என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, August 2, 2013

அன்பு வேண்டும் ! !

அன்பு நண்பர்களே வணக்கம்.
அன்பு வேண்டும் என்பதே தலைப்பு .
அன்பு வேண்டும் என்றால் யாருக்கு? எதனிடம் ?
என்கிற ஒரு கேள்வி எழுகிறதா ? சரி . இனி தலைப்புக்குள் போகலாம்.
கேள்வி எழவில்லையானால் மேலே படிக்கவேண்டாம் . ஏனென்றால் ,
நீங்கள் தெரிந்து கொண்டுள்ளீர்கள் , உங்களுக்கு தெரிய வைக்கவேண்டாம்.

சரி, முதலில் அன்பு என்பதை தெரிந்துகொள்வோம் .

அன்பு என்பது என்ன ? இதன் வேறு பெயர்கள் என்ன ?
முதலில் அன்பின் ஆரம்பத்தை தெரிந்துகொள்ளவேண்டும் ,
அன்பின் தோற்றம் எதனால் உருவானது ? என்பதில்தான் அதன் வலிமை இருக்கின்றது.

அன்பு உரிமையில் உண்டானதா? – உரிமை குறைந்தால் குறையும்.
அன்பு பாசத்தினால் உண்டானதா? – பாசம் மோசமானால் குறையும்
அன்பு மோகத்தினால் உண்டானதா? – மோகம் தீர்ந்தவுடன் குறையும்
அன்பு இரக்கத்தினால் உண்டானதா? – எந்த நேரமும் மாறும் தன்மைஉடையது
அன்பு பரிதாபத்தினால் உண்டானதா? - எந்த நேரமும் மாறும் தன்மைஉடையது
அன்பு கடமையினால் உண்டானதா? - எதிர்பார்ப்புடன் கூடிய அன்பு - எந்த நேரமும் மாறும் 
அன்பு ஆசையினால் உண்டானதா? – நிராசையானால் மாறிவிடும் 
அன்பு பேராசையினால் உண்டானதா? – கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் மாறும்
அன்பு நடிப்பாக(போலியாக) உண்டானதா? – இதனை விளக்கவே வேண்டாம்
அன்பு வேண்டாவெறுப்பாக
(யாரோ சொன்னார்கள் என்பதற்காக) உண்டானதா? - இதனை விளக்கவே வேண்டாம்
அன்பு எல்லை மீறிய அன்பினால் உண்டானதா? – இது பிறருக்கு தீங்கு எண்ணாதது
அன்பு காரணமே இல்லாமல் உண்டானதா? – இது தாயின் அன்பு இது என்றும் நிலையானது .

அன்பினை ; பாசம் , நேசம் , ப்ரியம் , காதல் , கருணை , பக்தி, அபிமானம், அபிலாஷை , பிரயாசை என்றெல்லாம் கூறலாம்.
என்றாலும் கூட அன்பை அன்பு என்று சொல்லும் போதுதான் அழகு , இதில் ஒரு நெருக்கமும் , நெகிழ்வும் , ஆழமும் தெரியும் .

அன்பிற்கு எதிர்பார்ப்பில்லை , தேவைகள் இல்லை, .
அன்பு இயற்கையைப் போன்றது , எல்லோருக்கும் பொதுவானது.
அன்பு சஞ்சலமடையாதது , சந்தேகம் கொள்ளாதது.
அன்பு இறவாத்தன்மை கொண்டது , எந்நேரமும் ஜீவனுள்ளது .
அன்பு எத்தகைய மனதினுள்ளும் நுழையும் தன்மை கொண்டது , இதனை பெரியோர் அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ் என்கிறார்கள்.

எதிர்பார்ப்பில்லாத அன்பினையே அன்பு என்கிறோம். நான் அன்பு செய்கிறேன் நீயும் அன்பு செய் என்றாலே அது வியாபாரம் ஆகின்றது.

நான் அன்பினை தந்தாலும் என் அயலான் எதிர்ப்பினையே செய்கிறானே ! என்றால் நீங்கள்தான் தண்ணீர் ஊற்றினீர்கள் என்பதால் , உங்கள் வீட்டு ரோஜாசெடியின் முட்கள் உங்கள் கையில் குத்தாமல் இல்லையே – அதுபோல் அது அவரின் இயல்பு. அவருக்காக உங்கள் இயல்பினை ஏன் நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டும் . அத்துடன் அது அது அதனுடைய இயல்பில் இருந்தால்தான் அழகு.
யோசித்து பாருங்கள் , வெப்பமில்லாத சூரியன் , குளிர்ச்சியற்ற நிலவு, இரவு பகலில்லாத பூமி  ஒருநாள் வாழமுடியுமா நம்மால் ?

காரணம் , காரமான ஒரு சுவை இருப்பதால்தானே இனிப்பின் சுவையை உணர முடிகிறது.
இதனை பெரியோர் வெயிலின் கொடுமை நிழலில் தெரியும் என்கிறார்கள்.

உயர்ந்த அன்பு இறைவனுக்கு நிகரானது ; என்றும் இறையன்பு நிகரற்றது , அதற்கிணையானது ஒன்றுமே இல்லை , அதனால் அதனை அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்.

ஒருவர் கேட்டு அன்பினை பரிமாறுதல் கூடாது , அன்பு , தானே சுரக்க வேண்டும் – குழந்தைகள் கேட்டுக்கொண்டு நாம் அன்பு செய்கிறோமா  இல்லையே , அதுபோல் இதயம் முழுவதுமாக சுரக்கும் அன்பு , எல்லா துன்பங்களையும் மாற்றவல்லது.
ஒரே எண்ணத்துடன் முழுமனதாக ஒன்றுகூடி அன்போடு செய்யும் பிரார்த்தனை எவ்வித தோஷங்களையும் போக்கும் என்பது திண்ணம்.
பாருங்கள் . . .
குழந்தைகளின் அன்பில் களங்கம் இருப்பதில்லை , அவர்கள் எல்லோரிடமும் ஒன்றேபோல் அன்பு செய்கிறார்கள் , ஏழை – பணக்காரன் , படித்தவன் – முட்டாள் , ஞானி – அஞ்ஞானி , நல்லவன் – கெட்டவன் , நோயாளி – திடசாலி என்றெல்லாம் அவர்களுக்கில்லை , எல்லோரையும் மனிதர்களாகவே பார்க்கும் பெரும் பண்பு அவர்களிடம் உண்டு. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள் பெரியோர்.

