என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, May 31, 2013

இலவசமாக கிடைத்தால் . . .

அன்பு நண்பர்களே வணக்கம்.

இலவசமாக கிடைத்தால் . . . . .

என்பது பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

நமக்கு எப்போதுமே இலவசங்கள் மீது ஒரு மோகம் உண்டு , அலாதியான அன்பு , ப்ரியம், பாசம், எல்லாமே உண்டு.

இன்றைய இளைஞர்கள் வேடிக்கையாக சொல்வார்கள் “ சும்மான்னா இவன் பெனாயில கூட குடிப்பான் னு .

அரசாங்கங்கள் கூட மக்களை தன் வசமாக்க பலவிதமான இலவசங்களை தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது , இலவசங்கள் என்ற சொல்  சில சட்ட சிக்கலை தரும் வாய்ப்பு உள்ளதால் அதனை விலையில்லாப் பொருள்கள் எனும் பெயரில் வழங்குகிறது .

அதனைப் பெறுவதற்கு நாம், அடிதடிபட்டு முட்டி மோதி வாங்கி வருவோம் , அந்த பொருட்களுடன் தெருவில் பெருமிதத்தோடு நாம் நடந்து செல்வோம் நமது கண்களும் முகமும் சொல்லும் “ நாங்க யாரு.. வாங்கிடோம்ல .

இலவசம் பெறுவது என்றால், யார் யாருக்காவது பணம் தந்தாவது (?) அந்த இலவசங்களை பெற்று விடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளோம் . 

காரணம் இலவசங்களின் மீது நமக்கிருக்கும் மோகம் .

மிக மிகச் சில வருடங்களே உழைக்கக்கூடிய இலவசங்களுக்காக போராடும் நாம் , இலவசங்களை பெறுவதற்காக எல்லாவித அலுவலங்களுக்கும் விடாமல் பலபடிகள் ஏறி மனு கொடுக்கும் நாம், அந்த அலுவலகங்களில் உள்ள மேல் மட்ட , கீழ்மட்ட , அடிமட்ட பணியாளர்கள் என்று அனைவருக்கும் ஒரே மாதிரியான குழைவும் , கும்பிடும் கொஞ்சமும் மாறாமல் போட்டு களிக்கும் நாம், எதற்கு இது ? இது நமக்கு உபயோகப்படுமா ? இதைபோல இரண்டு மூன்று ஏற்கனவே நம்வீட்டில் சும்மா கிடக்கின்றதே இது எதற்கு என கொஞ்சமும் யோசிக்காமல் எப்படியாவது அவைகளை இலவசமாக பெற்றுவிடுவது என்ற நோக்கிலேயே முன்னேறும் நாம், இங்கிருந்து வெயிலில் காயும் நேரம், அங்கிருந்தால் இதனை விட சுகமாக இருந்து இதனிலும் அதிகமாக உழைத்து சம்பாதிக்கலாம் என தெரிந்தும் எங்கும் செல்லாமல் இலவசங்களுக்காக கால்கடுக்க வரிசையில் கொஞ்சமும் கலங்காமல் நிற்கும் நாம், 
 
எந்தவித உழைப்பையும் பெறாமல் , கால்கடுக்க நின்று பெறாமல், எந்த ஒரு நொடியும் இலவசங்களை தருவதை நிறுத்தாமல் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து தந்து கொண்டிருக்கும் , இன்னும் பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு தருவதற்கு வைத்திருக்கும் இலவசங்களை மதிக்காமல் , அதன் பெருமையை உணராமல் , அதனை இழிவுபடுத்தி , எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தி கொண்டிருக்கின்றோமே, அதனை உணர்ந்தோமா ? அதனை அழிப்பதையே நமது முழுநேர பணியாக கொண்டுள்ளோமே . . . .

அரசாங்கம் தருவது அந்த அந்த மாநிலத்திற்கு மட்டுமே !!??

இங்கே தருவதை அங்கே தரமாட்டார்கள் , தந்தால் அதையும் யாராவது ஸ்டே வாங்கி தடுத்து விடுவார்கள் !!??

ஆனால் இயற்கையின் இலவசங்கள் இந்த பேருலகிற்கே அல்லவா !!! இதை யாரும் ஸ்டே வாங்கி தடுக்க முடியாதே !!!

நீங்கள் இங்கே பெறுகின்ற அதே இலவசங்களை இந்த பூஉலகில் எங்கோ கடைசியில் உள்ள மனிதனும் பெறுகின்றானே !!! 

மேலும் அந்த இலவசங்கள் எல்லாம் நம் கண் முன்னேயே சில நாட்களில் பழுதாகி அழிந்து விடும் ,

ஆனால் இயற்கையின் இலவசங்கள் இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம்  தலைமுறைகளுக்கு உரியதல்லவா !!!

ஏன் இதனை நாம் மதிக்கவில்லை தெரியுமா ?

அது இலவசம் என்பதே நமக்கு புரியவில்லை , ஏதோ நமக்கு இயல்பாக கிடைக்கிறது என்றெண்ணிக் கொண்டுள்ளோம்.

உங்களுக்கு தெரியுமா ?

ஜப்பானில் நெடுஞ்சாலையில் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒன்றென காற்று நிலையங்கள் இருக்கின்றனவாம் , வாகனங்களுக்கு இல்லை, மனிதர்களுக்கு. நம் நாட்டு மதிப்பிற்கு முன்னூறு ரூபாய் 150 ml .

