என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, March 31, 2014

ஆன்மாவின் குரல்


முகநூலில் திரு  'இடைசை' ஆளவந்தான்  :
ஐயா மீண்டும் ஒரு கேள்வி....

ஆன்மாவின் குரலின் , பொருளை உணர்ந்து கொள்வது அல்லது புரிந்து கொள்வது எப்படி?
நமது ஆன்மா பெரும்பாலும் நம்மிடம் நேரடியாக எந்த தகவலையும் சொல்லாமல். குறிப்பால் உணர்த்துகிறது என்பதும், அந்தக் குறிப்புகளை பல சந்தர்ப்பங்களில் என்போன்ற சாமானியர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதும் உண்மைதானே?

அன்புள்ள நண்பர் “இடைசைஆளவந்தான் அவர்களின் இந்த கேள்வி பலரது நினைவிலும் எழும் கேள்வியாகும். காரணம் நமக்கு ஆன்மாவே என்னவென்று தெரியாது அப்புறம் அதன் குரலை – குரலின் பொருளை உணர்வது எப்படி ?

பொதுவாக ஒரு விஷயத்திற்கு வருவோம்.

ஒரு பள்ளிக்கூடத்தில் +2 முடிக்கும் மாணவ , மாணவியர்கள் தத்தமது அபிலாஷைகளுக்கு ஏற்றார்போல ஒவ்வொரு துறையை தேர்வு செய்து மேற்கொண்டு படிப்பினை தொடர்வார்கள் . சிலர் மருத்துவராகலாம், சிலர் எஞ்சினியர் ஆகலாம், சிலர் வக்கீல் ஆகலாம். அது அவரவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் பிரிவினைச் சார்ந்த படிப்பினை பொறுத்து அமையும்.

ஒரு சிலர் மேற்கொண்டு படிக்காமல் ஏதேனும் ஒரு தொழிலை தேர்வு செய்து பயின்று அந்த தொழிலில் பிரபலம் அடையலாம். மேலும் சிலர் அதோடு படிப்பை விட்டு விடலாம் , வீட்டோடு இருந்து மணம் செய்து கொண்டு மன நிறைவடையலாம்.

படித்து முடித்து ஒரு தொழில் செய்பவரை பார்த்து படிப்பை நிறுத்தியவர் நானும் கத்தி எடுத்து ஆபரேஷன் செய்வேன் எனச்சொல்லி கிளம்புவதும்,
அவரும் நானும் ஒன்றாகத்தான் படித்தோம் , அதனால் நானும் கோர்ட்டுக்கு சென்று வாதாடுவேன் எங்கள் வீட்டில் கூட நான்தான் எல்லோருக்கும் சரியான தீர்ப்பு சொல்வேன் என்பதும்,

எப்படி உள்ளதோ , அப்படித்தான் எனக்கு ஆன்மாவின் குரல் புரியவில்லை என்பதும் உள்ளது.

எல்லாவற்றிற்கும் பயிற்சி வேண்டும் சும்மா அப்படியே எல்லாம் வந்து விடாது.

மலாய் மொழியில் பேசுவது நமக்கு புரிய வேண்டுமானால்,  நாம் மலாய் மொழி அறிந்திருக்க வேண்டுமல்லவா ? இல்லை இல்லை ஜாடையில் சொன்னாலும் புரிந்து கொள்வேன் எனும் வார்த்தைகள் உதவாது.

நமது அறிவில் இல்லாததை நமது மனம் ஏற்காதது போல , பயிற்சியில் இல்லாத ஒன்றை, முன்பின் அனுபவமில்லாத ஒன்றை நாம் விளங்கி கொள்வது எங்ஙனம் ? அதன் பொருள் புரிவது எப்படி ?

ஆகவே மேலான பயிற்சியில் ஈடுபடாமல் எதையும் சாதிக்க இயலாது.
வேண்டுமானால் அப்படி இப்படி என்று பேசிக் கொண்டிருக்கலாம்.

பயிற்சி அவசியம் , உங்களை நீங்களே ஆய்வு செய்யுங்கள் , நீங்கள் யார் என்று ?

மற்றவரை ஆய்வு செய்வதை தவிர்த்திடுங்கள் .

அடுத்து . . . .

முகநூலில் மகள் ராஜேஸ்வரி ராமசாமி அவர்களின் கேள்வி :
ஆன்மா என்பதை நம் ஆழ்மனம் என்று கூறலாமா ?
எங்கள் DNA ,எங்களின் எல்லாபிறப்பின் ரகசியங்களும் இதில் உள்ளதுதானே?
இதுதானே நம் தூக்கத்தில் முந்தைய பிறப்பு , அந்த இடங்களுக்கு சென்று வருகிறது?
ஆகாயபதிவிலும் எமது முற்பிறப்பு பற்றிய தகவல் உள்ளதாமே ?
எல்லாவிதமான லோகங்கள் பற்றியும் எழுத முடியுமா ?
ஆன்மாவின் குரலை நம் மதிப்புக்குரிய மனசாட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா ?

ராஜேஸ்வரி ராமசாமி அவர்களின் அடுக்கடுக்கான கேள்விகள் அவருள் ஒரு தேடல் உருவாகி இருப்பதை காண்பிக்கின்றது !!
இதற்கான பதிலை தருவதில் மனமகிழ்வடைகிறேன் . 

அவர்களின் கேள்விக்கான பதில்கள் இதோ :

மனம் என்பதே இப்பிறப்பில் நாம் அறிந்த தகவல்களின் அடிப்படையில் இயங்குவது , நீங்கள் அறியாத எதையும் உங்கள் மனம் ஒப்புக்கொள்ளாது. ஆனால் ஆன்மா அறியாத ஒன்று இல்லவே இல்லை .

