என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, May 4, 2013

எனது மனம் என்னை ஏமாற்றுகிறதா ?


அன்பு தமிழ் நண்பர்களே, வணக்கம்.

நமக்குள் எப்போதும் ஒரு கேள்வி எழுவதுண்டு

நமது மனம் நம்மை ஏமாற்றுகிறதா ? எனும் கேள்விதான் அது .

நாம் பிறந்தவுடன் நம்மை ஆட்கொள்ள, ஆட்டுவிக்க நம்மோடு பிறந்த மனம், நம்மை நன்கு அறிந்து வைத்துள்ள நம் மனம் நம்மை ஏமாற்றுமா? ஏமாற்றுகிறதா ? நமது மனம் நம்மையே ஏமாற்ற வேண்டிய காரணமும், அவசியமும் என்ன? நாம் ஏமாந்துபோவதால் நமது மனதிற்கு என்ன லாபம் ?

பார்க்கலாமா ?

முதலில் மனம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வோம்.

நாம் பிறந்த நொடிமுதலாக நாம் அறிந்துகொள்ளும் ஒவ்வொரு செய்தியும், நிகழ்வும், அசைவும் நம்முள் பதிவாகும் இடத்தையே நாம் மனம் என்று குறிப்பிடுகின்றோம்.

அதாவது நாம் பிறந்த நொடிமுதல் வாழ்நாள் முழுவதும் நமக்கு  தெரிந்த அத்தனை விபரங்களையும், மனம் எனும் இடத்தில் பதிவிட்டு நமக்கு எப்போது எவ்விஷயத்தில் சந்தேகம் எழுகிறதோ? அப்போது அது தொடர்பான தகவல்களை அந்த தகவல் நமது மனதினில் எங்கிருக்கின்றதோ அங்கிருந்து அதனை எடுத்து அவ்வப்போது நாம் கையாளுகின்றோம். இது அரைநொடிக்கும் (ஒரு கண்சிமிட்டலுக்கும்) குறைவான நேரத்தில் நடைபெறும் நிகழ்ச்சி.

இந்த மாதிரியான விபரப்பதிவுகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான பதிவாக இருக்கும், அதனால் நபருக்கு நபர் இந்த விபரப்பதிவுகள் மாறுபடும்.

காரணம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவிதமான சூழலில் பிறந்து , ஒவ்வொருவிதமான கட்டுக்கோப்பில் வளர்க்கப்படுகின்றோம். அவரவர் பிறந்த சுழலுக்கேற்பவும் , அவரவர் வளர்ந்த சுழலுக்கேற்பவும் மனம் தனது பதிவினை வைத்திருப்பதால் ஒரே மாதிரியான விபரப் பதிவுகளைக் கொண்ட மனிதர்களை காண்பதரிது.

குழந்தையிலிருந்தே ஒரே இடத்தில் வளர்க்கப்படும் குழந்தைகளிடம் கூட ஒரே விதமான விபரப் பதிவுகள் இருப்பதில்லை. காரணம் குழந்தைகளோ, பெரியவர்களோ அவர்கள் மிக ஆர்வமாக உள்வாங்கும் செய்திகளோ, நிகழ்வுகளோதான் நமது மனமெனும் ஹாட்டிஸ்கில் பதிவாகின்றன .

சாதாரண நிகழ்வுகளை உள்வாங்காமல் ராம் மில் வைத்திருந்து பின்னர் கம்ப்யூட்டர் அதனை அழித்து விடுகின்றதைப்போல மனதிற்கு வெளியே வைத்து இருந்து பின் மறந்து விடுகின்றோம்.

ஆக மனம் என்பது நாம் தெரிந்து வைத்துள்ள விஷயங்கள் அடங்கி இருக்கும் தகவல் பெட்டி அவ்வளவே.

ஆனால் அதன் பிடிக்குள் நாம் சிக்கிக் கொள்ளும்போதுதான் நமது பாடு திண்டாட்டமாகி விடுகின்றது – அதன் பிடிக்குள் நாம் எப்படி சிக்குகின்றோம்?

பார்ப்போம்.

சரி இந்த மனம் நம்மை எப்படி ஏமாறச் செய்கிறது ?

நாம் தெரிந்து வைத்துள்ள அல்லது நமக்கு தெரியாத விஷயங்கள் எதுவாயினும் அதனை, அதன் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள நம்மிடம் விசாரித்தறிந்து கொள்ள மற்றவர்கள் அணுகும்போது நாம் அதனை அவர்களுக்கு விவரிக்கும்போது அல்லது நாமே நமக்கென சில உபயோகமான காரியங்களை துவங்கவோ , மாற்றியமைக்கவோ முயலும்போது நமக்கு அந்த அல்லது அது தொடர்பான விபரங்கள் தெரிந்தோ தெரியாமலோ இருக்குமானால்,

நாம் துவங்க எண்ணும் காரியத்தில் முன்பே ஈடுபட்டு அதில் வெற்றி கண்டவர்களை அணுகி விசாரிக்காமல் , நமக்கு தெரிந்துள்ள அரைகுறை தகவல்களின் மேல் கொண்டுள்ள அதீதமான நம்பிக்கையில் நாம் துவங்க எண்ணுகின்ற காரியத்தை துவங்கி விடுவோம்.