உங்கள் அன்பினை சோதியுங்கள் , உங்கள் அன்பு எத்தகையது ?
பாரபட்சமற்ற அன்பினை எல்லா உயிரினங்களுக்கும் அள்ளி வழங்குங்கள்.
உயிர் கொன்று உயிர் வளர்க்கும் நிலையில் இருந்து மீளுங்கள்.
பிறப்பென்பது ஒரு சுழற்சி முறையாகும் , ஆகவே, நமது உறவுகளே , மீண்டும் பிறந்து நாம் உண்ணும் உயிரினமாக வருவதற்கு வாய்ப்புண்டு, அதனை நாம் விரும்பி உண்பதற்கும் வாய்ப்புண்டு.
புனரபி மரணம், புனரபி ஜனனம் என்றார் பெரியோர்.

அன்பு , அன்பு , அன்பு அஃதொன்றே அனைத்தியக்கத்திற்கும் மூலதனமாகும்.
அன்பினை தாராளமாக விதையுங்கள் , அன்பெனும் பயிர் செழித்தோங்கினால் உலகில் தீவிரவாதம், தானே ஒழியும்.

அன்பிலார் கண்டும் அன்பு செய் – அஃதொன்றே
பண்பினில் எல்லாம் தலை.                                                  எனது குறள்


அன்புடன் கருணாகரன் .

Saturday, July 27, 2013

மந்த்ரமும் மாந்த்ரீகமும்


அன்பு நண்பர்களே, வணக்கம்.

மந்திரமும் மாந்த்ரீகமும் என்பதனை பற்றி பார்க்கலாம் .

வேதம் நான்கிலும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமசிவாயமே என்றார்கள் மேலோர்.

வேதங்கள் நான்கினையும் உள் ஆய்ந்து பார்க்கையில் அதிலே மெய்ப்பொருளாக காணப்படுவதும்,

வேதம் முழுமைக்கும் காரணமாக இருப்பதுவும் கால தேவனாகிய சிவபெருமானின் பஞ்சாட்சரமே என்கிறார்கள்  மேலோர் .

அப்படி என்றால் வேதம் என்பதே முழுக்க முழுக்க மந்திரமானது எனப் பொருளாகின்றது .
ரிக் வேதம் காலத்தால் மிகவும் முன்னதானது, தொடர்ந்து யஜுர் வேதம் , சாம வேதம், அதர்வண வேதம் ஆகியவை சேர நான்கும் வேதங்களானது, இதனை நான்மறை என்பர்.
முழுக்க முழுக்க தேவநாகரி மற்றும் சமஸ்க்ருத மொழியால் உருவானவை நான்கு வேதங்களாகும், இன்றைக்கும் ஒருசில நாடி ஜோதிட நூல்கள் தேவநாகரி மற்றும் க்ரந்த எழுத்துக்களால் அமைந்திருப்பதை காணலாம்.

உயிர் சொல்லின் உருவாக்கமாகவே  அனைத்து மந்த்ரங்களும் அமைந்திருக் கின்றது.
ஐம்பூத அசைவினை வகைப்படுத்தியும்,  வசப்படுத்தியும் தரவல்லதாக உள்ள  எழுத்துக்களின் தொகுப்பாக மந்திரங்கள் உருவாகி இருக்கிறது.

இயற்கையின் ஒவ்வொரு அணுவிலும் இலகுவில் கலந்து கொள்ளக் கூடியதாக மந்திர சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளதை உணர முடிகின்றது.

பல்லாயிரம் கோடி எழுத்துக்களை உலகுக்கு அருளிய மேலோர்கள், அதனை செயலாக்கம் தரும் வண்ணம் வகைப்படுத்தினார்கள், அவையே நான்கு வேதங்களாக பரிணமிக்கின்றன.

நான்கு வேதங்களும், இறைவனை போற்றிப் புகழும் பொருள் தருபவையாக அமைந்துள்ளதாக தோன்றிய போதிலும், அவை பூமியின் சுற்றுச்சூழலையே மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி கொண்டவையாக அமைந்து இருக்கின்றன.

உதாரணமாக , போபால் விஷவாயு கசிவின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு குடும்பம் மட்டும் (அந்த வீட்டில் ஏதோ ஹோமம் நடந்ததால் அவர்களை அந்த விஷவாயு சிறிதேனும் கூட தாக்கவில்லை) தப்பித்ததை சொல்லலாம்.

இதுபோல் இன்னும் எத்தனையோ இருக்கலாம் ஆனால் நமக்கு தெரியவில்லை.
ஒவ்வொரு மந்திர சொற்றொடருக்கும், ஒவ்வொரு கிரஹம் முழு காரணியாகின்றது,
ஒவ்வொரு க்ரஹத்திற்கும் ஒவ்வொரு தாவரம் இசைவாகின்றது அதாவது கட்டுப்படுகின்றது.

தாவரங்களைப் போலவே அதனுடைய விதைகள் , கொடிகள் , கிளைகள், தண்டுகள் , இலைகள் , வேர்கள் என அனைத்தும் அதற்குரிய க்ரஹத்திற்கு முழுமையாக கட்டுப்படுகின்றது.

இதனை வெகுகால ஆய்விற்கு பின் கண்டறிந்த மேலோர்கள் , நான்கு வேதங்களுக்கும் அதனை வகை பிரித்து அளித்துள்ளார்கள்.

இதன் வாயிலாகவே அவர்கள் இந்த அதி சூட்சுமத்தை உள் நிறுத்தி அஷ்டமா சக்திகளை இரண்டாக வகை பிரித்தார்கள்.

