என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, January 31, 2013

திருநீறு அணிவது ஏன்.?


திருநீறு அணிவது ஏன்.?

Imageநாம் வெளியில் செல்லும் போது,
அங்கு இருக்கும்
அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல்
ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின்
ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது.

அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம்
உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக
திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம்
கலாசாரத்தில் இருந்து வருகிறது.

பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள்
கலந்த கலவையின் சாம்பல் தான்
விபூதி அல்லது திருநீறு.

இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன்
உண்டு. 

விபூதி இட்டுக் கொள்ளும்
போது, வாழ்வின் உயர்ந்த
அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம்.

நம்மைச் சுற்றிலும் தெய்வீகத்
தன்மை உண்டாகும். இதனால்,
தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும்,
பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்)
வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக்
கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்)
நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக
அன்பைப் பெறலாம். மேலும்,
பூதியை எடுக்கும் போது,
மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. 

ஏனென்றால், நம்
உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம்
என்று அதைச் சொல்லலாம். நம்
வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம்
அங்கு உள்ளது.

_________________
வணக்கம் உடையவனாகவும்,
இன்சொல் கூறுவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும். 
பிறவெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகாது.

அன்பின் 
கனி 

Friday, January 25, 2013

மனமா ? அறிவா ?


"Cheran" wrote:
இருவேறுபட்ட கருத்துகள் தோன்றுகின்றன.

இவற்றில்

எது மனதின் கருத்தாக இருக்க முடியும்? 

எது அறிவின் கருத்தாக இருக்க முடியும்?
இக் கேள்வியின் முழு வடிவம் காண

அன்பு தம்பி திரு.சேரன் அவர்களுக்கு , வணக்கம்.

இந்த கேள்வியில் மனமும் , அறிவும் கேள்விக்குரிய காரணிகளாக அமைந்துள்ளது.


மனமாக இருந்தாலும் , அறிவாக இருந்தாலும் அவையாக செயல்பட முடியாது .

மனம் தன்னிசையாகவோ , அறிவு தன்னிசையாகவோ ஒரு செயலை செய்வது முடியாது.

இந்த இரண்டு சொல்வதையும் தன்னுள் கொண்டுவந்து அதனை முன் நடந்த நிகழ்வோடு ஒப்பிட்டு மனமும் , மூளையும் ஆய்ந்து பின்னர் மூளை முடிவெடுக்கும் . 

ஆனால் இவையெல்லாம் சில நொடிகளில் தீர்மானிக்கப்படுவதால் நாம் அறிய முடிவதில்லை. 
மனம் முடிவெடுப்பதாகவோ , அறிவு முடிவெடுப்பதாகவோ நாம் எண்ணிக் கொள்கிறோம்.

நமது உடலின் அனைத்து இயக்கத்தையும் மூளையே தன் வசம் வைத்துள்ளது . திடீரென வரும் சிறு அசைவினை கூட மூளை,

தான் கவனிக்க முடியாதபோது செயல்படும் விதத்தில் சில அனிச்சை செயலிகளை தன்னுள்ளே கொண்டுள்ளது .

மேலும்,

அதனால்தான் மூளைச்சாவு நேர்ந்தால் அவர்களை எந்த சிகிச்சைக்கும் உட்படுத்துவது இல்லை.

உடலின் மற்ற அவயங்கள் பழுதானாலும் அவர்களை படுக்கையில் வைத்தாவது பார்த்துக்கொள்ளலாம், மூளைச்சாவு நேர்ந்தால்........


அனைத்திற்கும் மூளையே மூல காரணி .

மனம் , அறிவு, சிந்தனை எல்லாம் மூளைக்கு கட்டுப்பட்ட பணியாட்கள் போலத்தான் .


அன்புடன் 

Wednesday, January 23, 2013

மனம் என்பது என்ன? அறிவு என்பது என்ன?


"Cheran" wrote:
மனம் என்பது என்ன?

மூளை என்பது என்ன?

சிந்தனை என்பது என்ன?

அறிவு என்பது என்ன? இந்த ஐயப்பாட்டிற்கான காரணம்....

நாம் எந்த வேலை செய்தாலும் நம்மிடம் இருவர் வந்து ஆலோசனை சொல்வார்கள்.

ஒருவர் மனம்!

இன்னொருவர் அறிவு!

பலநேரம் மனம் சொல்வதையும்
சிலநேரம் அறிவு சொல்வதையுமே சராசரி மனிதர்கள் கேட்கிறார்கள்.

இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு எது சரியானதோ அதைச்செய்பவர்களை இவ்வுலகம் புத்திசாலிகள் என்றழைக்கிறது.


என் ஐயம் :
மனம் சொல்வது சரி.. அல்லது அறிவு சொல்வது சரி... என்று நிர்ணயம் செய்வது...
மனமா? அறிவா??

அன்புள்ள தம்பி சேரன் அவர்களுக்கு, வணக்கம்.