ஆகவே மனம் என்பது ஆன்மா ஆகாது.

நாம் நிறைய விஷயங்களை படிக்கின்றோம்,அதனால் நிறைய விஷயங்களை உள்வாங்குகின்றோம் .நண்பர்களோடு பேசுகின்றோம் , அதனால் நிறைய தகவல்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்கின்றோம். சிலவேளைகளில் உயர்நிலையை உணர்ந்தவர்களோடு சம்பாஷிக்கும் வாய்ப்பும்  கிடைக்கின்றது , அவர்கள் தங்கள் அனுபவங்களை கூறுகின்றார்கள் . அந்த வேளைகளில் நமக்கும் அப்படி ஓர் நிகழ்வு ஏற்பட்டதாக உணர்கின்றோம். அதனை அவர்கள் அடைந்த நிலைக்கே நாம் சென்றதாக கற்பனையும் செய்து கொள்கின்றோம்.

படித்ததினால் ஏற்படும் அறிதலுக்கும்,
தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போது உண்டாகும் தெளிவிற்கும் ,
உயர்நிலை உணர்ந்தவர்களோடு உண்டான சம்பாஷணையில் ஏதோ புரிந்ததை, நாமே உணர்வுபூர்வமாக கண்டதாக கற்பனையை வளர்த்துக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு .

இதன் காரணமாகவே பலரும் மேற்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ள மறந்து விட்டார்கள்.

மேலே உள்ள அத்தனை கேள்விகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தெரிந்தாலும் , சிலவற்றைத் தவிர மற்ற கேள்விகள் மிக நுணுக்கம் கொண்டதாகும்.

ESP (Extrasensory Perception) என்பது வேறு , ஆழ்நிலை அறிதல் வேறு.
AkashAkash Document எனப்படும் ஆகாயபதிவுகளை தெரிந்துகொள்வதும் , புரிந்து கொள்வதும் , படித்துணர்வதும் வேறு . இந்த மூன்றையும் ஒருவராக  உணர்ந்திருப்பபவர்கள் குறைந்த அளவே இன்று நம்மிடையே உள்ளனர்.

அசீரரியாக ஒலிக்கும் குரலோசையை கூட புரிந்து கொள்ள , அதில் தனக்கென உள்ளதைப் பிரித்தறிய மிகவும் மேலான ஞான அனுபவம் தேவைப்படுகிறது. (அனுபவ ஞானம் அல்ல).

ஒரு Game விளையாடும் போது அந்த (Stage ) பகுதியை முழுவதுமாக முடித்தபின் தான் , அடுத்த (Stage) பகுதி திறக்கப்படுவது போல நமது பயிற்சிகள் நிறைவுறும் நிலையினை அடையும்போதுதான்  நமது   மூளையின் ஒரு பகுதியில் ஒருசில செல்தொகுப்புகள் திறக்கப்படுகின்றன. நாம் மீண்டும் வேறு சில பயிற்சிகளை துவக்கி முடிக்கும் போது நமது மூளையின் பகுதிகளில் வேறுசில செல்தொகுப்புகள் திறக்கப்படுகின்றன. இவ்வாறான பல திறப்புகளை நாம் சந்தித்தபின்தான் , மனம் , வாக்கு , சித்தம் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றது.

Game ல் நாம் ஒரு Stage  முடிக்காதவரை அடுத்த Stage  வராது 

அதுபோலவே

நாம் ஒரு பயிற்சியின் நிலையில் (Stage in Complete) தவறினாலும் நம்மை நாம் மேலெழுப்பும் நிலை தோல்வியை அடைகிறது. சிலர் அதற்குபின் எந்த நிலையையும் அடைவதில்லை.

மிக சாதாரணமானவனாக இருந்த ஒருவர் மிக அசாதாரணமானவராக தன்னுள் மாறுவது இவ்வாறாக நிகழ்கிறது.  
   
ஆனால் ஒருசிலர் எந்த முனைப்பும் இல்லாமலே தாம் உயர்நிலையை அடைந்து விட்டதாகவே எண்ணிக்கொண்டு விடுகிறார்கள்.

அவர்களை குறை சொல்லவில்லை – அவர்களையும் பயிற்சி செய்து உங்களுக்குள் மேம்பட்ட நிலையை காணுங்கள்  என்கிறேன் .

“மதிப்புக்குரிய மனசாட்சி அருமையான வாசகங்கள். 
Great Rajeswari Ramasamy.

உண்மையில் மனசாட்சியை நமது ஆன்மாவின் குரலாக கொள்ளலாம்.

ஆன்மா நமது மனசாட்சியாகவும் ஒருசில நேரங்களில் செயலாற்றுகின்றது.

ஆனால் மனசாட்சி நம்மை பலசமயங்களில் கண்டுகொள்வதில்லை , நாமும் மனசாட்சியை கண்டு கொள்வதில்லை.

மனசாட்சி எனும் பெயரை கவனியுங்கள் , மனம் எதனைக் கண்டு கொண்டதோ அதற்கு சாட்சி அவ்வளவுதான் . அதற்கு மறைத்து நம்மால் எதுவும் செய்ய முடியாது . ஆகவே நாம் காணாத , அறியாத ஒன்றுக்கு நம் மனம் எப்படி சாட்சியாக முடியும் ?  
  
ஆனால் ஆன்மா நம்மை ஒரு கணமும் கவனிக்கத் தவறியதில்லை .
அது நம்மோடு இருந்து நம்மோடு முடிகிறது .

