ஏற்கமுடியுமா ?

இன்னதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று எந்த ஒரு மனிதரும் தெரிந்து கொள்ள முடியாது எனும் போது , விதியினை என்னவென்று அறியாதவரை , அது எப்படி விதியின் விதியாக இருக்க முடியும் ?

நமது அசாதாரண முயற்சிகள் தோல்வியை தழுவினால் , நாம் கடுமையான முயற்சியும் , அதனை செயலாக்க மிக அதிக உத்வேகமும் காட்டாமல் விதி சரியில்லை என கூறலாமா ?.

தான் செய்யும் தவறுகளுக்கும் , தப்புகளுக்கும் விதியின் சாயம் பூசப்படுவது தடுக்கப்படவேண்டும் அல்லவா !

பலமுறைகள் கடும் தோல்வியும் எதிர்ப்பும் கண்டவர்கள் பலரும் மகோன்னத வெற்றி கண்டுள்ளதை சரித்திரம் பாராட்டி பெருமைபடுகிறதே !!
முதல் முறையிலேயே வெற்றிக் கனியை சுவைத்தவர்கள் வெகு சிலரே !!
தெரியாத விதியை எண்ணி நமது முயற்சிகளை நாம் ஏன் நிறுத்திக்கொள்ள வேண்டும் ?

விதி மனிதர்களின் எந்தமுயற்சியையும் செய்யாதே என்று தடுப்பதில்லையே?


நமது முயற்சியில் அல்லது நமது செயலாக்கத்தில் நாம் முழுமையாக ஈடுபாடற்று இருப்பதும் ஒரு காரணமாகாதா ?

முயற்சி செய்யக் கூட முயற்சிக்காதது மனிதனின் முடியாமைதானே ?

இந்நிலையில் . . .

தனது முயற்சியை யாரோ தடுப்பதாக தானே நினைத்துக்கொண்டு அல்லது தனது முயற்சியை விதியே தடுத்து நிறுத்தி வைத்திருப்பதாக எண்ணிக் கொள்வது தவறல்லவா ?

உதாரணமாக :

தனக்கு நீண்ட ஆயுள் உண்டென்ற ஜோதிட நம்பிக்கை உள்ள ஒருமனிதன் ஓடுகின்ற கனரக வாகனத்தில் தலை வைப்பது எப்படி அபத்தமானதோ !

நேரம் தனக்கு மிக நன்றாக இருப்பதாக கருதும் மனிதன் , தொழிலேதும் செய்ய முயற்சிக்காமல் , “ நேரம் நல்லா இருக்கு “ என்று சொல்லிக் கொண்டு  வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எப்படி நன்மையை தராதோ அது போல ,

இது போன்ற தவறான நம்பிக்கைகளால் (கொள்கைகளால்), நமது எண்ணங்களோ , செயல்களோ நிறைவேறாதபோது , நமது மனம் சங்கடப்பட்டு , இறை வழிபாட்டில் நம்பிக்கையுடன் , முழுமன ஈடுபாட்டுடன் செயல்படாமல் சலனப்பட்டு போகும்.

காரணம், மனிதர்களின் இயல்பான சுபாவமே ஒன்றை உயிரினும் மேலாக நேசித்தல் அதன் பயன் தனக்கு உபயோகமில்லாவிடில் அதனை உடனடியாக வெறுத்துவிடும் என்பதாகும்.

மேலும் இதனை ஒரு சாரார் மூட நம்பிக்கை எனும் போது நம்மால் மறுத்து பேச இயலாது போகும் .

அதனால்தான் எதனையும் விதியின் மேல் ஏற்றிவிட்டால் “நான் என்னசெய்வேன் என்னால் முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டேன் எல்லாம் விதி என்று நாம் சுகமாக இருக்கலாம் எனும் மனோபாவம் வளர்ந்து விட்டால், பின்னொருநாளில் இவ்வாறு மன மாற்றம் கண்டு மனிதர்கள் தன்னுடைய சுய தெய்வத்தன்மையை இழந்து விடக்கூடும் எனும் அச்சத்தினால் தான் இக்கட்டுரை பிறந்தது.

1.       விதி என்பது இதுதான் என்று யாருக்கும் தெரியாது

2.       விதியை மாற்றும் வலிமை யாருக்கும் கிடையாது.

3.       விதியை இறைவனின் கருணை இருந்தால் தெரிந்து கொள்ளலாம்

4. விதியை தெரிந்து கொண்டாலும் அதனை மீறி நடக்க மனிதர்களால் முடியாது

இந்த வலிமை மிகுந்த வார்த்தைகளில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் . இவை உண்மை மிகுந்துள்ள வாசகங்கள் .

ஆனால் அதற்காக நாம் முடங்க வேண்டிய அவசியம் என்ன?

சரி , இப்போது விதி எவ்வாறாக செயல்படுகிறதென்று பார்ப்போம்.

விதி என்பது மனிதனின் சுபநலம் அல்லது அசுப நலம் இரண்டிற்கும் பொதுக் காரணியாகும் .

நன்மையையும் தீமையையும் ஒரு விதியே தருகிறது – நன்மைக்கு ஒரு விதியும், தீமைக்கு ஒரு விதியுமாக செயல்படுவதில்லை.

அப்படியானால் நமது தீர்மானத்தில்தான் கொஞ்சம் (?) கோளாறு உள்ளது.