அந்த காரியம் நல்ல முறையில் வெற்றி பெற்றால் நமக்கு நாமே கொண்டாடிக் கொள்வோம்.

தோல்வியடைந்தால் நான் சரியாத்தான் யோசிச்சி  செஞ்சேன், அது வேற ஒண்ணு நடந்துடிச்சி. அப்பவே சொன்னாங்க அவர கேக்கலாம் , இவர கேக்கலாம்னு இந்த பாழாப்போன மனசு அத எல்லாம் கேக்கல ன்னு மனசின்மேல ஒரு பழியப்போட்டு தப்பிச்சுக்குவோம் .

ஆனால் நாம் துவங்கும் முன்பே உள்மனம் “உனக்கு தெரியாத விஷயத்தில் இறங்கி வீணாகவேண்டாம் , யாரையாவது கேக்கலா மேன்னு ஈனஸ்வரத்தில் முனகினது நமக்கு கேக்கவே இல்லை என்பதை விட அதனைக் கேட்க நாம் தயாரில்லை.

ஏனெனில் எப்போதுமே யாரையாவது குற்றம் சொல்வதோ , யார்மேலாவது பழி போடுவது என்பது நாம் நாமே கற்றுக் கொண்ட கலையாகும்.

நாம் சரியாக பார்த்து நடக்காமல் காலை கல்லில் இடித்துக் கொள்வோம் அதனை சொல்லாமல் "கல்லு இடிச்சிடிச்சி" என்போம்.

இப்படி நிறைய இருக்கு.

தெரியாம செஞ்சிட்டேன்னு எதையும் ஒப்புக்கொள்ளும் தைரியம் நம்மிடம் ரொம்பவே குறைவாகிப் போனது.

இப்படியாக பிறர்மேல் பழிபோட்டே பழகியதால்தான் நாம் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் “மனம் ஒரு குரங்கு , நம்ப நினைப்பே நம்மல ஏமாத்திடுச்சி என்றெல்லாம் சொல்லி சொல்லி வருந்துகின்றோம் .

உண்மை அதுவல்ல .

நாம் திட்டமிட்டது நமது முழு ஆலோசனையின் முடிவாகும்.

அனுபவப்பட்டவர்களை அணுகாமல் அவர்களின் ஆலோசனையைப் பெறாமல் , சரியான வழிகாட்டலின்றி துவங்கியது தவறல்லவா ?

நம்மிடம் நிறைய வசதி இருக்கின்றது என்பதற்காக கொஞ்சம் விவசாய நிலம் வாங்கி நாமே விவசாயம் செய்ய துவங்கினால் சரியாகுமா ?

அல்லது நமக்கு தெரிந்தவர் ஒரு தொழிலில் நிறைய லாபம் பார்க்கிறார் என்பதற்காக முற்றிலும் தெரியாத அந்த தொழிலை நாம் துவங்கலாமா ?

எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு காரியம் நல்ல காரியமாகா.
பள்ளிக்கூடங்களை விட எண்ணிக்கையில் மதுபான கடைகள் அதிகம் என்பதற்காக கல்வியைவிட மது அருந்துதல் சிறந்ததாகிப் போகுமா? என்ன ?

நமது அறிவையும் , தேவைப்பட்டால் மற்றவர்களின் அறிவுரையையும் கேட்டு நாம் ஒரு காரியத்தை துவங்குவோமானால் அது நிச்சயம் நல்ல பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் நாம் சில வேளைகளில் பிடிவாதமாக யார் சொல்லையும் கேட்காமல் நாமே சில முடிவுகளை எடுத்து பின் அதன் தொடர்பான சங்கடங்களையும் அடைகின்றோம்.

நாம் பெற்றுள்ள அனுபவத்திற்கும் , அறிவிற்கும் உரிய அளவில் உள்ள நமது முயற்சிகள் அனைத்தும் நமக்கு வெற்றியை தரும் .

அதற்கு மேலான விஷயங்களில் நாம் ஆர்வப்ப்படும்போது அதன் தொடர்புள்ள மற்றவர்களை நாடுவது தவறோ , கேவலமோ அல்ல.