அவை , மோகனம் , பேதனம் , வசீகரம் , வித்துவேஷணம் , ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம் , மாரணம் போன்றவை அஷ்டமா கர்மாவாகவும் ,
அனிமாமகிமாகரிமாலகிமாபிராத்திபிராகாமியம்ஈசத்துவம்வசித்துவம் என்பவை அஷ்டமா சித்தியாகவும் பிரித்தளித்தனர்.

இந்த அஷ்டமாசக்திகளில் , அஷ்டகர்மாக்களைப் பெற மந்திரங்கள் , தாவரங்கள் மூலமாகவும் , அஷ்டசித்தியைப் பெற மந்திரங்கள் , யோக நிலைப்பயிற்சி களினாலும் பெற முடியும் என்று கண்டுணர்ந்தார்கள். 

அவர்கள் கண்டு வென்றதையே உலகிற்களித்தார்கள்.

முதல் மூன்று வேதங்களினின்றும் முற்றிலுமாக மாறுபட்டது அதர்வண வேதமாகும்.
முதல் மூன்று வேதங்களையும் மிக ஆழமாக உள்ளார்ந்த ஜீவனாக உணர்ந்து பயிலும் போது மாணாக்கனின் மன நிலையில் பலவிதமான சோதனைகளும் , துன்பங்களும் தொடர்கதையாக வந்து வாட்டும் ,

அவ்வாறான வேளையில் மாணாக்கன் மனம் தளர்ந்து விடாமல், ஒரே பிடியாக வேதப் பயில்வினை தொடர்ந்து பற்றிக் கொள்ளும் மனோபலம் பெற மாணாக்கனின் மன வலிமையை கூட்டும் பொருட்டு உருவாக்கப்பட்டதே அதர்வண வேதமாகும்.

அதர்வண வேதம் முற்றிலுமாக தீயவற்றை அழிப்பதே ஆகும்.
அதாவது . .

மாணவனின் பயிற்சியில் மன சஞ்சலப்படாமல் இருக்கும் பொருட்டு பேதனமும், வித்துவேஷணமும் ,

அவனுக்கு அவன் விரும்பும் மந்திரங்களும் அதன் தேவதைகளும் வசமாகும் பொருட்டு வசீகரமும் , மோகனமும் ,

மாணவனின் பயிற்சியின் இடையில் மாணவனுக்கு காற்று, மழை போன்ற இயற்கையின் தாக்குதல்களை நிறுத்தும் வகையில் ஆகர்ஷணமும், ஸ்தம்பனமும்,

மிருகம் , விஷ ஜந்துக்களிடமிருந்து காக்கும் பொருட்டு உச்சாடனமும் , மாரணமும் அருளப்பட்டதுவாம்.

ஏன் இரண்டு, ஒன்றே போதாதா என ஒரு வினா எழுகிறதல்லவா ?

எதிர்ப்பின் தன்மையை பொறுத்து இவைகள் மாறுபடுகின்றன.

பேதனத்திற்கு வித்துவேஷணமும் , வசீகரத்திற்கு  மோகனமும், ஆகர்ஷணதிற்கு ஸ்தம்பனமும் , உச்சாடனத்திற்கு மாரணமும் ஒன்றிற்கொன்று வலிதாம்.

இதனை இடம் பொருள் ஏவல் என்பர் , அதாவது தனது பயிற்சிக்கு தடையாக வரும் சக்தியை அதற்கேற்ற வகையில் தடுத்து தனது பயிற்சியை தொடர்தல் 
.
இந்த அஷ்டமாசக்திகளை முறையாக பயிலாத சில துன்மார்க்க மாணவர்கள் பின்னாளில் மந்திரவாதிகள் என உலாவருகின்றார்கள் , இவர்கள் பணம் , பொருள் மீது தாம் கொண்ட தீராத அவாவினால் மேலே சொல்லப்பட்ட சித்திகளை தவறாக பயன் படுத்துகின்றார்கள் , தன்னை நாடி வருபவர்களுக்கு ஏற்றாற் போல் நண்பன் , மனைவி , எதிர்ப்பாளர்கள் போன்றவர்களை பிரித்து விடவும், மயக்கவும் , அடக்கவும் , அழிக்கவும் பயன் படுத்துகின்றார்கள் .

இதனை தற்போது மாந்திரீகம் , ஏவல் என்கிறார்கள். இவர்களின் முறையற்ற இந்த செய்கையினால் இவர்களுக்கே பின்னாளில் கடினமான தோஷமும், சாபமும்  ஏற்படும்.

இன்று உலகில் பயன்படுத்தப்படும் அனைத்து கோடி மந்திரங்களும் வேதத்தின் துளிகளே , இவை உலக மாந்தருக்கு நன்மையை தருவதற்காகவே உருவாக்கப் பட்டவையாகும்.

பொருளுணர்ந்து சொல்லப்படும் மந்திரங்கள் , நம்மை தரம் உயர்த்தும் என்பதில் வேறு கருத்தில்லை .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன் 

அஷ்டமாசக்திகளை தரும் மூலிகைகள் , மந்திரங்கள் , திசைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

Tuesday, June 4, 2013

உடலெனும் அதிசய கருவி

அன்பு நண்பர்களே , வணக்கம்.