ஆழ்ந்த உறக்கத்தில் நாம் இருக்கும் போது நம்முள் இருக்கும் மூளையின் அதிவேக செயல்திறன் விழிப்படைந்து நம்மை சுற்றி உள்ள அனைத்தையும் கவனிக்கின்றது (இதனை Universel Mind என்போம்

இதனுடைய  செயலாக்கத்திறன் என்பது சுமாராக நாம் இருக்கும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் சுற்றளவு ஆகும். மனிதர்களில் ஒரு சிலருக்கு இதன் ஆரம் 300 கிலோ மீட்டர் வரை அதிகப்படுவதுண்டு.

ஞானிகள் , முனிவர்கள் , ரிஷிகள், சித்தர்கள் போன்றவர்களுக்கு இது எல்லையற்ற நிலையை கொண்டிருக்கிறது விண்ணுலகம் முதல் மண்ணுலகம் வரை அவர்கள் முழு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

அதனால்தான் உயர்நிலை கண்டவர்களின் இருப்பிடங்களை இன்னொரு உயர்நிலை கண்டவர் எளிதில் காணவும் , அங்கே செல்லவும் முடிகிறது.
ESP  ஒரு முன்னறிதல் சக்தியாகும் , கனவின் முன் அல்லது கனவின் பின் தோன்றும் காட்சியாகும் , நடக்கபோவதை முன்னரே தெரிவிக்கும். 

ஆகவே univarsal  (Universal Mind)யும் , ESP யையும் ஒன்றாக்கி குழம்ப வேண்டாம்.
DNA  (Deoxyribonucleic acid )என்பது நம்முடைய தலைமுறை தொடர்பானது , இதில் நமது தாத்தாவின் – தாத்தாவின் தாத்தா பற்றிய விபரங்கள் கிடைக்கும்  ஆனால் உங்களுடைய பூர்வ ஜன்ம விபரங்கள் இல்லை. மேலும் அதில் கிடைக்கும் விபரங்களை வைத்து நமது முற்பிறவியின் எந்த தகவலும் தெரிந்து கொள்ளமுடியாது. 

காரணம் , நமது பரம்பரை என்பதும் , நமது முற்பிறப்பும் ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் .

ஆன்மாவை அறிவதென்பது சாதாரணமானதல்ல.

யுகங்களை கடந்ததாக உள்ள ஆன்மாவை அறிதல் யாவராலும் சாத்தியமில்லை , அறிதலுக்குரிய அனுமதி பெற்ற ஜீவனே ஆன்மாவை அறிய முடியும். மேலும் எல்லோரும்  அறிந்து ஆவது ஒன்றுமில்லை . உணர்ச்சி வசப்பட்டு ஒருநாள், ஒருமணி நேரம் பேசுவார்கள் நான் கண்டேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். அப்புறம் அவர்கள் வேலையில் மூழ்கிப்போவார்கள் . 

அதனால்தான்  ஆன்மா பற்றிய செய்திகள் இரகசியமாக்கப்பட்டுள்ளது. 

ஒரு நொடியும் விடாத , இடைவிடாத , இறைநினைவில் , இறை சிந்தனையில் , இறையுணர்வில் வாழ வேண்டும்.

தன்னை , தன்நினைவை மறந்து இறையுணர்வில் மூழ்கவேண்டும்.
இறை , மனித நிந்தனையற்ற , குற்றம் காணாத , மேல் கீழ் என பாகுபாடு பார்க்காத சர்வமும் சிவமே எனும் மெய்யுணர்வில் ஒன்றி தன்னை இயற்கையிடம் ஒப்புவிக்க வேண்டும்.

ஜபம் , தவம் , த்யானம் , யோகம் மூலம் தன்னை அறிதல் வேண்டும்.
தன்னை முழுக்க அறிந்தவர்கள் , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள்,சித்தர்கள் ஆவார்கள். இதுவே பிறப்பெடுத்தவர்களுக்கு இறைவனால் (இயற்கையால்) தரப்படுகின்ற பேரருள் நிலை . (அதற்கு தான் இந்த போராட்டம் )

குறைவின்றி எப்பிறப்பும் இல்லை , ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோரும் குறைபாடுள்ளவர்களே , அவர்கள் தங்களின் குறைபாடுகளை கலைந்ததனால் உயர்ந்து அந்நிலையை அடைந்தார்கள் .

(அவர்கள் குறைபாடு  என்பது மனிதர்களின் குறைபாடு போல அல்ல , குழப்பம் வேண்டாம்) 

தன்னை கொஞ்சமும் குறைவின்றி முழுமையாக அறிந்தவன் – ஆன்மாவை அறியும் ஆற்றலை அடைகிறான்.
ஆன்மாவை அறிந்தவன் – அகிலம் முழுவதும் செயல்படும் செயலாற்றலை அறிந்தவனாகின்றான் .

ஆன்மாவை அறிந்தபின் அறிந்துகொள்ள வேறொன்றும் இல்லை.

அதுவே பிரபஞ்ச இரகசியம். அந்த இரகசியத்தை அறிந்தவன் எவனோ  
அவனே யோகிகளின் தலைவன், அவனே ஞானிகளின் தலைவன், அவனே ரிஷிகளின் தலைவன் , அவனே சித்தர்களின் தலைவன் , அவனே இயற்கை, அவனே இறைவன்.
வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன்.       

Tuesday, March 18, 2014

ஆன்மாவின் வேலையென்ன ?

அன்புள்ள நண்பர்களே வணக்கம்.

முகநூலில் எனது அன்பிற்குரிய “இடைசை ஆளவந்தான் அவர்களின் மிக நல்ல கேள்வியான “ஆன்மாவின் வேலையென்ன ? எனும் கேள்விக்கு இங்கே எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதில் தர கடமைப்பட்டுள்ளேன்.
முதலில் ஆன்மா என்னவென்று அறிந்தால்தான் அது என்ன வேலையை  செய்யும் என்று உணர முடியும்.