பல நிறுவனங்களில் அட்வைசர் என ஒன்றிரண்டு அதிகாரிகளை நியமிக்கின்றார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்திருந்தால் தேவையில்லாமல் அதிக சம்பளம் தந்து பணிக்கு சிலரை அமர்த்தவேண்டிய அவசியமென்ன ?

எனக்கே எல்லாம் தெரியும் , இதற்க்கு போய் ஒரு அட்வைசர் , அவருக்கு எல்லோரையும் விட அதிகமான சம்பளம் போ போ அதெல்லாம் வேண்டாம் என்று விட்டுவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்.

கோகோ கோலா , ஃபாண்டா போன்ற தொழிலகங்களில் அதன் ருசியை ஒரே மாதிரி இருக்கின்றதா என பார்க்கவே ஒரு நபரை பணிக்கு வைத்திருப்பதாக சொல்வார்கள். காரணம் நாம் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் செயலில் நாம் வெற்றி பெறவேண்டும் 

ஒரு விஷயம் அல்லது ஒரு காரியத்தில் நமக்கு ஒரு பார்வையும் , மற்றவர்களுக்கு வேறு பார்வையும் இருக்கும் நாம் நமக்கு அதுபற்றிய விபரங்கள் எந்த அளவுக்கு தெரியுமோ அவ்வளவுதான் அதனைப்பற்றிய தெளிவும், முடிவும் இருக்கும் – அதன் விபரங்கள் முழுமையாக அறிந்துள்ளவர்கள் நம்மைவிடவும் கூடுதலாக விபரங்கள் அறிந்திருப்பார்கள். அதனை பெறுவதில் என்ன தவறு இருக்கிறது?

மனம் நம்மை ஏமாற்றுவதில்லை , மனம் ஏமாற்றுவதாக சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

என்னைவிட இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு என்ன தெரியும் என எண்ணும்போதுதான் நாம், நம்மை தோல்வியின் கைகளில் ஒப்புக் கொடுக்கின்றோம்.

என்னைவிடவும் எல்லா விஷயங்களிலும் முழு விபரமும் அறிந்தவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் என எண்ணும்போதே நாம் வெற்றியின் கைகளை பற்றிக்கொண்டுள்ளோம் என்பதை விட வெற்றி நம் கைகளை பற்றிக்கொண்டது என்பதுதான் உண்மை.

நமது மனம் ஒரு விசித்திரமான கருவியாகும். நாம் எதனை செய்ய எண்ணினாலும் ஒருமுறை உரக்க சொல்லும் பின் முனக ஆரம்பிக்கும். நாம் அதனை செவிகொடுத்து கேட்கவேண்டும்.

நாம் சில வேளைகளில் மனதின் வழியிலும் , பல வேளைகளில் மனதினை நம் வழியிலும் செலுத்த வேண்டும்.

மனதினை மிகசரியாக கையாளுவதில்தான் நமது எல்லாவகையான வெற்றிகளும் இருக்கின்றது .

ஆன்மீகமாக இருந்தாலும் , லௌகீகமாக இருந்தாலும் அங்கே மனம் என்பதே பிரதானமாக இடம் வகிக்கின்றது . அதனால்தான் மனதினை தன் வயப்படுத்துதல் முக்கியமாக இருக்கின்றது .

மனம் என்றுமே நம்மை ஏமாற்றுவதில்லை , நாம்தான் நம்மையே ஏமாற்றிக் கொள்கின்றோம். காரணம் தோல்வி கண்டு விட்டால் எதன் மீதாவது பழிபோட வேண்டும் இல்லையா அதனால், அப்போது மனம் அங்கே நம்மிடம் சிக்கிக் கொள்கின்றது . அவ்வளவுதான் .

நமக்கு தெரியாத காரியங்களை செய்யத்துவங்கும்போது முன் அனுபவம் உள்ளவர்களை கலந்து ஆலோசித்து துவங்குவோம் , தனக்கு தெரியாத விபரங்களை மற்றவர்கள் கேட்கும்போது பகிர்ந்து கொள்வோம் - வெற்றியை நமதாக்குவோம்.

வாழ்த்துகள்.  



Friday, April 19, 2013

கண்ணனும் வெண்ணையும்


அன்பின் உள்ளங்களே, வணக்கம்.

கண்ணனும் , கண்ணன் கவர்ந்த வெண்ணையும்.

கண்ண பரமாத்மாவின் சிறுவயது லீலைகளை படிக்கும் போது ஒரு விஷயம் எல்லோரும் படிப்போம் .அதாவது கண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணையை திருடி உண்டதாகவும் , அதற்காக அந்த நந்தன் கிராமத்து மக்கள் அந்த கிராமத்தின்  தலைவனான (கண்ணனின் வளர்ப்பு தந்தையான) நந்தனிடமும் , கண்ணனின் வளர்ப்புத் தாயிடமும் புகார் சொல்வதாகவும் , அதற்காக கண்ணன் தண்டிக்கப் படுவதாகவும் சம்பவங்கள் நிறைந்து காணப்படும் .

