என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Sunday, April 27, 2014

யுகாதி என்றால் என்ன ? அன்று என்ன செய்யலாம் ?


யுகாதி என்றால் என்ன ? அன்று என்ன செய்யலாம் ?

யுக ஆதியின் சிறப்பு (யுகாதி – யுக ஆரம்ப நாள்)

அன்பான நண்பர்களே , நமது வாழ்வின் பாதையில் நாம் சந்திக்கும் பலவிதமான தடங்கல்களுக்கும் , தோல்விகளுக்கும் , துயரங்களுக்கும் , மன உளைச்சலுக்கும் நாம் நமது முன்னோர்களுக்கு அல்லது பெற்றோருக்கு திதி தர்ப்பணம் தராமல் போனதே முக்கியமான காரணமாகின்றது என்பதனை எல்லோரும் அறிந்திருப்பீர்கள் .

நாம் சில இடங்களில் காசி , ராமேஸ்வரம் இன்னும் இது போன்ற பல இடங்களில் திதிதந்தும் எந்தவிதமான பயனும் இல்லாமல் இருந்திருக்கும்.
அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

சரியான முறையின்றி தரப்பட்ட திதிகள் பித்ருக்களை சென்றடைவதில்லை, காரணம் அவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது போகும்.

உரிய முறையோடு தரப்படும் திதிகள் அவர்களை மகிழ்வடைய  செய்வதோடு அமைதியையும் தரும்.   

திதிகள் தருவதற்கு எத்தனையோ நாட்களை ரிஷிகளும் , முனிவர்களும்  நமக்கென அருளியிருக்கின்றார்கள்.

ஆடி அமாவாசை, தை மாத முதல் நாள், தை அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை , இது இல்லாமல் அவரவர்கள் இறந்த திதிகள் .

மேலும் ஒவ்வொரு யுகமும் தோன்றிய காலாமான யுகாதி எனப்படும் நாளும் இந்த வகையில் முதன்மை பெறுகிறது. யுகம் + ஆதி = யுகாதி , அதாவது யுகம் பிறந்த நாள் எனப்படும். 

இவைகள் முறையே , கிருதயுகம் , திரேதயுகம் , துவாபரயுகம் மற்றும் கலியுகம் .

இந்த யுகங்களின் ஆரம்ப நாட்களும் மறைந்த மூதாதையர்களுக்கு திதி தருவதற்கு மிகவும் ஏற்ற புண்ணிய தினங்களாக கொள்ளப்படுகிறது.

முதலில் கிருதயுகாதி : 
இந்த நாள் ஒவ்வொரு தமிழ் ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய திருதியை திதியில் வரும். 
அதாவது வைசாக சுத்த மாதத்தில் சுக்ல பட்ச திருதியை திதியில் வரும்.

இரண்டாவது திரேதயுகாதி : 
இந்த நாள் ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய நவமி திதியில் வரும். அதாவது கார்த்திக்க சுத்தமாததில் சுக்ல பட்ச நவமி திதியில் வரும்.

மூன்றாவது துவாபரயுகாதி :
ஆவணி மாத பௌர்ணமிக்குப் பின்னர் வரக்கூடிய திரயோதசி திதியில் வரும். அதாவது பாத்ரபத பகுளத்தில் க்ருஷ்ண பட்ச திரயோதசி திதியில் வரும்.

நான்காவதான கலியுகாதி : 
மாசி மாத அமாவாசையன்று வரும்.

இந்த நான்கு தினங்களும் மகவும் புண்ணிய காலம் என்று புராணங்களும் கூறுகின்றன.

மேலேசொல்லப்பட்ட தினங்களில் எள்ளுடன் கூடிய தண்ணீரை பிதுர்க்களை நினைத்து ஒருவன் பக்தியுடன் விடுவானாகில் அவன் ஆயிரம் ஆண்டுகள் சிரார்த்தம் செய்த பயனை அடைகிறான் என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது.

மாசி மாதத்து அமாவாசையன்று சதய நட்சத்திரம் வருமாயின் அது பிதுர்க்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும்.

மாசி மாதத்து அமாவாசையானது அவிட்ட நட்சத்திரத்தில் வரும் வேளையில் பிதுருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீரைக் கொடுப்பவனுக்கு பதினாயிரம் ஆண்டுகள் பிதுருக்களை திருப்தி செய்த புண்ணியம் கிடைக்கும்.

மாசி மாதத்து அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும் வேளையில் சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் திருத்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாகத் தூங்குவார்கள் .

மாசி மாதத்து அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி முதலான நட்சத்திரத்தில் வரும் வேளையில் அப்போது செய்கின்ற சிரார்த்தம் பித்ருக்களுக்கு ஒரு வருடத்திற்கு திருப்தியை தருகின்றது.

மாசி மாதத்து அமாவாசையானது திருவாதிரை, புனர்பூசம்,பூசம் முதலான நட்சத்திரத்தில் வரும் வேளையில் அப்போது செய்கின்ற சிரார்த்தம், பித்ருக்களுக்கு பன்னிரண்டு வருடத்திற்கு திருப்தியை தருகின்றது.

