அன்பு
நண்பர்களே, வணக்கம்.
வாழ்வென்பது
என்னென்று கொஞ்சம் பார்ப்போம்.
மனித வாழ்வை ஞானிகளும் , ரிஷிகளும் , முனிவர்களும் மாயம் (மாயை)
என்றும், சித்தர்கள் மனித வாழ்வை கிடைத்தற்கரிய பொக்கிஷமாகவும் சொன்னார்கள்.
(அதனால்தான் சித்தர்கள் இறவாநிலை காண விழைந்தார்கள்)
அதற்கு முக்கியமான வேறு ஒரு காரணமும் இருந்தது அதனை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம் .
அதற்கு முக்கியமான வேறு ஒரு காரணமும் இருந்தது அதனை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம் .
வாழ்வென்பது என்ன ?
வாழ்வென்பது மனிதர்கள் உயிரோடிருக்கும் காலத்தை குறிக்கும் ஒரு சொல்.
உயிரோடிருக்கும் போது மனிதர்கள் வாழும் நிலையைத்தான் வாழ்வென்று நாம்
குறிப்பிடுகின்றோம்.
வாழ்வெனும் ஒரு சொல்லுக்குள் மனிதர்களின் வாழ்நாள் முழுமையும் அடங்கி
விடுகின்றது. அதனாலேயே வாழ்வென்பது மிகச்சிறந்ததாக அமைய எல்லோரும்
விரும்புகின்றோம்.
வாழ்வென்பது சிறந்ததாக அமைந்திட விரும்புவது உயிர்களின் உரிமை,
கடமையும் கூட.
உலகில் காணப்படும் அனைத்து உயிரினங்களிலும் வாழ்வெனும் ஒரு இயலில்
பன்முகச் சிறப்பினை காணமுடிகிறது.
பிறப்பிற்கேற்ப ஒவ்வொரு உயிரும் தங்களது வாழ்வினை சிறப்பித்துக்
கொள்கின்றன.
ஓரறிவு என்று நம்மால் சொல்லப்படும் மரங்கள் மனிதர்களால் வெட்டப்பட்டு
உயிரிழந்தாலும், உயிரிழக்கும் அந்த நொடிவரை நிழலைத் தருவதையோ, கனிகளைத் தருவதையோ
நிறுத்துவதில்லை.
மிருகங்கள் நம்மால் கொன்று புசிக்கப்பட்டாலும் , நம்மை மனிதர்கள்
கொன்று புசிக்கத்தான் போகின்றார்கள் எனத் தெரிந்தும் , மனிதர்களோடு (அவர்களின்
வஞ்சகம் உணர்ந்தும்) நட்புடனேயே பழகி மரிக்கின்றன.
நம்மால் வளர்க்கப்படும் பறவையினங்கள் நமக்காக , நமது உறவினர்களுக்காக
தமது அரும் உயிரை ஈந்து நமக்கு விருந்தாகின்றன.
ஒருநாள் வாழ்வினைக் கொண்ட மலர்கள் கூட மனிதர்களின் பூஜைக்கும் ,
கூந்தலுக்கும் மணம் தந்து தனது பிறப்பினை பயனுள்ளதாக்கிக் கொள்கின்றன .
இப்படி ஏதாவது ஒரு வகையில் பிற உயிரினங்கள் வாழ்வென்பதை, வாழ்ந்து
அல்லது மரித்து தன்னால் முடிந்த அளவில் சிறப்புடையதாக்கிக் கொள்கின்றன.
ஆனால் மனிதர்கள் ?????????
இதன் வழியாக இந்த உயிரினங்கள் உலகில் வாழும் சக உயிரான மனிதர்களுக்கு
என்ன சொல்கின்றன ?
வாழ்வியலின் மாபெரும் உன்னதமான ஒரு செய்தியை மனிதர்களுக்கு அவைகள்
மௌனமாக மரணித்து தெரிவிக்கின்றன !
கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் இந்த உயிரினங்கள் , ஒவ்வொரு மனித
உயிரும், மகோன்னத நிலையை அடையும் ஒரு எளிமையான உபாயத்தை , மாபெரும் தத்துவத்தை ,
உயர்ந்த ஞானத்தை , இறைவனை எளிமையாக அடையும் வித்தையை நமக்கு சொல்லாமல் சொல்வது
புரியும் ,
ஆனால் துரதிஷ்டவசமாக அவைகளை நாம் பார்க்கும் பார்வையில் கருணை இல்லை ,
அதனின் ருசி மிகுந்த பாகங்கள் தெரிகின்றன. காலையில் நாம் பார்த்த அந்த உயிரினம்
இப்போது உணவாக நாம் முன்னே உயிரற்று கிடக்கின்றதே ! ஐயகோ . . என்ற கொஞ்சமும் பரிதாப
உணர்வின்றி நாவினில் நீர் ஊற்றெடுக்க அதனை சுவைப்பதில் தானே ஆர்வம்
காட்டுகின்றோம்.
