அன்பு நண்பர்களே , வணக்கம்.
ஆசையின் திருமுகம்
ஆசையின் திருமுகம் என்பது எல்லோருக்கும்
அறிமுகமானது , ஆசையின் விளைவினால் உருவாகும் கோரமுகம் என்பது எல்லோரும் உணர்ந்தது.
திருமுகம் என்பதற்கும் கோரமுகம்
என்பதற்கும் உள்ள வித்தியாசம் அனுபவப்பட்டவர்களுக்கு மிக தெளிவாக விளங்கும்.
ஆசையின் ஆரம்பம் எல்லோருக்கும் சுகமாக
இருந்தாலும் , ஆசையின் முடிவு பலருக்கு சுகமாக இருப்பதில்லை.
காரணம், ஆசையின் பின்னே பயணம் போகும்போது, மனிதர்கள் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி சிந்திப்பதில்லை .
பின் விளைவுகளை சந்திக்கும் போது “அடாடா
இப்படியாகிவிட்டதே இனிமேல் அம்மாதிரி நடக்கக்கூடாது” என்று தீர்மானிப்பதும் இல்லை – மாறாக – “விடு
விடு அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்” என்று எண்ணி மீண்டும் ஒரு கோர விளைவுக்கு தங்களை தயார் செய்து கொள்கின்றார்கள்.
ஆசையின் செயல் எவ்வாறு நிகழ்கின்றது ?
ஏன் நம்மை அது பாதிப்பது நமக்கே
தெரிவதில்லை ?
ஆசையின் செயல் எவ்வாறு நிகழ்கின்றது ?
பார்ப்போமா !....
ஆசை என்பது எப்போதும் நம்மிடம் உள்ள எதன்
மீதும் நமக்கு துளியும் வருவதில்லை (அதுதான் நம்மிடம் இருக்கின்றதே) எது நம்மிடம்
இல்லையோ அதன் மீதே நாம் பெரும்பாலும் ஆசையுறுகிறோம்.
நமது ஆளுகைக்கு உட்பட்ட எதனையும் நாம் ஆசைப்படுவதில்லை
. அதற்காக சிரமப்படுவதில்லை ஆனால் நம்மிடம் இல்லாத, மற்றவர்களிடம் உள்ள “எதையும்”
நாம் ஆசைப்பட கொஞ்சமும் தயங்குவதில்லை
இந்த பழக்கம் நமக்கு இப்போது வந்ததல்ல , மனிதர்கள்
ஒவ்வொருவரும் அவர்கள் குழந்தையாக இருந்த போதே அவர்களுள் உருவானதாகும்.
குழந்தைகள் எப்போதும் தன்னிடமுள்ள
விளையாட்டு பொருளைக்காட்டிலும் தனது சகோதரன் அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளிடம்
உள்ள விளையாட்டு பொருளையே கேட்டு அடம்பிடித்து அழும்.
அது மலிவுவிலை பொருளாக இருந்தாலும் அதனையே விடாமல்
கேட்கும். அப்பாவோ , அம்மாவோ எவ்வளவு சமாதானம் சொன்னாலும் சமாதானம் ஆகாது. அதனை
வாங்கித் தந்தோ அல்லது குழந்தையை அடித்தோ அதன் ஆசையை மறக்கச் அல்லது மாறச்
செய்வார்கள்.
இந்த சிறுவயது ஆசை எல்லா வயதிலும் விடாமல் துரத்தி இளமைக் காலம் ,
முதுமைக்காலம் என தொடர்ந்து பேராசையாக வளர்ச்சி பெற்று உருமாறி வருகின்றது.
மேலும் எளிதில் கிடைக்கக்கூடிய எதையும்
மனிதர்கள் ஆசைப் படுவதில்லை, அது லௌகீகமாக இருந்தாலும் , ஆன்மீக , ஞான மார்க்கமாக
இருந்தாலும் மனிதர்கள் ஆசைப்படுவது நடக்கவோ, கிடைக்கவோ, பெறமுடியாததாகவே
இருப்பதைத்தான் ஆசைப்படுகிறார்கள்.
மனிதர்கள் ஆசைப்படுவதை தவறென்று
சொல்லமுடியாது. ஆனால் கிடைக்க முடியாமல் போனால் ஏற்படும் மனவேதனையும் , மன உளைச்சலும்
மனிதர்களின் எல்லாவித முன்னேற்றத்தினையும் தடுக்கும் பின்னாளில் மிகவும்
பாதிக்கும்.
அடுத்து . .
ஏன் ஆசை நம்மை பாதிப்பது நமக்கே
தெரிவதில்லை ?
