என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, November 1, 2013

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 3


அன்பு நண்பர்களே வணக்கம்.

அஷ்ட கர்மாக்களை என்னெவென்று பார்க்கும் முன் அதனைப் பற்றிய முழுவிளக்கம் அவசியமாகின்றது , காரணம் ஒரு பயிற்சியின் அல்லது படிப்பின் அவசியமும் , காரணமும் , வரலாறும் தெரிந்தால் அதனை கற்றுக்கொள்ள ஆர்வமும் , கற்றுக் கொண்டே தீரவேண்டும் என்கிற உத்வேகமும் நம்முள் இயல்பாக உருவாகும்.

இப்போது கர்மாக்களை தெரிந்துகொள்ள துவங்குவோம் .
ஒன்று என்பது பிரதமை என்றும்
இரண்டு என்பது துதியை என்றும்
மூன்று என்பது திரிதியை என்றும்
நான்கு என்பது சதுர்த்தி என்றும்
ஐந்து என்பது பஞ்சமி என்றும்
ஆறு என்பது சஷ்டி என்றும்
ஏழு என்பது சப்தமி என்றும்
எட்டு என்பது அஷ்டமி என்றும்
ஒன்பது என்பது நவமி என்றும்
பத்து என்பது தசமி என்றும்
பதினொன்று என்பது ஏகாதசி என்றும்
பனிரெண்டு என்பது துவாதசி என்றும்
பதிமூன்று என்பது திரயோதசி என்றும்
பதினான்கு என்பது சதுர்த்தசி என்றும்
பதினைந்து என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகின்றது.
பொதுவாகவே அமாவாசை ஆண்களையும் , பௌர்ணமி பெண்களையும் அதிகம் தொடர்பு கொண்டுள்ளதாக அறிகிறோம்.
பௌர்ணமியில் நீர்நிலைகளில் பௌர்ணமியின் (குளுமை)ஆதிக்கம் அதிகம் இருப்பதை எல்லோரும் சாதாரணமாக காணலாம் .
அமாவாசை காலங்களில் பெரும்பாலும் மனஅமைதியற்ற(இறுக்கமான)சூழல் காணப்படுவதுண்டு.
ஆனால் ஒரு சில பூஜைக்குரிய துவக்கத்தினை சிலர் இந்நாளில் (அமாவாசையில்) துவக்குவதுண்டு .
இந்த யோகம் தனை ஆண் பெண் என பாகுபாடின்றி யாரும் பயில முடியும் , இதில் ஆணிலும் விட பெண்கள் மிக விரைவாக முன்னேற்றமும் உயர்நிலையை அடைகின்றார்கள் என்பது அனுபவ உண்மை.
காரணம் பெண்கள் இயல்பாகவே பிராண சக்தியின் வடிவமாக உள்ளதுதான். அதனால் அவர்கள் முயன்றால் போதும், அந்த உயர்நிலை அவர்களை தேடி வந்து அடைந்து விடுகிறது .
சரி கர்மாகளுக்கு வருவோம் .    
இந்த கர்மாக்கள் எட்டு என்கிற எண்ணிக்கையில் இருப்பதால் இதனை அஷ்ட கர்மா (எட்டு தொழில்) என்றழைக்கிறோம்.
இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது . இந்த கர்மாக்களை மிகவும் சிரத்தையாகவும் உள்ளார்ந்த உத்வேகத்தோடும் பயிலுவோர் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் நிலையினை அடைகிறார்கள் என்கிறார் இறைவனார் .
இவ்வளவு சிறப்பினையும் ஒருங்கே பெற்ற இந்த அஷ்டமா சக்திகளின் ஒரு பகுதியான அஷ்ட கர்மாக்கள் என்பது முறையே ,

1. வசியம்
2. மோகனம்
3. உச்சாடனம்
4. ஸ்தம்பனம்
5. ஆகர்ஷனம்
6. வித்துவேடனம்
7. பேதனம்
8. மாரணம்   என்பது ஆகும்
இந்த அஷ்ட கர்மாக்களின் சக்தி மிகுந்த செயல்பாடுகள் என்னென்று பார்ப்போம் .