இந்த நிலை நம்நாட்டிற்கும் வர நீண்ட இடைவெளியில்லை .

இப்போதுதான் தண்ணீர் பாக்கெட்டிற்கு வந்துள்ளோம் .

ஒரு குடம் (சுமார் 18 litre) தண்ணீர் பிடிக்க சில இடங்களில் இரண்டு ரூபாய் வாங்குகிறார்கள் , ஆனால் அதே தண்ணீர் 200 ml இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை பஸ் நிலையங்களில் விற்கப்படுகிறது.

காசுகளுக்காக காடுகளை அழித்தோம் , ரோட்டோர மரங்களை அழித்தோம். இந்த ஆண்டு மழை வருமா என பஞ்சாங்கத்தை புரட்டுகிறோம்.

காடுகளுக்கு உள்ளே இயற்கையை அழிக்காமல் செல்லும் அழகிய சாலைகள் அமைக்க முடியும், ஆனால் நாம் அமைக்கவில்லை .

நூறு ஆண்டுகளை கடந்த மரங்களையும் கூட நாம் விட்டு வைக்கவில்லை , பெயர்த்தெடுத்து வீசி விட்டோம், சாதனையாக.

பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டிய இதுபோன்ற மரங்களை அடிவேர் அறாமல் அப்படியே எடுத்து நகர்த்தி வைக்கின்றார்கள் பின் வரும் சந்ததிகள் காணவேண்டும் என்று மேலை நாடுகளில்.

மழை நீர் இல்லை அதனால் நதி நீர் இல்லை அதனால் கொஞ்ச நாளில் கடல் நீரும் காணாமல் போகும்.

நாம் எங்கே போவோம் நீருக்கு ?.

உப்புசப்பற்ற இலவசங்களுக்காக போராடுகிறோம் , ஆனால் உயிர்க் காக்கும் இலவசங்களை அழிக்கிறோம்.

இயற்கையின் இலவசங்கள் நம்மாலேயே அழிக்கபடுகின்றன.

ஆகாயத்தை கூறு போட்டுவிட்டோம் , வான் எல்லையினால்.

பூமியை கூறு போட்டோம் , புவி எல்லை பகுப்பினால்.

நீரை கூறு போட்டோம் , அணைக்கட்டு எனும் பெயரினால்.

காற்றினை கூறு போட முடியாததினால் முடிந்தவரை மாசுபடுத்தினோம் .

தீயைக் கூறு போட்டால் அது நம்மை வறுத்து தந்துவிடும் என்பதனால் கொஞ்சம் தள்ளி நிற்கிறோம்.

ஆகாயம், பூமி , காற்று , நீர் எல்லாம் போனபின் . . . நாம் நெருப்போடுதான் விளையாட வேண்டிவரும்.

இப்போதே பூமி உஷ்ணமயமாதலால் வரண்டு வருவதாக புள்ளி விவரங்கள் கதறுகின்றன. நாம் எதனைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. இதெல்லாம் யாருக்கோ சொல்கிறார்கள் என்பதாக நினைத்துக் கொண்டு நாம் கிடைக்காத இலவசங்களுக்காக ஏங்கிக் கொண்டுள்ளோம் .

தந்தையும் தாயும் இறந்து கொண்டிருப்பதை அறியாத குழந்தை , தாயினிடத்தில் பாலுக்காக ஏங்கிக் கொண்டிருப்பதை போல.

கொஞ்சம் நாம் யோசிப்போம் ,

நம் வாழ்வின் ஆதாரங்களை நாம் அழித்தபின் நாம் எதன் ஆதாரத் துணையுடன் இந்த பூமியில் வாழ்வோம்? நமது வழித்தோன்றல்களை எப்படி வாழ வைப்போம் ? அவர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க நமக்கென்ன உரிமை இருக்கின்றது ? நமக்கு முன்னால் இருந்தவர்கள் தனக்கு பின்வருபவர்களுக்கென வைத்துச் சென்றதை, நாமும் நமக்கு பின் வருபவர்களுக்கு விட்டு செல்ல வேண்டாமா ? அவர்களும் இந்த உலகில் பங்குள்ளவர்கள் தானே ?

வெறும் காங்கிரீட் காடுகளாக உலகம் மாற்றப்படும் முன்னர் கொஞ்சம் சிந்தியுங்கள் .


வளமோடு வாழுங்கள் . வாழும் நாளெல்லாம்.  

Monday, May 20, 2013

பயம் வேண்டும் ! ஏன் ?


அன்பு நண்பர்களே , வணக்கம்.

பயம் எனும் செயல்பாட்டு உணர்வினை தலைப்பாக எடுத்துக்கொண்டோம்.

பயம் என்பது ஒரு உணர்வாகும்.

இன்பம் துன்பம் என்பதுபோல பயம் ஒரு உணர்வு அவ்வளவுதான் என்று ஒதுக்கமுடியாது , இன்பமும் , துன்பமும் சிறிது நேரத்தில் மாறிவிடும் அல்லது மறந்து விடும். காரணம் இன்பமும் துன்பமும் வெளிமனதில் சிறு சலனம் உண்டாக்கும் , சற்று நேரத்தில் வேறொன்று இந்த இடத்திற்கு வந்தவுடன் அகன்று விடும் .

ஆனால் இந்த பயம் மட்டும் உள்மனதினில் சற்று பெரிய சலனத்தினை உருவாக்கி அது குறையாதவாறு பார்த்துக்கொள்ளும். மனம் அதிலிருந்து வெளிவராதவாறு சுற்றி பின்னிக்கொள்ளும்.