பிறப்பெடுத்துள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒரே அளவில் அமைந்திருக்கும் ஆன்மா , பிறப்பெடுக்காத , பிறப்பெடுக்க இருக்கும் இன்னும் பல கோடி கோடி ஜீவன்களுக்கும் துணையாகி நிற்கின்றது. 

நாம் படித்து , கேட்டு அறிந்த அனைத்து மகரிஷிகளும் ,ஞானிகளும் , முனிவர்களும் , புத்தர் முதல் சித்தர்கள் வரை ஆன்மாவை அழிவற்றது என்றும் , ஆன்மாவே இறைசொரூபம் என்றும் , உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஆன்மவடிவே என்றெல்லாம் கண்டுணர்ந்து சொல்லி இருக்கின்றார்கள்.

இவ்வாறான ஆன்மாவின் பணி என்ன ?

ஆன்மா எல்லா உயிர்களையும் இயக்குகின்றதா ? பேசும் சக்தி பெற்ற மனித உயிர்களை அதுதான் வழி நடத்துகிறதா ? அதுதான் ஆறாம் அறிவா ? ஆன்மா என்பதுதான் உயிரா ? அது மனிதரை ஆள்கின்றதா ? என்பது போன்ற கேள்விகள் நம்முள் அடுக்கடுக்காக எழுகின்றதல்லவா !!
உண்மையில் ஆன்மா என்பது , மனிதனை ஆள்வதோ , இயக்குவதோ , வழிகாட்டியோ, மனிதனின் ஆறாம் அறிவோ இல்லை .அப்படியென்றால் பின் என்ன ?

மனிதர்களை இயக்குவது மனிதனின் மனம், ஆன்மா மனிதரை இயக்குவதாக இருந்தால் மனிதரிடம் தவறுகளோ ,தோல்வியோ என்றுமே காண முடியாது.

மனிதரை வழி நடத்துவது அவனுடைய எண்ணங்களும் ,அவனின் கேள்வி ஞானமும் தான் . மனிதன் ஆன்மாவின் வழிகாட்டுதலில் பயணித்தால் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பு எந்நாளும் மனிதருக்கு ஏற்பட்டிருக்காது .

மனிதனின் ஆறாம் அறிவாக ஆன்மா இருக்க எள்முனையளவும் வாய்ப்பில்லை .

காரணம் , உலகின் எல்லா உயிருக்குள்ளும் ஆன்மா இருகின்றது. ஆனால் , பலவிதமான மிருக , பறவை இனங்களின் இனப்பெருக்க உறவுகள் மனிதனின் வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக இருக்கின்றது.

ஆன்மா என்பது உயிரல்ல என்பதில் மாற்றுக் கருத்தில்லை , ஏனெனில் உயிர் என்பது இந்த உடலோடு சம்பந்தப்பட்டது , ஆனால் ஆன்மா நம் பிறப்போடு தொடர்புடையது. நமது எந்த பாபமும் புண்ணியமும் ஆன்மாவை பாதிப்பதில்லை , ஆனால் உயிர் சம்பந்தமான இந்த உடலையும் மனதையும் மிகவும் பாதிக்கச் செய்கிறது.

அப்படியானால் என்னதான் இந்த ஆன்மா என்பது ?

ஆன்மா இந்நிலையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது.

நமது ஒவ்வொரு அசைவையும் முழுமையாக கவனித்து , நமது  சொல்லோ, செயலோ , கவனமோ , சிந்தையோ தடம் மாறும் போது உள்ளிருந்து மிக பலவீனமான குரலில் நம்மை எச்சரிக்குமே ஒரு முனகல் குரல் , ஞாபகம் இருக்கிறதா ? அது நமது ஆன்மாவின் குரல்தான் .

மிரட்டும் தொனியில் இல்லாமல் கெஞ்சலிலும் கீழே மிக மெல்லியதாக நம்மை வேண்டாம் என்று தடுக்குமே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான் .

சாதிக்க பிறந்தவன் நீ ஆனால் இப்படி உன்னை நீயே அழித்துக் கொள்கின்றாயே என்று எங்கோ தொலைவிலிருந்து யாரோ சொல்வதாக ஒரு குரல் நம் காதில் ஒலிக்குமே அது நமது ஆன்மாவின் குரல்தான்.
வெற்றியின் வித்தான நீ , தோல்வியின் மொத்த சொத்தாகி போகின்றாயே என ஈனஸ்வரத்தில் ஒரு ஓசை கேட்கின்றதே ! நமது மனதின் உள்ளே, அந்த ஒலியின் உரிமையாளன் நமது ஆன்மாதான்.

நாம் தவறிழைக்க துணிந்திடும் ஒவ்வொரு சமயமும் கொஞ்சமும் சலிப்பின்றி வேண்டாம் வேண்டாமென்று நம்மை காலில் விழாத குறையாக நம்மை காப்பாற்ற கதறுகின்றதே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான்.

ஆன்மீக வாசல் திறந்திருக்க , அபாய வாசலை நோக்கி பயணிக்கின்றாயே என்று நல்ல பாதையை நமக்கு காட்டி, நமது கையை பிடித்து நல்வழி செல்ல அழைக்கின்றதே அந்தக்குரல் நமது ஆன்மாவின் அன்புகுரல்தான்.

இப்பிறப்பில் ஆன்ம உயிர்ப்பு இல்லாதபோது வரும் பிறப்பிலாவது நாம் இறையுணர்வில் ஆழ்ந்திட நம்மை விடாமல் பற்றிக் கொண்டு நம்மோடு ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்து நம்மோடு பயணிக்கும் உற்ற துணை யார் தெரியுமா ? நமது ஆன்மாதான்.