தங்களின் கேள்வி முதலில் சாதாரணமாகவே எனக்கு புலப்பட்டது , மிக சாதாரணமான கேள்வியையா சேரன் கேட்டார் என எண்ணினேன் .
ஆனால் அதன் ஆழம் மிகவும் அதிகம் என்பதை பதிலளிக்கும் போதுதான் புரிந்தேன் ,

சேரன் சாதாரணமான கேள்வியை கேட்கவில்லை , பலரும் மனதில் போட்டு தவிக்கும் அற்புதமான பலம் பொருந்திய கேள்வியைத்தான் கேட்டிருகின்றார் என உணர்ந்தேன் .

இத்தகைய கேள்வியை உங்களால்தான் கேட்கமுடியும் , இந்த கேள்விக்கு முதலில் நன்றி.


இதோ அதற்கான எனது பதில் :

1.மனம் என்பது என்ன? , மனம் 
2.மூளை என்பது என்ன?, மூளை 
3.சிந்தனை என்பது என்ன?, சிந்தனை 
4.அறிவு என்பது என்ன? அறிவு 

இந்த வரிசையை மாற்றி அமைத்துப் பார்க்கலாம்.
1.மூளை , 2.அறிவு , 3.சிந்தனை , 4.மனம்.

முதலில் உள்ள மூளையும் , இறுதியாக உள்ள மனமும் இடைவெளி கண்டிருந்த போதும் ஒன்றாக இருப்பதாக காண்கிறோம்.

எப்படியெனில் ,
முதலில் உள்ள மூளை, தான் அறிந்ததை (அறிவு) , சிந்தித்து (சிந்தனை) முடிவெடுக்கும். 
அறிந்ததை சிந்திக்கும் ஆற்றலை மனம்தான் பெற்றுள்ளது.


மனம் எனும் ஒரு உரு, மனித, மிருக உடம்புகளில் காணப்படாததாகும் , அது தகவல்களின் தொகுப்பாக இருக்கின்றது.

மூளையில் மிகச்சரியாக பதிவான தகவல்களே, மீண்டும் நமக்கு தேவையான போது கிடைக்கும். 

ஒருவரின் படிப்பு , குடும்ப சூழல் , அமைவிடம் பொறுத்தே அவரது மூளை பதிவுகளை ஏற்கும்.


உதாரணமாக ப்ளஸ்டூ மாணவனிடம் – ஒரு அட்வகேட் சம்பந்தமான தகவல்கள் பதிவு செய்தால் அவன் மூளை அதனை ஊன்றி கேட்பதில்லை , கேட்டாலும் அதனை பதிவு செய்வதில்லை,

உதாரணமாக் அன்றாடம் உணவுக்கே முடியாமல் ஏழ்மையில் உள்ள குடும்பத்தாரிடம் உயர்ந்த நிலையைப் பற்றிய பேச்சுகள் பதிவாவதில்லை.
உதாரணமாக சுற்றிலும் இரைச்சலும் , துர்நாற்றமும் சூழ்ந்த இடத்தில் உள்ளோரிடம் , சாந்தம் , சமாதானம் , அமைதி போன்ற பதிவுகள் இருப்பதில்லை.

மேலும், 

நமது அறிவின் அறியும் தன்மைக்கேற்ப உள்ள தகவல்களை மட்டுமே ஒவ்வொரு மனிதனோ, மிருகமோ தனக்குள் பதிவிட முடியும். 

மூளை சிந்திப்பதில்லை அந்த பணியை அது மனதினிடம் தந்து விடுகிறது. 

மனம் , அறிந்ததை சிந்தித்து அதன் விடைகளை மூளைக்கு தெரிவிக்கும், அதன்பின் மூளை அதனை மீண்டும் மனதின் துணையோடு ஆராய்ந்து செய்யலாமா வேண்டாமா என தீர்மானிக்கும்.

ஒருதகவல் , ஒரு நிகழ்வு அல்லது ஒரு பிரச்சினை என வரும்போது , அதே போன்று முன்னாளில் நடைபெற்ற ஒரு நிகழ்வு , ஒரு தகவல் அல்லது ஒரு பிரச்சினையில் எவ்வாறு முடிவெடுக்கப்பட்டது என்பதை மூளை,

தான் சேமித்து வைத்துள்ள முடிவுப் பெட்டகத்திலிருந்து எடுத்து மனதிற்கு தந்து – தற்போதைய நிகழ்வில், தகவலில் , பிரச்சினையில் எவ்விதமான முடிவெடுக்கலாம் – என தீர்மானிக்கின்றது.

மனம் இவ்வகை காலங்களில் தனக்கு சாதகமான முடிவுகள் எடுப்பதுவும் நேர்வதுண்டு.(சுயநலமாக)
(இன்றும் கூட நமது நாட்டில் நீதிமன்றம் ஒரு வழக்கில், வேறொரு நீதிமன்றம் இதே போன்ற வழக்கில் எவ்வாறு தீர்ப்பு தந்தது என குறிப்பிடுவதை காண முடிகிறது.) 