பயம் என்பது என்ன ?

பயம் ஏற்பட என்ன காரணம் ?

பயம் மனிதர்களுக்கு தேவையா ?

பயம் அறியாத மனிதர்கள் உண்டா ?

பயத்தினால் என்ன பயன் ?

முதல் கேள்வி :

பயம் என்பது என்ன ?
பயம் என்பது ஒரு உணர்வு ; வெட்கம் , நாணம் என்பது போல பயமும் ஒரு உணர்வே .

இரண்டாவது கேள்வி :

பயம் ஏற்பட என்ன காரணம்? 
பயம் ஏற்பட காரணமே இல்லை , பயம் நம்மீது திணிக்கப்பட்டது . குழந்தையாக இருந்தபோது  உணவு உட்கொள்ள வைக்கவும், உறங்க வைக்கவும் , பெரியவர்கள் வெளியே போகும்போது அழுதால் அதனை தடுக்கவும் குழந்தைகளை பயமுறுத்துவது சாதாரணமான விஷயமாக உண்டானது.

அஞ்சு கண்ணன் வர்றான், அங்க பார் பேய், உன்ன புடிக்க பூச்சாண்டி வரான் எனக்கென்ன- ஐயோ எனக்கே பயமாயிருக்கு , நான் போறன்ம்பா, பூச்சாண்டி புடிச்சிக்கோ என்றெல்லாம் சொல்லி குழந்தையிலேயே பயமெனும் ஒரு உணர்வை நம்முள் திணித்தார்கள். நாம் வளர வளர அந்த உணர்வு மட்டும் நம்மை விட வேகமாக வளர்ந்தது.

மூன்றாவது கேள்வி :

பயம் மனிதர்களுக்கு தேவையா ? 
தேவைதான். பயம் என்பது ஒரு எச்சரிக்கை உணர்வாகவும் இருப்பதால்.

இதனை செய்தால் அந்த செயல் , இது போன்ற நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்கிற முன்னுதாரணதிற்கு , வேண்டாம், வேறுமாதிரி நடப்பதற்கும் வாய்ப்புண்டு என சிறு பயம் வருவது நல்லதே. அந்த பயம் ஒரு செயலை தகுந்த முன் ஏற்பாட்டுடனும் , அதீத எச்சரிக்கையோடும் நம்மை செயலாற்றிட வைக்கும்.

மேலும் , தவறுகள் செய்வதிலிருந்து மனிதத்தை காக்கும். எந்த தவற்றையும் செய்தால் அதற்குரிய சங்கடங்களை நாம் அனுபவித்தே தீரவேண்டும் என்கிற எண்ணம் (பயம்)உண்டானால் தவறுகள் குறையும் . மனிதரிடம் மனிதத்துவம் மலரும்.

நான்காவது கேள்வி :

பயமறியாத மனிதர்கள் உண்டா ? 
உண்டு நாம் பயமுண்டாக்காதவரையில் குழந்தைகள் பயமறியாதவர்களே.

ஐந்தாவது கேள்வி :

பயத்தினால் என்ன பயன் ? நிறைய உண்டு. பயம் என்பது ஒரு உணர்வு என்று பார்த்தோம் , நம்மீது திணிக்கப்பட்டது என்றோம், பயம் நம்மை தீயசெயல்கள் செய்வதிலிருந்து தடுக்கும் காரணியாகின்றது. ஒரு செயலை செய்யத் துவங்கும் போதே இதன் பலன் எப்படியிருக்கும் என சிந்திக்கச் செய்யும். நன்மையானால் நல்ல பலன்களும் , தீய செயலானால் தீய பலன்கள் வருமே என்ற எண்ணம் வரக் காரணமாகின்றது .

தீமைகள் குறைகின்றது, அதனால் ஏற்படும் பாபங்கள் இல்லாததால் நமது வருங்கால தலைமுறை செழிப்புடன் வாழ வழி செய்தவர்களாகின்றோம்.

நாம் சேர்த்து வைக்கும் செல்வம் மிக எளிதில் கரைந்து போகும் , நாம் சேர்த்து வைக்கும் புண்ணியங்கள் தலைமுறை கடந்து நிற்கும்.
தனக்கு மேல் ஒருவர் உள்ளார் , அவருக்கு கீழ்தான் நாமிருக்கின்றோம் , அவருக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற (பயம்) எண்ணம் இருக்கும் வரை (அது தந்தையாகவோ, தாயாகவோ , அண்ணனாகவோ , முதலாளியாகவோ , சீனியர் ஆபீசராகவோ யாராக இருந்தாலும் சரி) நம்மால் தவறான எந்த காரியமும் செய்யமுடியாது , செய்ய மாட்டோம்.

(ஏனென்றால் தவறு செய்தால் மாட்டிக்கொள்வோம் அதனால் பெரும் தண்டனை கிடைக்கும் பயம் காரணம்).

ஒரு கதை சொல்கிறேன் :

ஒரு குரு தனக்குப் பின் தலைமையை ஏற்க தகுதியுள்ளவரைத் தேர்ந்தெடுக்க எண்ணி தனது சிஷ்யர்களில் மூவரை அழைத்து, தனது இறுதி நாள் நெருங்குவதாகக் கூறி , “ எனக்கு கோழி இறைச்சி உண்பதற்கு பிரியமாக இருக்கின்றது , யாரேனும் பார்த்தால் இழிவாக கருதுவார்கள் எனவே யாருக்கும் தெரியாமல் ஒரு கோழியை சமைத்து கொண்டு வாருங்கள் கேட்டுக் கொண்டார்.