1. வசியம் என்றால், ஆகர்ஷனம் , மோகனம் , வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும்.
 ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது – மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.

2. மோகனம் என்றால், மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.

3. உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .

4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம்.
 
5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.

6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை , தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள் , தீய பழக்கங்கள் போன்றவை )

7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது .

அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது தொழில் எனப்படுகிறது.

இவைகளால் யாருக்கு என்ன லாபம் ? என்று கேட்போர் உண்டு .
இதில் லாபம் இல்லாமல் இல்லை . ஆனால் இந்த லாபம் என்பது பணம் தரும் லாபமல்ல , மன அமைதி , மன விகாரம் நீக்கல், ஆழ் மன நிம்மதி போன்ற உண்மை நிலை உணர்தல் தொடர்பான லாபங்கள்.

எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்க முடியாத உன்னத நிலை .

யோசித்துப் பாருங்கள்.

வெற்று உடம்பாக , கையில் சல்லிக் காசின்றி , ஒரு அனாதையைபோல் பிறந்த மனிதன்,

ஒருநாள் ஒரு உடை என்று அணிந்து கொண்டே வந்தால் முதலில் அணிந்த உடையை மீண்டும் அணிய மூன்றாண்டாகும் என்ற நிலை கண்ட போதும்  ,

சல்லிகாசின்றி பூமிக்கு வந்த மனிதன் தனது கொள்ளுப் பேரனின் கொள்ளுப்பேரன் வரைக்கும் காசு ,பணம் ,சொத்து சேர்த்த நிலை கண்டபோதும் ,

தன்னந் தனியாளாக பிறந்தவன் மகா பெரிய குடும்பஸ்தனாக மாறி வாழ்வில் பல விதத்திலும் செல்வாக்கு , சொல்வாக்கு , ஆள் அம்பு சேனை  என பெரு வாழ்வு  கண்டபோதும் –
-          சுத்தமாக நிம்மதியை தொலைத்தவனாக , அமைதியை ஆழக்குழியில் தானே புதைத்தவனாக , மாபெரும் குடும்பத்தில் சுற்றங்கள் புடைசூழ தான் நின்ற போதும் தனி ஆளாக , தனி மரமாக , தனிமைபடுத்தப்பட்டு நிற்பது போன்ற  மன நிலைப்பாடு கொண்டவர்களை எங்கும் பார்க்கும் நிலை இன்று வந்து விட்டது .

யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்று  அல்லது பலவான மனக்குறைகளும் நிவர்த்தி செய்யமுடியுமா , முடியாதா என்ற பயத்தோடும் கூடிய வாழ்வினை தன்னகத்தே கொண்டே உலா வருகின்றார்கள்.

என்னவென்றே குறிப்பிட முடியாத இறுக்கமான முகத்தோடு வாழவேண்டுமே என்கிற காரணத்திற்காகவெ வாழ்பவர்கள் போல இன்றைய தலைமுறையினர் வாழ்கின்றனரே இது என்ன அவலமான நிலை ?
வாழ்வென்பது ஆனந்த மயமானதல்லவா ! அழுது வடிவதல்லவே !!
கிடைததற்கறிய மனிதப் பிறவியப்பா இது என்று சொன்னால்        “ அய்யா என் நிலைமை உங்களுக்கில்ல, அதனால சொல்றீங்க “ என்று வாழ்வை ஏதோ ஒரு வழியில் தொலைத்தவர்கள் புலம்புவதை தினமும் காண்கிறோம். 
 
இதே வாழ்வை நமது மூதாதையர் வாழ்ந்த போது இப்படி இருந்ததில்லையே – ஏன் நமது தந்தையே நம்மைப் போல இப்படி மந்திரித்த ஆடு போல இருக்கவில்லையே!
நாம் மட்டும் ஏன் இப்படி ஆனோம் ?

ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவர்களாகவே இன்றைய மனிதர்களின் அன்றாட வாழ்வு இயந்திரத்தனமாக அமைந்துள்ளதை எல்லோரும் உணர்கிறோம் .

அதற்கு இன்று முகநூலிலும் , தனித்தனி பிளாக்கிலும் வெளியாகும் மனக் குமுறல்களும், ஒன்றுமில்லாத மிக சாதாரண விஷயத்திற்கு ஏகப்பட்ட Likes வருவதும்  சாட்சியாகும்.

உதாரணமாக : ஒரு கடிதமும் அதற்கு like ம் பாருங்கள்
Working on two important works. So for the next 4,5 days i would'nt be in touch with you all. Sorry.    Shall come back very soon. Bye for now. Will miss u all.

Like ·  · Share · 21 hours ago · 
·         103 people like this.

ஒரு நான்கு ஐந்து நாள் நான் வரமாட்டேன் என்கிற சாதாரண கடிதத்திற்கு 103 like .,

இப்படித்தான் போகின்றது Face Book
மேலும் பல புத்தகங்களில் உள்ளதை அப்படியே முகநூலில் காப்பி செய்து விடுவதும் நடக்கின்றது .

எதை எதையோ படித்து தனக்கே எல்லாமும் தெரியும் என்கிற மனோபாவமும் இன்று மலையென வளர்ந்துள்ளதும் காரணமாகும்.
ஒருமனிதன் , தனது வாழ்வின் அல்லது பொதுவாக மனித வாழ்வின் உண்மையான  அதிசூட்சுமத்தினை உணர்ந்திருந்தால் மனம் வேண்டாத கவலையை தன்னுள் வைத்திருக்காது.

யோகம் பயின்று இங்கே மறைந்து எங்கோ எழுவது போன்ற சித்து விளையாட்டு எல்லாம் வேண்டாம் , ஆனால் மன நிம்மதியை , வாழ்வின் உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே போதும் ,

அதற்கான சரியான வழி யோகம் பயில்வதுதான்.

ஒரு வீட்டில் ஒருவர் அல்லது இருவர் யோகம் தெரிந்திருந்தால் கூட அந்த வீட்டில் கண்டிப்பாக அமைதியும் , ஆனந்தமும் நியாயமான முறையில் கிடைத்துவிடும் .

நியாயமற்ற வழியில் வரும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிலைப்பதில்லை , நியாயமற்ற முறையில் வருகின்ற பணமும் , வைத்திய செலவுக்குத் தான் போகும் .

எந்த விதத்தில் பணம் போனாலும் அது ஏதாவது ஒரு வழியில் திரும்ப கிடைக்கும் , ஆனால் வைத்தியசெலவு செய்த பணம் எந்நாளும் திரும்பாது அல்லவா?

எல்லோரும் யோகம் பயிலத் துவங்கினால் வாழ்வில் நாம் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டோம் , நமக்கும் யாரும் தீங்கெண்ணமாட்டார்கள்.

சரியாக விதியை நாமே வகுத்து வாழலாம் . நமது சந்ததியினர் நலமும் வளமும் நிரந்தரமாக பெறுவார்கள் , செழிப்படைவார்கள் .
அஷ்டகர்மாக்களில் ஏதேனும் ஒன்றை கை வரப் பெற்றாலே போதும். 
நமது வாழ்வின் நிலை மிக அருமையாக அமைந்து விடும்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தை துல்லியமாக ஆய்வதன் மூலம் அவருக்கு இப்பிறப்பில் அஷ்ட கர்மாக்கள் கைகூடி வருமா, வரும் அஷ்ட கர்மாக்களால் அவருக்கு நன்மைகள் உண்டாகுமா , உண்டாகாதா எனவும் அறியலாம்.

இவைகள் எல்லாம் உலக மக்களின் நன்மைக்காகவே உருவாக்கி அருளப்பட்டவை யாகும், மதங்களுக்கப்பாற்பட்டதாகும் , எல்லா மதங்களும் மனிதன் தனக்காக  தோற்றுவித்தவைதான்.