ஆன்மீக நெறியில் ஆழ்ந்து போகும் அன்பர்களுக்கு அவர்கள் யார் என்று உணர்த்தி , முற்பிறப்பில்  யாராக இருந்து இறந்தோம் , இப்பிறப்பில் எதற்காக பிறந்து வளர்ந்தோம் என உணர்த்துகின்றதே ஒரு தெய்வீக ஒளி அது நமது ஆன்மாவின் ஒளிதான்.

தவ , யோக , த்யான , நியம நிஷ்டையில் மூழ்கி திளைக்கையில் , உள்ளிருந்து ஆனந்த பேரலையாக எழுந்து , உடல் முழுவதும் பரவி , மனமும் , உடலும் காணாமல் போய் , காயமே இது பொய்யடா என மெய்ப்பித்து, இறைவா , இறைவா என்ன இந்த இன்பநிலை ! மானிட பிறப்பில் இப்படியும் அதிசயமா , எனக்கா , இது நானா , என்னாலும் இது சாத்தியமா என ஆனந்த பித்தனாக்கி நம்மை நமக்கு அடையாளம் காட்டப்பட உதவுகிறதே அதன் உள்ளார்ந்த வித்து நமது ஆன்மாதான்.

அடையாளம் காட்டப்பட்ட மனிதன் தன்னுணர்வை அடைந்து இனியும் தாமதிக்காமல் இறைவழியில் நடந்து இறைவனின் பதம் நாட வேண்டும் என எண்ணி துதித்து , மனமுருகி , மெய்யொன்றி அதன் வழி செல்ல முற்படும் போது ஒரு புத்தம்புது பூவை கையிலெடுப்பதுபோல் நம்மை எடுத்து இறைவழியில் நாம் செல்லுவதற்கு இறுதிவரை உடன் வரும் துணை யார் தெரியுமா ? நமது ஆன்மாதான்.

இப்போது தெரிகிறதா ?

ஆன்மாவின் வேலையென்ன என்று !!!!!

உங்கள் ஆன்மா சொல்வதை கேளுங்கள் , அன்பு வழி செல்லுங்கள் .
பேரானந்த அலையில் ஆடுங்கள் , பேரின்ப அற்புதங்களை கண்டு உணருங்கள் .

வாழுங்கள் வளமோடு வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன்.  

Thursday, March 13, 2014

எப்ப கோவிலுக்கு போவது ?


அன்பு உள்ளங்களே வணக்கம்.
பலரது மனதிலும் எழும் கேள்வி ஒன்று உண்டு

எப்ப கோவிலுக்கு போவது ?

எப்போது முதல் கோவிலுக்கு போகலாம் அதாவது எந்த வயது முதல் கோவிலுக்கு சென்று ஸ்வாமி கும்பிடுவதை வழக்கமாகக் கொள்ளலாம் என்பதுதான் அந்த கேள்வி ?

எந்த வயதில் கோவிலுக்கு செல்லலாம் என தெரிந்தால் அப்போது முதல் போகலாம் ஏன் வீணாக முன்பாகவே போய் எதிர்பார்த்திருக்கவேண்டும் என்கின்ற எண்ணமே காரணம் .

மற்ற எந்த தேவைக்கும் , வேலைக்கும் ஒருநாளே முன்பாக போக நினைக்கும் மனிதர்கள் கோவிலுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் போனால் போதும் என எண்ணுகிறார்கள்.

சிறிய வயதில் சிகரெட், பான்பராக் , போதை , பெண் சகவாசம் என இருப்பவர்கள் , நமக்கென்ன வயது இந்த வயதில் இப்படி இருக்கின்றோமே என்று எண்ணுவதில்லை , அது எல்லா வயதுக்கும் ஏற்றதாகின்றது . 
ஆனால் கோவிலுக்கு போக மட்டும் மனிதர்களுக்கு வயதும் காலமும் தேவையாகின்றது.

அம்மா , நான் கோவிலுக்கு போய்வரேன்னு சொன்னவுடன் , நானும் வரேன் வெள்ளிகிழமை போகலாம் எனும் தாயின் குரல் கேட்கிறது.

ஏன் மற்ற நாட்களில் செல்லக்கூடாதா ? மற்ற நாளில் அங்கே கடவுள் இல்லையா ? அப்படி இல்லை நமக்கு வசதியாக இருக்கும் நாளில்தான் கோவிலுக்கு செல்வது எனும் மனப்பாங்கு வந்து விட்டது.

எப்போ பார்த்தாலும் கோவில்லையே இருக்கே சாமியாராயிட்டயா என்கிறார்கள் , கண்டிக்கின்றார்கள் , கோவில்ல இருந்தால் சாமியாரா , கோவிலுக்கு போவது நல்ல பழக்கம் இல்லையா ?

இளம் வயதில் கோவிலுக்கு போகும் பழக்கம் இருந்திருந்தால் இன்றைய இளைஞர்கள் இன்று செல்லும் தவறான பாதையும், கற்பழிப்புகளும் , போதையின் பாதையும் வந்தே இருக்காதே ! 

பெற்றோர்கள் ஏன் அதை மறந்தார்கள் ?

நல்லொழுக்கம்  இல்லாது போனால் நாமும் , நமது வீடும் , நாடும் கெடும் என்பதை மறந்ததின் விளைவே இன்றைய அவலமான நிலைக்கு காரணம் அல்லவா ?