சரி குருவே , அப்படியே செய்கின்றோம் , நாங்கள் இரண்டே நாளில் வருகின்றோம் என்று சொல்லி மூவரும் புறப்பட்டார்கள்.

ஒரு சீடன், நேராக தனது வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தோரை மொத்தமாக வெளியேறச் செய்தான், வீட்டை சுத்தம் செய்தான் , தானே ஒரு கோழியைப் பிடித்து சுத்தமாக்கி சமையல் செய்தான், எடுத்துக்கொண்டு குரு இருக்கும் இடம் நோக்கி புறப்பட்டான் .

இரண்டாமவன், வீட்டிற்கு செல்லவில்லை இன்றில்லாவிட்டால் நாளை குரு கோழி இறைச்சியை உண்டது எல்லோருக்கும் தெரிந்துவிடும் ஆகவே வீட்டிற்கு வேண்டாம் என்றெண்ணி காட்டிலேயே ஒரு மரத்தின் பொந்திற்குள் புகுந்து அதற்குள்ளேயே அமர்ந்து கோழியை சுத்தப்படுத்தி சுவையாக சமைத்து எடுத்துக்கொண்டு குருவை நோக்கி புறப்பட்டான்.

மூன்றாமவன் , எதுவும் செய்யவில்லை அவன் முழுக் கோழியை அப்படியே எடுத்து வந்தான்.

மூவரும் குருவை அடைந்து அவரை வணங்கி தாங்கள் கொண்டு வந்த கோழிக்கறியை அவர்முன்னே பணிவுடன் வைத்தார்கள் ,
ஒவ்வொருவரும் தாங்கள் எவ்வாறு அதனை சமைத்தோம் என்பதை குருவிற்கு விவரித்தார்கள் .

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த குருநாதர் மூன்றாமவனைப் பார்த்து,

நீ ஏனப்பா சமைக்காமல் அப்படியே எடுத்து வந்து விட்டாய் எனக் கேட்டார்.

அதற்கு அவன் , குருவின் பாதங்களில் வீழ்ந்து , கண்ணீர் விட்டபடியே அழுது தொழுது, குருவே இந்த பாவியை மன்னியுங்கள் , இந்த நிலையில் உங்களுக்கு கோழி இறைச்சியை சமைத்து தந்து உங்களை திருப்தி செய்ய முடியாதவனாகி விட்டேன் என்று கதறினான்.

இங்கு வா அழாதே , என்ன காரணம் , என்று குரு அவனை ஆதரவாகப் பேசி அருகே அழைத்தார் .

அவன் சொன்னான் , மேன்மைதங்கிய குருவே, உங்கள் ஆணைப்படியே கோழி ஒன்றினை வாங்கிக்கொண்டு மிகவும் தனிமையான இடம் சென்றேன், எங்கும் யாருமேயில்லை என்பதனை உறுதி செய்து கொண்டு சமையல் செய்ய ஆயத்தமானேன் , ஆனால் ஐயகோ , யாரோ என்னைப் பார்ப்பது கண்டேன் , உடனே வெளியே வந்து யாரென்று பார்த்தேன் , யாருமே இல்லை . மீண்டும் சென்றேன் , சமைக்க தயாரானேன் , மீண்டும் இரண்டு கண்கள் என்னையே பார்ப்பதினை உணர்ந்தேன் , மகா குருவே, அதன்பின் அந்த கண்கள் என்னை விடவே இல்லை , எங்கு சென்றாலும் என்னை விடாமல் துரத்தின.

நான் என் செய்வேன் குருவே , என் செய்வேன் , என மீண்டும் அழுது புரண்டு புலம்பினான்.

குரு சொன்னார், மகனே, குழந்தாய் , அழாதே, நீயே எனக்குப்பின் இந்த பீடத்தினை அலங்கரிக்கத் தகுந்தவன் , எப்போது நீ , அந்த இரண்டு கண்களுக்குத் தெரியாமல் மறைத்து எதனையும் செய்ய முடியாது என உணர்ந்தாயோ அன்றே , அந்த நொடியே நீ மகா புனிதனாகி விட்டாய், வாழ்க என்று ஆசீர்வதித்து மறைந்தார்.

அந்த இரண்டு கண்கள் ?

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!!!!

அது எல்லாம் அறிந்த இறைவனா ?

நமது மனசாட்சியா ?

அல்லது எங்கும் நிறைந்த இயற்கையா ?

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் , எதுவானபோதும் அதற்கு மறைத்து எதையுமே செய்யமுடியாது எனும் உண்மை நிலையை உணர்ந்தால் போதும் , இந்த உலகெங்கும் தவறே நடைபெறாது என்பது திண்ணம்.

அதனால்தான் கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டுநாள் என்றார்கள் முன்னோர்.
வெளியே தெரியாமல் மறைக்கப்பட்ட தவறுகளே இன்றுவரை பதிவு  செய்யப்படவில்லை என்பதை உணருங்கள். 

பயத்தோடு வாழுங்கள் . நல்ல மனத்தோடு பழகுங்கள் .

வாழுங்கள் வளமுடன் ,

வாழும் நாளெல்லாம்.

நமசிவயம்.
     