இத்தகைய தீர்மானங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். மூளைதான் தீர்மானிக்கின்றது எனும் போது இந்த மாற்றம் ஏன் ?

ஏன் என்றால் , 

மூளைக்குள் பதிவு செய்யப்படும் தகவல்கள் எல்லாம் அந்த அந்த மனிதர்களின் அறியும் , அறிந்த , அறிவுத் திறனை பொறுத்தே அவர்களின் சிந்திக்கும் திறன் அமைவதால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பதிவுகள் மூளைக்குள் பதிவாகி இருக்கும்.

அதன்பொருட்டே அவர்களின் குணாதிசயங்கள், நடவடிக்கைகள் , பேச்சுகள் , செயல்கள் , வாழ்வியல் அனைத்தும் அமைகின்றன.

ஒருவர் ஒன்றை உண்டென்பார் அது அவர் அறிந்து கொண்டதை அவர் புரிந்து கொண்ட விதம் . 

வேறு ஒருவர் அதையே இல்லையென்பார் அது அவர் அறிந்து கொண்டதை புரிந்து கொண்ட விதம். 

இருவரும் தவறாக பேசவில்லை அவர்கள் அறிந்து கொண்டதை மிகவும் நம்புவதால், அந்த தனது நம்பிக்கையின் மீதுள்ள உறுதியினால் அவர்கள் அவ்வாறு வெளிப்படுத்துகின்றனர். 


இது போன்ற நேர்மறையான , எதிர்மறையான எண்ணங்கள் கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாவதில்லை , அப்படி நண்பர்களாக இருந்தால் இவர்களுக்கு ஒவ்வாத பிரச்சினைகளை பேசாமல் வேறு விஷயங்களை பேசுவார்கள்.

நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் நேர்மறை எண்ணம் கொண்டவர் களோடும் , எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் தங்களைப் போன்றே எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களோடு நட்பாகும் போது தங்கள் தங்கள் கருத்துகளுக்கு ஆதரவு பெருகுவதால் அங்கே தீவிரவாதம் உண்டாகின்றது.

அப்படியென்றால், 


மூளை, அறிவின் மூலம் தான் அறிந்ததை மனம் மூலமாக சிந்தித்து தனக்கோ, பிறருக்கோ , சாதகமோ , பாதகமோ , நல்லதோ , கேட்டதோ முடிவெடுக்கும்.

காரணம் ஞானியின் மூளையும் , கசாப்புக்கடைகாரரின் மூளையும் ஒரே சிந்தனையில் இருக்கமுடியாதல்லவா?

Tuesday, January 15, 2013

மனமோடு ஒன்றி
அன்பானவர்களே, வணக்கம்.

மனமோடு ஒன்றி எனும் வார்த்தையை வார்த்தையாக பார்த்தால் வெறும் வார்த்தையே, ஆனால் அதனை உள்ளார்ந்து பார்த்தால்... வெவ்வேறு  அர்த்தங்கள் உள்ளது நமக்குப் புரியும்.

மனம் ஒன்றி என்பதுவும் மனமோடு ஒன்றி என்பதுவும் ஒன்றல்ல.

மனம் ஒன்றி என்பது நாம் ஒரு செயலையோ , ஒரு சொல்லையோ தனது மன ஈடுபாட்டுடன் செய்வது, அதில் லயித்து ஊன்றி செயல்படுவதாகும், அதாவது நாம் ஒன்றை நினைக்க மனம் ஒன்றை நினைக்கும் நிலையில் இருந்து மாறுபடுவது, ஒரு செயலை ஈடுபாட்டுடன் செய்வது.  

மனமோடு ஒன்றி என்பது நாம் நமது மனமோடு ஒன்றி 
(அதாவது அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் இதனை செய்வதால் நமக்கும், நமது குலத்திற்கும் நலம் உண்டாகும் என்று மனம் சொல்வதை கேட்காமல் விட்டு விடாமல் )
பொதுவாகவே நமது மனம் நம்மை எதுவும் செய்யவிடாமல் அலைக்கழிக்கும், இந்நிலையில் மனமே நமக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட இருந்தும் நாம் அதனுடன் ஒன்றாமல் நாம் தனித்து நிற்க பிரயத்தனப்படாமல் மனம் சொல்வதை கேட்டு அதனுடன் ஒன்றாக செயல்படுவது.

சரி இரண்டும் ஒன்றுதானே , எந்த செயலையும் மனமொன்றியோ, மனமோடு ஒன்றியோ செய்வதால் நல்லதுதானே ? என்கிறீர்களா?

சரிதான், அதுவும்  உண்மை போல தெரிந்தாலும், ஒன்று போலவே தோன்றினாலும் கொஞ்சம் மாற்றமுள்ளது.