தானே எந்த மதமும் தோன்றியதில்லை , நாம் தோற்றுவித்த ஒரு மதத்திற்கு நாமே அடிமையாகும் நிலையை நாம் யோசிப்பதே இல்லையே? ஏன் ?

பரந்து இருக்கும் இந்த உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் வேதம் என்பது முழு உரிமையானதாகும் .

இந்த வேதம் , யோகம் , த்யானம் , தவம் , மந்த்ரங்கள் எவற்றிற்கும் தனியான ஒரு மதம் உரிமை கொண்டாட முடியாததாகும் . 

அது எந்த மதமாக இருந்தாலும் சரியே.
வேதம் என்பதே உலக பொது மறையாகும் உலக பொதுமறை என்றால் உலகமக்கள் அனைவருக்கும் உரிமையானது என்று பொருள்.

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்போம் , ஆனால் சிவபெருமானையே இந்து கடவுளாகத்தான் பார்க்கின்றோம். எந்நாட்டவர்க்கும் இறைவன் இந்துக்களாகிய நமக்கு மட்டும் உரிமையானவராக  எப்படி ஆக முடியும் ?

நாம் மனிதர்கள் அவ்வளவுதான் . அதற்கு மேல் மதம் , ஜாதி என்பதெல்லாம் ஒரு மாயப் போர்வை , இதனை உணர்ந்தாலே போதும் .

நான் ஒன்றை உண்டு சொல்வதால் ஒன்று உண்டு என்றோ – நான் ஒன்றை இல்லையென்றால் அந்த ஒன்று இல்லாமல் போவதோ இல்லை , யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்டென்பது என்றும் உண்டு.

உதாரணமாக ஒரு வஸ்து (பொருள்) இருக்கின்றது என்றால் அதனை உருவாக்கியவர் ஒருவர் உண்டு தானே , அவர் எனது கண்களுக்கு எதிரே தெரியவில்லை என்பதனால் அதனை உருவாக்கியவர் இல்லை என்றாகி விடுமா ?

ஒவ்வொன்றையும் உருவாக்கியரை பார்த்தால்தான் ஒப்புக்கொள்வேன் என்பது எந்த விதமான ஞானம் ?

மனிதன் உருவாக்கிடும் பொருள்களுக்கு முடிவு தேதி (Expiri Date) உண்டு அல்லவா , அதுபோலவே இறைவன் அல்லது (இயற்கை) உருவாக்கிய பொருட்களுக்கும், முடிவு தேதி உண்டு , ஆனால் எப்போது முடிவு என்பது தெரியாது ( ரகசியம் ஒன்றுமில்லை தெரிந்தால் அதற்கு முன்னரே மனிதனுக்கு முடிவு வந்துவிடும் )

அப்படி உருவாக்கிய அந்த சிருஷ்டி கர்த்தாவை நான் சிவன் என்கிறேன் , மற்றவர்கள் வேறு பெயரில் அழைக்கிறார்கள் அவ்வளவுதான் .

நான் சிவன் என்றழைக்க தெரிந்து கொண்டதுபோல் , அவர்கள் வேறு பெயரில் அழைக்க தெரிந்திருக்கின்றார்கள் . உருவாக்கியவரை எண்ணிக் கொண்டு எப்படி அழைத்தாலும் அது அந்த உருவாக்கியவரை போய்ச் சேரும் என்பதுதானே உண்மை.
நமது குழந்தைக்கு நாம் ஒரு பெயர் வைத்திருப்போம் , ஆனால் நமது நண்பர் மனதில் யாரோ ஏற்படுத்திய அன்பு அலைகளின் காரணத்தினால் அவர், அவரது நண்பரின் பெயரை நமது குழந்தைக்கு சூட்டி அழைப்பார் , அதில் அவருக்கு திருப்தி, சந்தோஷம்.