  

   

Friday, May 17, 2013

நம்பிக்கை அதுதானே எல்லாம்


அன்பு நண்பர்களே, வணக்கம்.
நம்பிக்கை அதுதானே எல்லாம் என்பதே தலைப்பு.
நம்பிக்கை என்பது பல வகையானது என்றபோதிலும் ஒரே வார்த்தையானது.
பொதுவாக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பிக்கையை பற்றி இந்நேரம் இதனைப்பற்றித்தான் சொல்லவருகிறார் என சிந்திக்க துவங்கியிருப்போம்.
ஆன்மீகம் என்றால் இறை நம்பிக்கை ,
நாத்திகம் என்றால் இறைவன்இல்லை என்பதில் நம்பிக்கை ,
லௌகீகம் என்றால் வாழ்வின்மீது நம்பிக்கை ,
மாணவர்களுக்கு தேர்ச்சி பெறுவோம் என்ற நம்பிக்கை ,
இளைஞர், இளைஞிகளுக்கு தத்தமது அபிலாஷைகள் நிறைவேறும் எனும் நம்பிக்கை ,
மத நம்பிக்கை , மன நம்பிக்கை , தனது உழைப்பின் மீது நம்பிக்கை . . .
இப்படியே அவரவர்கள் அவரவர்களின் மனோபாவத்திற்கும், மனவேகத்திற்கும், ஏற்றாற்போல் வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு சிந்தனையில் நம்பிக்கைகள் மாறுபடுகின்றன.
ஆனால் அதற்கெல்லாமே பெயர் நம்பிக்கைதான்.
ஏன் இந்த ஒருவார்த்தைக்கு மட்டும் பற்றாக்குறை ,
ஏன் இத்தனை வார்த்தை நெருக்கடி வந்தது ?
நம்பிக்கை என்பதனை எந்த வகையிலாவது நமக்கு ஏற்படுத்தவேண்டும் , நாம் நம்பிக்கையை இழக்க எதுவுமே காரணமாகக் கூடாது , நம்பிக்கையின் சிறு வேர் அசைந்தால் கூட மனிதம் பாழ்பட்டுவிடும், அந்த மாதிரி எதுவுமே உருவாகி விடக்கூடாது , அதனால் மனிதம் நிலை குலைந்து விடக்கூடாது என்பதில் நமது முன்னோர் மிக ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள் என்பது இதனால் தெளிவாகத் தெரிகின்றது.
அதனால்தான் எல்லாவற்றையும் நம்பிக்கையின் கீழ் கொண்டு வந்தார்கள்.
நம்பிக்கை என்பதை நமக்கு உயிரோடு கலந்திட வைத்தார்கள் , நம்பிக்கையை எதிலும் நமக்கு ஏற்படுத்தினார்கள்.
நம்பிக்கையிழந்தவர்களை கண்டு அவர்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கி அவர்களையும் நம்பிக்கையுள்ளவர்களாக்கி வைத்தார்கள். 
எந்தவிதத்திலும் நம்பிக்கையை மனிதம் இழக்காதவாறு நிறைய நம்பிக்கை தரும் கதைகளை உருவாக்கி வைத்தார்கள்.
நம்பிக்கை இல்லாத நிலையில் மனிதம் சிந்திக்கும் நிலையும் , செயலாற்றும் நிலையும் இழந்து விடுவதனால் வாழ்நிலை கெடும் என்பது மட்டுமல்ல , வாழ்வின் மீது ப்ரியம் வராது என்பதே முக்கிய காரணமாகும்.
நாம் ஒவ்வொருநாளையும் நம்பிக்கையின் துணையோடுதான் துவங்குகின்றோம் .
நம்பிக்கையோடு எதனையும் முயல்கின்றோம் .
ஒவ்வொரு காரியத்தையும் மிகுந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயலாக்குகின்றோம்.
எந்த காரியம் செய்யும் முன்பும் அந்த காரியத்தின் மேல் பற்றும் , நம்பிக்கையும் வைத்துத்தான் துவங்குகின்றோம்.
ஆனால் , நம்மிடம் எந்த விஷயத்திலும் நம்பிக்கை 15% சதவிகிதமும் , அவ நம்பிக்கை 85% சதவிகிதமும் கலந்தே உள்ளது.
எதிலும் முழு நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றோம்.
எதையும் நம்புவதில்லை , அனைத்தையுமே சந்தேகக்கண் கொண்டே பார்க்கின்றோம்.
முழுநம்பிக்கை என்பது நம்மிடம் எதிலுமே இல்லை
இதைவிட , அதைவிட , இன்னும் கொஞ்சம் நன்றாக , ஏனிப்படி , அது ஏன் ? இது ஏன் ? என்பது போன்ற சின்ன சின்ன சந்தேகக் கேள்விகள் நம்மை முழுமையாக சூழ்ந்துள்ளன.
ஏன் என்ற கேள்வி, இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்பதை தவறுதலாக புரிந்து கொண்டதின் விளைவே இது .
இப்போது கேள்விகளே வாழ்வாகிப் போய் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது.
ஒரு நண்பர் அடியேனுக்கு ஒரு முறை ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார் அதில்,
கண்கள் இதயத்தைப்பார்த்து சொல்கின்றது , “ நீ விழித்திருப்பாய் என்ற நம்பிக்கையில் உறங்கச் செல்கிறேன்
என்ன அழுத்தமான, ஆழமான, உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்த நம்பிக்கை.
இதுதான் உண்மை நிலை – ஆனால் நடைமுறையில் நம்நிலை ?!.
குழந்தைகள் நம்மிடம் சில சந்தேகக் கேள்விகளை கேட்கின்றன , நாம் அதற்கான விளக்கம் தந்தவுடன் அப்படியே ஏற்றுக்கொள்கின்றன , அதனால் அவர்கள் மிக அதிகமான ஆனந்தம் அடைகின்றார்கள்.