நாம் நமது தொழில், பணி சார்ந்த எந்த ஒரு விஷயங்களையும், செயல்களையும், நிகழ்வுகளையும் மனம் ஒன்றி செய்யவேண்டும், அப்படி செய்யப்படும் காரியம், செயல், அதன் வெற்றி பலமடங்காகும், நமக்கு பலவிதமான நன்மையைத் தரும்.

நாம் நமது வாழ்வு, குடும்பம், குல மேன்மை, நமக்குப்பின் தொடரும் நமது வம்சத்தின் வளர்ச்சி, அந்த வளர்ச்சியின் மேன்மை, தாழ்விலாமல் நிலைத்த மேம்பாடு, வம்சம் பெருகித் தழைத்த பெருவாழ்வு, அதில் காணும் வெற்றி, புகழ் இவைகளை அடைய நாம் நமது மனமோடு ஒன்றி செயல்பட வேண்டும், அப்படி மனமோடு ஒன்றி செயல்படும் போது நமது செயலின் பலன் நமக்கு பின்னாலும் நமது குலம் காக்கும் அரணாக துணை நிற்கும்.

ஆக மனமொன்றி செய்யப்படும் செயலானது நமது இன்றைய வாழ்வில் வளம், நலம், சுகம், கொண்டாட்டம் காண்பதற்கு தேவையானதாகின்றது.

ஆனால், மனமோடு ஒன்றி செய்யப்படும் செயலானது இப்பிறப்பில் நமது வளம், செழிப்பு, எல்லோருக்கும் நல்லவர்களாக இருத்தல், வம்ச விருத்தி, வாழ்வாங்கு வாழ்நிலை மட்டுமின்றி, பிற்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கும், மேன்மைக்கும் இன்றியமையாத தாகின்றது.   

மனமோடு ஒன்றி செயல்படுவோம் 
சிந்தையாலும் செயலாலும் உயர்வோம் 


Thursday, January 10, 2013

பிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் !!

அன்பானவர்களே, வணக்கம்.


பிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் !!

பிரம்மதீபம் ஏற்றி வழிபடுவோம். அது என்ன பிரம்ம தீபம் ..
விளக்கின் மையப்பகுதியில் சிறு தண்டு இருக்கும் அதில் பருத்திப் பஞ்சு திரி செருகும் ஓட்டை (வழி) இருக்கும், அந்த வழியாக பஞ்சினை நுழைத்து விட்டு அந்த தண்டினை அதற்குரிய இடத்தில் திருகி வைத்து நெய் அல்லது, தேங்காய் எண்ணை அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி நமது அன்றாட வழிபாட்டினை மேற்கொள்வது.
இந்த வகை விளக்கினை பயன்படுத்தும் போது எந்த திசையை நோக்கி விளக்கின் ஜோதி எரிகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை, காரணம் திரி எண்ணை கிண்ணத்தின் நடுவிலிருந்து ஒளிர்வதால் எல்லா திசைகளுக்கும் அதன் ஒளி படர்வதால் சகல பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்கும்.
பித்தளையில் இவ்வகையான விளக்குகள் எல்லா பாத்திரக்கடைகளிலும் தாராளமாக கிடைக்கின்றது.
பிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஆனந்தமும், நிம்மதியும் பெறுங்கள்.

அன்புடன் .

Wednesday, January 9, 2013

எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ? தொடர்ச்சி-5


அன்பானவர்களே வணக்கம்.

இந்த கட்டுரையின் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளோம்.

இப்போது எலுமிச்சம்பழத்தில் தீபம் நல்லதா? ஏற்றலாமா? பார்க்கலாம்.

கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுகிறது எலுமிச்சம்பழம்.

மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும்.

இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம் , தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எல்லா நிலைகளிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாதது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்).

இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை ஸ்ரீஸ்ரீ துர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி , அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால் அதனால் நிச்சயமாக எந்த நற்ப் பலனும் ஏற்படாது. மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது.

ஏதோ விபரமறியாத சில ஜோதிடர்கள் சொன்ன வார்த்தையை கேட்டு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி அதனால் அவர்களுக்கே தெரியாமல் மேலும் மேலும் துன்பங்களை அடைகிறார்கள். இந்த காரியத்தினால்தான் நாம் துன்பம் அடைகிறோம் என அறியாமல் மக்கள், “ நானும் துர்க்கைக்கு வாராவாரம் விளக்கெல்லாம் வைத்தேன் , ஆனால் ஒரு பயனும் இல்லை “ என சலித்துக் கொள்வார்கள் .

அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன , அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.

அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப்பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

அப்படியென்றால் எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றக்கூடாதா ? என்றால் ஏற்றலாம்.

ஆனால் , சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றால்...