அவர் அப்படி அழைப்பதால் நமது குழந்தையின் பெயர் மாறிவிடுமா என்ன ?

உலக மக்கள் அனைவருக்கும் ஒருவரே காரணமும் , கதியும் ஆனவர்.

அந்த ஒருவர் யாராக இருந்ருந்தால் என்ன ? நமக்கு தேவை, நாம் நம்மை சரணடைய செய்ய திருவடிகள் வேண்டும் , அதற்கு எந்த திருநாமம் இருந்தால் என்ன ?

யாரோ ஏதோ சொன்னால் சொல்லட்டுமே ! அவர்கள் உண்மையை உணரும் போது அவர்களுக்கே தெரியும், என்பதே சரியான பதில் .

ஆனால் இதே பதிலை மற்றவர்கள் நம்மைப் பார்த்து சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. ஏன் ?

அதற்காக நாம் ஏன் கோபம் வருத்தம் கொள்ள வேண்டும் ? நாம் இதனை நம்புகிறோம் அவர்கள் அதனை நம்புகின்றார்கள் , நாம் எந்த அளவுக்கு இதனை முழுமனதாக நம்புகிறோமோ , அப்படித்தான் மற்றவர்களும் அதனை நம்புகிறார்கள் அவ்வளவுதான்.

இந்த நியாயமான , உண்மையான , சத்யமான , வாழ்வின் பேருண்மையை தெளிவாக உணர மனிதர்கள் யோகம் பயில்வது அவசிய தேவையாகின்றது – யோகப்பயிற்சி  நம்மை சேதப்படுத்தாமல் நம்முள் ஒளி ஏற்றும் , அற்புத உயர்நிலையை நம்முள் ஏற்படுத்தி நமக்கு என்றும் துணை நிற்கும் .

யோகம் பயில்வோம் , யோகமாக வாழ்வோம் .
வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.
அன்புடன் கருணாகரன் .   

இந்த அஷ்ட கர்மாவுக்கும் உரிய மூலிகைகள் என்னவென்று அகஸ்தியர் கூறுவதை அடுத்த பதிவினில் பார்ப்போம்.

Sunday, October 27, 2013

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 2

அன்பு நண்பர்களே வணக்கம்.
மூலிகையும் மந்த்ரமும் என்னவென்று அறியும் முன் நாம் யோகம் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது ,
ஆகவே இந்த பதிவினில் யோகம் பற்றிய முக்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் .
யோகமும் , மூலிகையும் , மந்த்ரமும் என்னவென்று பார்ப்போம் .

முதலில் யோகம் . . .

மனித வாழ்வினில் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நன்மைகள் பெருகி வருவதை நாம் யோகம் என்கிறோம் , காரணம் , நமது எண்ணங்களுக்கும் , செயல்பாட்டிற்கும் மேல் அதிகமாக நன்மைகள் கிடைப்பதால் அதனை நாம் யோகம் என்று சிறப்பித்து கூறுகிறோம்.

ஆனால் இப்போது நாம் சொல்ல இருக்கும் இந்த யோகம் என்பது , மண்ணில் மண்ணாக மறையப்போகும் இந்த மனித உடல், ஒரு பெரிய சாதனையை செய்து , இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ள , வாழ்வதற்கு வர இருக்கின்ற, மனித உயிர்கள் தன்நிலையில் இருந்து உய்யும் பொருட்டு மகரிஷிகளாலும் , யோகிகளாலும் , சித்தர் பெருமக்களாலும் நமக்கு அருளப்பட்டதாகும் .
இந்த யோகம் எதிர்பாராமல் வருவதல்ல , எதிர்பாராமல் வரும் யோகமானது , நமது வாழ்நாளில் வரலாம் , வராமலும் போகலாம்.
ஆனால் இந்த யோகத்தினை பயிற்சியின் வாயிலாக நமக்கு நாமே பெற்றுக் கொள்ளலாம். அதுதான் இந்த யோகத்தின் தனித்தன்மையும் பெருமையுமாகும்.
இதனால் வருகின்ற யோகமானது , எப்பிறப்பிலும் நமது துணையாவதாகும்.