அதனைப்போல நமது கேள்விக்கான பதிலை அப்படியே ஏற்றுக்கொண்டால் மிக அதிகமான ஆனந்தம் பெறலாம்.

நாமும் சில கேள்விகள் சிலரை கேட்கின்றோம். அவர்களும் அதற்குரிய விளக்கமோ , பதிலோ தருகின்றார்கள் அதில் நாம் திருப்தி அடைகின்றோமா என்றால் இல்லையே , நமது கேள்வியை விட்டுவிட்டு இவர் சொன்னது சரியா என புதியதாக ஒரு சந்தேகக்கேள்வி கிளம்பி அதனை சுமக்க துவங்குகின்றோம் , அதனை பலரிடம் கேட்கின்றோம் , இவர் சொன்னது சரியா , உங்கள் கருத்தென்ன ? இப்படியே வெறும் சந்தேகக் குவியலாகி விட்டதே நம் மனமும், வாழ்வும்.

நம்பிக்கை என்பது என்ன ?
ஒன்றை அல்லது ஒரு கருத்தினை அல்லது ஒரு தகவலை முழுமனதுடன் எவ்வித கேள்வியும் இன்றி , தயக்கமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்வது , அதனை பின்பற்றுவது அவ்வளவுதான் , இங்கே அறிவுக்கு வேலையில்லை .

நாம் என்ன செய்கிறோம் என்றால், உடனே அங்கே அறிவினைக் கொண்டு ஆராய முற்படுகிறோம்.

எல்லா விஷயங்களையும் அறிவின் கீழ் கொண்டு செல்லலாகாது 

முன்னிருந்தோர் தாம் கண்டதினை, பின்வருவோர் தடையின்றி தொடர்ந்திட தங்கள் அனுபவ கருத்தினை பதிவிட்டிருந்தார்கள்.

நாமோ அதனை புறந்தள்ளி நமது அறிவினை புகுத்தி நேரம் , வாழ்வு , அனைத்தையும் வீணடித்து கொண்டுள்ளோம்.

சில விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் , சில விஷயங்களை ஆராயவேண்டும் , நாம் எல்லாவிஷயங்களையும் ஆராய முற்படுகிறோம்.

செய்யாதே என்றால் செய்தால் என்ன என்று கேட்பது புத்திசாலித்தனமாகாது .

விஷம் குடித்தால் மரணம் சம்பவிக்கும் என்றால் அதனை ஏற்றுக் கொள்வதைபோல் – இப்படி செய்தால்தான் நல்லது என்றால் சரி என்று அதனை ஏற்பதில் என்ன தவறு ?
விஷத்தையும் குடித்துப்பார்த்துதான் ஒப்புக்கொள்வேன் என குடித்துப்பார்ப்பது தானே – உயிர் போய் விட்டால் . . . என்ற பயம் அப்படித்தானே !

அதாவது நமக்கு ப்ராண சங்கடம் தரும் என்றால் மறுபேச்சின்றி ஏற்றுக் கொள்வோம் , இல்லையென்றால் நம்பிக்கையற்று , சந்தேகப்பட்டு நாமும் பிறரும் சங்கடப்பட காரணமாவோம்.

என்ன நியாயம் இது ?

வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை .

நம்பிக்கை இழப்பது , நம்பிக்கையின்றி இருப்பது , அவநம்பிக்கையோடு வாழ்வது  நடைபிணத்திற்கு சமமான வாழ்வல்லவா ?

நல்லவரோ, கேட்டவரோ முழு மூச்சோடு ஒரு குருவை நம்பினால் அந்த குரு நன்நிலைக்கு போகவில்லை என்றாலும் , நம்பிக்கை கொண்டவரை அந்த நம்பிக்கை நன்நிலைக்கு கொண்டு செல்லும் .

அரிதிலும் அரிதான மானுட பிறப்பெடுத்தது இப்படி ஓர் வாழ்விற்காகவா?

நாம் கொண்ட மானுட பிறப்பின் பெருமையை கருதி இனியாவது இடம் ,பொருள், ஏவல் என்பார்கள் அதுபோல எதற்கெடுத்தாலும் அவநம்பிக்கையின்றி , 100% சதவிகித முழுநம்பிக்கையோடு செயல்படுவோம் .

எதிலும் வெல்வோம் , ஏற்றம் கொள்வோம்.

வளமுடன் வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

நம்பிக்கை அதுதானே எல்லாம்.
நமசிவயம்.

Wednesday, May 8, 2013

நானாக நானில்லை தாயே


அன்பு தமிழ் நண்பர்களே, வணக்கம்.

நமது இன்றைய அலசல்

நானாக ஏன் நானில்லை – ஆம் இதுதான் நமது இன்றைய அலசல் .
நானாகத்தான் நானிருக்கின்றேன்,

அதென்ன நானாக ஏன் நானில்லை என்கின்றீர்களா?

உண்மைதான் நீங்கள் நீங்களாகத்தான் இருக்கின்றீர்கள். ஆனால் உண்மையில் ஒவ்வொருவரும் நாமாக நாமில்லை .

