என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, March 30, 2013

என்னுடன் வரப்போவது யார் ?


அன்பு நண்பர்களே, வணக்கம்.

என்னுடன் வரப்போவது யார் ? 

நிச்சயமான ஒரு பயணத்தின் திட்டம்.

நம்மில் பலரும் எங்கோ ஓரிடம் பயணம் செல்வதாக இருந்தாலும் , அந்த பயணத்திற்கான பயணச்சீட்டு , அந்த பயணம் செய்யும் தூரம் , அதற்கான நேரம் , அந்த பயணத்தில் உண்பதற்கான உணவு , கொறிப்பதற்க்கான தின்பண்டங்கள், சென்று தங்குவதாக உத்தேசித்துள்ள இடம், அந்த நாட்களுக்குண்டான செலவுக்குரிய தொகை , அங்கே நாம் உடுத்திக் கொள்ள அழகிய நல்ல துணிமணிகள், நம்மை அழகுபடுத்திக் காட்டும் சாதனங்கள், அங்கு சந்திக்க இருக்கும் நபர்கள் , அவர்களுடன் சேர்ந்து நாம் காண விரும்பும் இடங்கள், திரும்பும் நாள், அதற்குண்டான பயணச்சீட்டு என மிக சிரத்தையுடன் கவனமாக ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து பாதுகாப்போம் , அதனை பயணம் துவங்கும் நாள் வரை பத்திரப்படுத்துவோம்.
சிலவேளைகளில் ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் நமது அந்த பயணம் தடைபட்டு போகும் , அந்த நாளில் நமது மனம் மிகவும்  சங்கடப்படும் , தாங்கவொண்ணாத துக்கப்படும் பின்னர் ஒருவாறாக சமாதானமாகிப் போகும். சிலநாட்கள் வரையிலும் கூட அந்த வேதனை நம்மை வாட்டுவதுண்டு . அவ்வளவு தூரம் சிரமப்பட்டு பயணம் திட்டம் போட்டு கடைசியில் பயணம் நின்று போனதை பலரிடமும் சொல்லி சொல்லி வருத்தப்படுவோம். பயணம் நின்று போனதை மனம் ஏற்க முடியாமல் ஏதேதோ நினைவில் வந்து கலங்க வைக்கும். யாரிடமும் சரிவர பேசமாட்டோம் , ஒரு சோகம் நிறைந்த முகமாக தோற்றம் கொண்டு நடமாடுவோம். ஒரு விபரம் அறியாத குழந்தையின் நிலையை கொண்டிருப்போம்.
காரணம் நாம் பயணத் திட்டத்தை திட்டமிடும்போதே கற்பனையில் மிதந்து மனதால் அந்த இடத்தை அடைந்து விடுகின்றோம் , அங்கே பல இடங்களை கற்பனைக் கண்களால் பார்க்கின்றோம், அங்கே அமர்ந்து நண்பர்களோடு பேசி மகிழ்கிறோம், நாம் துணிமணிகளை தேர்ந்தெடுத்து வைக்கும் போது கற்பனையில் அந்த துணிமணிகளை அணிந்து கொண்டு அங்கே மனதால் நடமாடினோம் , பாடினோம் , ஆடினோம் மிகவும் சந்தோஷமாக அந்த நொடிகளை கழித்துக் கொண்டிருந்தோம்; இன்னும் சொல்லப்போனால் அங்கே போகவில்லையே தவிர அந்த இடத்திலேதான் கற்பனையில் வாழ்ந்து, ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தோம். அதனாலேயே நம்மால் அந்த பயணத்திட்டம் நிறைவேறாது போனதும் நமது உள்மனம் மிகவும் சோர்ந்து போனது.
மேலும் நாம் பயணம் போவதை பலரிடமும் ஆனந்தமாக , கொண்டாட்டமாக ஒரு குழந்தையைப்போல் , குதூகலத்துடன் சொல்லி மகிழ்ந்திருந்தோம்; அவர்கள் இப்போது ஏன் பயணம் போகவில்லையா? எனக்கேட்டால் என்ன வென்று பதில் சொல்வது ? என ஒரு கவலையும் வந்து விடுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு எவ்வளவோ வேலை நாம் பயணம் போகாததை அவர்கள் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை, காரணம் அவர்களுடைய பல பயணத்திட்டங்கள் நிறைவேறாமல் போய் இருக்கின்றது. இது ஒரு கவலைபடத்தக்க விஷயமாக அவர்கள் நினைக்கப்போவதில்லை , ஆனாலும் நமது மனம் போகாத அல்லது போகமுடியாமல் போன ஒரு சாதாரண பயணத் திட்டத்தில் மிகவும் சோர்ந்து போய் விடுகிறது .
மற்றவர்கள் நமது பயணத்திட்டம் நிறைவேறாமல் போனதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனையும் நம்மால் ஏற்க முடிவதில்லை , ஒரு வார்த்தையாவது ஏன் பயணம் போகவில்லை, காரணம் என்ன  என்று ஆதங்கமாக கேட்கிறார்களா பார் ! நாம் போகாததில் இவர்களுக்கு எல்லாம் ஒரு சந்தோஷம் , நாம் பயணம் போவதை சொல்லும் போதே அவுங்க முகத்தில ஒரு பொறாமை தெரிஞ்சிது, இப்ப போவலைன்னதும் இவுங்களுக்கெல்லாம் ஒரே  குஷி என அதையும் ஒரு குறையாகவே எடுத்துக்கொள்ளும் , உண்மையில்  மற்றவர்கள் நம்மை “ பாவம் அவுங்களே பயணம் போகாத வருத்தத்தில் இருப்பார்கள் நாம் ஏன் அதை கிளறி அவர்களை வேதனைப்பட வைக்கவேண்டும் என எண்ணியிருப்பார்கள்.  ஆனால் நம்மால் அவர்கள் அப்படி சிந்திப்பார்கள் என்று எண்ண முடிவதில்லை .