மாசி மாதத்து அமாவாசையானது அவிட்டம், சதயம், பூரட்டாதி முதலான நட்சத்திரத்தில் வரும் நாள் என்பது தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலமாகும்.

இந்த ஒன்பது நட்சத்திரங்களிலும் மாசிமாத அமாவாசை கூடும்போது செய்கின்ற சிரார்த்தம் பித்ருக்களுக்கு திருப்தியை தருகின்றது.
சரியான முறையில் செய்யப்படும் சிரார்த்தங்கள் மூதாதையரை திருப்தி அடைய செய்கின்றன.

அவர்களின் ஆத்மா சுகமடைகிறது , அதனால் நமக்கு வளம் கிடைக்கிறது.

எதையும் முறையாக செய்வோம், ஆனந்தமான வாழ்வைப் பெறுவோம்.

இந்த ஆண்டில் மாசிமாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருகிறது.

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன்.  
.


  
  

  

Tuesday, April 22, 2014

எளிய முறையில் த்யானம்


எளிய முறையில் த்யானம்
முக நூலில் என் பயணம்
அன்பு நண்பர்களே , வணக்கங்கள்.
பொதுவாகவே உங்கள் அனைவரையும் உங்களாலேயே மேல்நிலை காணச் செய்ய வேண்டும் எனும் பேராவலில்தான் இந்த முக நூலில் அடியேன் பயணத்தினை துவக்கினேன்.
ஆனால் இதனை தொடர்ந்த பலரும் மந்த்ரம் , மாந்தரீகம் கற்கவும் , ஏதேனும் ஒரு துஷ்ட காரியம் கற்றுக் கொள்ளவும்தான் நினைத்தனரேயன்றி யாரும் த்யானம்  யோகம் , தவம் , இறைநிலை , இறைத்தன்மை, இறையுணர்வு, இறையோடிணைவு பற்றிய சந்தேகமோ கேள்வியோ எழுப்பவில்லை.
அதனை சிந்திக்கவும் யாரும் தயாரில்லை என்பதும் புரிந்தது.
காரணம் ,
அவரவர்களின் வாழ்வும் , அவரவர்களின் அன்றாட தேவையும்தான்.
அனைவரும் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதுவுமே காரணம் என உணர்ந்தேன்.
தீரா கடன் தீர வழி என்றால் எல்லோரும் அதிகம் விரும்புகின்றனர். வசியம், தனஆகர்ஷணம் எனும் செய்திகள் இன்னும் வேகமாக விரும்பப்படுகிறது.
இப்படி ஒரு சூழலில் உள்ள அவர்கள் த்யானம் , தவம் , இறையனுபூதி பற்றி எப்படி சிந்திப்பார்கள் ?. அதோடு மட்டுமல்ல, அவரவர்களின் ஜாதக அமைவுகளும் முக்ய காரணமாகின்றன .
எல்லோரும் இந்நிலையை எய்த முடிந்தால் அதற்கேது பெருமை?. இல்லையா ?
ஆனால் யோகா , த்யானம் , தவம் , மூச்சுப்பயிற்சி , இறையுணர்வு , இறையோடிணக்கம் என்பது போன்ற செய்கைகளின் பலன் ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் பாதையையே வெகுவாக மாற்றியமைத்து சீராக்கும் வல்லமை கொண்டது என்பதுவும் , இந்த பேருண்மையை எம்பெருமானே அம்பாளிடம்  திருவாய் மலர்ந்து அருளியதையும் மறக்கக்கூடாது.
நம்மை கடைத்தேற்ற நாம் நம்மைக் கொண்டே மாற்றி அமைத்துக்கொள்ளும் வித்தையே இது.
விடியற்காலம் எழுந்து , உடலை முறுக்கி , மூச்சை நிறுத்தி குண்டலினியை தட்டி எழுப்பி . . . . . . . . . . . . . . . என்பது போன்ற புரியாத , பயப்படுத்தும் வார்த்தைகளெல்லாம் இல்லாமல் , சாதாரணமாக வாழும் வாழ்வில் , வாழும் போதே , வாழ்வினை உணரும் , மகோன்னதமான நிலையினை நாம் காண , உணரக் கூடிய  எளிமையான த்யானமுறையை அனைவருக்கும் அறியத் தர வேண்டும் என ஆவல் கொண்டேன்.
அதன் பயனாக எளிய முறை த்யானதின் பயிற்சி முறையை இங்கே தருகிறேன்.
த்யானம் மிக எளிய முறை :
உங்கள் பிறந்த நட்சத்திரம் , பிறந்த நாள் , பிறந்த கிழமை அல்லது ஒரு வெள்ளிக்கிழமையில் . . .  
குளித்து முடித்து நெற்றியில் நீறணிந்து சிறு விளக்கேற்றி வைத்து ஊதுபத்தி சாம்பிராணி ஏற்றி வைத்து நீங்கள் த்யானம் செய்ய உத்தேசித்துள்ள அறையில் துர்மணம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
நான் த்யானம் செய்யப்போகிறேன் , எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை யாருக்கும் விதிக்காதீர்கள்.
