என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, May 20, 2013

பயம் வேண்டும் ! ஏன் ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பு நண்பர்களே , வணக்கம்.

பயம் எனும் செயல்பாட்டு உணர்வினை தலைப்பாக எடுத்துக்கொண்டோம்.

பயம் என்பது ஒரு உணர்வாகும்.

இன்பம் துன்பம் என்பதுபோல பயம் ஒரு உணர்வு அவ்வளவுதான் என்று ஒதுக்கமுடியாது , இன்பமும் , துன்பமும் சிறிது நேரத்தில் மாறிவிடும் அல்லது மறந்து விடும். காரணம் இன்பமும் துன்பமும் வெளிமனதில் சிறு சலனம் உண்டாக்கும் , சற்று நேரத்தில் வேறொன்று இந்த இடத்திற்கு வந்தவுடன் அகன்று விடும் .

ஆனால் இந்த பயம் மட்டும் உள்மனதினில் சற்று பெரிய சலனத்தினை உருவாக்கி அது குறையாதவாறு பார்த்துக்கொள்ளும். மனம் அதிலிருந்து வெளிவராதவாறு சுற்றி பின்னிக்கொள்ளும்.

பயம் என்பது என்ன ?

பயம் ஏற்பட என்ன காரணம் ?

பயம் மனிதர்களுக்கு தேவையா ?

பயம் அறியாத மனிதர்கள் உண்டா ?

பயத்தினால் என்ன பயன் ?

முதல் கேள்வி :

பயம் என்பது என்ன ?
பயம் என்பது ஒரு உணர்வு ; வெட்கம் , நாணம் என்பது போல பயமும் ஒரு உணர்வே .

இரண்டாவது கேள்வி :

பயம் ஏற்பட என்ன காரணம்? 
பயம் ஏற்பட காரணமே இல்லை , பயம் நம்மீது திணிக்கப்பட்டது . குழந்தையாக இருந்தபோது  உணவு உட்கொள்ள வைக்கவும், உறங்க வைக்கவும் , பெரியவர்கள் வெளியே போகும்போது அழுதால் அதனை தடுக்கவும் குழந்தைகளை பயமுறுத்துவது சாதாரணமான விஷயமாக உண்டானது.

அஞ்சு கண்ணன் வர்றான், அங்க பார் பேய், உன்ன புடிக்க பூச்சாண்டி வரான் எனக்கென்ன- ஐயோ எனக்கே பயமாயிருக்கு , நான் போறன்ம்பா, பூச்சாண்டி புடிச்சிக்கோ என்றெல்லாம் சொல்லி குழந்தையிலேயே பயமெனும் ஒரு உணர்வை நம்முள் திணித்தார்கள். நாம் வளர வளர அந்த உணர்வு மட்டும் நம்மை விட வேகமாக வளர்ந்தது.

மூன்றாவது கேள்வி :

பயம் மனிதர்களுக்கு தேவையா ? 
தேவைதான். பயம் என்பது ஒரு எச்சரிக்கை உணர்வாகவும் இருப்பதால்.

இதனை செய்தால் அந்த செயல் , இது போன்ற நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்கிற முன்னுதாரணதிற்கு , வேண்டாம், வேறுமாதிரி நடப்பதற்கும் வாய்ப்புண்டு என சிறு பயம் வருவது நல்லதே. அந்த பயம் ஒரு செயலை தகுந்த முன் ஏற்பாட்டுடனும் , அதீத எச்சரிக்கையோடும் நம்மை செயலாற்றிட வைக்கும்.

மேலும் , தவறுகள் செய்வதிலிருந்து மனிதத்தை காக்கும். எந்த தவற்றையும் செய்தால் அதற்குரிய சங்கடங்களை நாம் அனுபவித்தே தீரவேண்டும் என்கிற எண்ணம் (பயம்)உண்டானால் தவறுகள் குறையும் . மனிதரிடம் மனிதத்துவம் மலரும்.