நமது உறவினரும் நண்பர்களும் நம்மை வாழ்த்தும்படியும் ,
புகழும்படியும் செய்த அந்த தியாக உயிர்
சடலமானதைக் கண்டு நாமே வருந்துவதில்லை, பின்னர் வேறு யார் கவலை கொண்டு பார்க்கப்
போகின்றார்கள்.
வாழ்வென்பது என்னவென்று ஒவ்வொரு உயிர்களும் உணர்ந்துதான் இருக்கின்றன .....
மனிதர்களைத் தவிர .
மரங்கள் தன்னை முழுமையாக வெயிலில் நிறுத்திக் கொண்டு மனிதர்களுக்கு
நிழலைத் தந்து மகிழ்கின்றது.
சிறு செடிகளும் கொடிகளும் , பழங்களையும், பூக்களையும் மனிதர்களுக்கு தந்து மகிழ்கின்றது.
அப்பாவி விலங்குகள் முழுமையாக தன்னுயிர் ஈந்து மனிதர்களை வாழச்
செய்கின்றது.
பறவை இனங்கள் தனது சந்ததி (முட்டை) யையும் மனிதர்களுக்கென தந்து மரித்துப் போகின்றது .
மனிதர்களாகிய நாம் யாருக்காக எதனை விட்டுக் கொடுத்தோம், பெற்றெடுத்த
தாய்க்கும், தகப்பனுக்கும் , உடன்பிறந்த சகோதர , சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும் , செய்த சிறு உதவியைக் கூட வாய்ப்பு கிடைத்தால்
சொல்லிக் காட்டி அவர்களை கூனிக் குறுக வைக்கின்றோம்.
ஒரு பேச்சரியாத உயிரினம் கொண்டுள்ள உயரிய பண்பு கூட இல்லாத நமக்கா ஆறறிவு
என்று சொல்லிக் கொள்கின்றோம்?
யாரையும் மதிக்கமாட்டோம், யாருக்கும் எந்த பயனும் என்னால் கிடைக்க
விடமாட்டேன் , எவ்வளவுதான் கெஞ்சினாலும் பெற்றோரானாலும் உறவினரானாலும் யாருக்கும் எதுவும் தர மாட்டேன்
என்று பிடிவாதிப்பது ஆறறிவாகுமா என்ன ?.
யார் சொல்லி தந்தது மனிதர்களுக்கு இந்த நாகரீகத்தை ?
யார் சொல்லி மாற்றமுடியும் இந்த மனோபாவத்தை ?
இதனால் எந்த பயனும் இல்லை எனத் தெரிந்துமே விடாப்பிடியாக வறட்டு
வேதாந்தம் பேசி நாமும் தொலைந்து நமது சந்ததியையும் தொலைக்க ஆயத்தப்பட்டு விட்டோமே?
ஏன் இப்படி ?
வாழ்வென்பது நாம் வாழ்வதில் இல்லை என்பதையும் பிறரை வாழவைப்பதிலும் ,
வாழ விடுவதிலுமே ஆழ்ந்துள்ளது என்பதனை எப்போது புரிந்து கொள்வோம் ?
வாழ்வென்பது உலகியலில் பணம் நிறைந்தவனாக வாழ்வதில் இல்லை , சக மனிதர்
மேல் அன்பு மனம் நிறைந்தவனாக வாழ்வதில்தான் என்பதை யார் சொல்லித் தரப்
போகின்றார்கள் ?.
வாழ்வென்பது பொருள் கொண்டவனாக வாழ்வதில் இல்லை பிற உயிர் மேல் அருள்
கொண்டவனாக வாழ்வது என்பதனை எப்போது உணரப் போகின்றோம்?
வாழ்வென்பது வாழும் காலத்திலேயே மறக்கப்படுவது அல்ல – வாழ்வின்
பின்னும் நினைவில் நிற்பது என்பதை என்றைக்கு புரிந்து கொள்ளப் போகின்றோம்?