நாம் திட்டமிடும் நம்முடைய எல்லா பயணத்திட்டங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக தடைபடக்கூடும் , ஏனெனில் நம்முடைய முன்னோடிகளான தாத்தா , பாட்டி, தந்தை, தாயார், அண்ணன், மாமா, நண்பர்கள், நண்பிகள் என இன்னும் உள்ள பலருடைய பயணத் திட்டங்களெல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டிருக்கின்றன,அதன்பொருட்டு அவர்கள் நம்மைப்போல் ஒரு துக்கசாஹரத்தில் மூழ்கவில்லை என்பதை ஏன் நாம் நினைவில் கொள்வதில்லை.
அதே வேளையில் எவராலும் மாற்றி அமைத்துக் கொள்ளவே முடியாத , தனக்காக வேறொருவரை மாற்றி அனுப்ப முடியாத, தவிர்க்கவே முடியாத ,  எந்த காரணத்தினாலும் தடைபடவே முடியாத, பயணத்திற்கான வயது உனக்கு இல்லை , பாஸ்போர்ட் வேண்டும், உன்னிடம் இல்லை, நீயெல்லாம் பயணம் செய்யமுடியாது என்று நம்மை ஒதுக்க முடியாத , நானெல்லாம் வரமுடியாது என்று தப்பித்துக் கொள்ள முடியாத, அடுத்த முறை வருகிறேன் இப்போது வரவில்லை என்று சாக்கு போக்கு சொல்லமுடியாத, இந்த ஒரு வேலை முடிந்தவுடன் நானே வந்து விடுகிறேன் என்று சொல்லமுடியாத, பையனுக்கு ஒரு கல்யாணம் அதைமட்டும் பார்த்து விட்டு வருகின்றேனே, பேரனை அல்லது ஒரு பேத்தியை அல்லது ஏதாவது ஒரு வாரிசை பார்த்து விட்டு அல்லது ஒரு வீடு எனது சின்ன வயது கனவு அதை மட்டுமாவது கட்டிவிட்டு வந்து விடுகின்றேன் , ஒரே ஒரு நிமிடம் கொடுங்கள் அந்த பணம் எங்கிருக்கின்றது என்பதை குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு வந்து விடுகின்றேன் என்று “டைம்ப்ளீஸ் கேட்க முடியாத , கையெழுத்து போடும் வரையாவது கொஞ்சம் விடுங்களேன் , கொஞ்சம் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு வருகின்றேன் என்று கெஞ்ச முடியாத, எனக்கு அங்கு வர பிடிக்கவில்லை என்றால்  என்னை விடுங்களேன் என்று அதட்ட முடியாத , எனக்கு எந்த அளவு செல்வாக்கு உண்டு தெரியுமா ? வரமுடியாது என்று சொன்னால் உன்னால் என்னை என்ன செய்யமுடியும் ? என்று இறுமாப்புடன் பேசமுடியாத , மந்திரி முதல் ஜனாதிபதி வரை எனக்கு அடக்கம் நீ யார் என்னை வா என்று அழைக்க என்று மிரட்டி தட்டிக் கழிக்க முடியாத ஒரு நிச்சயமான ஒரு பயணம் இருக்கின்றது என்பதை நாம் அறிவோமே, அந்த பயணத்திற்கான முன்னேற்பாடுகளை என்றாவது செய்திருக்கின்றோமா ? சிந்தித்திருக்கின்றோமா ?
ஏதோ நாம் மட்டும் அந்த பயணத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் போல அல்லவா நமது நடவடிக்கைகள் அமைந்துள்ளது. ஞானிகளையும், ரிஷிகளையும், முனிவர்களையும், சித்தர் களையும் கூட விடாமல் அழைத்து சென்ற  பயணம். இந்த திட்டத்தை உருவாக்கிய இறைவனே மனித , மிருக, பறவை என பல்வேறு உருக்கொள்ளும் போது தட்டாமல் சென்ற பயணம். நாம் மட்டும் மீற முடியுமா ? என்ன !
பயணம் தெரியும் ஆனால் எங்கே என்று தெரியாது , கண்டிப்பாக பயணம் உண்டு ஆனால் என்றைக்கு என்று தெரியாது என்ற சூழலில் நாம் என்றைக்கும் அந்த பயணத்திற்கு ஆயத்தமாக இருக்கவேண்டாமா ? நாளைக்கு என்பது சாஸ்வதமான ஒன்றா ? இன்றைக்கு அதிலும் இந்த நொடிதானே உண்மை
அதனை மறப்பது நன்றல்லவே என்பதனை நினைவு படுத்தவே இந்த கட்டுரை .
இது நிச்சயமான பயணம், இதற்கான பயணத்திட்டம்; அதற்கான முன்னேற்பாடுகள் செய்து கொள்ள மறக்கவேண்டாம் .
நான் ரெடி , என் பயணத்திட்டம் ஓகே!
அப்ப நீங்க !!!!!!!
மீண்டும் ஒரு தலைப்புடன் சந்திக்கின்றேன் ..          