நாம் இருக்கும் சூழலில்தான் எதையும் கற்க முற்பட வேண்டும். அமைதியான சுழலில் பழகிக் கொண்டால் பின்னர் சிறு ஓசையும் நம்மை த்யானம் செய்ய விடாது.
சுமார் 25 % , 30 % சதவீதம் காலி வயிறாக இருக்கட்டும்.
உங்களுக்கு எப்படி அமர்ந்தால் சௌகரியமோ அப்படி வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.
கூன் விழுந்தமாதிரி அமராமல் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் , ஆனால் விறைப்பாக வேண்டாம். கைகளை இடது கையின் உள்ளங்கையின் மேல் வலது கையின் புறங்கை இருக்குமாறு மடியில் வைத்துக் கொள்ளுங்கள். 
கண்களை மெல்ல மூடுங்கள் , மூடிய கண்கள் மூடியபடியே இருக்க இரு கண்களின் இடையே உள்ள புருவ மத்தியை நோக்கி கவனத்தையும் , பார்வையையும் குவித்து செலுத்துங்கள்.  
அடுத்து , உங்கள் மூச்சினை இரண்டு மூக்கு துவாரத்திலும் ஒரே நேரத்தில் உங்களால் முடிந்த மட்டும் மிக மெதுவாக உள்ளிழுங்கள். ஒருபக்கம் இழுக்க வேண்டாம்.
உள்ளிழுத்த மூச்சினை நிறுத்தாமல் உடனே இரண்டு மூக்கு துவாரத்திலும் ஒரே நேரத்தில் உங்களால் முடிந்த மட்டும் மிக மிக மெதுவாக வெளி விடுங்கள். ஒரு பக்கமாக வெளிவிட வேண்டாம்.
இந்த மாதிரி மூன்று முறைகள் நீண்டதாக, அமைதியாக, மெதுவாக, ஒரே சீராக செய்யுங்கள்.
கவனம் மிக மிக மெள்ளமாக எவ்விதமான பதட்டமுமின்றி இதனை செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் உள்மனமும் ,உங்களின் வெளிஇயக்க உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக அமைதிக்குள் செல்லும் .
இப்போது நீங்கள் த்யானத்திற்கு தயாராகி விட்டீர்கள்.
இப்போது மிக முக்கியமான தருணம்.
உங்கள் ஒவ்வொரு அசைவும் உங்களால் கவனிக்கபடுகின்றது. (நீங்கள் அறியாமலேயே)
இந்நிலையில் நீங்கள் மிக முக்கியமான மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
ஒன்று :
நீங்கள் கண்களை மூடி அமர்ந்தவுடன் இதுவரை நீங்கள் கண்ட நிறைய காட்சிகள் நிழல்படங்களாக உங்கள் முன் வரிசையாக தோன்றி கொண்டே இருக்கும் .
அதனை வராமல் தடுக்காதீர்கள் , தடுக்க முயற்சிக்காதீர்கள் . வர விடுங்கள்.
இரண்டு :
வருகின்ற காட்சிகளில் சிந்தனையை செலுத்தி காட்சியின் பின்னே நீங்கள் செல்லாதீர்கள் .
காட்சிகளை ஒரு வேற்று மனிதனாக வெறுமனே காணுங்கள். அதனைப் பற்றி எந்த சிந்தனையும் செய்யாதீர்கள்.
மூன்று :
சும்மா இருக்க முடியாமல் நீங்களே ஒன்றை புதிதாக உருவாக்காதீர்கள் .
உதாரணமாக : ஓம் நமசிவய சொல்லிக்கொண்டிருப்பது அல்லது வேறு மந்த்ரங்கள் சொல்வது போன்றவைகள்.
இந்த நிலையில் நீங்கள் இருக்கும் போது உங்கள் மூச்சு என்ன செய்கிறது ? எங்கெல்லாம் செல்கிறது ? என கவனியுங்கள் , வேறொன்றும் செய்ய வேண்டாம்.
இவ்வாறான நிலையில் இயல்பாக நீங்கள் அமர்ந்து பயிற்சி பெறுவதற்கு குறைந்தது 5 அல்லது 6 வாரங்களாகளாம்.
பொறுமை மிக அவசியம் . எந்த முதிர்ச்சி நிலையும் உடனே வருவதில்லை.
இந்த நிலையினை நீங்கள் பெற்றபின் எந்த சூழலிலும் எவ்வளவு இரைச்சல் இருந்தாலும் நீங்கள் த்யானம் மிக சுலபமாக செய்ய முடியும்.
இதனால் என்ன பயன் ?
நம்மை சுற்றி உள்ள அனைத்து இறுக்கங்களும் தாமாகவே தளர்வடையும்.
வாழ்வின் இயல்பு நமக்கு புரியும். சத்யமான வாழ்வின் சுகம் நிதர்சனமாக புலப்படும்.
இந்த பேருண்மையை விளங்கிக் கொண்டால் எந்த துக்கமும் இல்லை , எந்த சந்தோஷமுமில்லை எனும் தெளிவு நமக்குள் ஏற்படும்.
பிற உயிரின் மேல் அலாதி பாசமும் , நேசமும் உண்டாகும்.
இறையவனின் ஆற்றல், மகிமை, அன்பு, அருமை, அருகாமை புலனாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை நாமே அறிந்து கொள்ள உதவும்.
நம்முள் அடைபட்டிருக்கும் மன அமைதி , சாந்தம் , ஒழுக்கம் , தூய அன்பு ஆகிய அருங்குணங்கள் தாமாக வெளித் தோன்றும்.