என்ன சரிதானே ! குழப்பமா ?

நாம் என்பது என்ன ? நமது பெயரா? நமது உருவமா ?

நமது பெயர் என்றால் நமது பெயரில் எண்ணிலடங்காத நபர்கள் உள்ளனரே !!

அவர்களில் யாரைக் குறிப்பிடுவது ? யாரைக் குறிப்பிட முடியும் ?

இல்லை இந்த உருவம் என்றால் – இது மகனா – மகளா ? தந்தையா ? தாயா ? நண்பனா ? நண்பியா ? எதிரியா – விரோதியா ? குருவா – சிஷ்யனா இப்படி எண்ணிலடங்காத உறவுகளாலும் – ப்யூன் – மானேஜர் – சீனியர் – ஜூனியர் - என ஏகப்பட்ட பணி நிலைகளினாலும் – சூழப்பட்டு உள்ளோமே!

இதில் யார் ? எது இந்த உருவம் ? நீங்கள் அல்லது நாம் ?

மேலும் , இதில் குறிப்பிடப்படாமல் இன்னும் பல அவதாரங்கள் நமக்கு உள்ளனவே !

இதில் இந்த எல்லாமே நம் உருவம்தான் என்று வைத்துக் கொள்வோம்.

இதில் எதிலுமே பங்கெடுக்காத நாம் என்று ஒன்று இருக்கின்றதே ! நமது தனித்தன்மை! அதனை யாராவது கண்டு கொண்டோமா ? அதற்கென்று ஒருமுகமும் , ஒருமனமும் உண்டே ! அதனை ஏன் எந்தவித கவனிப்புமின்றி விட்டுவிட்டோம் ! அத்தனை பரிதாபகரமானதா அந்த ஜீவன் ? அதுதானே என்றென்றும் நமக்கான அனைத்தையும் பெற்றுத் தருகின்றது , அதை மறக்க நேர்ந்ததே கவலை தரும் நிகழ்வல்லவா ?

என்றுமே நம்மை இயக்கும் நாம் எனும் ஒன்றை நாம் எப்படி மறந்தோம் ?

சரி, இப்போது சொல்லுங்கள், நாம் காலையில் விழித்தது முதல் இரவு தூக்கம் கொள்ளும்வரை நீங்கள் நீங்களாக இருந்த நேரம் எது? என்று எண்ணிப் பாருங்கள். ஒரு நொடி கூட நாம் நாமாக இருப்பதில்லை. வேறு யாரோவாகவே பெரும்பாலும் இருக்கின்றோம்
காரணம் என்ன ?

நாம் நாமென்பது மட்டுமல்ல , வேறு பலவாகவும் இருப்பதால் நாம் நாமாக இருக்க நேரம் கிடைப்பதில்லை, நம்மைப் பற்றிய நினைப்பும் இல்லை. எல்லோரும் தன்னைத்தவிர வேறுயாரையோ காப்பாற்றுவதற்காக வாழ்வதாக கற்பனையில் வாழ்ந்து கொண்டு, நமக்கு நமது நினைவின்றி வாழ்கிறோம்.

நாம் பல உருவங்களில் நம்மை மறைத்துக் கொண்டுள்ளதால் நாம் எந்த உருவத்தில் தற்போது இருக்கின்றோம் என்பதே நமக்கு தெரிவதில்லை. அப்புறம் எங்கே, அதற்கும் பின்னே ஒளிந்திருக்கும் நம்மை நினைப்பது.

நாம் எந்தவிதமான உருவம் ஏற்றிருந்தாலும் அதன்பின்னே நாம்தான் இருக்கின்றோம் – எந்த காரியம் யாராக இருந்து செய்தாலும் அதனுள்ளே நாம் இருக்கின்றோம்.

அது உறவின் வகையாக இருந்தாலும் சரி, பணியில் இருக்கும் பதவிகளின் வகையாக இருந்தாலும் சரி அதனுள்ளே நாம்தான் இருந்து செயலாற்றுகின்றோம்.

ஆனால் (நாம்தான் இருந்து செயலாற்ற வேண்டும் என்பதில்லை, செயல்பாடு எப்படியும் ஆகிவிடும்) நாம் இல்லாவிட்டால் அந்த காரியமே நடக்காது என்ற எண்ணமும் நமக்குண்டு. (நான் மட்டும் இல்லன்னா குடும்பத்த காப்பாத்தியிருக்கவே முடியாது).

நாம் செய்தாலும் செய்யாவிட்டாலும் யாராவது செய்வார்கள் – நாம் செய்யாவிட்டால் அந்த காரியம் நின்று விடும் என்பதெல்லாம் இல்லை என்றபோதும், நாம் செய்யாவிட்டால் யாருமே செய்யமாட்டார்கள் , செய்யவும் முடியாது என்ற எண்ணமும் நம்மிடம் வேரூன்றி நிலைத்துவிட்டது.

காரணம், அப்படித்தான் நமது முன்னோர்களும் முன்னாளில் எண்ணி ஏமாந்தார்கள் , நாமும் அந்த வழியையே பின்பற்றுகிறோம், காரணம் நாம் வாழ்வதற்கு ஏதாவது ஒரு பற்றுகோல் வேண்டுமல்லவா? அதனால் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

கோபுரத்தை தாங்கும் பொம்மைகளின் நினைவில் - பொம்மைகள் தானே கோபுரத்தை தாங்கி நிற்பதாக எண்ணிக் கொள்ளுமாம் – அது உண்மையல்ல என்றபோதும்
அதுபோலவே நாம் நம்மைத்தவிர, எல்லோரையும் நாமே காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம் – அது உண்மையல்ல என்றபோதும் . 
   