3 வயது குழந்தையை 9 வயது குழந்தையை பாலியல் கொடுமை செய்வது மேலை நாடுகளில் கூட நடப்பதில்லை , ஆனால் இன்று நம்நாட்டில் தினசரி நிகழ்வானதற்கு நாமே காரணம் என்பதையும் ,

நமது செயல்கள் கவனிக்கப் படுகின்றன , இன்றைக்கில்லாவிட்டாலும் நாளை இறைவனால் (இயற்கையால்) தண்டிக்கப்படுவோம் என்பதை நமது பிள்ளைகளுக்கு நாம் உணர்த்தாததும் தான் காரணம் என்பதை யாராவது மறுக்க முடியுமா ?

பெற்ற தாயே மகனிடம் உறவு வைத்துக் கொள்வதும் , தனது மகளிடம் தந்தையே தொடர்பு வைப்பதும் முதலில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்த காட்டுமிராண்டி கால பழக்கமல்லவா ? முன்தோன்றிய மூத்தகுடி எனப் பெருமையைப் பேசும், 
மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளதாக பேசிக் கொண்டும் , 20 நூற்றாண்டில் பயணிக்கிறோம் வானத்தை வளைப்போம் , மணலைத் திரிப்போம், நாங்கள் புதிய உலகம் படைப்போம் என்றெல்லாம் பேசி இறுதியில் காமத்தில் சிக்கி கந்தலாகிப் போனதே இன்றைய இளைஞிகள் , இளைஞர்களின் வாழ்வு.

ஒரு காலத்தில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அந்தக்கால “பெருசுகள்”  ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் பார்த்த “ரெக்கார்ட் டான்ஸ் இன்று டி வி வழியாக நடு வீட்டில் அரங்கேறுகிறதே, மோசமான , அசிங்கமான, கண்ணை மூடச் செய்யும் அங்க அசைவுகளை, மனைவியோடு, மகனோடு, மகளோடு, மருமகளோடு, மருமகனோடு, பேரன் , பேத்தியோடு கொஞ்சமும் வெட்கமின்றி கூடிப் பார்க்கின்றோமே அதுதான் புதிய உலக நாகரீகமா ?

இதற்கெல்லாம் வயது தேவையில்லை, ஆனால் கோவிலுக்கு போக மட்டும் வயது ஆகட்டும் இப்ப என்ன அதுக்கு ?

உடல்நிலை சரியில்லாத போதுதான் மருத்துவர் தேவை .

மனநிலை மாற்றம் காணும் வயதில்தான் கோவில் செல்வதும் , பக்தியில் ஆழ்வதும் வேண்டும் .

இன்றைய சிறுவர்கள்தான் நாளைய இளைஞர்கள் அவர்களை சரியான வழிநடத்துதல் நாளைய உலகின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை தேவை.

கெட்டழியும் போது நீதான் காரணம், இல்லையில்லை நீதான் காரணம் என்று ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்திப் பயனில்லை . நாமே காரணம் என்றெண்ணி இன்றே நமது பிள்ளைகளை இறைவழியில் , பக்தி மார்க்கத்தில் , இறையுணர்வில் ஒன்றிடச் செய்வோம்.

எந்த வயதில் கோவிலுக்கு போவது நல்லது என்று
ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர் சொல்வது கேளுங்கள் :
"இளமையில் ஒரு இளைஞன் கோவிலுக்கு போகவில்லை என்றால் கண்டிக்க வேண்டும். முதுமையில் ஒரு முதியவர் கோவிலுக்கு போனால் தண்டிக்க வேண்டும்". சுவாமி விவேகாநந்தர்.

ஏன் முதுமையில் முதியவர்கள் போகக்கூடாது என்றால் அவர்கள் இளமையில் சென்றிருந்தால் இறைவனை உணர்ந்திருப்பார்கள் , இனி போயும் பலனில்லை , பயனற்ற வெற்றுக் கதைதான் அங்கு போய் பேசுவார்கள்.

பக்திப் பெருக கோவிலுக்கு செல்லுங்கள். ஞானம் பருக சத்சங்கம் செல்லுங்கள்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

சிவனருள்.கருணாகரன்.

Saturday, March 8, 2014

ஆதாயம் – சாதகமும் பாதகமும்

ஆதாயம் – சாதகமும் பாதகமும்  


அன்பு சிவனருள் கருணாகரன் அய்யா அவர்களுக்கு வணக்கம்
என்மனதில் ஒரு ஆசை.

நீங்கள் கீழ்க்கண்ட குறிப்புகளின் அடிப்படையில் ஒரு நல்ல தலைப்பிட்டு ஒரு கட்டுரை தரவேண்டும்.

குறிப்புகள் :

ஆதாயம் பற்றி விசாரித்ததில், நண்பர்களின் பல கருத்துக்களை கேட்டறிந்தேன். ஆனால் அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஆதாயம் இரண்டு வகைப்படும்.

அவை
1. உபகாரத்தினால் கிடைக்கும் ஆதாயம்.
உதாரணமாக அன்னதானம் செய்து அதனால் வாழ்த்துக்களை ஆதாயமாகப் பெறுவது.

2. சுயநலத்தினால் கிடைக்கும் ஆதாயம்.
உதாரணம் நான் உனக்கு இன்ன காரியத்தை( சுபமோ! பாவமோ? ) செய்து தருகிறேன். நீ எனக்கு இன்ன ஆதாயத்தை தரவேண்டும்.

மேற்படி இரண்டு ஆதாயங்களையும் சற்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

மேற்கண்ட கேள்வியை அடியேனின் அன்பிற்குரிய நண்பர் “இடைசை ஆளவந்தான்” கேட்டுள்ளதற்கிணங்க அவருக்காகவும் , நமது முகநூல் நண்பர்களுக்காகவும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஆதாயமும் – ஆபத்தான ஆதாயமும் .