உடலெனும் அதிசய கருவி .
ஆம் . நமது உடலெனும் அதிசய கருவியைப் பற்றித்தான் இந்த கட்டுரை .
எல்லோரும் இந்த உடலைப்பற்றி முடிந்தவரை சொல்லியாகிவிட்டது, புதிதாக சொல்ல என்ன இருக்கிறது என்றுதானே நினைக்கின்றீர்கள் ?
நிறைய இருக்கிறது !!!
நமது உடல் ஒரு அற்புதமான பொக்கிஷம் .
நமது உடல் ஒரு அதிசயமான செயல்பாட்டு கருவி.
நமது உடல் தோண்ட தோண்ட குறையாத ஒரு புதையல் குவியல்.
அதனால் யார் எவ்வளவு சொல்லியிருந்தாலும் அது குறைவுதான்,  சொன்னாலும் குறைவுதான்.
பொதுவாகவே உடலின் ஒவ்வொரு செயல்களும் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுகின்றது .
ஒருவர் அனாயாசமாக செய்யும் செயலை மற்றவர் மிகுந்த சிரமத்தின் பெயரிலேயே செய்ய முடிகிறதைப் பார்க்கின்றோம். ஒரு சிலரால் செய்யவே முடிவதில்லை .
எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடலின் அமைப்பு அமைந்தாலும் , செயல்திறன் ஒரே மாதிரி இருப்பதில்லை . காரணம் எதுவாக இருந்தாலும் பொதுவான பதில்:
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட செயல்திறன்தான்.
ஒரு ஆசிரியரிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரே பாடத்தினை முறையாக படித்தாலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெறுவதில்லை.
ஒரு குருவிடம் பயிலும் சிஷ்யர்கள் கூட குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட கால அவகாசம் என முறையோடு, கிரியாக்களை சிரத்தையாக பயின்றபோதும் பயற்சியின் முதிர்ச்சி காலத்தில் ஒரே மாதிரியான தகுதியுடன் வெளியேறுவதில்லை . செயல்திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. சிலர் அதிகமான செயல்திறனோடும், சிலர் குறைந்த அளவுகூட செயல்திறன் இல்லாமல் இருக்கின்றார்கள். சிலர் பெயரளவில் கற்றவர்களாக உள்ளார்கள்.
ஆனால் உடலிலோ , அவயங்களிலோ , மற்ற எதிலும் தோற்றக் குறைவில்லை , ஆனால் செயல்திறன் மாறுபாடு உண்டாகின்றது.
இந்த அதிசயம் என்ன ?
சிலர் விரல் நுனியில் எல்லாவித தகவல்களையும் உள்ளடக்கி வைத்திருப்பார்கள் , கேட்கும் கேள்விக்கெல்லாம் மின்னலாய் பதில்கள் பளிச் பளிச்சென்று வரும் .
சிலர் நிறைய படித்திருப்பார்கள் , எல்லாவிஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள் ஆனால், கேள்வி கேட்டால் பதில் சொல்ல தடுமாறுவார்கள் .
சிலர் பேசத்துவங்கினால் சிரிப்பலைகள் ஓயவே ஓயாது அரங்கமே அதிரும் , சிலர் அங்கும் கூட அமைதியாக அமர்ந்திருப்பார்கள் .
ஒரு சிலர் மிக சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கோபம் கொள்வார்கள் , ஒரு சிலரோ மிக பெரிய காரியங்கள் தவறாகிப் போனால் கூட அதனை அமைதியாக ஏற்றுக்கொள்வார்கள் .
சிலர் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள் , ஒரு சிலர் குழந்தைகளிடம் கூட எரிந்து விழுவார்கள் .
என்னதான் நடக்கிறது இந்த உடலுக்குள்?
கிராமங்களில் இன்றும் ஒரு நிகழ்வு உண்டு , அதாவது ஒரு கிராமத்து பெரியவரைப் பார்த்து மணி என்ன இருக்கும் என்று கேட்டால் , வானத்தைப் பார்த்து விட்டு , இவ்வளவு இருக்கும் என்பார் , அது மிகவும் சரியாக இருக்கும் , அவருக்கு கடிகாரத்தில் மணி பார்க்கக் கூட தெரியாது . ஆனால் அவர் சொல்லும் நேரம் சரியாக இருக்கும். அந்த அளவு அனுபவ ஞானம் .
நாம் கையிலேயே கடிகாரம் கட்டிக் கொண்டிருப்போம் , இருந்தாலும் நேரம் சொல்வதாக இருந்தால் கடிகாரதைப் பார்க்காமல் இவ்வளவு என்று சொல்ல முடியாது . இதனை அனுபவக் குறைவு என்று சொல்ல முடியாது , சரியான கணிப்புத் திறன் குறைவு.
எப்படி நேர்கிறது இந்த மாறுபாடு?
ஒரு சில குழந்தைகள் கூட சிறு வயதிலேயே பெரியவர்களைப் போன்ற நடை உடை பாவனைகளுடன் கம்பீரமாக இருக்கின்றன. ஒரு சில பெரியவர்களிடம் சிறு குழந்தைகளைப் போல பாவனை காணப்படுவதுண்டு .
ஒரே வீட்டில் உள்ளவர்களுள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரியான குணாதிசயங்கள் கொண்டுள்ளதை பார்க்கின்றோம் , ஒருவர் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார் , ஒருவர் மிகவும் சோம்பலாக இருப்பார் , ஒருவர் மிக ஆச்சாரமாக இருப்பார் , ஒருவர் குளிப்பதற்கே பலநாள் ஆகும்.
இப்படி ஒரு வீட்டில் உள்ளவர்களே மாறுபடும் போது இந்த மாபெரும் உலகில் உள்ளோருக்குள் ஒரே மாதிரியான எண்ணங்களும் , செயல்திறனும் எப்படி இருக்கமுடியும் ?
இத்தனை அதிசயங்களை நிகழ்த்தும்படி இந்த உடலில் அப்படி என்னதான் உள்ளது ?
நமது உடல் பலவகையான் அதிசய கோட்பாடுகளைக் தன்னகத்தே கொண்டுள்ளது .
தனக்குள்ளே வருகின்ற உணவின் அடிப்படையிலேயே தனது இயக்கத்தை அது நிகழ்த்துகிறது. அது எந்த வகையான எரிபொருளாக இருக்கின்றதோ அதன் குணபேதங்களை உருவாக்கிக்கொண்டு தன்னை இயக்கிக் கொள்கிறது.
சாத்வீக குணம் , தாமச குணம், ரஜோ குணம் போன்ற குணாபேதங்கள் நமது உட்கொள்ளும் உணவினாலேயே மாறுபடுகின்றன.
சுறுசுறுப்போ, சோம்பலோ , சிரிப்போ , அமைதியோ எது தேவையோ அதனை அதிகமோ, குறைவோ உண்டாக்கி வெளியே அழகாகக் காட்டுகிறது .
உதாரணமாக , மூன்று  வெவ்வேறு விதமான (A,B,O) இரத்த வகையைச் சேர்ந்த நண்பர்கள் ஒரு உணவகம் சென்று ஒரே விதமான சாப்பாட்டிற்கு ஆர்டர் தருகிறார்கள். சாப்பாடு, சாம்பார், ரசம் , பொரியல், கூட்டு , அப்பளம் எல்லாம் வருகிறது , மூவரும் உண்கிறார்கள் , வெளியேறுகிறார்கள் .
ஆனால் உள்ளே சென்ற உணவானது செரித்தலை துவக்கி , அவரவரின் உடலின் இரத்த வகையாக மாறுகிறது , ஒருவருக்கு A , மற்றொருவருக்கு B, இன்னொருவருக்கு  O , இதில் பாசிட்டிவ் , நெகடிவ் பிரிவுகளும் உண்டு.
என்ன மாயம் இது ? யார் செய்த விந்தை இது ? யாரால் முடியும் இது ? இயற்கையின் அற்புத கொடை அல்லவா?
எங்கே ஹோட்டலில் ஒரு சாதம் வாங்கி அதனை A, B, O வகை இரத்தமாக நமது விஞ்ஞானிகளை மாற்றித் தர இயலுமா ? எனக் கேளுங்கள் . செய்கிறார்களா ? பார்ப்போம்.
நிச்சயமாக முடியாது , ஆனால் இந்த உடலானது  அவரவருக்கு தேவையான இரத்தமாக மாற்றிக்கொள்ளும், அதிசயத்தை அனுதினமும் சர்வ சாதாரணமாக நிகழ்த்திக் கொண்டிருகின்றது.
என்ன ஆச்சர்யம் ?
மனித இனம் புரிந்து கொள்ள , தெரிந்து கொள்ள முடியாத விந்தைகளும் , அதிசயங்களும் நிறைந்ததுதான் நமது இந்த உடல் .
இந்த அதிசய பொக்கிஷத்தைத் தான் நாம் தினசரி பான்பராக், புகையிலை , சாராயம் , மது , கஞ்சா, சிகரெட் போன்ற கண்ட கண்ட ஆகாத விஷ பொருட்களை எல்லாம் உள்ளே செலுத்தி உடலை செயலிழக்க செய்து மகிழ்கிறோம். பின்னர் அவதிப்படுகிறோம். போனால் வராது என்பார்கள், புரிந்து நடந்தால் வாழ்வு நம் கையில் ,புரிந்தும் புரியாமல் நடந்தால் வாழ்வு? யார் கையில் ?
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
நமசிவயம்.       