எலுமிச்சை மரத்தில் எப்போதாவது ஒருமுறை எலுமிச்சம்பழம் மேல் நோக்கியவாறு காய்க்குமாம், (எல்லா பழங்களும் கீழ்நோக்கி நிற்க ஒன்றுமட்டும் மேல்நோக்கி இயற்கையை எதிர்த்து நிற்பதால்) அந்த பழம் பாதிஅளவு மஞ்சளும், பாதியளவு பச்சையுமாக கனிந்துவரும் போது ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முதல்ஓரையான சுக்கிர ஓரையில் ஆயுதமின்றி விரல்களால் கிள்ளி எடுத்து , அதனை ஒரு சிகப்பு கலர் பட்டுத்துணியின் உள்வைத்து , இரண்டு கைகளாலும் அப்படியே அந்த பழத்தை கசக்கி வேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் நீர் வெளியாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அந்த பழத்தினை விரல் நகத்தினால் இரண்டாக கிழித்து அந்த சாற்றினை அந்த பட்டுத் துணியிலேயே பிழிந்து அந்ததுணியை ஸ்ரீஸ்ரீ துர்க்கையின் பாதங்களில் சார்த்தி , பின் அந்த எலுமிச்சம்பழத்தை பிதுக்கி திருப்பாமல் அப்படியே வைத்து விளக்கேற்ற வேண்டும்.

இப்படி விளக்கேற்ற முடியுமானால் யார் வேண்டுமானாலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றுங்கள்.

இறைவன், இறைவி உலக மக்களின் நன்மையை கருதி தரும் எல்லாமே கீழ்நோக்கி இருக்கும், நாம் கையேந்தி வாங்குவதாக அமையும் , ஆனால் இயற்கையை மீறி இறைவனை எதிர்த்து மேல் நோக்கி இருக்கும் அந்த எலுமிச்சம்கனியை அன்னை தனக்கே தீபமேற்ற பணிக்கிறாள் , அதை விடுத்து அவள் நமது நன்மைக்காக தந்த பரிசினை அவள் எதிரிலேயே கசக்கி பிழிந்து எரியூட்டினால் நன்மை விளையுமா ? தீமை விளையுமா?

எல்லோராலும் எலுமிச்சம்பழ விளக்கேற்ற முடியாது , எலுமிச்சம்பழ மரம் வீட்டில் இருப்பவர்கள் வேண்டுமானால் கவனித்து பார்த்து ஏற்றி மகிழலாம், அன்னையை மகிழ்விக்கலாம்.

ஆகவே , எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது எல்லோருக்கும் உகந்ததல்ல எனும் காரணத்தினால் நல்லதல்ல.


அன்புடன் 

Tuesday, January 8, 2013

எலுமிச்சம்பழத்தில் விளகேற்றலாமா ..தொடர்ச்சி...4.

அன்பானவர்களே, வணக்கம்.

எலுமிச்சம்பழத்தில் விளகேற்றலாமா ..தொடர்ச்சி...4.இனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம்.

இல்லங்களிலும், கோவில்களிலும் தீபம் ஏற்றுவதில் எண்ணை முக்கிய பங்கு வகிக்கின்றது, காரணம் நமது பூஜை, வேண்டுதல்கள் போன்றவற்றை குறிப்பிட்ட தெய்வங்கள், தேவதைகள், எல்லா அதிதேவதைகள் மற்றும் கிரகங்களுக்கு கொண்டு செல்லும் ( அந்த அந்த கதிர்வீச்சுகளோடு சேர்ப்பிக்கும்) உன்னதமான பணியை நாம் ஏற்றும் தீப சுடரின் அதிர்வுகளே செய்கின்றன.

தற்போது சில இல்லங்களிலும், கோவில்களிலும் பயன்பாட்டில் உள்ள சில எண்ணெய்களை பார்ப்போம்.

ஒருசிலர் விளக்கெண்ணையை விளக்கேற்றுவதற்க்கு உபயோகிக்கின்றனர், காரணம் அது விளக்கெண்ணெய் என்றபெயருடன் உள்ளது , மேலும் விளக்கு நன்றாக நின்று எரியும் என்பார்கள்.

அதன் பெயர் விளக்கெண்ணெய் அல்ல விலக்கெண்ணெய்.

அதாவது நமது உடலில் உள்ள மலக்கழிவுகள் சரிவர வெளியேராதபோது அந்த எண்ணையை கொஞ்சம் உட்கொண்டால் அது உள் சென்று பேதியாகி மலக்கழிவுகளை வெளியேற்றம் செய்யும்.
அதற்கும் விளக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் விளக்கெண்ணையால் விளக்கேற்றினால் அந்த வீட்டில் சங்கடமும், சச்சரவுமே மிகுதியாகும். ஏனென்றால் அந்த தீபத்திலிருந்து வெளியாகும் கதிரில் ஒரு வகை கசப்புத் தன்மை நிறைந்து உள்ளதால் நாம் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அதன் பயனை அனுபவிக்க முடியாது.  ஸ்வாமி குமபிட அமர்ந்தாலே ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீரும். வீட்டில் சுவாமி கும்பிடவே மனம் ஒத்து வராது. ஏதோ பேருக்கு கொஞ்சநேரம் அமர்ந்து எழுவோம்.