நான்காவது கேள்வி :

பயமறியாத மனிதர்கள் உண்டா ? 
உண்டு நாம் பயமுண்டாக்காதவரையில் குழந்தைகள் பயமறியாதவர்களே.

ஐந்தாவது கேள்வி :

பயத்தினால் என்ன பயன் ? நிறைய உண்டு. பயம் என்பது ஒரு உணர்வு என்று பார்த்தோம் , நம்மீது திணிக்கப்பட்டது என்றோம், பயம் நம்மை தீயசெயல்கள் செய்வதிலிருந்து தடுக்கும் காரணியாகின்றது. ஒரு செயலை செய்யத் துவங்கும் போதே இதன் பலன் எப்படியிருக்கும் என சிந்திக்கச் செய்யும். நன்மையானால் நல்ல பலன்களும் , தீய செயலானால் தீய பலன்கள் வருமே என்ற எண்ணம் வரக் காரணமாகின்றது .

தீமைகள் குறைகின்றது, அதனால் ஏற்படும் பாபங்கள் இல்லாததால் நமது வருங்கால தலைமுறை செழிப்புடன் வாழ வழி செய்தவர்களாகின்றோம்.

நாம் சேர்த்து வைக்கும் செல்வம் மிக எளிதில் கரைந்து போகும் , நாம் சேர்த்து வைக்கும் புண்ணியங்கள் தலைமுறை கடந்து நிற்கும்.
தனக்கு மேல் ஒருவர் உள்ளார் , அவருக்கு கீழ்தான் நாமிருக்கின்றோம் , அவருக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற (பயம்) எண்ணம் இருக்கும் வரை (அது தந்தையாகவோ, தாயாகவோ , அண்ணனாகவோ , முதலாளியாகவோ , சீனியர் ஆபீசராகவோ யாராக இருந்தாலும் சரி) நம்மால் தவறான எந்த காரியமும் செய்யமுடியாது , செய்ய மாட்டோம்.

(ஏனென்றால் தவறு செய்தால் மாட்டிக்கொள்வோம் அதனால் பெரும் தண்டனை கிடைக்கும் பயம் காரணம்).

ஒரு கதை சொல்கிறேன் :

ஒரு குரு தனக்குப் பின் தலைமையை ஏற்க தகுதியுள்ளவரைத் தேர்ந்தெடுக்க எண்ணி தனது சிஷ்யர்களில் மூவரை அழைத்து, தனது இறுதி நாள் நெருங்குவதாகக் கூறி , “ எனக்கு கோழி இறைச்சி உண்பதற்கு பிரியமாக இருக்கின்றது , யாரேனும் பார்த்தால் இழிவாக கருதுவார்கள் எனவே யாருக்கும் தெரியாமல் ஒரு கோழியை சமைத்து கொண்டு வாருங்கள் கேட்டுக் கொண்டார்.

சரி குருவே , அப்படியே செய்கின்றோம் , நாங்கள் இரண்டே நாளில் வருகின்றோம் என்று சொல்லி மூவரும் புறப்பட்டார்கள்.

ஒரு சீடன், நேராக தனது வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தோரை மொத்தமாக வெளியேறச் செய்தான், வீட்டை சுத்தம் செய்தான் , தானே ஒரு கோழியைப் பிடித்து சுத்தமாக்கி சமையல் செய்தான், எடுத்துக்கொண்டு குரு இருக்கும் இடம் நோக்கி புறப்பட்டான் .

இரண்டாமவன், வீட்டிற்கு செல்லவில்லை இன்றில்லாவிட்டால் நாளை குரு கோழி இறைச்சியை உண்டது எல்லோருக்கும் தெரிந்துவிடும் ஆகவே வீட்டிற்கு வேண்டாம் என்றெண்ணி காட்டிலேயே ஒரு மரத்தின் பொந்திற்குள் புகுந்து அதற்குள்ளேயே அமர்ந்து கோழியை சுத்தப்படுத்தி சுவையாக சமைத்து எடுத்துக்கொண்டு குருவை நோக்கி புறப்பட்டான்.