வாழ்வென்பது வாழ்ந்து மரிப்பதல்ல , மரித்து வாழ்வது என்ற
உண்மையைத்தான் சிறிய உயிர்களும் (மரம்,செடி,கொடிகளும்), பெரிய உயிர்களும்
(ஆடு,மாடு,கோழிகளும்) நமக்கு இரத்தமாகி நமது நாளங்களில் ஓடி நிரூபித்துக்
கொண்டிருக்கின்றன.
வாழ்வென்பதை வாழ்வாங்கு வாழ வேண்டும் எனும் ஆவலில்தான் சித்தர்
பெருமக்கள் இறவாநிலை வேண்டினார்கள் என்பதை மனிதர்கள் உள்ளார்ந்து உணர்ந்தால் இந்த
நிலையை அடியோடு மாற்றிக் கொள்ளலாம்.
இந்த பிறப்பில் மனிதர்கள் செய்யும் சுப , அசுப மற்றும் பாப, புண்ய காரியங்கள் மனிதர்களின் பிறிதொரு
பிறப்பிற்கு வழியாகின்றது,
இந்த பிறப்பில் இல்லாவிட்டால் என்ன , அடுத்த பிறப்பு தான் உண்டே அதில்
பார்க்கலாம் என்று இன்றைய மனிதர்கள் நினைக்கலாம். (அன்றைய மனிதர்கள்
நினைத்ததில்லை)
ஆனால் . . . .
மறு பிறப்பு உண்டு என்பதினை நன்கு அறிந்த போதிலும் கூட சித்தர்
பெருமக்கள் இந்த பிறப்பிலேயே இறவாநிலை ஏன் வேண்டிட வேண்டும் ?
இந்த பிறப்பில் மனிதர்கள் கண்ட , அல்லது காணும், செய்த, அல்லது செய்யும்
யாவும் மறுபிறப்பினில் முழுமையாக மறக்க வைக்கப்படும் அல்லது மறைத்து வைக்கப்படும்
.
மேலும் மீண்டும் இந்த பிறப்பில் இப்போது உள்ள நிலையை மறு பிறப்பினில்
அடைய முடியாமலே கூட போகக் கூடும்.
அப்படி என்றால் இந்த பிறப்பில் அடைந்த உயர்ந்த , உச்சநிலை எல்லாமே
இந்த பிறப்போடு போய்விடும் .
வரும் பிறப்பில் நாம் யார் என்பதே நாம் அறியாத நிலையில் ,
நான் சென்ற பிறப்பில் சித்தன் , புத்தன் என்றால் நம்மை எங்கே கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்பதை நாமறிவோம் .
நான் சென்ற பிறப்பில் சித்தன் , புத்தன் என்றால் நம்மை எங்கே கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்பதை நாமறிவோம் .
மீண்டும் பிறப்புண்டு ஆனால் அது புதியது , மேகங்களற்ற நிர்மலமான வானம்
போல.
முன் பிறப்பின் எந்த ஒரு நினைவும், சிறு துளியும் இல்லாமல்.
அதனால்தான் மீண்டும் பிறக்கும் போது மனிதர்கள் முன் பிறப்பின் நிலையை
நினைத்துப் பார்க்கவே முடியாமல் போகலாம் என்பதனை சித்தர் பெருமக்கள் உணர்ந்ததாலேயே
தாங்கள் தற்போது இருக்கும் இந்த பிறப்பிலேயே இறவா நிலையினை அடைய கடுமையான
தவங்களையும் , யோகங்களையும் , இரசவாதங்களையும் மேற்கொண்டனர்.
ஆனால் நாமோ கிடைத்ததற்கறிய மனித பிறப்பினைக் கொண்டிருந்த போதிலும்
அதனை முறையாக பயன்படுத்தாமல் சுய உயிர் வளர்க்கவே பிரயத்தனப்பட்டு வாழ்வென்ற
ஒன்றின் உண்மைத்தன்மையை மறந்து வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம்.
இறுதியாக . . .
வாழ்வென்பது மனிதனாக வாழ்ந்து இறப்பதல்ல , இறந்த பின்னும் சக
மனிதர்களின் நினைவில் வாழ்வதாகும்.
மனிதரில் இந்நிலையை கண்டவர்கள் கொஞ்சம்தான் – அந்த கொஞ்சத்தில் நாமும்
இணையலாமே .
வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம் .
என்றும் அன்புடன் கருணாகரன்
No comments:
Post a Comment