இந்த பயிற்சியினை வாசி யோகம் என்றும், ப்ராணாயாமம் என்றும் , மூச்சு பயிற்சி என்றும் கூறுவார்கள் . ஆனால் மனிதனை தெய்வ நிலை காணச் செய்வதால் இந்த பயிற்சியினை தெய்வநிலை யோகப் பயிற்சி என்பதே சரியாகும்.

இந்த யோகத்திற்கான பயிற்சிக்கு நேரம் காலமும் , உணவு முறையும் மிகவும் முக்யமானதாகும் .

இந்த யோகப்பயிற்சியை முறைப்படுத்தி பூலோக வாசிகளுக்கு அருட்கொடையாக அருளியவர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் ஆவார்கள்.

சாட்சாத் எம்பெருமான் ஆனவர் ஸ்ரீ ஸ்ரீ பார்வதி தேவிக்கு யோகத்தின் அதி சூட்சுமத்தை மனமுவந்து அருளி , தேவியானவர் அதனை பதஞ்சலிக்கும் , வியாக்ரபாதருக்கு அருள்பாலித்து , அதன்பின்னர் அவர்கள் இதற்கு வடிவம் தந்து , பின் அவர்களிடமிருந்து பணிந்து இதனைப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் இதற்கு உரிய பாடல்களையும் , பயிற்சியையும் வகுத்து மனிதர்களின் மேன்மை கருதி உலகறிய அருள் செய்தார்கள் .

பின்னாளில் வந்த பெருமைக்குரிய யோகிகளும் , சித்தர்களும் மனித ஜீவர்கள் பால் பேரன்பு கொண்டு தந்த , சிறப்பு மிக்க அந்த பயிற்சி முறையை எல்லோரும் முறையாக மேற்கொண்டால் வாழ்வில் எல்லா நலமும் , வளமும் அமைதியும், ஆனந்தமும் பெறலாம் .       
யோகப் பயிற்சிக்கு உரிய நேரம் என்னவென்று பார்ப்போம்.
24 நிமிடங்கள் என்பது ஒரு நாழிகை ஆகின்றது ,
2 ½ நாழிகை என்பது 1 மணி நேரம் .
நாளொன்றுக்கு 10 ஜாமம் .
5 ஜாமம் என்பது 12 மணி நேரமாகும் .
10 ஜாமம் என்பது 24 மணி நேரமாகும்

அப்படி என்றால் 24 மணியை ஜாமங்களாக பிரிக்கையில் 2 மணி 24 நிமிடங்கள் என்பது ஒரு ஜாமம் என்றாகின்றது.
முப்பது நாழிகைகளை 6 + 6 ஆக பிரித்தால் 5 ஆக பிரிக்கலாம்
பகற் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.
இராக் காலம் முப்பது நாழிகை என்பது 5 ஜாமம் எனப்படும.

இதில் பகல் முப்பது நாழிகையில், பூமியை ........

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை     (6.00-8.24)    ஆகாயமும்
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    காற்றும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை  (1.12-3.36)     நீரும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை   (3.36-6.00)          நிலமும் ஆளுகின்றன. 

இதில் இரவு  முப்பது நாழிகையில், பூமியை........

6 நாழிகை கொண்ட முதல் ஜாமத்தை    (6.00-8.24)     நிலமும்  
6 நாழிகை கொண்ட இரண்டாம் ஜாமத்தை (8.24-10.48)    நீரும்
6 நாழிகை கொண்ட மூன்றாம் ஜாமத்தை  (10.48-1.12)    நெருப்பும்
6 நாழிகை கொண்ட நான்காம் ஜாமத்தை   (1.12-3.36)         காற்றும்
6 நாழிகை கொண்ட ஐந்தாம் ஜாமத்தை    (3.36-6.00)    ஆகாயமும் ஆளுகின்றன.