பின் குறிப்பு :
     இந்த பயிற்சியினை நீங்கள் காலையில் அல்லது மாலையில் சுமாராக 6.20 மணிக்கு மேல் இரவு 8.00 மணிவரை மட்டுமே செய்ய வேண்டும்.
வாய்ப்பிருந்தால் காலை , மாலை இரண்டு நேரமும் செய்யலாம்.
அதாவது ஒளி உலகினை சூழும் நேரம், இருள் உலகினை சூழும் நேரம்.
மதியம் செய்வதாக இருந்தால் 12.00 மணிக்கு துவங்கி 2.30மணி வரை செய்யலாம்.
ஒவ்வொரு முறை த்யானப் பயிற்சி முடித்த பின்னும் சுமார் ½ மணி நேரம் வெறுமனே படுத்திருப்பது மீண்டும் பயிற்சி செய்வதற்கு உதவும்.
உடலுக்கு எந்தவிதமான உபாதையும் தராது.
ஆகவே சைவ உணவே மிக சிறந்தது.
அசைவ உணவினை உண்பவர்கள் மெல்ல சைவ உணவிற்கு மாறுவது நல்லது.
அசைவ உணவினால் பயிற்சியில் ஈடுபடும் போது உடல் உபாதைகள் குறிப்பாக மூச்சு பிடிப்பு , தசைவலி போன்றவைகள் ஏற்படும்.
ஆனால் பயம் வேண்டாம் அதுவே சரியாகிவிடும்.
சைவ உணவில் இந்த தொல்லைகள் உருவாகாது.
மிக எளிய இந்த பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
கீழே விரிப்பு ஏதேனும் (வெண்மையான துணி) விரித்துக் கொள்ளுங்கள்.
கீழே அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள் , கால்களின் பாதங்களை , இடதுகாலின் பாதத்தின் மேல் வலதுகால் பாதம் இருக்குமாறு அமருங்கள். நாற்காலியில் அமர்பவர்கள் கால்களை மடித்து மேலே அமரக்கூடாது.
முதுகினை வளைக்காமல் நேராக இருக்குமாறு அமருங்கள் .
முன் அனுபவம் உள்ளவர்கள் சின்முத்திரையை பிரயோகிக்கலாம்.
இது சம்பந்தமான தங்களின் சந்தேகங்களை மட்டும் (வேறு கேள்விகள் வேண்டாம்) gurukaruna2006@gmail.com என்கிற மெயிலுக்கு தொடர்பு கொண்டு கேளுங்கள்.

வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.

சிவனருள் கருணாகரன். 

Monday, April 21, 2014

மணமுறிவு காரணங்கள்மணமுறிவு காரணங்கள் :


பெற்றோர்கள் பலவிதமாக ஆராய்ந்து பல நாளாக , வாரங்களாக , மாதங்களாக , வருடங்களாக அலைந்து தேடி பிடித்து திருமணம் செய்து வைத்தும் மணமக்கள் அவர்களுக்குள் மன ஒற்றுமையின்றி அவர்கள் பிரிந்து விடுவதும் அல்லது ஒரே வீட்டிலேயே மனம் புழுங்கி வாழ்வதும் , வேறொரு பெண்ணோடு அல்லது வேறொரு ஆணோடு மறைமுக தொடர்பு கொண்டு வாழ்வதும் இன்று மிக அதிகமாகிப்போனது என்பதை மறுப்பதற்கில்லை .

இதனை சமூகமோ , சமுதாயமோ , எதுவோ எப்படிப் பார்த்தாலும் அதன் அடிப்படை காரணம் ஜோதிடத்தில் உள்ள கரணம் எனப்படும் அம்சமாகும்.

கரணம் என்பது ஒரு திதியின் பாதி அளவைக் குறிப்பதாகும். 6 பாகை கொண்டது ஒரு கரணமாகும். இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும்.

கரணங்கள் 11 வகைபடுகின்றன.

கரணங்களும் அதற்குரிய காரணிகளும் (பறவை மிருகங்களும்) --------------

1. பவகரணம் – சிங்கம்
2. பாலவகரணம் – புலி
3. கெளலவகரணம் – பன்றி
4. தைதுலை – கழுதை
5. கரசை – யானை
6. வணிசை – எருது
7. பத்திரை – கோழி (சேவல்)
8. சகுனி – காகம்
9. சதுஷ்பாதம் – நாய்
10. நாகவம் – பாம்பு
11. கிம்ஸ்துக்கினம் – புழு

மேலே காணப்படும் 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.