Thursday, March 28, 2013

ஆரவாரப் பேய்கள்


அன்புள்ளங்களே , வணக்கம்.

இந்தப்பகுதியில் எனது சிற்றறிவுக்கு எட்டிய சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து வருகின்றேன் . இவை முழுக்க முழுக்க குறைமதி கொண்ட எனது  சிந்தனைச் சிதறல்களே ஆகும். இவைகள் மற்றவர்களின் எந்த ஒரு ஆக்கங்களிலிருந்தோ , புத்தகங்களிலிருந்தோ தவறாகக் எடுத்துக் கையாண்டவை அல்ல. இவைகள் யாரையும் புண்படுத்தும் நோக்கிலும் அல்ல.

ஆரவாரப் பேய்கள் !?!?

பேய்கள் என்று கேள்விப்பட்டிருப்போம் , இதென்ன புதிதாக ஆரவாரப்பேய்கள்; இப்படி ஒன்று உள்ளதா என்ன ? நெருப்பில்லாமல் இல்லாமல் புகையுமா ? என்பார்கள் , அப்படி என்றால் ஆரவாரப்பேய்கள் இருக்கும் போலத்தான் தெரிகிறது.

சாதாரணமாக பேய்களை  மயானத்தில்  இருப்பதாகவும் நடுநிசியில் வெளிப்படும் என்றும் சொல்வார்கள் , இந்த ஆரவாரப்பேய்கள் எங்கிருக்கும்? எப்போது வெளிப்படும் என்பதை காணப் போகின்றோம்.
இந்த ஆரவாரப்பேய்கள் ஒவ்வொரு மனிதருள்ளும் மறைந்திருக்கின்றன; இவைகள் மனிதர்களின் குணாபேதங்களுக்கேற்றாற்போல் உருக்கொள் கின்றன. இவைகள் இருக்கும் இடம் மனிதர்களுக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதன்பிடியில் தான் இருப்பதையே மனிதர்கள் உணரமுடிவதில்லை.

ஞானிகள், ரிஷிகள், யோகிகள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் என எதையும், யாரையும் இந்த ஆரவாரப்பேய்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள்தான் இந்த ஆரவாரப்பேய்களால் பீடிக்கப்பட்டு அவதியுறுகின்றனர்.

இந்த ஆரவாரப்பேய்கள் பலதரப்பட்ட குணங்களைக் கொண்டு  இருக்கின்றன.

எப்படி இந்த ஆரவாரப்பேய்கள் மனிதர்களை பிடிக்கின்றன ; அதனால் மனிதன் எப்படி அவதிக்குள்ளாகின்றான்? எனப் பார்ப்போம் !.
மனிதர்கள் தன்னுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டி நிறைய புத்தகங்கள் படித்தல், அனுபவஸ்தர்களோடு கலந்துரையாடுதல் என ஈடுபடுவார்கள், ஈடுபடுகிறார்கள்.
இந்த படித்தறிதலையும், கலந்துரையாடலையும், (இவைகளை மற்றவர்களின் அனுபவம் என சொன்னால் தன்மீது மற்றவர்கள் கொண்ட மதிப்பு குறைந்து விடுமே என்று எண்ணி)  தன்னாலேயே அறிந்து உணரப்பட்டதாக மற்றவர்களிடம் தன்னைக் காண்பித்துக் கொள்வார்கள்; அந்த நேரம் அதனைக் கேட்பவர்கள் அவர்களை மேலும் ஊக்குவிக்க மனிதன் மிகவும் சந்தோஷமாகி நிறைய சொல்ல துவங்குவான் அல்லவா ! அப்போது இந்த ஆரவாரப்பேய்கள் மனிதருள்ளிருந்து விழித்து எழுந்து கொள்ளும் ; அதன்பின் அதனுடைய பிடியிலிருந்து மனிதன் மீளுவது என்பது முடியாததாகின்றது.

தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக மற்றவர்களை நம்ப வைத்துவிட்டு பின்னர் அதனை காப்பாற்ற மனிதன் படும்பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது.