  

  


      

Friday, May 31, 2013

இலவசமாக கிடைத்தால் . . .

அன்பு நண்பர்களே வணக்கம்.

இலவசமாக கிடைத்தால் . . . . .

என்பது பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

நமக்கு எப்போதுமே இலவசங்கள் மீது ஒரு மோகம் உண்டு , அலாதியான அன்பு , ப்ரியம், பாசம், எல்லாமே உண்டு.

இன்றைய இளைஞர்கள் வேடிக்கையாக சொல்வார்கள் “ சும்மான்னா இவன் பெனாயில கூட குடிப்பான் னு .

அரசாங்கங்கள் கூட மக்களை தன் வசமாக்க பலவிதமான இலவசங்களை தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது , இலவசங்கள் என்ற சொல்  சில சட்ட சிக்கலை தரும் வாய்ப்பு உள்ளதால் அதனை விலையில்லாப் பொருள்கள் எனும் பெயரில் வழங்குகிறது .

அதனைப் பெறுவதற்கு நாம், அடிதடிபட்டு முட்டி மோதி வாங்கி வருவோம் , அந்த பொருட்களுடன் தெருவில் பெருமிதத்தோடு நாம் நடந்து செல்வோம் நமது கண்களும் முகமும் சொல்லும் “ நாங்க யாரு.. வாங்கிடோம்ல .

இலவசம் பெறுவது என்றால், யார் யாருக்காவது பணம் தந்தாவது (?) அந்த இலவசங்களை பெற்று விடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளோம் . 

காரணம் இலவசங்களின் மீது நமக்கிருக்கும் மோகம் .

மிக மிகச் சில வருடங்களே உழைக்கக்கூடிய இலவசங்களுக்காக போராடும் நாம் , இலவசங்களை பெறுவதற்காக எல்லாவித அலுவலங்களுக்கும் விடாமல் பலபடிகள் ஏறி மனு கொடுக்கும் நாம், அந்த அலுவலகங்களில் உள்ள மேல் மட்ட , கீழ்மட்ட , அடிமட்ட பணியாளர்கள் என்று அனைவருக்கும் ஒரே மாதிரியான குழைவும் , கும்பிடும் கொஞ்சமும் மாறாமல் போட்டு களிக்கும் நாம், எதற்கு இது ? இது நமக்கு உபயோகப்படுமா ? இதைபோல இரண்டு மூன்று ஏற்கனவே நம்வீட்டில் சும்மா கிடக்கின்றதே இது எதற்கு என கொஞ்சமும் யோசிக்காமல் எப்படியாவது அவைகளை இலவசமாக பெற்றுவிடுவது என்ற நோக்கிலேயே முன்னேறும் நாம், இங்கிருந்து வெயிலில் காயும் நேரம், அங்கிருந்தால் இதனை விட சுகமாக இருந்து இதனிலும் அதிகமாக உழைத்து சம்பாதிக்கலாம் என தெரிந்தும் எங்கும் செல்லாமல் இலவசங்களுக்காக கால்கடுக்க வரிசையில் கொஞ்சமும் கலங்காமல் நிற்கும் நாம், 
 
எந்தவித உழைப்பையும் பெறாமல் , கால்கடுக்க நின்று பெறாமல், எந்த ஒரு நொடியும் இலவசங்களை தருவதை நிறுத்தாமல் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து தந்து கொண்டிருக்கும் , இன்னும் பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு தருவதற்கு வைத்திருக்கும் இலவசங்களை மதிக்காமல் , அதன் பெருமையை உணராமல் , அதனை இழிவுபடுத்தி , எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தி கொண்டிருக்கின்றோமே, அதனை உணர்ந்தோமா ? அதனை அழிப்பதையே நமது முழுநேர பணியாக கொண்டுள்ளோமே . . . .