கீழே தரப்பட்டுள்ள குணாதிசயங்கள் பெற்றிருப்பினும் , அவர்களின் தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே மேலதிகமாக பிரதிபலிக்கின்றார்கள்.

உதாரணமாக :

1. பவ கரணம் (சிங்கம் )

பவகரணத்தில் பிறந்தவர் எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி உடையவருமாவர்.

2. பாலவ கரணம் (புலி)

பாலவகரணத்தில் பிறந்தவர் சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும் குணமுடையவருமாவார்.

3. கெளலவ கரணம் (பன்றி)

அரசாங்கப் பணியாளராக இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய் மீது பற்றுள்ளவரும், நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம் உடையவரும் வாகன வசதியுடையவருமாவார்.

4. தைதுலை கரணம் (கழுதை)

தருமம் செய்யாத கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.

5. கரசை கரணம் (யானை)

அரசாங்க மூலம் பணவரவு உள்ளவரும், பெண் நேயரும், எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவருமாவார்.

6. வணிசை கரணம் (எருது)

கற்பனையான வார்த்தைகளைப் பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப ஒழுகாதவரும், பெண் நேயருமாவர்.

7. பத்திரை கரணம் (கோழி-சேவல்)

ஆண்மையில்லாதவர், மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவருமாவார்.

8. சகுனி கரணம் (காகம்)

நல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த செல்வம் உடையவரும், தைரியம் உள்ளவருமாவார்.

9. சதுஷ்பாத கரணம் (நாய்)

வறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபியும், பெண் பிரியரும், தீய நடத்தையுடையவருமாவார்.

10. நாகவ கரணம் (பாம்பு)

துன்பத்தை ஆள்பவரும், உத்தம குணமும், சுவையான உணவு உண்பவருமாவார்.

11. கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு)

தாய் தந்தையர் மீது பற்றுள்ளவரும், சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும், உலகத்தை நன்கு அறிந்தவருமாவார்.

இவைகள் கரணத்திற்குறிய பொதுவான பலன்களாக இருக்கும்.இப்போது திருமண முறிவுக்கான காரணங்களை பார்ப்போம் .

கோழி , நாய் , பன்றி , கழுதை , எருது , பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சுகித்திருக்கும்.

மற்ற சிங்கம், புலி, யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு அமைத்துக்கொள்ளும்.

காமத்தில் அதிக ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி, கழுதை, பாம்பு , புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம் ஒரே மாதிரி இல்லை. குறுகிய நேரம், நீண்ட நேரம் என மாற்றம் உடையதாக இருக்கின்றது.

உதாரணமாக கோழியின் (சேவலின்) , காகத்தின் கலவி என்பது சில நொடிகளே, ஆனால் நாய்,பன்றி,கழுதை,புழு போன்றவற்றின் கலவி நேரம் மிக கூடுதலாகும்.

உதாரணத்திற்கு ஒரு கோழி (பத்திரை கரணம்)அல்லது காகத்தின் (சகுனி கரணம்) கரணத்தில் பிறந்த ஆணின் கலவி நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும்.

ஆனால் ஒரு பன்றியின் (கௌலவம் கரணம்) நாயின் (சதுஷ்பாதம் கரணம்) கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது நீண்டநேரம் இருக்கும்.

மேற்படி இருவருக்கும் திருமணமானால் இவர்கள் வாழ்வில் எவ்வாறு கலவி சந்தோஷம் இருக்கும் ? இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எவ்விதமான உணர்வுகளின் சங்கமமாக இருப்பார்கள். இப்படியே போனால் பிற்கால சந்ததிகளின் மனோபாவம் எவ்வாறாக அமையும் ?

யார் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் காம உணர்வே உலகின் இயக்க மூலமாகும். ஆனால் மேலே சொல்லப்பட்டவைகள் காம உணர்வுகளல்ல, அவை காம வெறியாகும் . 

காரணம் அடக்கப்பட்ட உணர்வுகள் வெளிப்படும்போது வெறியாக மாறுகிறது. 
அதனால்தான் தனது காம உணர்வுகளுக்கு எதிராக இருப்பவர்களை மகன், மகள், கணவன், மனைவி, அண்ணி, அண்ணன், நண்பன், தந்தை, தாய், மாமனார், மாமியார் என யாராக இருந்தாலும் கொலை செய்யும் அளவிற்கு மாறுகிறது .

கலவியில் தன்னை திருப்தி செய்யாத ஆண்மகனை , அவன் நாட்டின் அரசனாகவே இருந்தாலும் மனைவி மதிப்பதில்லை, அதனால் அவளோ, அவனோ தடம் மாறுகிறார்கள். இதனை அன்று நாம் கதைகளில் பலவாறாக கேட்டு இருக்கின்றோம். அதனை இன்று உலகியலில் கண்கூடாக காண்கிறோம்.