இதில் கதிரவன் உதயத்திற்கு முன் 6 நாழிகையும்
(*சுமாராக காலை 3-30 மணி முதல் 6.00 மணி வரையிலும்)
பின் 6 நாழிகையும் (*சுமாராக காலை 6-00 மணி முதல் 8.24 மணி வரையிலும்) உள்ள காலமே யோகப் பயிற்சிக்கு உகந்ததாக ஸ்ரீ ஸ்ரீ திருமூலர் அருளுகின்றார்.

*(தினசரி சூரிய உதயம் கணித்து இந்த நேரத்தை முறையாக தேர்ந்தெடுக்கலாம்.)

திருமூலர் 3 ம் தந்திரம் , 16 வார சரத்தில்,
திங்கள் , புதன் , வெள்ளியில் மூச்சை இடைநாடி வழியாகவும் ,
செவ்வாய் , சனி , ஞாயிறில் மூச்சை வலது நாடி வழியாகவும் ,
வளர்பிறை வியாழனில்  மூச்சு இடை நாடியிலும்,
தேய்பிறை வியாழனில் மூச்சு வலது நாடியிலும் பயில வேண்டும் என்கிறார்.

மேலும்,
காலையில் யோகம் பயில கபம் நீங்கும்,
நண்பகல் யோகம் பயில கொடிய வாத நோய்கள் தீரும்,
விடியற்காலையில் யோகம் பயில பித்த நோய்கள் அகலும் என்கிறார்.

காற்றினை உள்ளுக்கு இழுப்பது “ பூரகம் எனப்படுகிறது ,
காற்றினை வெளி விடல்  “ ரேசகம் “ எனப்படுகிறது,
காற்றினை உள் நிறுத்துதல் “ கும்பகம் “ எனப்படுகிறது.

·         16 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து

·         64 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி

·         32 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் பிராணாயாமம் எனப்படுகின்றது

இந்த முறைக்கு மாறாக வலப்பக்கம் காற்றினை உள்வாங்கி பயிலுதல் “வஞ்சனை எனப்படும்.

இடைகலை வழியாக 16 மாத்திரை கால அளவு பூரகம் செய்து ,
பிங்கலையில் 32 மாத்திரை கால அளவு இரேசகம் செய்து மீண்டும்
காற்றினை உள்வாங்காமல் 64 மாத்திரை கால அளவு வெளி கும்பகம் செய்ய பல உண்மைகள் தெரியுமாம்.

மாத்திரை கால அளவு என்பது கண் இமைப்போது அல்லது கைந் நொடிப்பொழுது எனப்படுகிறது .

இந்த முறைகள் நன்கு தேர்ந்தவர்களாலேயே செய்யமுடியும்.
மேலும் இவைகளை எல்லாம் தேர்ந்த குருமூலமாகவே பயில வேண்டும்.

ஆரம்ப நிலையில் பயில்பவர்கள் , இதனை 
·         6 மாத்திரை அளவு இடைகலையில் மூச்சினை (பூரகித்து) உள்ளிழுத்து

·         24 மாத்திரை அளவு இழுத்த காற்றினை (கும்பித்து) உள்நிறுத்தி

·         12 மாத்திரை அளவு பிங்கலையில்(வலது கலையில்) மெல்ல (ரேசித்து) வெளியிட்டு பயிலுதல் சாத்தியமாகின்றது என்றறிகிறோம் .
எப்படி என்றாலும் நன்றாக தேர்ந்த குருவின் துணை அவசியமாகின்றது . 

குருவின் துணையின்றி முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடது நாசியை எப்படி மூடி வலது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , கும்பகம் என்பதனை எப்படி செய்வது என்பதையும் , வலது நாசியை எப்படி மூடி இடது நாசியில் மூச்சு விடுவது என்பதையும் , வெளி கும்பகம் எவ்வாறு செய்வது என்பதனையும் குருவின் அருகாமையில்தான் செய்ய வேண்டும் .

