என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Wednesday, May 8, 2013

நானாக நானில்லை தாயே

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பு தமிழ் நண்பர்களே, வணக்கம்.

நமது இன்றைய அலசல்

நானாக ஏன் நானில்லை – ஆம் இதுதான் நமது இன்றைய அலசல் .
நானாகத்தான் நானிருக்கின்றேன்,

அதென்ன நானாக ஏன் நானில்லை என்கின்றீர்களா?

உண்மைதான் நீங்கள் நீங்களாகத்தான் இருக்கின்றீர்கள். ஆனால் உண்மையில் ஒவ்வொருவரும் நாமாக நாமில்லை .

என்ன சரிதானே ! குழப்பமா ?

நாம் என்பது என்ன ? நமது பெயரா? நமது உருவமா ?

நமது பெயர் என்றால் நமது பெயரில் எண்ணிலடங்காத நபர்கள் உள்ளனரே !!

அவர்களில் யாரைக் குறிப்பிடுவது ? யாரைக் குறிப்பிட முடியும் ?

இல்லை இந்த உருவம் என்றால் – இது மகனா – மகளா ? தந்தையா ? தாயா ? நண்பனா ? நண்பியா ? எதிரியா – விரோதியா ? குருவா – சிஷ்யனா இப்படி எண்ணிலடங்காத உறவுகளாலும் – ப்யூன் – மானேஜர் – சீனியர் – ஜூனியர் - என ஏகப்பட்ட பணி நிலைகளினாலும் – சூழப்பட்டு உள்ளோமே!

இதில் யார் ? எது இந்த உருவம் ? நீங்கள் அல்லது நாம் ?

மேலும் , இதில் குறிப்பிடப்படாமல் இன்னும் பல அவதாரங்கள் நமக்கு உள்ளனவே !

இதில் இந்த எல்லாமே நம் உருவம்தான் என்று வைத்துக் கொள்வோம்.

இதில் எதிலுமே பங்கெடுக்காத நாம் என்று ஒன்று இருக்கின்றதே ! நமது தனித்தன்மை! அதனை யாராவது கண்டு கொண்டோமா ? அதற்கென்று ஒருமுகமும் , ஒருமனமும் உண்டே ! அதனை ஏன் எந்தவித கவனிப்புமின்றி விட்டுவிட்டோம் ! அத்தனை பரிதாபகரமானதா அந்த ஜீவன் ? அதுதானே என்றென்றும் நமக்கான அனைத்தையும் பெற்றுத் தருகின்றது , அதை மறக்க நேர்ந்ததே கவலை தரும் நிகழ்வல்லவா ?

என்றுமே நம்மை இயக்கும் நாம் எனும் ஒன்றை நாம் எப்படி மறந்தோம் ?

சரி, இப்போது சொல்லுங்கள், நாம் காலையில் விழித்தது முதல் இரவு தூக்கம் கொள்ளும்வரை நீங்கள் நீங்களாக இருந்த நேரம் எது? என்று எண்ணிப் பாருங்கள். ஒரு நொடி கூட நாம் நாமாக இருப்பதில்லை. வேறு யாரோவாகவே பெரும்பாலும் இருக்கின்றோம்
காரணம் என்ன ?

நாம் நாமென்பது மட்டுமல்ல , வேறு பலவாகவும் இருப்பதால் நாம் நாமாக இருக்க நேரம் கிடைப்பதில்லை, நம்மைப் பற்றிய நினைப்பும் இல்லை. எல்லோரும் தன்னைத்தவிர வேறுயாரையோ காப்பாற்றுவதற்காக வாழ்வதாக கற்பனையில் வாழ்ந்து கொண்டு, நமக்கு நமது நினைவின்றி வாழ்கிறோம்.

நாம் பல உருவங்களில் நம்மை மறைத்துக் கொண்டுள்ளதால் நாம் எந்த உருவத்தில் தற்போது இருக்கின்றோம் என்பதே நமக்கு தெரிவதில்லை. அப்புறம் எங்கே, அதற்கும் பின்னே ஒளிந்திருக்கும் நம்மை நினைப்பது.

நாம் எந்தவிதமான உருவம் ஏற்றிருந்தாலும் அதன்பின்னே நாம்தான் இருக்கின்றோம் – எந்த காரியம் யாராக இருந்து செய்தாலும் அதனுள்ளே நாம் இருக்கின்றோம்.

அது உறவின் வகையாக இருந்தாலும் சரி, பணியில் இருக்கும் பதவிகளின் வகையாக இருந்தாலும் சரி அதனுள்ளே நாம்தான் இருந்து செயலாற்றுகின்றோம்.

ஆனால் (நாம்தான் இருந்து செயலாற்ற வேண்டும் என்பதில்லை, செயல்பாடு எப்படியும் ஆகிவிடும்) நாம் இல்லாவிட்டால் அந்த காரியமே நடக்காது என்ற எண்ணமும் நமக்குண்டு. (நான் மட்டும் இல்லன்னா குடும்பத்த காப்பாத்தியிருக்கவே முடியாது).

நாம் செய்தாலும் செய்யாவிட்டாலும் யாராவது செய்வார்கள் – நாம் செய்யாவிட்டால் அந்த காரியம் நின்று விடும் என்பதெல்லாம் இல்லை என்றபோதும், நாம் செய்யாவிட்டால் யாருமே செய்யமாட்டார்கள் , செய்யவும் முடியாது என்ற எண்ணமும் நம்மிடம் வேரூன்றி நிலைத்துவிட்டது.