அரசாங்கம் தருவது அந்த அந்த மாநிலத்திற்கு மட்டுமே !!??

இங்கே தருவதை அங்கே தரமாட்டார்கள் , தந்தால் அதையும் யாராவது ஸ்டே வாங்கி தடுத்து விடுவார்கள் !!??

ஆனால் இயற்கையின் இலவசங்கள் இந்த பேருலகிற்கே அல்லவா !!! இதை யாரும் ஸ்டே வாங்கி தடுக்க முடியாதே !!!

நீங்கள் இங்கே பெறுகின்ற அதே இலவசங்களை இந்த பூஉலகில் எங்கோ கடைசியில் உள்ள மனிதனும் பெறுகின்றானே !!! 

மேலும் அந்த இலவசங்கள் எல்லாம் நம் கண் முன்னேயே சில நாட்களில் பழுதாகி அழிந்து விடும் ,

ஆனால் இயற்கையின் இலவசங்கள் இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம்  தலைமுறைகளுக்கு உரியதல்லவா !!!

ஏன் இதனை நாம் மதிக்கவில்லை தெரியுமா ?

அது இலவசம் என்பதே நமக்கு புரியவில்லை , ஏதோ நமக்கு இயல்பாக கிடைக்கிறது என்றெண்ணிக் கொண்டுள்ளோம்.

உங்களுக்கு தெரியுமா ?

ஜப்பானில் நெடுஞ்சாலையில் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒன்றென காற்று நிலையங்கள் இருக்கின்றனவாம் , வாகனங்களுக்கு இல்லை, மனிதர்களுக்கு. நம் நாட்டு மதிப்பிற்கு முன்னூறு ரூபாய் 150 ml .

இந்த நிலை நம்நாட்டிற்கும் வர நீண்ட இடைவெளியில்லை .

இப்போதுதான் தண்ணீர் பாக்கெட்டிற்கு வந்துள்ளோம் .

ஒரு குடம் (சுமார் 18 litre) தண்ணீர் பிடிக்க சில இடங்களில் இரண்டு ரூபாய் வாங்குகிறார்கள் , ஆனால் அதே தண்ணீர் 200 ml இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை பஸ் நிலையங்களில் விற்கப்படுகிறது.

காசுகளுக்காக காடுகளை அழித்தோம் , ரோட்டோர மரங்களை அழித்தோம். இந்த ஆண்டு மழை வருமா என பஞ்சாங்கத்தை புரட்டுகிறோம்.

காடுகளுக்கு உள்ளே இயற்கையை அழிக்காமல் செல்லும் அழகிய சாலைகள் அமைக்க முடியும், ஆனால் நாம் அமைக்கவில்லை .

நூறு ஆண்டுகளை கடந்த மரங்களையும் கூட நாம் விட்டு வைக்கவில்லை , பெயர்த்தெடுத்து வீசி விட்டோம், சாதனையாக.

பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டிய இதுபோன்ற மரங்களை அடிவேர் அறாமல் அப்படியே எடுத்து நகர்த்தி வைக்கின்றார்கள் பின் வரும் சந்ததிகள் காணவேண்டும் என்று மேலை நாடுகளில்.

மழை நீர் இல்லை அதனால் நதி நீர் இல்லை அதனால் கொஞ்ச நாளில் கடல் நீரும் காணாமல் போகும்.

நாம் எங்கே போவோம் நீருக்கு ?.

உப்புசப்பற்ற இலவசங்களுக்காக போராடுகிறோம் , ஆனால் உயிர்க் காக்கும் இலவசங்களை அழிக்கிறோம்.

இயற்கையின் இலவசங்கள் நம்மாலேயே அழிக்கபடுகின்றன.

ஆகாயத்தை கூறு போட்டுவிட்டோம் , வான் எல்லையினால்.

பூமியை கூறு போட்டோம் , புவி எல்லை பகுப்பினால்.

நீரை கூறு போட்டோம் , அணைக்கட்டு எனும் பெயரினால்.

காற்றினை கூறு போட முடியாததினால் முடிந்தவரை மாசுபடுத்தினோம் .

தீயைக் கூறு போட்டால் அது நம்மை வறுத்து தந்துவிடும் என்பதனால் கொஞ்சம் தள்ளி நிற்கிறோம்.

ஆகாயம், பூமி , காற்று , நீர் எல்லாம் போனபின் . . . நாம் நெருப்போடுதான் விளையாட வேண்டிவரும்.

இப்போதே பூமி உஷ்ணமயமாதலால் வரண்டு வருவதாக புள்ளி விவரங்கள் கதறுகின்றன. நாம் எதனைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. இதெல்லாம் யாருக்கோ சொல்கிறார்கள் என்பதாக நினைத்துக் கொண்டு நாம் கிடைக்காத இலவசங்களுக்காக ஏங்கிக் கொண்டுள்ளோம் .

தந்தையும் தாயும் இறந்து கொண்டிருப்பதை அறியாத குழந்தை , தாயினிடத்தில் பாலுக்காக ஏங்கிக் கொண்டிருப்பதை போல.

கொஞ்சம் நாம் யோசிப்போம் ,

நம் வாழ்வின் ஆதாரங்களை நாம் அழித்தபின் நாம் எதன் ஆதாரத் துணையுடன் இந்த பூமியில் வாழ்வோம்? நமது வழித்தோன்றல்களை எப்படி வாழ வைப்போம் ? அவர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க நமக்கென்ன உரிமை இருக்கின்றது ? நமக்கு முன்னால் இருந்தவர்கள் தனக்கு பின்வருபவர்களுக்கென வைத்துச் சென்றதை, நாமும் நமக்கு பின் வருபவர்களுக்கு விட்டு செல்ல வேண்டாமா ? அவர்களும் இந்த உலகில் பங்குள்ளவர்கள் தானே ?