அதனால் விளக்கெண்ணையை இல்லங்களிலும், கோவில்களிலும் விளக்கேற்று வதற்க்கு பயன்படுத்தக்கூடாது.

அடுத்து தற்போது எங்கும் விற்பனை செய்யப்படும் தீபஎண்ணை எனும் எண்ணை.
இதில் மூன்று எண்ணெய்களை கலந்து தீபத்திற்கென்றே தயாரானதாக சொல்கிறார்கள்.

உண்மையில் மூன்று வித எண்ணைகள், ஐந்து வித எண்ணைகள் போற்றவற்றை கலந்து வீடுகளில் அல்லது கோவில்களில் விளக்கேற்றுவது ஆகாது.

ஏனென்றல் அவ்விதமான கலப்பு எண்ணையை மாந்த்ரீக வேலைகள் செய்யும் போதும் , சில அமானுஷ்ய சக்திகளை பெறும் நோக்கிலும் பூஜையில் ஈடுபடுவோர் தங்களது பூஜைக்கு மேற்கண்ட கலப்பில் உள்ள எண்ணெய்களை விளக்கிற்கு பயன்படுத்துவர்.

நாம் இவ்வகை எண்ணெய்களை விளக்கேற்றி வணங்கினால் துஷ்ட தேவதைகள், ஆவிகள், அமானுஷ்யமான சில உருவங்கள் உடனே வந்து விடும், ஆனால் நமக்கு இவைகளில் பழக்கமில்லாததால் , அவைகள் வந்ததே தெரியாமல் நாம் நமது பூஜையை முடித்துக்கொண்டு எழுந்துவிடுவோம்,

ஆனால் அந்த குறிப்பிட்ட தேவதைகளோ,ஆவியோ,அமானுஷ்யமோ வந்திருந்தும் நாம் அதனை (அறியாத காரணத்தினால்) வரவேற்கவில்லை , அதற்கான நைவேத்யம் படைக்கவில்லை என நம்மீது கோபமாகி விடும்.

அதனால் நல்லநாள் , ஒரு பண்டிகை போல மற்ற எந்த விசேஷ காலமானாலும் அதனை சந்தோஷமாக கொண்டாட முடியாது. மேலும் விசேஷ நாளில் சண்டைகள் வந்து, நம்மால் அந்தநாளின் பெரும்பகுதி நிம்மதியற்று விடும். மேலும் நிறைய பொருட்கள் நல்லநாட்களில் உடைவதும், கிழிபடுவதும் நடைபெறுவது வாடிக்கையாகி விடும். இதனால் ஸ்வாமி கும்பிடவே பயமாக இருக்கும்.

ஏனென்றால் ஸ்வாமி கும்பிடும் அன்று ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீருமே.

ஆனால் மேற்படி நபர்கள் அந்த தேவதையோ , ஆவியோ, அமானுஷ்யமோ வந்தவுடன் அதற்குண்டான நைவேத்யம் இரத்தமோ, இறைச்சியோ ஏதோ ஒன்றினை அதற்கு உடனே தந்து விடுவதால் அவர்களுக்குண்டான தேவையை பூர்த்தி செய்யும்.

நமக்கு அது வந்ததே தெரியாது, அப்புறம் எங்கே அதற்கு படைப்பது?


ஆகையால் , அந்த தீப எண்ணை என்று விற்கப்படும், கலப்பு எண்ணையை வீட்டிலும், கோவில்களிலும் இல்லறவாசிகள் பயன்படுத்தலாகாது.

சரி எந்த எண்ணையைத்தான் விளக்கேற்ற பயன்படுத்தலாம்?


இல்லங்களிலும் கோவில்களிலும் விளக்கேற்று வதற்கு உரிய எண்ணைகள் மூன்று .

1. முதல் தரமானது , நெய் , இது நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிக வேகமாக கொண்டு சேர்க்கவல்லது. 

2. இரண்டாவது தேங்காய்எண்ணை, இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.

3. மூன்றாவதாக நல்லெண்ணெய், இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிதமான வேகத்தில் கொண்டு சேர்க்கவல்லது.

எல்லா இல்லங்களிலும், கோவில்களிலும், எந்தவிதமான விழாக்களுக்கும், எந்த விதமான சூழலுக்கும் விளக்கேற்றி பூஜிக்க தகுந்த எண்ணைகள் மேலே சொல்லப்பட்ட மூன்று எண்ணைகள்தான் உகந்தவை.

இவைகளையும் (நெய்யை,தேங்காய்எண்ணையை,நல்லெண்ணையை)
தனித் தனியாகத்தான் உபயோகிக்கவேண்டும், கலந்து உபயோகிக்கக் கூடாது.