ஆனால் இன்றைய ஜோதிடர்களும் , திருமண அமைப்பாளர்களும் (புரோக்கர்கள்) செவ்வாய் தோஷம், நாக தோஷம் பார்க்கின்றார்கள் , செவ்வாய்க்கு செவ்வாய் , நாகத்திற்கு நாகம் என்று சேர்த்து வைக்கின்றார்கள் , கரணம் பார்ப்பதே இல்லை.

மேலும் செவ்வாய்க்கு செவ்வாய் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய பொருத்தம்.

ஆனால் நாகதோஷத்திற்கு நாக தோஷம் என்பது மிகவும் தவறான ஒன்றாகும்.

அதிலும் இவர்கள் பார்ப்பது லக்கினம் , இரண்டாமிடம் , சந்திரன் , இரண்டாமிடம் இந்த இடங்களில் இராகுவோ கேதுவோ இருந்தால் நாக தோஷம் , இப்படித்தான் பார்க்கின்றார்கள்.

ஆனால் மேலே சொல்லப்பட்ட இடங்களில் இராகுவோ கேதுவோ இருக்குமாயின் சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் வாயாடுபவர்களாகவும், சொல்லும் அறிவுரையை கேளாதவர்களாகவும், எதிர்ப் பேச்சு பேசுபவர்களாகவும் இருப்பார்கள். இதனை இந்த ஜாதகர்களின் உறவினர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

இதுபோன்ற அமைப்பினைப்பெற்ற (லக்கினம் , இரண்டாமிடம் , சந்திரன் , இரண்டாமிடம் இந்த இடங்களில் இராகுவோ கேதுவோ அமைந்து இருக்கும்) இரண்டு ஜாதகர்கள் தம்பதிகளாக இணைந்தால் அவர்களின் வாழ்வு எப்படி இருக்கும் கற்பனை செய்து பாருங்கள் .

எவ்வளவுதான் சகிப்புத்தன்மையும் , பொறுமையும் , குடும்ப மானத்தையும் எண்ணிஎண்ணி தன்னை கட்டுக்குள் வைத்தாலும் இத்தனையையும் மீறவே மனம் வழி வகுத்து கொடுக்கும் .

காரணம் , நாம் சரியான பொருத்தத்தை தேர்வு செய்யாததே .

ஆனால் நாம் கொஞ்சமும் யோசிக்காமல் அவர்களை குறையாக சொல்வோம் , குற்றம் காண்போம்.

நாகதோஷம் உள்ள ஜாதகத்திற்கு நாகதோஷம் இல்லாத ஜாதகம்தான் சேர்க்க வேண்டும். நாகதோஷம் உள்ள இரண்டு ஜாதகங்களை இணைப்பது நல்லதல்ல.

சரியான தேர்வினை செய்ய நீங்கள் முதலில் சரியான அனுபவமுள்ள ஜோதிடரை தேர்வு செய்யுங்கள். அடுத்து சரியான திருமண அமைப்பாளரை கண்டுபிடியுங்கள்.

இதைத்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார்கள் பெரியோர்.

உங்கள் மகனோ, மகளோ சரியான துணையுடன் வாழ வழி செய்யுங்கள்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன்.

Wednesday, April 16, 2014

மழைக்காலமும் சந்தன மரமும்மழைக்காலமும் சந்தன மரமும்.

அர்ஜுனன் ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணரிடம் பேசிக் கொண்டிருந்தபோது , கிருஷ்ணா , எனது அண்ணனே தர்மத்தில் மிகவும் சிறந்தவர், பாரேன் அவரது பெயரிலேயே தர்மம் குடி கொண்டுள்ளது என்று வியந்து கூறினான்.
அதைக்கேட்ட ஸ்ரீ கிருஷ்ணரோ சிரித்தார் .
ஏன் சிரிக்கிறீர்கள் ? என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டான் அர்ஜுனன் .
நான்தான் முன்பே சொன்னேன் , தர்மம் , வாரி வழங்குவது என்றாலே அது கர்ணன்தான் என்றார்.

சரி சரி , என்னுடைய அனுபவம் வேறு , ஆனால் அண்ணன் தர்மர், வள்ளல் தன்மையில் மிக சிறந்தவர் . கர்ணன் பெயரில் தர்மம் உள்ளதா  எங்கள் அண்ணன் பெயரில் தர்மம் உள்ளதா சொல் என்றான் அர்ஜுனன் .
அர்ஜுனா உனக்கு சொன்னால் புரியாது , வா செயலில் காண்பிக்கின்றேன் என அர்ஜுனை அழைத்துக்கொண்டு தருமரின் அரண்மனையை நோக்கி புறப்பட்டார் ஸ்ரீ கிருஷ்ணர் .

இருவரும் தங்கள் உருவங்களை அந்தணர்களைப் போல மாற்றிக்கொண்டு சென்று , மன்னர் தருமரை பார்க்க வேண்டும் என அரண்மனை வாயில் காப்போனிடம் சொன்னார்கள் , அவனும் இருவரையும் உள்ளே செல்லுங்கள் என அனுமதி அளித்தான்.

உள்ளே சென்ற இருவரையும் மிக பணிவுடன் வரவேற்று உபசரித்து அமரச் செய்தார் தர்மர்.

உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என பவ்யமாக வினவினார் தர்மர்.
அந்தணர் தோற்றத்தில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் , மன்னா , நாங்கள் பக்கத்துக்கு ஊரைச் சேர்ந்தவர்கள் , நாங்கள் யாகம் செய்ய உத்தேசித்துள்ளோம் , அதற்கு கொஞ்சம் சந்தன மரங்கள் தேவைப்படுகிறது , தாங்கள் தந்து உதவ முடியுமா ? என்று கேட்டார்.

அதற்கென்ன இப்போதே தருகிறேன் , என்றார் தர்மர்.

இப்போது வேண்டாம் மன்னா , நாங்கள் தேவைப்படும் நாளில் வருகின்றோம் வந்து வாங்கிக் கொள்கிறோம் என்று அந்தணர் தோற்றத்தில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னார் .

சரி அய்யா , உங்களுக்கு தேவைப்படும் நாளில் வாருங்கள் என்று கூறி வழியனுப்பி வைத்தார் தர்மர்.

இருவரும் அரண்மனையை விட்டு வெளியேறினார்கள்.

வெளியே வந்ததும் இருவரும் நேராக கர்ணனின் அரண்மனைக்கு சென்றார்கள்.

அங்கும் கர்ணனைப் பார்த்து அந்தணரின் தோற்றத்திலிருந்த ஸ்ரீகிருஷ்ணர் , மன்னா , நாங்கள் அருகிலிருக்கும் ஊரைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு யாகம் செய்வதற்கு கொஞ்சம் சந்தன மரங்கள் வேண்டும் தங்களால் தந்தருள முடியுமா என பவ்யமாக கேட்டார்.

தாருங்கள் என்று கட்டளை இடுங்கள் அய்யா , முடியுமா என கேட்காதீர்கள் என்றான் கர்ணன்.

மிகவும் சந்தோஷம் மன்னா , தேவைப்படும் நாளில் நாங்களே வந்து தங்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம் , வருகிறோம் மன்னா , என்று கூறி விடை பெற்றார்கள் இருவரும்.

என்ன கிருஷ்ணா , ஒன்றும் வாங்காமல் பேசிவிட்டு வருகிறாய் என்றான் அர்ஜுனன்.
பொறு , காலம் வரும்போது வாங்கி கொள்ளலாம் என்றார் ஸ்ரீ கிருஷ்ணர் .
மாயக்கண்ணன் என்பது சரியான பெயர்தான் உனக்கு என்றான் அர்ஜுனன்.
சிரித்துக்கொண்டார் ஸ்ரீ கிருஷணர்.

நாள்கள் ஓடின , இல்லையில்லை பறந்தன.
மழைக்காலம் துவங்கியது. ஸ்ரீ கிருஷ்ணர் தனது விளையாட்டை துவக்கினார்.

அர்ஜுனா வா , சந்தன மரங்கள் தேவைப்படும் காலம் வந்து விட்டது , சென்று வாங்கி வரலாம் என்றார் .

இந்த மழையிலா ? என்றான் அர்ஜுனன் ,
ஆமாப்பா வா என்று அர்ஜுனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

இருவரும் அந்தணரின் தோற்றத்தில் தருமரின் அரண்மனைக்கு சென்றார்கள்.

அந்தணர்களே , வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்று உபசரித்தார் தருமர்.

அமர்ந்து நலம் விசாரித்து , உபசரித்து முடிந்தபின் அந்தணர் தோற்றத்திலிருந்த ஸ்ரீ கிருஷ்ணர் மெல்ல மன்னா , நாங்கள் கேட்டோமே சந்தன மரங்கள் அவை இப்போது தேவைப்படுகிறது அதனை வாங்கிச் செல்லவே வந்துள்ளோம் என்று பணிவாக கேட்டார்.

தர்மர் , அந்தணர்களே , சந்தன மரங்கள் நிறைய உள்ளது ஆனால் இப்போது மழைக்காலமாக உள்ளதால் எல்லா மரங்களும் மிகவும் நனைந்து இருக்கும் ஈரமான சந்தன மரங்கள் யாகத்திற்கு உதவாதே , அதனால் வேறு ஏதாவது மரங்கள் தருவதற்கு ஏற்பாடு செய்யட்டுமா என்று மிக பவ்யமாக கேட்டார்.

இல்லை மன்னா , எங்களுக்கு சந்தன மரங்கள்தான் வேண்டும் , நம்பி வந்தோம் இல்லை என்று சொல்லி விட்டீர்களே என வருத்தப்பட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

தயவு செய்து மன்னியுங்கள் அந்தணர்களே , யாகத்திற்குரிய வேறு ஏதேனும் கேளுங்கள் வேண்டுமளவு தருகின்றேன் என்றார் தர்மர்.

வேண்டாம் மன்னா , கவலையை விடுங்கள் , நாங்கள் புறப்படுகின்றோம் , என்று கூறி இருவரும் வெளியேறினார்கள்.

வெளியே வந்ததும் அர்ஜுனா , பார்த்தாயா , தர்மன் செய்த காரியத்தை என்றார் ஸ்ரீகிருஷ்ணர் .