வெறும் காங்கிரீட் காடுகளாக உலகம் மாற்றப்படும் முன்னர் கொஞ்சம் சிந்தியுங்கள் .


வளமோடு வாழுங்கள் . வாழும் நாளெல்லாம்.  

Monday, May 20, 2013

பயம் வேண்டும் ! ஏன் ?


அன்பு நண்பர்களே , வணக்கம்.

பயம் எனும் செயல்பாட்டு உணர்வினை தலைப்பாக எடுத்துக்கொண்டோம்.

பயம் என்பது ஒரு உணர்வாகும்.

இன்பம் துன்பம் என்பதுபோல பயம் ஒரு உணர்வு அவ்வளவுதான் என்று ஒதுக்கமுடியாது , இன்பமும் , துன்பமும் சிறிது நேரத்தில் மாறிவிடும் அல்லது மறந்து விடும். காரணம் இன்பமும் துன்பமும் வெளிமனதில் சிறு சலனம் உண்டாக்கும் , சற்று நேரத்தில் வேறொன்று இந்த இடத்திற்கு வந்தவுடன் அகன்று விடும் .

ஆனால் இந்த பயம் மட்டும் உள்மனதினில் சற்று பெரிய சலனத்தினை உருவாக்கி அது குறையாதவாறு பார்த்துக்கொள்ளும். மனம் அதிலிருந்து வெளிவராதவாறு சுற்றி பின்னிக்கொள்ளும்.

பயம் என்பது என்ன ?

பயம் ஏற்பட என்ன காரணம் ?

பயம் மனிதர்களுக்கு தேவையா ?

பயம் அறியாத மனிதர்கள் உண்டா ?

பயத்தினால் என்ன பயன் ?

முதல் கேள்வி :

பயம் என்பது என்ன ?
பயம் என்பது ஒரு உணர்வு ; வெட்கம் , நாணம் என்பது போல பயமும் ஒரு உணர்வே .

இரண்டாவது கேள்வி :

பயம் ஏற்பட என்ன காரணம்? 
பயம் ஏற்பட காரணமே இல்லை , பயம் நம்மீது திணிக்கப்பட்டது . குழந்தையாக இருந்தபோது  உணவு உட்கொள்ள வைக்கவும், உறங்க வைக்கவும் , பெரியவர்கள் வெளியே போகும்போது அழுதால் அதனை தடுக்கவும் குழந்தைகளை பயமுறுத்துவது சாதாரணமான விஷயமாக உண்டானது.

அஞ்சு கண்ணன் வர்றான், அங்க பார் பேய், உன்ன புடிக்க பூச்சாண்டி வரான் எனக்கென்ன- ஐயோ எனக்கே பயமாயிருக்கு , நான் போறன்ம்பா, பூச்சாண்டி புடிச்சிக்கோ என்றெல்லாம் சொல்லி குழந்தையிலேயே பயமெனும் ஒரு உணர்வை நம்முள் திணித்தார்கள். நாம் வளர வளர அந்த உணர்வு மட்டும் நம்மை விட வேகமாக வளர்ந்தது.

மூன்றாவது கேள்வி :

பயம் மனிதர்களுக்கு தேவையா ? 
தேவைதான். பயம் என்பது ஒரு எச்சரிக்கை உணர்வாகவும் இருப்பதால்.

இதனை செய்தால் அந்த செயல் , இது போன்ற நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்கிற முன்னுதாரணதிற்கு , வேண்டாம், வேறுமாதிரி நடப்பதற்கும் வாய்ப்புண்டு என சிறு பயம் வருவது நல்லதே. அந்த பயம் ஒரு செயலை தகுந்த முன் ஏற்பாட்டுடனும் , அதீத எச்சரிக்கையோடும் நம்மை செயலாற்றிட வைக்கும்.

மேலும் , தவறுகள் செய்வதிலிருந்து மனிதத்தை காக்கும். எந்த தவற்றையும் செய்தால் அதற்குரிய சங்கடங்களை நாம் அனுபவித்தே தீரவேண்டும் என்கிற எண்ணம் (பயம்)உண்டானால் தவறுகள் குறையும் . மனிதரிடம் மனிதத்துவம் மலரும்.

நான்காவது கேள்வி :

பயமறியாத மனிதர்கள் உண்டா ? 
உண்டு நாம் பயமுண்டாக்காதவரையில் குழந்தைகள் பயமறியாதவர்களே.

ஐந்தாவது கேள்வி :

பயத்தினால் என்ன பயன் ? நிறைய உண்டு. பயம் என்பது ஒரு உணர்வு என்று பார்த்தோம் , நம்மீது திணிக்கப்பட்டது என்றோம், பயம் நம்மை தீயசெயல்கள் செய்வதிலிருந்து தடுக்கும் காரணியாகின்றது. ஒரு செயலை செய்யத் துவங்கும் போதே இதன் பலன் எப்படியிருக்கும் என சிந்திக்கச் செய்யும். நன்மையானால் நல்ல பலன்களும் , தீய செயலானால் தீய பலன்கள் வருமே என்ற எண்ணம் வரக் காரணமாகின்றது .

தீமைகள் குறைகின்றது, அதனால் ஏற்படும் பாபங்கள் இல்லாததால் நமது வருங்கால தலைமுறை செழிப்புடன் வாழ வழி செய்தவர்களாகின்றோம்.

நாம் சேர்த்து வைக்கும் செல்வம் மிக எளிதில் கரைந்து போகும் , நாம் சேர்த்து வைக்கும் புண்ணியங்கள் தலைமுறை கடந்து நிற்கும்.
தனக்கு மேல் ஒருவர் உள்ளார் , அவருக்கு கீழ்தான் நாமிருக்கின்றோம் , அவருக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற (பயம்) எண்ணம் இருக்கும் வரை (அது தந்தையாகவோ, தாயாகவோ , அண்ணனாகவோ , முதலாளியாகவோ , சீனியர் ஆபீசராகவோ யாராக இருந்தாலும் சரி) நம்மால் தவறான எந்த காரியமும் செய்யமுடியாது , செய்ய மாட்டோம்.