இப்போது எலுமிச்சம்பழத்தில் தீபம் நல்லதா? ஏற்றலாமா? பார்க்கலாம்.

Sunday, January 6, 2013

எலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி !

அன்பானவர்களே, வணக்கம்.

எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா தொடர்ச்சி ..3


அடுத்து தீப விளக்கின் திரி..

தற்போது கடைகளில் விற்கப்படும் விளக்கு திரிகள் பழைய மெத்தை , தலையணை போன்றவைகளில் இருந்து எடுத்து அதனை 10, 15 என பாக்கெட் செய்து விறபனை செய்கின்றார்கள். ஆனால் முன்பெல்லாம் புதிய பருத்தி பஞ்சினை பாக்கெட் செய்து விற்பனை செய்தார்கள் , இப்போது பக்தர்களின் வருகை அதிகம் ஆனதால் ஏதோவொரு பஞ்சு என்று இலவம்பஞ்சை கூட தற்போது திரியாக்கி விற்கின்றார்கள்.

விளக்கின் திரி புதிய பருத்தி பஞ்சாக இருக்க வேண்டும் – மற்றவிதமான திரிகள் ஆகாது , திரி வெள்ளையாக இருக்கவேண்டும் அதுதான் புதியது , மஞ்சள் கலந்த பழுப்பு கலரில் கடைகளில் விற்கப்படுவது பழைய மெத்தை, தலையணையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.(அதனை பயன்படுத்தக்கூடாது .

சிலர் வேறுசில கார்யங்களுக்காக சிலவகையான திரிககளில் தீபம் ஏற்றுவர்.

அனைத்து இல்லங்கள், கோவில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கும் புதிய பஞ்சின் திரியே உகந்தது.

ஆக விளக்கின் திரி புதிய பருத்தியின் பஞ்சு திரியாக இருத்தல்வேண்டும் .


இனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம்.   

Saturday, January 5, 2013

எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ? - 2


அன்பானவர்களே, வணக்கம். 

எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ? - 2


முதலில் தீபம் ஏற்றும் விளக்கினை பார்ப்போம்.

இறைவனுக்கு எல்லாமே அவனால் உருவாக்கப்பட்ட காரணத்தினால் பொன்னும், மண்ணும் ஒன்றே !!!!

ஆகவே பொன்னால் செய்த விளக்கேற்றினால் எந்த வகையான பலன்கள் சொல்லப்படுகின்றதோ அவை அனைத்தும் மண்ணாலான அகல்விளக்கினை ஏற்றி வைத்து வழிபட்டாலும் கிடைக்கும், பித்தளை , வெண்கலம் போன்றவையும் அப்படித்தான் .

செல்வ வசதிமிகுந்தவர்கள் , கோவிலில் அல்லது வீட்டில் விலை உயர்ந்த விளக்குகளை ஏற்றி வழிபடும்போது , வசதியற்ற ஏழைமக்களின் உள்ளம் “இறைவா, எங்களுக்கு விலை உயர்ந்த விளக்குகளால் உனக்கு தீபம் ஏற்றி வழிபட முடியாததால்தான் எங்களுக்கு உனதருள் கிடைக்கவில்லையா ? என்றேங்கும் அல்லவா ? அதனால்தான் , எல்லா விளக்குகளையும் தனக்கான தீபவிளக்காக இறைவன் ஏற்று நமக்கு அருள்பாலித்தான் .    

ஆனால்,

இரும்பு எனும் உலோகத்தினால் தீபம் ஏற்றுவது மட்டும் சில காரணங்களினால் அனைத்து வீடுகளிலும் , ஒரு சில கோவில்களிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது.  

ஏன் என்றால், இரும்பு ஸ்ரீ சனைச்வரரின் அம்சமாக திகழ்கின்றது. ஆகையால்,

தாந்த்ரீக வழிபாட்டிலும் , சில மாந்த்ரீக செயல்பாட்டின் போதும் இரும்பினால் ஆன விளக்கு பயன்படுத்தப்படுகின்றது. (சில காரணங்களுக்காக அந்த விபரம் தரப்படவில்லை).

சில்வர் எனும் உலோக விளக்கினைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை , ஆனால் காந்தம் அதனை ஈர்ப்பதால் அதனை இரும்பின் ஒரு கூறாகவே கருதுவதற்கு வாய்ப்புள்ளது , (வெண்ணிற இரும்பு?) மேலும் சில்வர் விளக்குகளை எந்த ஒரு காரியத்திலும் ஏற்றுவது உசிதமானதாக கருதுவதற்கு இல்லை , அது ஒரு அலங்கார பொருளாகவே கருதவேண்டும். (மேலும் சில்வரால் உருவாக்கப்பட்ட விளக்குகள் நீண்ட நேரம் எரியும் போது அவை அதிக சூடாகி (சூடு தாங்காமல்) வேறு சில தொல்லைகள் உருவாக வாய்ப்புள்ளது, ஜாக்கிரதை.).