சில மனிதர்கள் நல்ல குணங்களைக் கொண்டிருந்தபோதும் , சிலவேளை களில் அவர்களிடமும் இந்த ஆரவாரப்பேய்கள் தலை தூக்கத்தான் செய்கின்றன. இவர்கள் தானுண்டு , தன் பணியுண்டு என இருப்பார்கள் , மிக சாந்தமாகவே எதையும் செய்வார்கள். எதையும் மிக சிரத்தையோடு செய்வார்கள். ஆனால் கொஞ்சம் அவர்களை சீண்டி விட்டால் போதும் அவர்களுள்ளே பதுங்கியிருந்த ஆரவாரப்பேய் விழித்து அவர்களை வெளி உலகிற்கு காட்டிவிடும்.
வேறு சில மனிதர்கள் நல்ல விஷயங்கள் நிறைய அறிந்தவர்களாக இருப்பார்கள் , ஆனால்  தன் நிலையைக் காட்டிலும் அதிகமாக வெளியில் காட்டிக் கொள்வார்கள் , உலகினைக் காக்கவே அவதரித்தது போல் இவர்களது நடவடிக்கைகள் அமைந்திருக்கும். அற்புதமான மாயா ஜாலமெல்லாம் நிகழ்த்திக்காட்டுவார்கள்,  தீர்க்கமுடியாத பலவிதமான நோய் களெல்லாம் இவர் தம் பார்வை பட்ட மாத்திரத்தில் தீர்ந்தோடும் , இருக்கும் இடத்திலிருந்தே எல்லாக் காரியங்களையும் மற்றவர்களுக்கு நிகழ்த்திக் காட்டும் இவர்களின் ஆரவாரப் பேய் இவர்களைக் காக்க முடியாது என கை விட்டு விடும்.

உண்மையில் இந்த ஆரவாரப்பேய்களின் வேலைதான் என்ன ?

மனிதனின் ஆழ்`மனதில் குடிகொண்டுள்ள இந்த உதவாக்கரை ஆரவாரப் பேய்கள் மனிதனின் மேம்பாட்டினை சீர்குலைக்க வல்லவை.
தனிமையில் அமைதியாக அமர்ந்து ஏதாவது இறைவனை அல்லது தன் வாழ்வின் வந்த வழிதனை சிந்திப்போம் என அமர்ந்தால் மனதின் உள்ளே இருக்கும் அத்தனை குப்பைகளையும், அசிங்கங்களையும் கிளறி விட்டு (ஏய்,..,டேய்..உன்னை எனக்குத் தெரியாதா? நீயெல்லாம் போய்...என்று) அந்த துர்நாற்றத்தில் நமது உள் மன அமைதியையே குலைத்துவிடச் செய்கின்றன. பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னைப்பற்றி நன்றாகத் தெரியும்; அதனால்தான் மனிதனின் அந்தரங்கம் அறிந்துள்ளதால் இந்த ஆரவாரப் பேய்களுக்கு கொண்டாட்டமாகிப் போகின்றது. தன்னிடம் இல்லாததை இருப்பதாகக் காட்டும்போது இவைகள் அந்த மனிதனைக் கேலியும், கிண்டலுமாக செய்து அந்த மனிதனை கேவலமுறச் செய்கின்றன.

ஞானிகளையும் விட்டதில்லை இந்த ஆரவாரப் பேய்கள் , மகரிஷியான விச்வாமித்திரரையே என்ன பாடுபடுத்தின என்பதை படித்துள்ளோம். பணிந்த தாவரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன , ஆரவாரப்பேய் கொண்டு நிமிர்ந்து நின்ற மரங்களின் கதியென்ன ? ஆரவாரப்பேய் எனும் மதம் கொண்ட மிருகங்களின் நிலையென்ன ?

சரி சரி.. இந்த ஆரவாரப்பேய்களை எப்படி ஒடுக்குவது ?

இசைஅமைப்பாளர் திரு. இளையராஜா அவர்கள் தனது புத்தகத்தில் எழுதியிருந்ததை இங்கே நினைவு கூறல் சரியாகும் எனக் கருதுகிறேன்.
ஓரெழுத்து வித்தியாசத்தில் மாபெரும் மாற்றம் பாருங்கள் .
அவர் சொல்கிறார் : இந்த உடம்பை இல்லாமல் செய்வது  மயானம் ,     இந்த மனதினை இல்லாமல் செய்வது தியானம்.

ஆமாம், சகோதரர்களே,
நடுநிசியில் இரவின் சலனத்தில் மயானத்தில் தோன்றுகின்றன பேய்கள்.
குருவின்துணையில் மனஉறுதியில் செய்யப்படும் தியானத்தில்  ஒடுங்குகின்றன ஆரவாரப்பேய்கள்.

கவியரசர் ஒரு பாடலில் சொன்னார் ;
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா ......

பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா –
இறந்தபின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா

எவ்வளவு உயர்ந்த நிலை பாருங்கள் வாழும் காலத்திலேயே பேரமைதியுடன் வாழ்வது.

ஆரவாரப்பேய்கள் நம்மை விட்டு ஓடிவிட்டால் மனம் அமைதியைக் காணும், ஆனந்தம் கூடும், பேரின்பம் சேரும், எங்கும் சாந்தி, சாந்தி, சாந்தி மட்டுமே.

பின் குறிப்பு :

இந்த ஆரவாரப்பேய்கள் எப்படியெல்லாம் செயல்படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணம்தான் ஆரம்பத்தில் உள்ள எனது தன்னிலை விளக்கம் இது தேவையா?! ஆனால் இப்படி எல்லாம் தன்னைப் பீற்றிக் கொள்ளும்.

உங்கள் 

Friday, March 15, 2013

ஞானத்தை எங்கே தேடுவது !?

அன்பு நண்பர்களே, வணக்கம். 