ஏனென்றால் குருவின் துணையின்றி இந்த பயிற்சியில் ஈடுபட்டு தோல்வி காண்பது மட்டுமல்ல , உடல் தொந்திரவுகளும் ஏற்படுவதுண்டு . ( தொந்தி , அடிக்கடி ஏப்பம் , அடிக்கடி அபானன் பிரிதல், சித்த சுவாதீனம் , பார்வை குறைபாடு போன்றவைகள் )

முறையாக பயிற்சியை பயின்றால் இதனுடைய பலன்கள் சொல்லில் அடங்காதது.

காரணம் , மனித முயற்சியினால் செய்ய முடியாத பலவிதமான சாதனைகளையும், சாகசங்களையும் நேர்த்தியாக செய்து முடிக்கலாம் ,
ஆனால் பயில்வோரின் மனதில் முழுக்க முழுக்க தன்னலம் கருதாமையும் , மக்கள் நலனும் , உலக நன்மையை கருதும் மனோபாவமும் இருப்பது அவசியமாகும் .

அடுத்து வருவது உணவு முறைகள் :

மேலே சொல்லப்பட்ட பயிற்சிகள் செவ்வனே முடித்து பயிற்சியில் உயர்நிலை காண சைவ உணவு மிக அவசியமாகின்றது . 

அசைவ உணவுகள் உண்போர் பயிற்சிகளை தொடர்ந்து பயில்வதே முடியாமல் போகும் . 

மேலும் உடல் உபாதைகளும் உருவாகும் .

அதனால் இதனை பயில முயல்வோர் அசைவம் உண்பதை நிறுத்தி விடுவதே சிறந்ததாகும் . அப்போதுதான் சிறப்பாகவும் , விரைவாகவும் பயிற்சியில் உயர்நிலை காண முடியும்.

துவரம்பருப்பு சைவ உணவல்ல என்பது மூத்தோர் கூற்றாகும் , சைவம் என்பது பாசிப்பருப்பு குழம்பு , கீரைவகைகள் , தேங்காய் போன்றவை என்பர் .

இந்த பயிற்சி துவங்குவதற்கு ஏற்ற வயது குறைந்தது 18 வயதும், அதிகபட்சம் 45 வயது எனலாம் . 

இதற்கு மேல் வயது கொண்டவர்கள் வெறும் த்யானம் மட்டும் செய்யலாம்.
உடலும் , மனமும் , எண்ணமும் , செயலிலும் தூய்மையாக இருப்பது மிக அவசியம்.  

இந்த பயிற்சியின் மூலமாக வெளிப்படுவதே அடுத்து வரும் அஷ்ட கர்மாக்களும் அதன் பலன்களும் .


அஷ்ட கர்மாக்களை என்னெவென்று அடுத்த பதிவினில் பார்ப்போம்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .

Monday, October 21, 2013

முடிவெடுக்கும் முன்னே


அன்பு நண்பர்களே வணக்கம்.
ஒருகதை சொல்லப் போகின்றேன் கேளுங்கள் .

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்

“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .

நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .

ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .
நமசிவாய என்றார் ஒருவர் .
ஓம் சக்தி என்றார் மற்றவர் .
உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.
ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .

எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .

அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம், பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .

இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .

சில வருடங்களுக்குப்பின் . . .

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.  

தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .

நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .

இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .

தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை   கண்டான்.

உடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்

இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் , ஒரே ஒரு வாசகம்  ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான் . . . .

இந்த நிலை மாறும் அவ்வளவுதான்

வேறொன்றும் இல்லை .

முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .

தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.

இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .

நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.

தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .
மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .

இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .

அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “
மன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .

ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.

சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.

அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .

இந்த நிலை மாறும்

இதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும்  சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !

அன்பின் நண்பர்களே , உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது . சந்தேகம் வேண்டாம் , இதில் வேறு கருத்தில்லை , உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை .

ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.

இந்த நிலை மாறும்


வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
அன்புடன் கருணாகரன் .
  

  


Related Posts Plugin for WordPress, Blogger...