உன் மேல் தவறு கிருஷ்ணா , உனக்கு வேண்டுவதை மழைக்காலத்தில் வந்து கேட்டால் அவர் எப்படி தரமுடியும் ? வெயில் காலத்தில் வந்துகேட்டு இல்லை என்று சொல்லியிருந்தால்தான் தவறு , யாராக இருந்தாலும் இப்படித்தான் சொல்வார்கள் என்றான் அர்ஜுனன்.

அப்படியா சொல்கிறாய் , வா கர்ணனையும் பார்த்து விடுவோம் என்றார் ஸ்ரீ கிருஷ்ணர் .

அவனும் அதையே தான் சொல்வான் , இதற்கு அங்கு போக வேண்டுமா என்று சலிப்புடன் சொன்ன அர்ஜுனனை அழைத்துக்கொண்டு கர்ணனின் அரண்மனையை நோக்கி நடந்தார் ஸ்ரீகிருஷ்ணர் .

இருவரையும் கண்டவுடன் வாருங்கள் வாருங்கள் அந்தணர்களே, யாகத்திற்கு சந்தனமரங்கள் கேட்டீர்களே , எங்கே வராமல் இருந்து விடுவீர்களோ என்றெண்ணி பயந்தேன் என்றான் கர்ணன்.

மன்னா , எங்களுக்கு இப்போது அந்த சந்தன மரங்கள் வேண்டும் , அதனை தரமுடியுமா என இழுத்தவாறே கேட்டார் அந்தணர் வடிவிலிருந்த ஸ்ரீகிருஷ்ணர்.

அந்தணர்களே , என்மேல் என்ன கோபம் ஏன் இப்படி கேட்கின்றீர்கள் ? என பதறிப் போனான் கர்ணன்.

மன்னா , பதற்றம் வேண்டாம் , எங்களுக்கு உங்கள் மீது கோபமோ வருத்தமோ துளியும் இல்லை , மழைக்காலத்தில் வந்து கேட்கின்றோமே அதனால் மரங்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகம் வேறொன்றுமில்லை என்றார் அந்தணர்  வடிவ ஸ்ரீ கிருஷ்ணர்.

இதற்காகவா வருந்துகின்றீர்கள் , இப்போதே உங்களுக்கு வேண்டிய சந்தன மரங்களை தருகின்றேன் என்றான் கர்ணன்.

மன்னா , நாங்கள் வருவோம் என்று முன்பே எடுத்து வைத்துள்ளீர்களா என சந்தேகமாக கேட்டான் அந்தண வடிவிலிருந்த அர்ஜுனன்.

இல்லை அந்தணரே, நான் முன்பே எடுத்துவைக்கவில்லை என்றான் கர்ணன்.

பின் எப்படி மன்னா எங்களுக்கு சந்தன மரங்களை வேண்டுமளவு தருவீர்கள்? எங்களுக்கு காய்ந்த சந்தன மரங்கள் அல்லவா வேண்டும் என்று புரியாமல் கேட்பது போல் கேட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

அய்யா அந்தணர்களே , இந்த அரண்மனையின் உள்ளே இருக்கும் அத்தனை கதவுகளும் , சாளரங்களும் (ஜன்னல்களும்) மிக உயர்ந்த சந்தன மரங்களால் ஆனவைகள் , இவைகளை இப்போதே உங்களுக்கு எடுத்து தருகிறேன் என்று சொல்லி ,

யாரங்கே , இங்கே வாருங்கள் என அழைத்து , உடனடியாக அரண்மனையின் உள்ளே இருக்கும் அத்தனை சந்தன மரக் கதவுகளையும் சாளரங்களையும் ஜாக்கிரதையாக பெயர்த்து எடுத்து இதோ இந்த அந்தணர்கள் சொல்லும் இடத்தில் சேர்த்து விட்டு வாருங்கள் என்று உத்திரவிட்டான் கர்ணன்.

மிகவும் அதிசயமான ஒரு மனிதனை கண்டதுபோல் இருவரும் கர்ணனை கண்டு வணங்கி விடை பெற்றார்கள் .

அர்ஜுனா , உன் அண்ணனின் அரண்மனையிலும் உள்ளது எல்லாம் சந்தன மரங்களால் ஆனவையே , ஆனாலும் உன் அண்ணனுக்கு இந்த உள்ளமில்லையே , பெயரில் தர்மம் இருப்பதால் பயனில்லை செயலில் தர்மம் வேண்டும்.

தன்னிடமுள்ளதை எதையும் இழக்காமல் தர்மம் செய்வதற்கும் , தன்னையே தர்மத்தில் இழப்பதற்கும் வேறுபாடு உண்டு , கர்ணன் தர்மத்தில் தன்னையே இழப்பவன். அவனை தர்மத்தில் மிஞ்ச யாரும் இல்லை.

அர்ஜுனன் எதுவும் பேசாமல் தலையை குனிந்து நின்றான்.

தர்ம தேவதையின் மகனல்லவா ! கர்ணன்.

வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன்                 

            
Related Posts Plugin for WordPress, Blogger...