இன்றைய தேடல் ....ஞானத்தை எங்கே தேடுவது !?

கொஞ்சமாவது அறிவு இருந்தா இப்பிடி செய்வியா ?
சுத்தமாவே உனக்கெல்லாம் மூளையே கெடையாதா ? 
இல்ல நடிக்கிரியா?
ஏன் என் உயிரை வாங்கிரீங்க ? ஞான சூன்யங்களா !
அறிவ வைச்சு எழுதரதுக்குள்ள ஏன் பொறந்தீங்க ?
நீங்கள்லாம் பொறக்கலைன்னு எவன் அழுதான் ?

என்று ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான ஏச்சுகளை நாம் நிறைய சமயங்களில் பல இடங்களில் கேட்டிருப்போம்.

அறிவினின்றும் மேம்பட்டதாக ஞானம் இருந்த போதிலும் இரண்டையும் ஒன்றாக பாவிப்பது நமது சுபாவமாயிற்று.

சரி விடுங்கள் ,.

அறிவை தேடுவது என்றால் நிறைய புத்தகங்கள் படித்து , அனுபவத்தை வளர்த்து , போதனைகளை மனதினில் நிறைத்து , நல்லோருடன் கலந்து பழகி அறிவு நிறைந்தவனாகி விடலாம்.(இவர்களை அறிவு ஜீவி, புத்தகப் புழு) எனக் கூறுவார்கள்.

ஞானத்தை தேடுவது என்றால் ... எங்கு போய் தேடுவது ? அதற்கு ஞானவான்கள் வேண்டுமே?
இங்கு ஒரு கதை நினைவில் வருகிறது ..
ஒரு முறை தர்மராஜனின் சபையில் ஒரு விவாதம் நடைபெற்றது .
எல்லோருமே நல்லவர்கள்தான் என்கிறார் தர்மர். இல்லையில்லை எல்லோருமே தீயவர்கள்தான் என்கிறான் துரியோதனன்.
விவாதம் கண்ணனிடம் செல்ல, மாயக்கண்ணனோ, அவரவர்களின் மனநிலையைப் பொறுத்தது என்கிறான் . ஆனால் அதனை இருவருமே ஒப்புக்கொள்ளவில்லை.
(கண்ணனுக்கு தெரியாததா என இருவருக்குமே தெரியவில்லையா, இல்லை மனிதர்களுக்கு இந்த உண்மையை உணர்த்துவதற்கான கதைக்களமா).
சரி உங்களுக்கு ஒரு உபாயத்தின் மூலமாக உணர்த்துகிறேன் என்று கூறிய  ஸ்ரீ கிருஷ்ணன், முதலில் தருமரை அழைத்து , யுதிஷ்ட்ரா , சென்று ஐந்து அயோக்கியர்களை அழைத்து வா ஒரு தவறான காரியம் செய்யவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார் , வெளியில் சென்ற தருமன் சிறிது நேரம் கழித்து தனித்து வந்தான் , எங்கே அப்பா,  யாரையும் அழைத்து வரவில்லையா, தனியாக வந்துள்ளாய் என கண்ணன் வினவினான்.

அதற்கு பதிலளித்த தருமன் , இல்லை கண்ணா , வெளியே எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கின்றார்கள் , கொஞ்சநேரம் கழித்து முயற்சிக்கிறேன் என்று கூறினார்.

சரி விடு வருத்தம் வேண்டாம் , என்று சொல்லி தருமனை அனுப்பி வைத்தான் கண்ணன்.

தருமன் சென்றதும் பணியாளை விட்டு துரியோதனனை அழைத்து வர செய்தான் ,கண்ணன். துரியோதனன் வந்ததும் அவனிடம் கண்ணன், “துரியோதனா நான் ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும் என எண்ணுகிறேன் அதற்கு ஐந்து நல்லவர்கள் தேவை நீ வெளியே சென்று ஐந்து நல்லவர்களை அழைத்துவா என சொன்னான். சரி கண்ணா , இதோ வருகிறேன் என்று சொல்லி வெளியே சென்றான் துரியோதனன் .

நேரம் கடந்து சென்று கொண்டே இருந்தது , வெகு நேரம் கழித்து வந்த துரியோதனன் , கண்ணா, என்னை மன்னிக்கவேண்டும் , என்னால் உனக்கு ஐந்து நல்லவர்களை அழைத்து வர முடியவில்லை என்றான் , கண்ணன், ஏன் என்ன காரணம் என வினவ , வெளியே எல்லோரும் அயோக்கியர்களாகவே உள்ளார்கள் கண்ணா , நான் வெகு நேரம் அமர்ந்திருந்தேன், யாராவது வருவார்கள் என்று ஆனால் ஒரு உத்தமனும் என் கண்ணில் படவில்லை என்று சொல்லி புறப்பட்டான்.

தர்மன் யாரைப்பார்த்தானோ அவர்களையேதான் துரியோதனனும் பார்த்தான் ஆனால் தருமனின் பார்வையில் எல்லோருமே உத்தமர்களாகவும், அவர்களே துரியோதனனின் பார்வையில் தீயவர்களாகவும் தெரிந்தார்கள்.

காரணம் , பார்ப்பவர்களின் எண்ணப்படியே தான் எல்லாமும் தோன்றும்.