இப்படியாக பலவித உருவங்களைப் பெற்றதனால்தான் நமது உண்மை உருவம் பற்றிய நினைவுகளே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. அடிப்படையில் நாம் யார் என்பதே நமக்கு புரியாமல் நம்மை நாமே தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.  

நாம் தேடும் நம்மை, நமக்கு வேறு ஒருவர் அறிமுகம் செய்து வைக்கும் போது நாம் வெட்கப்படுகின்றோம். வெட்கப்படவேண்டும்.

இதெல்லாம், முன்பே தெரிந்திருந்தால் இத்தனைநாளில் எவ்வளவோ செய்திருக்கலாமே என்று நினைத்து வருந்துகின்றோம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமுகம் காட்டி , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவம் காட்டி , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வசனங்கள் பேசி, நொடிக்கொரு மேடை, மேடைக்கொரு நாடகம் , எழுதாத வசனங்களை பேசி பேசி . . . . இப்படி வெறும் காமெடி பீஸாகிப் போனதே நமது வாழ்வு.

இதனால் யாருக்கு என்ன லாபம் ? எண்ணிப் பார்த்தோமா?

ஏனிந்த முகம் தொலைத்த வாழ்வு ? முகவரி மறந்த பயணம்?

காட்டில் திருடனாக இருந்தவர், வீரமாமுனிவரான வரலாறு தெரியுமல்லவா?

“எங்களை காக்க வேண்டியது உங்கள் கடமை அதன்பொருட்டு நீர் செய்யும் எந்த தீய செயலும் எங்களை பற்றாது, அவைகள் முழுக்க முழுக்க உங்களையே சாறும் என மனைவியும் குழந்தைகளும் சொல்லக்கேட்டு இப்படி ஒரு வாழ்க்கைக்காகவா? இவர்களுக்காகவா ? நான் கொள்ளையும் , திருட்டும் செய்தேன் – என எண்ணி , எண்ணியபின் மனம் தெளிந்து பின்னர் அவர் வீரமாமுனிவரானது சரித்திரம் தரும் பாடம்.

நாம் செய்யும் நன்மையையும் , தீமையும் நமக்கே நமக்கு.

யாருக்கும் பங்கிட முடியாது , பங்கேற்கவும் மாட்டார்கள்.

எத்தனை பெரிய சமாளிக்க முடியாத வலியானாலும் , பொறுக்க முடியாததாக அது இருந்தாலும், கர்ப்பம் கொண்ட பெண்தான் பிரசவிக்க வேண்டும் , அதனை யாருக்கும் மாற்றித்தர முடியாது என்பது எத்தனை உண்மையோ அதுபோலவேதான் நமது வலியும் , துக்கமும் , கவலையும் ஆறுதல் பெறலாமே தவிர மற்றவருக்கு மாற்றித்தர முடியாது.

நாம் நம்மை எங்கு தேடுவது ?

நாம் எங்கு தொலைந்தோமோ , அங்கேதான் தேடவேண்டும்.

எண்ணங்களால் தொலைந்து, வண்ணங்களால் நிறம் மாறிப்போன முகமூடியை கழற்றி எறியுங்கள் – ஒவ்வொரு நொடியும் நீங்களாகவே இருக்க ப்ரியப்படுங்கள் – அப்போதுதான் எல்லோரிடமும் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள் . இல்லையென்றால் யாரிடம் என்ன வசனம் என்பது மறந்து மாற்றிப் பேசிவிடும் அபாயமும் நேர்வது உண்டு.

தேடி கண்டுபிடித்தால்தான் நாமாக நாமிருக்கமுடியும் , நீங்கள் யாராக இருந்தாலும் பெருமையில்லை – நீங்கள் நீங்களாக இருந்தால்தான் பெருமை.

நாம் மகாத்மா காந்தியைப் போல் வாழ்ந்தால் இவர் காந்தியைப்போல் வாழ்ந்தார்  என்றுதான் சொல்வார்களே தவிர இவர் காந்தி என்று கூற மாட்டார்கள். ஏனென்றால் காந்தியென்று ஒருவர் இருந்து விட்டார்.

நீங்கள் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துங்கள்.

நீங்கள் நீங்களாகவே இருந்து வாழ்ந்து பாருங்கள் ,

உங்கள் கடமையை கொஞ்சமும் தவறாமல் அன்போடு மனநிறைவோடு ப்ரியத்தோடு ஆழ்ந்து உணர்ந்து பலனை எதிர்பாராது செய்யுங்கள். 

அப்போது சொல்லலாம்
நானாக நானுண்டு  - என்றும் ,
நீயாக நீயுண்டு  - என்றும் .
இப்படி  வாழ்வது சுகமே.

முகவரி தேடுங்கள் , முகமூடி மாற்றுங்கள்.

எல்லோரையும் சந்தோஷித்து சந்தோஷப்படுங்கள் .

மனம் திறந்து வாழுங்கள் நீங்கள் நீங்களாகவே.

புதிய உலகம் பிறக்கும். புதிய வாழ்வு மலரும்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

வாழ்த்துக்கள்.Related Posts Plugin for WordPress, Blogger...