ஒரு உதாரணம் பார்ப்போம் .
உலகம் உருண்டையாக இருப்பதாக விஞ்ஞானம்
சொல்வதை எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கின்றோம் உண்மையும் அதுதான்.
ஆனால் நாம் நடந்தே உலகை சுற்றி வந்தாலும்
எங்குமே வழுக்கிக்கொண்டு கீழே விழ முடியாது அல்லவா ? காரணம் என்ன ? நாம் அந்த
உருண்டையின் மேலேயே நிற்கிறோம் – உலகை தாண்டி நின்றால்தான் உலகம் உருண்டையாக
தெரியும் – அதனால்தான் நமக்கு உலகம் உருண்டை வடிவமாக எங்குமே தெரியாமல் ஒரு நீண்ட
சதுரமாக தெரிகிறது.
அதுபோலவே முழுக்க முழுக்க ஆசையின் வடிவமாக நாமே
மாறி விட்டதால் , அதீதமான ஆசையின்பால் நாம் ஈர்க்கப்படுவதை உணரவே முடியவில்லை. மேலும்
நமக்கு ஆசையை முறைபடுத்துவதும் இயலாமல் போகின்றது.
நாம் ஆசையோடு இருப்பதையே நாம் உணராமல்
இருப்பது அப்படித்தான்.
இதனைப் படிக்க நேரும் நண்பர்கள் தங்களது
ஆசையை தங்களது கட்டுக்குள் வைப்பார்கள் எனும் அடியேனது எண்ணமும் ஒருவித ஆசைதானே .
ஆசை என்பது ஒவ்வொரு உயிருள்ள ஜீவனுக்கும் கண்டிப்பாக
வேண்டும்.
ஆசையில்லையேல் எதையும் சாதிக்கமுடியாது ,
ஆனால் ஆசையை வகைப்படுத்த தெரிந்தவர்கள் ஆசைப்படுவதே சிறந்ததாகும்.
மனம் எண்ணும் எதன்மீதும் ஆசையை வைத்தால்
ஆசை நிறைவேறாததுடன் வாழ்வும் வளமற்று போகும்.
மனதில் உண்டாகும் ஆசையை வரையறைக்குள்
வைப்பது நம் வாழ்வை வளப்படுத்த நாம் எடுக்கும் முயற்சி.
மனதில் தோன்றும் வரைமுறையற்ற ஆசையின்
பின்னே போவது நம் வாழ்வை சீரழிக்க நாமே எடுக்கும் முயற்சி.
மண்ணாசை , பொன்னாசை ,
பெண்ணாசை மட்டுமல்ல , இறைவா, உன் பதம் தந்தருள்வாய் எனும் ஞானியின் வேண்டுதலும்
ஆசையே அல்லவா?
ஆகவே , ஆசை எதுவானாலும் அதனை நெறியுடனும் ,
முறையுடனும் , யாரையும் , எந்த வகையிலும் , உடலோ, மனமோ பாதிக்காத வகையில்
மனிதர்கள் ஆசைகொண்டு நடப்பார்களேயானால் , அவர்களது ஆசை நிறைவேறுவது மட்டுமல்ல , ஆசையின்
விளைவு திருமுகமாக நிலைத்து நிற்கும் என்பது உண்மை.
முறையற்ற ஆசையின் விளைவுகள் கோரமுகம் காட்டுவது
மட்டுமல்ல , மனித வாழ்வின் இறுதியை நாடச்செய்யும் பேராபத்தை விளைவித்து விடும்
என்பதும் மாறாத உண்மையே.
ஆசைப்படுங்கள் , அது உங்கள்
கட்டுக்குள் இருக்கட்டும். ஆசையின் கட்டுக்குள் நீங்கள் போகாதீர்கள் .
ஆசைப்படுங்கள் , அது உங்கள்
அவசியமானதாக இருக்கட்டும். எதற்கும் இருக்கட்டுமே என்று ஆசைப்படாதீர்கள்.
ஆசைப்படுங்கள் , அந்த ஆசை குறைந்த
ஆயுள் உள்ளதாக இருக்கட்டும் , ஆசை உங்கள் ஆயுளை குறைப்பதாக இருக்கவேண்டாம்.
ஆசைப்படுங்கள் , அது பொது
நலமாக இருக்கட்டும் , ஆசை உங்கள் சுயநலமாக இருந்தால் கண்டிப்பாக அது கோரமுகத்தினை
காட்டிவிடும்.
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
அன்புடன் கருணாகரன்.
No comments:
Post a Comment