மூன்றாமவன் , எதுவும் செய்யவில்லை அவன் முழுக் கோழியை அப்படியே எடுத்து வந்தான்.

மூவரும் குருவை அடைந்து அவரை வணங்கி தாங்கள் கொண்டு வந்த கோழிக்கறியை அவர்முன்னே பணிவுடன் வைத்தார்கள் ,
ஒவ்வொருவரும் தாங்கள் எவ்வாறு அதனை சமைத்தோம் என்பதை குருவிற்கு விவரித்தார்கள் .

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த குருநாதர் மூன்றாமவனைப் பார்த்து,

நீ ஏனப்பா சமைக்காமல் அப்படியே எடுத்து வந்து விட்டாய் எனக் கேட்டார்.

அதற்கு அவன் , குருவின் பாதங்களில் வீழ்ந்து , கண்ணீர் விட்டபடியே அழுது தொழுது, குருவே இந்த பாவியை மன்னியுங்கள் , இந்த நிலையில் உங்களுக்கு கோழி இறைச்சியை சமைத்து தந்து உங்களை திருப்தி செய்ய முடியாதவனாகி விட்டேன் என்று கதறினான்.

இங்கு வா அழாதே , என்ன காரணம் , என்று குரு அவனை ஆதரவாகப் பேசி அருகே அழைத்தார் .

அவன் சொன்னான் , மேன்மைதங்கிய குருவே, உங்கள் ஆணைப்படியே கோழி ஒன்றினை வாங்கிக்கொண்டு மிகவும் தனிமையான இடம் சென்றேன், எங்கும் யாருமேயில்லை என்பதனை உறுதி செய்து கொண்டு சமையல் செய்ய ஆயத்தமானேன் , ஆனால் ஐயகோ , யாரோ என்னைப் பார்ப்பது கண்டேன் , உடனே வெளியே வந்து யாரென்று பார்த்தேன் , யாருமே இல்லை . மீண்டும் சென்றேன் , சமைக்க தயாரானேன் , மீண்டும் இரண்டு கண்கள் என்னையே பார்ப்பதினை உணர்ந்தேன் , மகா குருவே, அதன்பின் அந்த கண்கள் என்னை விடவே இல்லை , எங்கு சென்றாலும் என்னை விடாமல் துரத்தின.

நான் என் செய்வேன் குருவே , என் செய்வேன் , என மீண்டும் அழுது புரண்டு புலம்பினான்.

குரு சொன்னார், மகனே, குழந்தாய் , அழாதே, நீயே எனக்குப்பின் இந்த பீடத்தினை அலங்கரிக்கத் தகுந்தவன் , எப்போது நீ , அந்த இரண்டு கண்களுக்குத் தெரியாமல் மறைத்து எதனையும் செய்ய முடியாது என உணர்ந்தாயோ அன்றே , அந்த நொடியே நீ மகா புனிதனாகி விட்டாய், வாழ்க என்று ஆசீர்வதித்து மறைந்தார்.

அந்த இரண்டு கண்கள் ?

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!!!!

அது எல்லாம் அறிந்த இறைவனா ?

நமது மனசாட்சியா ?

அல்லது எங்கும் நிறைந்த இயற்கையா ?

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் , எதுவானபோதும் அதற்கு மறைத்து எதையுமே செய்யமுடியாது எனும் உண்மை நிலையை உணர்ந்தால் போதும் , இந்த உலகெங்கும் தவறே நடைபெறாது என்பது திண்ணம்.

அதனால்தான் கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டுநாள் என்றார்கள் முன்னோர்.
வெளியே தெரியாமல் மறைக்கப்பட்ட தவறுகளே இன்றுவரை பதிவு  செய்யப்படவில்லை என்பதை உணருங்கள். 

பயத்தோடு வாழுங்கள் . நல்ல மனத்தோடு பழகுங்கள் .

வாழுங்கள் வளமுடன் ,

வாழும் நாளெல்லாம்.

நமசிவயம்.
     
  

   

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...