நமது கேள்விக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

நிறைய உள்ளது.

நமக்கு ஏதோ ஒரு விஷயத்தில் சின்ன சந்தேகம் என்று வைத்துக்கொள்வோம் அதனை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடன் நமது மனதில் நமக்கு தெரிந்த நண்பர்கள், ஆசிரியர்கள் , ஜோதிடர்கள், சாமியார்கள் , ஆன்மீக நண்பர்கள் என நமது சந்தேகத்திற்கு பதில் சொல்லத்தக்கதாக உள்ளவர்களின் வரிசையாக முகங்கள் வந்து போகும்.

அவர்களையெல்லாம் உடனடியாக நாம் தேடுவதில்லை , அவர்களை ஒரு பட்டியலிட்டு பார்ப்போம் , இவருக்கு அது தெரியாது , அவருக்கு இது புரியாது, இந்த மேட்டரே இவருக்கு புரியாது , அவர் நம்மையே குழப்பி விடுவார் என்று ஒவ்வொருவராக ஒதுக்கிவிட்டு ஒன்று அல்லது இரண்டு நபரை தேர்ந்தெடுத்து விட்டு, அவரிடம் கேட்டு பார்ப்போம், அவர் என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம் என தீர்மானிப்போம். ஆனால் இந்த விஷயத்தில் நாம் ஏற்கனவே எடுத்த முடிவினை யாரும் ஒத்து வராவிடில் நாம் முன்பு எடுத்த முடிவினையே தீர்மானமாக எடுத்துக் கொள்வோம்.

இப்படியாகத்தான் நமது சந்தேகங்கள் மற்றவர்களால் தீர்க்கப்படுகின்றன (!).

காரணம் , நம்மிலும் அதிக விஷயஞானம் அறிந்தவராக யாரையும் நமது மனம் ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை. நாம் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு ஒரு பதிலை தந்தாலும் கூட அதில் சில குறைகளை சொல்லி அதனை சற்று மாற்றம் செய்து ஏற்றுக்கொள்வோம், அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

இது தவறென்று சொல்ல வரவில்லை , நமது மனமும், அறிவும் தீர்மானித்த ஒன்றை மற்றவர்களிடமிருந்து பெற விரும்புவதுதான் தவறு.

இதற்கு மாற்றுக் கருத்துக்களை கேட்கவே வேண்டாமே. நமது கருத்தும் கணிப்பும்தான் சரி என்றால் அதிலேயே இருந்து விடலாமே!.

இதிலிருந்து யாரையும் ஞானம் மிக்கவராக நாம் எண்ணப்போவதில்லை, என்பது மிகத் தெளிவாகிப்போனது.

சரி, ஞானிகள் , யோகிகள் , பெரிய மேதைகள் , ஆன்மீக நெறியாளர்கள், ஆன்மீக சிந்தனையாளர்கள் போன்றோர் எழுதிய ஞான மார்க்கம் சம்பந்தமான புத்தகங்களை படிக்கலாமா என்றால் , அதனால் அறிவுதான் பெருகும் , அது மட்டுமல்ல, புதிது புதிதாக நிறைய சந்தேகங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இப்ப இருக்கும் கேள்விக்கே பதில் இல்லை இதில் இந்த புதிய கேள்விகளுக்கு பதிலை எங்கே தேடுவது ?

அப்படியென்றால் புத்தகம் படிப்பதினால் ஞானம் கிடைக்காது, ஆன்மீக பெரியோர்களிடம் கலந்து பழகினால் ஞானம் கிடைக்குமா? என்றால் நமக்கு தெரியும் , நம்மைவிட இந்த ஆன்மீக பெரியவர்கள் ஒன்றும் முன்னாளில் உத்தமர்களாக இருந்ததில்லை , ஆகையினால் இவர்கள் கூறுவதை நமது உள்மனம் என்றைக்குமே ஏற்கப் போவதில்லை.

ஆனால் நமக்கு ஞானம் தேவை.
அப்படியென்றால் ஒன்று செய்வோம்.

நாம் ஞானம் பெற எண்ணும் ஆன்மீக பெரியோர் எப்படி இருக்கவேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ , இப்படியாக அவர்கள் ஒரு தூய நெறியுடன் தன்னை தயார் செய்திருக்கவேண்டும் என்று தீர்மானிக்கின்றோமோ , நமது மனதினில் ஒரு ஞானி , ஆன்மீக வாதி , யோகி அல்லது மதவாதி எப்படி இருப்பது இந்த பிரபஞ்சத்திற்கு நன்மையை தருவதாக அமையும் என முடிவெடுத்திருக்கின்றோமோ அப்படி அவர்கள் இல்லாததால்தானே நாம் அவர்களை ஞானியாக , யோகியாக , ஆன்மீகவாதியாக ஏன் மனிதனாகக் கூட ஏற்க முடியாமல் போனது.