(ஏனென்றால் தவறு செய்தால் மாட்டிக்கொள்வோம் அதனால் பெரும் தண்டனை கிடைக்கும் பயம் காரணம்).

ஒரு கதை சொல்கிறேன் :

ஒரு குரு தனக்குப் பின் தலைமையை ஏற்க தகுதியுள்ளவரைத் தேர்ந்தெடுக்க எண்ணி தனது சிஷ்யர்களில் மூவரை அழைத்து, தனது இறுதி நாள் நெருங்குவதாகக் கூறி , “ எனக்கு கோழி இறைச்சி உண்பதற்கு பிரியமாக இருக்கின்றது , யாரேனும் பார்த்தால் இழிவாக கருதுவார்கள் எனவே யாருக்கும் தெரியாமல் ஒரு கோழியை சமைத்து கொண்டு வாருங்கள் கேட்டுக் கொண்டார்.

சரி குருவே , அப்படியே செய்கின்றோம் , நாங்கள் இரண்டே நாளில் வருகின்றோம் என்று சொல்லி மூவரும் புறப்பட்டார்கள்.

ஒரு சீடன், நேராக தனது வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தோரை மொத்தமாக வெளியேறச் செய்தான், வீட்டை சுத்தம் செய்தான் , தானே ஒரு கோழியைப் பிடித்து சுத்தமாக்கி சமையல் செய்தான், எடுத்துக்கொண்டு குரு இருக்கும் இடம் நோக்கி புறப்பட்டான் .

இரண்டாமவன், வீட்டிற்கு செல்லவில்லை இன்றில்லாவிட்டால் நாளை குரு கோழி இறைச்சியை உண்டது எல்லோருக்கும் தெரிந்துவிடும் ஆகவே வீட்டிற்கு வேண்டாம் என்றெண்ணி காட்டிலேயே ஒரு மரத்தின் பொந்திற்குள் புகுந்து அதற்குள்ளேயே அமர்ந்து கோழியை சுத்தப்படுத்தி சுவையாக சமைத்து எடுத்துக்கொண்டு குருவை நோக்கி புறப்பட்டான்.

மூன்றாமவன் , எதுவும் செய்யவில்லை அவன் முழுக் கோழியை அப்படியே எடுத்து வந்தான்.

மூவரும் குருவை அடைந்து அவரை வணங்கி தாங்கள் கொண்டு வந்த கோழிக்கறியை அவர்முன்னே பணிவுடன் வைத்தார்கள் ,
ஒவ்வொருவரும் தாங்கள் எவ்வாறு அதனை சமைத்தோம் என்பதை குருவிற்கு விவரித்தார்கள் .

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த குருநாதர் மூன்றாமவனைப் பார்த்து,

நீ ஏனப்பா சமைக்காமல் அப்படியே எடுத்து வந்து விட்டாய் எனக் கேட்டார்.

அதற்கு அவன் , குருவின் பாதங்களில் வீழ்ந்து , கண்ணீர் விட்டபடியே அழுது தொழுது, குருவே இந்த பாவியை மன்னியுங்கள் , இந்த நிலையில் உங்களுக்கு கோழி இறைச்சியை சமைத்து தந்து உங்களை திருப்தி செய்ய முடியாதவனாகி விட்டேன் என்று கதறினான்.

இங்கு வா அழாதே , என்ன காரணம் , என்று குரு அவனை ஆதரவாகப் பேசி அருகே அழைத்தார் .

அவன் சொன்னான் , மேன்மைதங்கிய குருவே, உங்கள் ஆணைப்படியே கோழி ஒன்றினை வாங்கிக்கொண்டு மிகவும் தனிமையான இடம் சென்றேன், எங்கும் யாருமேயில்லை என்பதனை உறுதி செய்து கொண்டு சமையல் செய்ய ஆயத்தமானேன் , ஆனால் ஐயகோ , யாரோ என்னைப் பார்ப்பது கண்டேன் , உடனே வெளியே வந்து யாரென்று பார்த்தேன் , யாருமே இல்லை . மீண்டும் சென்றேன் , சமைக்க தயாரானேன் , மீண்டும் இரண்டு கண்கள் என்னையே பார்ப்பதினை உணர்ந்தேன் , மகா குருவே, அதன்பின் அந்த கண்கள் என்னை விடவே இல்லை , எங்கு சென்றாலும் என்னை விடாமல் துரத்தின.

நான் என் செய்வேன் குருவே , என் செய்வேன் , என மீண்டும் அழுது புரண்டு புலம்பினான்.

குரு சொன்னார், மகனே, குழந்தாய் , அழாதே, நீயே எனக்குப்பின் இந்த பீடத்தினை அலங்கரிக்கத் தகுந்தவன் , எப்போது நீ , அந்த இரண்டு கண்களுக்குத் தெரியாமல் மறைத்து எதனையும் செய்ய முடியாது என உணர்ந்தாயோ அன்றே , அந்த நொடியே நீ மகா புனிதனாகி விட்டாய், வாழ்க என்று ஆசீர்வதித்து மறைந்தார்.

அந்த இரண்டு கண்கள் ?

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!!!!

அது எல்லாம் அறிந்த இறைவனா ?

நமது மனசாட்சியா ?

அல்லது எங்கும் நிறைந்த இயற்கையா ?

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் , எதுவானபோதும் அதற்கு மறைத்து எதையுமே செய்யமுடியாது எனும் உண்மை நிலையை உணர்ந்தால் போதும் , இந்த உலகெங்கும் தவறே நடைபெறாது என்பது திண்ணம்.

அதனால்தான் கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டுநாள் என்றார்கள் முன்னோர்.
வெளியே தெரியாமல் மறைக்கப்பட்ட தவறுகளே இன்றுவரை பதிவு  செய்யப்படவில்லை என்பதை உணருங்கள். 

பயத்தோடு வாழுங்கள் . நல்ல மனத்தோடு பழகுங்கள் .

வாழுங்கள் வளமுடன் ,

வாழும் நாளெல்லாம்.

நமசிவயம்.
     
  

   
Related Posts Plugin for WordPress, Blogger...