பொதுவாகவே எல்லாக்காலங்களிலும் மனித வாழ்வென்பது ஏதேனும் ஒன்று அல்லது பல ஆதாயங்களை நோக்கியே பயணிக்க முயல்கிறது.

ஆனால் மனிதர்கள் செய்யும் சில கார்யங்களால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆதாயம் என்பது குறிப்பிட்ட மனிதர்களை அடைந்தே தீருகின்றது. மேலும் சில வேளைகளில் மனிதர்கள் ஆதாயத்தினை விரும்பிச் செய்தும் ஆதாயம் கிடைப்பதில்லை.
ஆதாயம் என்பதனை என்னவென்று ஆய்வு செய்தால் மனிதர்களின் நற் செய்கையினால் அவர்களுக்கு கிடைக்கும் வெகுமதி என்று கூறலாம்.

வியாபார நோக்கில் செய்யப்படும் செய்கைகளின் விளைவாக மனிதர்களுக்கு கிடைப்பதை ஆதாயம் எனும் பட்டியலில் சேர்க்க இயலாது , காரணம் அது லாப நோக்கில் ஒருவித எதிர்பார்ப்புடன் செய்யப்படுகிறது.

பிரதிபலனின் எதிர்பார்ப்பின்றி தனது எண்ணப்படியோ , மனநிம்மதிக்காகவோ செய்யப்படும் எந்தக் கார்யமானாலும் நாம் வேண்டாம் என்று சொன்ன போதும் அந்த செய்கைக்கான ஆதாயம் குறிப்பிட்ட அந்த மனிதரை சேர்ந்து விடுகிறது.

அவர்கள் மனம் மட்டுமல்லாமல் , செயலும் இயல்பாகவே எல்லா உயிர்களுக்கும் பொதுவான நன்மையை தருவதாகவே அமைந்து விடுகிறது. அவர்கள் பெரும்பாலும் இறைவனை எல்லா உயிர்களுள்ளும் காணும் பக்குவம் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.

மேலும் , ஆதாயம் என்பது எவ்வகையினாலும் கிடைத்தால் போதும், என்றெண்ணும் மனிதர்களின் செய்கையில் இயற்கை இணைவதில்லை. தான் (அதாவது இயற்கை) செய்ய வேண்டிய கார்யத்தினை , தனது பிரதிநிதியாக நின்று செய்யும் மனிதனை இயற்கை மிகவும் நேசிக்கின்றது.

அவர்களின் அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருக்கின்றது , அவர்களின் சொல்லையும் , செயலையும் இயற்கையே முன்னின்று நிறைவேற்றி தருகிறது.

அவ்வாறு இயற்கையின் நேசிப்பினை பெற்றவர்களைத்தான் , நாம் தேவ மகரிஷிகள் , மகரிஷிகள், ஞானிகள் , முனிவர்கள் , சித்தர்கள் , உத்தம புருஷர்கள் என்றெல்லாம் வாயார, மனமார புகழ்ந்து, அண்ணாந்து பார்க்கின்றோம்.

காரணம், மனிதர்களிடமிருந்து எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல்தான் இயற்கை மனித இனத்தை பல ஆயிரம் கோடி வருடங்களாக காப்பாற்றி வருகின்றது .

அதைப்போலவே மனிதர்களும் , தனது சக மனிதஇனத்தையும், பிற உயிரினத்தையும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் , நற்செயகையினால் மகிழ்வுற செய்வார்களேயானால் இயற்கை அவர்களை தனது செல்லப்பிள்ளைகளாக பாவிக்கின்றது. (எல்லோரும் இயற்கையின் பிள்ளைகளாக இருந்தபோதும் )

நான் இதனை செய்கிறேன் அதற்காக நீ அதனை தரவேண்டும் (அது புண்ணியமோ , பாபமோ) எனும் பேரத்தோடு செய்யப்படும் செய்கையினால் கிடைக்கும் ஆதாயம் நிலைப்பதில்லை , காரணம் அது வியாபார நோக்கோடு செய்யப்படும் செய்கை.

இதற்கான ஆதாயத்தை அவர்களே பேசி முடிவெடுத்துவிட்டார்கள் , இங்கே புண்ணியமோ , பாபமோ அவர்களே தீர்மானித்துக் கொண்டதனால் இயற்கையின் பங்களிப்பு ஏதுமில்லாமல் போகின்றது.

இப்படியான செய்கைகள் இயற்கையின் நியதியை மாசுபடுத்துவதால் (உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்) இயற்கை அதிகமான பாதிப்புக்குள்ளாகி இவ்வாறான செய்கைகள் செய்பவரின் வாழ்வில் எல்லாவகையிலும் தீமைகளே சூழ்ந்திருக்கும் நிலைப்பாட்டினை அவர்கள் அடைந்துவிட காரணமாகின்றது.

இந்நிலையை அவர்கள் பின்னாளில் உணர்ந்து திருந்தினாலும் கூட அவர்களின் வாழ்க்கைப்பாதை கடுமையான மேடுபள்ளங்கள் நிறைந்ததாகவே இருப்பதையும் , அதனால் அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் மிக அதிக அவமானங்களை சந்தித்து, வாழ வேண்டுமே என்று சலிப்புடன் வாழ்வதையும் காண முடிகிறது.

ஆகவே ,

பிரதிபல நோக்கின்றி பிற உயிர்க்கு செய்யும் நற்செய்கைகள் இயற்கையின் உறுதுணையையும் , இக பர வாழ்வில் நன்மையைத்தான் தரும் என்றும்,
பிரதிபலன் எதிர்பார்த்து பிற உயிர்க்கு செய்யும் தீயசெய்கைகள் இயற்கையின் துணையற்ற நிலையை மட்டுமல்ல ,

லௌகீக வாழ்வில் தாங்கவொண்ணாத துன்பத்தைத்தான் தருகின்றது என்பதையும், ஆன்மீக வாழ்க்கையை நினைக்கக்கூட விடுவதில்லை என்பதனையும் நாம் காணும் மக்களின் இன்றைய வாழ்வின் நிலைமையில் நன்கு உணரலாம்.