நாம் அவர்களிடம் இல்லாததாக கருதும் அந்த நன்னெறியை, நல்லொழுக்கத்தை அவர்கள் தன்னுள் வளர்த்துக் கொண்டால் – அல்லது வளர்த்துக் கொள்வதனால் அவர்கள் ஞானம் பெற முடியும் – என்றும் ,

அதனை அவர்கள் களைந்து விட்டால் அவர்களை நாம் ஞானவானாக, யோகியாக, மதவாதியாக , ஆன்மீகவாதியாக ஏற்கலாம் என்றால் - இதனைக் களைந்தாலே ஞானம் வரும் என்றால் நாம் ஏன் அவர்களிடம் ஞானத்தை தேட சொல்ல வேண்டும் ? அதனைக் களைந்து ஞானியாக, யோகியாக , ஆன்மீக வாதியாக அவர்கள் மாறுவதை நாம் ஏன் விரும்ப வேண்டும் ? மாறாக , இத்தகைய குணாபேதங்கள் தான் நம்முள்ளும் ஏராளமாக காணக்கூடியதாக உள்ளதே !

இந்த மாற்றத்தை நாம் நமது மனதில் , வாழ்வில் , நடைமுறையில் கடைபிடித்து நாமே ஒரு ஞானியாக , யோகியாக , சிறந்த மதவாதியாக , ஆன்மீக வாதியாக உருவாகலாமே , அதை விடுத்து மற்றவர்களை ஏன் மாற்ற நினைக்க வேண்டும்? மாறச் சொல்லவேண்டும் .

இதிலிருந்து தெரிவது என்ன ?

ஞானம் என்பது வெளியே தேடும் ஒன்றல்ல , 

நம்முள் மொட்டாகி , மலராகி , பாரிஜாத மலராக பூப்பது, 

நம்முள் உள்ள நம்மை உயர்த்த நம்முள்ளே முகிழ்ப்பது ,

நம்முள் சுடர்விடும் ஓர் அற்புதம்,

நம்முள் நிகழும் ஒரு மாயாஜால நிகழ்வு ,

நம்முள் தோன்றும் தேய்தல் இல்லாத முழுநிலவு , 

அது ஒவ்வொரு மனிதருள்ளும்  இருக்கும் 

அஞ்ஞானம் எனும் காரிருள் நீக்க உதயமாகும் மெய்ஞானமான 
ஆனந்த சூரியன் .

நான் என நான் கருதும் இந்த நான் யார் ?

இந்த மாபெரும் பிரபஞ்சத்துள் எனக்கென்ன பணி ? 


எதன் பொருட்டு எனது இந்தபிறப்பு ? 

இந்த மனித பிறப்பினால் நான் செய்த அருந்தொண்டு 

என்ன ? 

பிறப்பின் நோக்கம் என்ன ? 

நான் எனது பிறப்பின் நோக்கை நோக்கித்தான் நகர்கின்றேனா ? 

எனது அடுத்த பிறப்பு மனிதனா எனத் தெரியாத போது, 

இந்த மனித பிறப்பில் என் பிறப்பின் நோக்கை 

முழுமையாக முடிக்க என்ன செய்வது? 

எனக்கேன் இந்த சிந்தனை ? 

என்பது போன்ற தொடர் கேள்விகளால் நம்மை நாமே 

கடைந்திட கடைந்திட, 

தெளிந்த நீரோடையாய் , 

கொட்டும் அருவியாய் ,

குளிர்ந்த இளம்தென்றலாய் ,

இறைவனின் இதமான வருடலோடு நாம் தேடாமலே நம்முள்ளே

ஞானம் உதயமாகும். 


அன்புடன் 

Friday, March 8, 2013

மாற வேண்டும்


அன்பு நண்பர்களே , வணக்கம்.

மீண்டும் ஒரு தலைப்புடன் உங்களை சந்திக்கின்றேன்.

மாற வேண்டும் என்பதே தலைப்பு.

பொதுவாக மனித இயல்பு மற்றவரின் குற்றம் காணல்.

இந்த உலகம் உருப்படாது , இப்படியே போய் ஒருநாள் எல்லாம் அழியப் போகுது பார் , இவன்-லாம் எங்க உருப்படுவான் , எதுக்கும் லாயக்கில்லாதவன் , வீணாப் போனவன் , எவ்வளவோ சொன்னேன் கேட்கலியே , கேட்டா உருப்புட்டிருப்பான் , கேக்காட்டி இப்படித்தான், இன்னும்படுவான் பார் , என்றெல்லாம் சக மனிதர்களை, மனிதர்கள்  கோபமாக , வருத்தப்பட்டு, ஆதங்கத்துடன் பேசுவதை கேட்டிருப்போம்.
இதில் உண்மை நிலை என்ன ? யோசிப்போம்.
மனிதன் இப்படியெல்லாம் பேசுவதால் தன்னை பெரியவனாக காட்டிக்கொள்ள முயல்வதாகத்தான் தெரிகிறதே தவிர வேறொன்றும் இல்லை. உலகில் உள்ள ஒவ்வொன்றும் அதனதன் பணியை மிகச் சரியாக, இம்மியும் பிசகாமல், நேர்த்தியாக செய்கின்றன , மிகச் சிறிய உயிரினமான எறும்பை கவனியுங்கள்.