காரணம், அப்படித்தான் நமது முன்னோர்களும் முன்னாளில் எண்ணி ஏமாந்தார்கள் , நாமும் அந்த வழியையே பின்பற்றுகிறோம், காரணம் நாம் வாழ்வதற்கு ஏதாவது ஒரு பற்றுகோல் வேண்டுமல்லவா? அதனால் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

கோபுரத்தை தாங்கும் பொம்மைகளின் நினைவில் - பொம்மைகள் தானே கோபுரத்தை தாங்கி நிற்பதாக எண்ணிக் கொள்ளுமாம் – அது உண்மையல்ல என்றபோதும்
அதுபோலவே நாம் நம்மைத்தவிர, எல்லோரையும் நாமே காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றோம் – அது உண்மையல்ல என்றபோதும் . 
   
இப்படியாக பலவித உருவங்களைப் பெற்றதனால்தான் நமது உண்மை உருவம் பற்றிய நினைவுகளே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. அடிப்படையில் நாம் யார் என்பதே நமக்கு புரியாமல் நம்மை நாமே தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.  

நாம் தேடும் நம்மை, நமக்கு வேறு ஒருவர் அறிமுகம் செய்து வைக்கும் போது நாம் வெட்கப்படுகின்றோம். வெட்கப்படவேண்டும்.

இதெல்லாம், முன்பே தெரிந்திருந்தால் இத்தனைநாளில் எவ்வளவோ செய்திருக்கலாமே என்று நினைத்து வருந்துகின்றோம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமுகம் காட்டி , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவம் காட்டி , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வசனங்கள் பேசி, நொடிக்கொரு மேடை, மேடைக்கொரு நாடகம் , எழுதாத வசனங்களை பேசி பேசி . . . . இப்படி வெறும் காமெடி பீஸாகிப் போனதே நமது வாழ்வு.

இதனால் யாருக்கு என்ன லாபம் ? எண்ணிப் பார்த்தோமா?

ஏனிந்த முகம் தொலைத்த வாழ்வு ? முகவரி மறந்த பயணம்?

காட்டில் திருடனாக இருந்தவர், வீரமாமுனிவரான வரலாறு தெரியுமல்லவா?

“எங்களை காக்க வேண்டியது உங்கள் கடமை அதன்பொருட்டு நீர் செய்யும் எந்த தீய செயலும் எங்களை பற்றாது, அவைகள் முழுக்க முழுக்க உங்களையே சாறும் என மனைவியும் குழந்தைகளும் சொல்லக்கேட்டு இப்படி ஒரு வாழ்க்கைக்காகவா? இவர்களுக்காகவா ? நான் கொள்ளையும் , திருட்டும் செய்தேன் – என எண்ணி , எண்ணியபின் மனம் தெளிந்து பின்னர் அவர் வீரமாமுனிவரானது சரித்திரம் தரும் பாடம்.

நாம் செய்யும் நன்மையையும் , தீமையும் நமக்கே நமக்கு.

யாருக்கும் பங்கிட முடியாது , பங்கேற்கவும் மாட்டார்கள்.

எத்தனை பெரிய சமாளிக்க முடியாத வலியானாலும் , பொறுக்க முடியாததாக அது இருந்தாலும், கர்ப்பம் கொண்ட பெண்தான் பிரசவிக்க வேண்டும் , அதனை யாருக்கும் மாற்றித்தர முடியாது என்பது எத்தனை உண்மையோ அதுபோலவேதான் நமது வலியும் , துக்கமும் , கவலையும் ஆறுதல் பெறலாமே தவிர மற்றவருக்கு மாற்றித்தர முடியாது.

நாம் நம்மை எங்கு தேடுவது ?

நாம் எங்கு தொலைந்தோமோ , அங்கேதான் தேடவேண்டும்.

எண்ணங்களால் தொலைந்து, வண்ணங்களால் நிறம் மாறிப்போன முகமூடியை கழற்றி எறியுங்கள் – ஒவ்வொரு நொடியும் நீங்களாகவே இருக்க ப்ரியப்படுங்கள் – அப்போதுதான் எல்லோரிடமும் நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள் . இல்லையென்றால் யாரிடம் என்ன வசனம் என்பது மறந்து மாற்றிப் பேசிவிடும் அபாயமும் நேர்வது உண்டு.

தேடி கண்டுபிடித்தால்தான் நாமாக நாமிருக்கமுடியும் , நீங்கள் யாராக இருந்தாலும் பெருமையில்லை – நீங்கள் நீங்களாக இருந்தால்தான் பெருமை.

நாம் மகாத்மா காந்தியைப் போல் வாழ்ந்தால் இவர் காந்தியைப்போல் வாழ்ந்தார்  என்றுதான் சொல்வார்களே தவிர இவர் காந்தி என்று கூற மாட்டார்கள். ஏனென்றால் காந்தியென்று ஒருவர் இருந்து விட்டார்.

நீங்கள் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துங்கள்.

நீங்கள் நீங்களாகவே இருந்து வாழ்ந்து பாருங்கள் ,

உங்கள் கடமையை கொஞ்சமும் தவறாமல் அன்போடு மனநிறைவோடு ப்ரியத்தோடு ஆழ்ந்து உணர்ந்து பலனை எதிர்பாராது செய்யுங்கள். 

அப்போது சொல்லலாம்
நானாக நானுண்டு  - என்றும் ,
நீயாக நீயுண்டு  - என்றும் .
இப்படி  வாழ்வது சுகமே.

முகவரி தேடுங்கள் , முகமூடி மாற்றுங்கள்.

எல்லோரையும் சந்தோஷித்து சந்தோஷப்படுங்கள் .

மனம் திறந்து வாழுங்கள் நீங்கள் நீங்களாகவே.

புதிய உலகம் பிறக்கும். புதிய வாழ்வு மலரும்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

வாழ்த்துக்கள்.No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...