நாம் ஒரு செயலை செய்ய துவங்கும் வரை அமைதியாக காத்திருக்கும் விதி, நாம் செயலாற்ற ஆரம்பித்தவுடன் மளமளவென வரைபடம் தயாரிக்க துவங்குகிறது.

நமது செயல் திட்டம் சரியான இருந்து நமது உழைப்பும் சரியாக இருந்து நாமும் முழு நம்பிக்கையோடு இருந்தால் வெற்றி நமதாகின்றது.

நமது செயல் திட்டம் சரியாக இருந்து நமது உழைப்பும் , நம்பிக்கையும் முழு அளவில் இல்லாதபோது வெற்றி கிடைப்பதில்லை ,

இதனைத்தான் விதி எழுதுகிறது .

நட்டு வைத்தது முள் செடியாக இருந்தால் கங்கை நீர் ஊற்றினாலும் முள் செடிதானே முளைக்கும்.

அவநம்பிக்கையோடு , எனக்கு இதெல்லாம் நடக்காது , என் தலைஎழுத்து , கர்மா , விதி என்கிற தீர்மானமான முடிவோடு நாம் செய்யும் எந்த காரியமும் நடைபெறுவது நிச்சயமில்லைதான் . காரணம் நாம் எதனை அதிகமாக நம்பிக்கையோடு முயற்சிக்கின்றோமோ அதுதான் நடக்கும்

வெற்றி பெறவேண்டும் என்கிற சாதாரண எண்ணமும் ,

நமக்கு தோல்விதான் என்கிற தீவிரமான, நிச்சயமான நம்பிக்கையும் நம்மிடம் வேரூன்றியும் நின்றால் ,

அதுவே நமது வெற்றியின்மைக்கு முழுக் காரணமாகும்.

இப்போது புரிகிறதா ?

ஆக விதியை எழுதுவதே நாம்தான் , ஆனால் ஒவ்வொரு மனிதரும் தனக்கான விதியை தானே எழுதி விட்டு அதனை வேறு யாரோ எங்கிருந்தோ எழுதுவதாக கற்பனையும் செய்து கொண்டால் . . . .

இருட்டில் காற்றில் அசையும் துணியின் நிழலைக் கண்டு பயப்படும் குழந்தையைப் போல . .

மனிதர்கள், இல்லாத விதியினை , - இனிமேல்தான் தன்னால் உருவாக்கப்பட போகின்ற விதியினை – இப்போதே இருப்பதாக எண்ணி பயம் கொள்ளுவதும், அந்த விதிதான் தன்னை இப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது என்றெRண்ணுவதும்  அப்படித்தான் இருக்கின்றது.

விதி என்று ஒன்று உண்டு , ஆனால் அதனை தீர்மானிப்பது மனிதர்கள்தான் , இறைவன் அல்ல , கிரகங்கள் அல்ல .

இறைவனுக்கு இதுவல்ல வேலை , கிரகங்கள், நன்மை தீமை என இரண்டு விதமான கார்யங்களுக்கும் பொதுவானவை .

நன்மையை அல்லது சரியான வழியை தேர்ந்தெடுத்தால் அதன்படியும் , தீமையை அல்லது சரியற்ற வழியை தேர்ந்தெடுத்தால் அதன்படியும் நம்மை வழி நடத்தும் அவ்வளவே . அதைத் தவிர அப்படி செய்யாதே , இப்படி செய்யாதே என்றெல்லாம் கிரகங்கள் தடுக்காது .

விருப்பம் மனிதர்களது , அதனை நிறைவேற்றுவதும் மனிதர்களே , நிறைவேறாமல் செய்து கொள்வதும் அவர்களே .

கால்பங்கு விதியினை , மனிதர்கள் தங்களது முக்கால்பங்கு மதியினால் முழு பங்கு விதியாக்கும் வேடிக்கைதான் இன்றைய நடைமுறையில் காண்கிறோம்.

மனிதர்கள் விதியை சரியாக வகுத்து அதன்படி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் , நன்மையையும், தீமையையும் பகுத்தறியும் பகுத்தறிவு எனும் பேராயுதம் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது .

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள் பெரியோர்.

விதியை மதியால் வெல்லலாம் என்பது விதியாக இருந்தால் வெல்லலாம் என்போரும் உண்டு .

இல்லாத விதியை உருவாக்கி வென்றவன் அர்ச்சுனன் , இருந்த விதியை இல்லாமல் செய்து சென்றவன் கர்ணன் .

கடுமையான தவத்தின் மூலமாக எல்லாவற்றையும் மாற்றி அமைக்கலாம் என்றாலும் அதுவும் அந்த மனிதனேதான் தவம் செய்து மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் தவம் செய்து மாற்றித் தர முடியாது ,

அப்படி எனும் போது . .

முழு மன நம்பிக்கையோடு , தீவிர முயற்சியோடு , வெற்றி பெறுவோம் எனும் எண்ணத்துடன் செயல்பட்டால் எல்லாவித முயற்சிகளும் ஜெயம் பெறும் என்பதே விதியாகும்.

விதியை உருவாக்குவது மனிதர்களே அன்றி வேறுயாரும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வோம் .

சரியான விதியை உருவாக்குவோம் 
வெற்றியை நமதாக்குவோம் , வாழ்வில் அனைத்து நலனும் பெறுவோம் .

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன் .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...