ஆக, பொன் விளக்கு, பித்தளை விளக்கு, வெண்கல விளக்கு போன்றவைகள் தரும் அதே பலன்களை சற்றும் கூட்டாமல் , குறைக்காமல் மண்ணாலான விளக்கும் தரும்.

அனைத்து வீடுகளிலும் , ஒருசில கோவில்களிலும் இரும்பாலான விளக்குகளால் தீபம் ஏற்றுவது நல்லதல்ல . சில்வரால் ஆன விளக்குகள் அலங்கார பொருளே அன்றி தெய்வ வழிபாட்டிற்கு ஆகாது.

அடுத்தது தீப விளக்கின் முகங்கள் .

Friday, January 4, 2013

எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா ?


அன்பானவர்களே, வணக்கம்.


Image

சமீபகாலமாக கோவில்களில் தீபங்கள் ஏற்றுவது அதிகரித்துள்ளது காண்கிறோம். 

குறிப்பாக .. ஸ்ரீ பைரவருக்கு தேங்காய் தீபம் , ஸ்ரீ ஹனுமனுக்கு வாழைப்பழத்திலும், ஸ்ரீ துர்க்கைக்கு எலுமிச்சம்பழத்திலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் சாம்பல் பூசணியிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. கோவில்களிலும், இல்லங்களிலும் இவ்வகையில் தீபங்கள் ஏற்றுவது நல்லதா ? 
நற்பலன்களை தருமா ? தீப எண்ணை என்று விற்பனை செய்யப்படும் எண்ணையை பயன்படுத்தலாமா ? அல்லது விளக்கெண்ணையை தீபம் ஏற்ற பயன்படுத்தலாமா ? தீபம் ஏற்ற எந்த எண்ணை சிறந்தது ?


அப்படி ஏற்றப்படும் தீபம் எந்த விளக்கினில் ஏற்றலாம்? பித்தளை விளக்கு, பொன் விளக்கு, சில்வர் விளக்கு , வெண்கல விளக்கு, இரும்பு விளக்கு, மண் அகல்விளக்கு இதில் எதில் தீபம் ஏற்றுவது நல்லது ?எத்தனை முகங்களில் தீபம் ஏற்றப்படவேண்டும் , எந்த திசையை நோக்கி தீபத்தின் முகம் இருப்பது நலம் , எந்த வகை திரிகளை தீபம் ஏற்றுவதற்கு உபயோகிக்கலாம்? வீடுகளிலும் , கோவில்களிலும் ஒரேமாதிரி தீப வழிபாடு செய்யலாமா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் காண்போம்.சாஸ்திரப்படியும், ஒரு சில ஜோதிட க்ரந்தங்களிலும், பெரியோர்களின் வாய்மொழியின்படியும் விளக்கேற்றுவதை சிலவகைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தீப வழிபாடு என்பது ஆதிகாலம் முதலாக உள்ளதாக அறிகிறோம். 

அந்த காலம் முதல் இந்த காலம் வரையிலும் உள்ள ஜோதிடர்கள், தாங்கள் ஜாதக பலன்களை கூறும்போது “ தற்சமயம் இன்ன திசை நடப்பதால் இந்த ஸ்வாமிக்கு இந்த வகை தீபம் ஏற்றுங்கள் “ என்று கூறுவதுண்டு. இந்த முறைகள் வழி வழியாக தொடர்ந்து அதுவே ஒரு முறையாக ஆக்கப்பட்டு விட்டது . 


வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெரியோர்கள் (பெண்கள்), செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இந்த தீபம் ஏற்றுவது நல்லது என்று தங்களின் அனுபவ சாதக பலனை தனது குடும்ப பெண்களுக்கு சொல்லித்தந்து அதுவும் ஒரு வகையில் சம்பிரதாயமாக ஆகிவிட்டது.


ஆனால் இந்த வகையினால் தீபம் ஏற்றினால் பலன் உண்டா – இல்லையா ? அல்லது இதற்கென்று வேறு ஏதேனும் முறைகள் இருக்கின்றதா ? என்றால், உண்டு.

எந்த ஒரு செயலுக்கும் அதற்கென்று சில வழிமுறைகளை நமது சாஸ்திரமும் , ஜோதிட கிரந்தங்களும் சொல்லியிருக்கின்றன. 


மக்களின் வாழ்வை எண்ணி கவலையுற்ற தெய்வீக அருள்சக்தி பெற்ற மகான்கள் மக்களின் நலனுக்காக அருளிச் செய்த தீப வழிபாடு எனும் தெய்வ அனுகூல வழிபாடு இன்று கேலிக் கூத்தாகி எல்லா தெய்வங்களுக்கும் ஏதோ ஒரு தீபம் ஏற்றுவதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை காணும்போது மனம் சங்கடப்படுகிறது. 

இதற்காக எழுந்ததுதான் இந்த கட்டுரை.

Related Posts Plugin for WordPress, Blogger...