ஆனால் பிரதிபலன் எதிர்பாராமல் தனது செய்கைகளை அமைப்பது , அமைத்துக் கொள்வது என்பது எல்லோராலும் சாத்தியமில்லை என்பதும் சத்யமான உண்மையாகும்.

அப்படியானால் நம்மால் ஒன்று நிச்சயமாக செய்யமுடியும்.
அதாவது , நாம் மற்றவர்களுக்கு தீய செய்கைகளை செய்யாமல் இருக்கலாமே , அதுவே நன்மைதானே .

ஆதாயத்திற்காகவோ, கோபத்திலோ அல்லது காழ்ப்புணர்விலோ நம்மால் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் செய்யப்படவில்லை என்றாலே அது நமக்கு நற்செய்கையின் பலனை எந்த வடிவிலோ கொண்டு வந்து சேர்த்துவிடும். (நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும்).

நற்செய்கை செய்வோம் அல்லது தீய செய்கையை தவிர்ப்போம்.

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம் .

சிவனருள் கருணாகரன் .

Tuesday, March 4, 2014

பிரம்மச்சரியம் என்றால் என்ன ?


அன்புக்குரிய முகநூல் நண்பர் திரு. பாலச்சந்தர் அவர்களுக்காகவும் , மற்ற அனைத்து நண்பர்களுக்காகவும் இங்கே
பிரம்மச்சரியம் என்றால் என்ன ? எனும் ஆரோக்கியமான கேள்விக்கு பதில் தரப்படுகிறது.

முதலில்

பிரம்மம்

பிரம்மா

பிரம்மச்சாரி  

பிரம்மசர்யம் 
எனும் நான்கும் வெவ்வேறு பொருள் கொண்டவைகள் என்பதனை புரிந்து கொள்ளல் வேண்டும்.

ப்ரம்மம் என்பது நமது கண்கள், புலன்கள், அறிவுக்கு எட்டாதது , எங்கும் நீக்கமற வியாபித்து நிறைந்திருப்பது.

பிரம்மா என்பது படைப்பு தொழில் புரிபவரை சுட்டும் சொல்.

பிரம்மச்சாரி, பிரம்மச்சாரினி என்பது திருமணமாகாத , எந்த ஒரு பெண்ணையோ , ஆணையோ மோகம் கொள்ளாதவர்களை குறிக்கும் சொல்.

பிரம்மசர்யம் எனும் சொல்லின் பொருள் உணர்தல் மிக அவசியமா கின்றது.

பெண்ணாசையை விடுவதற்கு பிரம்மசர்யம் என்பது பெயரல்ல .

பிரம்மச்சாரி என்பதே பெண்ணின் துணையை தேடாதவரை குறிக்கும்.

ஆனால் ப்ரம்மச்சர்யம் என்பது ப்ரம்மத்தை உணர்தலுக்கு தயாராவதை குறிக்கும் சொல்லாகும்.  

ப்ரம்மத்தை உணர்தலுக்கு உட்படும் மனிதனுக்கு பலவித கடுமையான பரீட்சைகள் இயற்கையால் தரப்படுகிறது. 
இவைகளில் தேர்ச்சி பெற மனிதன் பலபடிகளை தேர்ச்சி பெற்று கடப்பது அவசியமாகின்றது.

புற ஒழுக்கம், அக ஒழுக்கம் மட்டுமல்லாமல் , கண்களாலும், சொல்லினாலும், கேட்பதாலும் , உடலாலும் முழுமையாக ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்.

வேதம் உணர்தலும் , அதன்படி சிந்தித்தலும், நடப்பதுவும் முக்யமான பங்காகும்.

நான் , எனது எனும் மமகாரம் , அகந்தை அறவே அழிக்கப் படவேண்டும்.
சொல்லால் மட்டுமல்லாமல் செயலாலும் ஒழுக்கம் காத்தல் வேண்டும்.

ப்ரம்மத்தை அறிதலுக்கான முயற்சி என்பது எளிதான ஒன்றல்ல .

சரியை எனப்படும் வைராக்கிய நெறிகொள்ளல் மிக அவசியம் .

இவ்விரண்டு சொற்றொடர்களின் இணைப்புதான் ப்ரம்மசரியம்.

ப்ரம்மம் : எங்கும் வியாபித்துள்ள பரம்பொருள் .
சரியை : பரம்பொருளை கண்டடைவேன் எனும் வைராக்கிய உறுதி.

பிரம்மசர்யை எனும் பதம் மருவுதல் கண்டு பிரம்மசர்யமாய் மேவி நின்றதுவாம்.

இந்திரியங்களை அடக்கி , காமத்தை துறந்து , அகந்தையை அழித்து , கோப , தாபங்களற்று எனது பிறப்பின் காரணம் ,பரம்பொருளை அடைவது ஒன்றே எனும் வைராக்கிய சிந்தையோடு அதற்கான வழிதேடி, அந்த வழி சென்று , வழிபட்டு பரம்பொருளின் திருவடி அடையும் பல வித மார்க்கங்களில் பிரம்மசர்ய மார்க்கமும் ஒன்று . 
      
ப்ரம்மசர்ய மார்க்கம் சென்று ப்ரம்ம பதத்தை அடையுங்கள் , அந்நிலையை நீங்கள் அடைய வாழ்த்துகள்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .

சிவனருள் கருணாகரன்.
Related Posts Plugin for WordPress, Blogger...