தான் உண்ணும்படியான வஸ்து (தனது தேவை இல்லாத எது பற்றியும் அக்கறை காட்டுவதில்லை) ஏதேனும் ஒன்று நிலத்தில் விழுமானால் அடுத்த ஒன்றிரண்டு நிமிடத்தில் பல எறும்புகள் அந்த இடத்தை முற்றுகையிட்டு அங்குள்ள வஸ்துவை தங்களது மிகச் சிறிய பற்களால் துண்டித்து சிறுசிறு பகுதிகளாக்கி அதனை தாங்கள் வசிக்கும் இடத்திற்கு கொண்டுசென்று விடும் , சிறிது நேரத்தில் நிலத்தில் விழுந்த அந்த வஸ்து இருந்த இடமே தெரியாமல் போகும்.

இதனையே மனிதர்களின் பழக்கத்தை பாருங்கள் , தனக்கு தேவையே இல்லாத பொருளாயினும் சரி, அல்லது தனக்கு மிகவும் தேவையான பொருளாக இருந்தாலுமே கூட யாராவது வீட்டிற்கு கொண்டு வந்து தன்னிடம் தந்தால் பரவாயில்லை என எண்ணுகின்றோம் அல்லது உனக்கும் தேவைதானே, தேவைன்னா நீ கொண்டுவா, நான் கொண்டு போக மாட்டேன் என்று விவாதம் செய்வோம். ஆனால் பேசும்போது மிகவும் பொதுவான மனிதனாக காட்டிக் கொள்வோம். இது அனைத்து மனிதர்களின் பொது இயல்பாகும்.

தன்னுடைய சொல்லை, தன்னுடைய அறிவுரையை மற்றவர்கள் கேட்டு நடந்தால் அவர்களுக்கு மிகவும் நல்லது என எண்ணும் மனிதர்கள் ஏனோ தனது வாழ்வில் ஏன் தோல்வியை தழுவினோம் என எண்ணிப்பார்க்க விரும்புவதில்லை.

அவர்கள் சொன்னதை இவர் கேட்கவேண்டும் என விரும்புகிறாரே – ஏன் அவரே அதன்படி நடப்பதில்லை என்றால் மனிதர்களிடம் (அதாவது நம்மிடம்) இரண்டுவிதமான தீர்மானங்கள் உண்டு ஒன்று மற்றவருக்கானது – மற்றது தனக்கானது. (வேலைக்காரி எனும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் “ஊருக்கு தாண்டி உபதேசம் ஒனக்கும் எனக்கும் இல்ல) இது பெரும்பான்மையான மனிதர்களின் வாழ்வியல் கடைபிடிப்பாகும்.
இன்னும் சிலரோ தனது வார்த்தையை தெய்வத்தின் குரலாக சொல்வார்கள் –எல்லாம் அவன் செயல், நடப்பது எல்லாம் விதியின் செயலல்லவா ? நாம் வெறும் கருவிதானே என்பார்கள்.

ஆனால் அடுத்தவரின் குரலும் தெய்வத்தின் குரல்தான் – அவரும் விதியின் படி செயலாற்றும் ஒரு கருவிதான் என எண்ணுவதே இல்லை, காரணம் தன்னை தெய்வத்தின் பிரதிநிதியாக கருதும் மனிதர், சக மனிதனை மனிதனாக கூட எண்ணுவதில்லை. தான் மட்டுமே இந்த பிரபஞ்சத்தை மாற்றியமைக்க வந்த அவதாரமாக கருதுகின்றார் . இதனை அறியாமையா , மமதையா எப்படி சொல்வது ?

இப்படியே ஒவ்வொருவரும் மற்றவரை மாற்றியமைக்க முயல்கிறோம் , அவர் மாறவேண்டும் , இவர் மாறவேண்டும் என்றும், இவர்கள் எல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை எந்த நற்பயனும் இல்லை, என்றெல்லாம் வருத்தப்படுகிறோம், கோபமடைகிறோம், ஆதங்கத்தின் எல்லைக்கே செல்கிறோம் .

இதற்கு தீர்வுதான் என்ன ?

இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும், மாற்றம் வேண்டும் என உண்மையில் நாம் விரும்பினால் மாற்றம் நம்மிடம்தான் வேண்டும், நாம் நம்மை மாற்றிக் கொள்ளாதவரை , வெளியில் மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பேயில்லை என்பதை உணரவேண்டும். மாற்றம் என்பது உடனே நிகழ்வதில்லை , சிறிது சிறிதாகத்தான் மாற்றம் காணும். முதலில் நாம் மாறவேண்டும் , நம்மைப் பார்த்து நமது நண்பர் மாறுவார், அவரைப் பார்த்து அவரது நண்பர் என ஒவ்வொருவராக மாறுவர். ஒரு சில அல்லது பல வருடங்களில் எல்லோரும் மாறியிருப்பார்கள் , இதற்கான முதல் துவக்கத்தை நாம்தான் தரவேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் யாரும் மாற விரும்புவதில்லை , மற்றவரையே மாற்ற விரும்புகிறோம்.
மாற்றத்தை விரும்பினால் நாம் மாறுவோம் , அதனை மற்றவர்கள் பின்பற்ற செய்வோம்.மாற்றம் நம்முள் நிகழாதவரை வெளியில் மாற்றம் இல்லை , ஆக மாறவேண்டியது நாமே.
                
           

Related Posts Plugin for WordPress, Blogger...