யோசித்துப் பாருங்கள் . . . . .

நந்தனுக்கு சொந்தமான பசுக்கள் ஏராளமாக இருக்க , நந்தன் வீட்டில் இருந்துதான் கம்சனின் அரண்மனைக்கே பால் தயிர் வெண்ணை போன்றவை கொண்டு செல்கின்றார்கள் என்றிருக்க தன் வீட்டில் வெண்ணை கிடைக்காமலா அயலார் வீட்டில் திருடி இருப்பான் கண்ணன்.

மேலும் வெண்ணையை எந்த குழந்தையும் விரும்பி உண்பதில்லை , நெய்யை வேண்டுமானால் குழந்தையின் உணவில் சேர்ப்பார்கள் .

இலகுவாக பிரசவிக்க உதவும் என்பதால் வெண்ணையை கர்ப்பிணி பெண்களுக்கு பிரவச காலத்தில் கொடுப்பார்கள் .

குழந்தைகள் வெண்ணையை விரும்பி உண்பதில்லை, ஆனால் குழந்தை கண்ணன் வெண்ணையை (தன்வீட்டில் இருப்பதை உண்ணாமல் பிறர் வீட்டில் சென்று அவர்கள் இல்லாதபோது திருடி) உண்டான் என்றால் எங்கோ இடிக்கின்றதே..
                                                          
என்று கொஞ்சம் ஆ.............ழ்ந்து யோசித்தபோது புரிந்தது,

அந்த மாயவனின் தெய்வ சூட்சுமம்.

வெண்ணையை காரணியாக்கிய கோபாலனின் பிரம்ம தத்துவம்.

பாலும் தண்ணீரும் இரண்டறக் கலந்தே உள்ளதாகும்.

பாலுடன் கலந்திருக்கும் தண்ணீரை என்ன செய்தாலும் பிரிக்க முடியாது பால் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் பிரிக்கும் ஆற்றலை அன்னம் எனும் பட்சி பெற்றிருந்ததாகவும் அது பாலை குடித்துவிட்டு தண்ணீரை அப்படியே விட்டுவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன ஆனால் நாம் கண்டதில்லை அல்லவா ?

நாம் பாலுடன் உள்ள தண்ணீரை பிரிக்க என்ன செய்யவேண்டும் ?

பாலுடன் இரண்டற கலந்துள்ள தண்ணீர், பாலை விட்டு பிரிய வேண்டுமானால் பாலை பதமாக காய்ச்சி பழைய தயிரை அதில் கொஞ்சம் கலந்து வைத்தால் பால் கெட்டி தயிராக மாறும். இந்நிலையிலும் இதனுடன் தண்ணீர் கலந்தேதான் இருக்கும்.

இப்போது மத்து கொண்டு அதனை கடைந்தால் வெண்ணை வரும் அல்லவா – அந்த வெண்ணையை தண்ணீரில் என்னதான் கலந்தாலும் வெண்ணையும் தண்ணீரும் ஒன்று சேரவே சேராது.

கண்ணன் இந்த வெண்ணெயைத்தான் தேடி இருக்கின்றான் .

சரி என்ன சொல்ல வருகிறீர்கள் , என்கிறீர்களா ? அதைத்தான் சொல்ல வருகின்றேன்.
        
இப்போது மனிதர்களின் சுபாவத்தைப் பார்ப்போம்

மனிதனும் ஆசையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதது!

பாலும் தண்ணீரும் போல அல்லவா !!!

மனிதன் தனது பிறப்பின் நிலையை கண்டுணர்ந்து தனது பிறப்பின்
ரகசியத்தை அறிய முற்படும்போது தனது நான் யார் நான் யார் என்றெழும்பும் 
மனக்கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு தன்நிலையில் உஷ்ணப்பட்டு பதமாகி ஒரு குருவைநாடி அவரது சிட்ஷையால், தான் மனமிருகி தன்னுள் ஆழ்ந்து தன்னை தீவிர பயிற்சியில் ஆட்படுத்தும் போது ஞானம் வெளிப்படும் , ஞானம் வெளியானால் மனிதன் பூரணமான நிலை அடைகின்றான் – இப்போது ஆசை அவனை ஆட்கொள்வதில்லை – இவனை ஆட்டிவைத்த ஆசையை இவன் ஆட்டிவைக்கின்றான் – ஆசையின் மேல் சவாரி செய்கிறான்.

இங்கே

பால்  என்பது, மனிதன்

தண்ணீர் என்பது, ஆசை

பதமாக காய்ச்சுதல் என்பது, தன்னுள்ளே எழும் நான் யார் எனும் கேள்விகள்

பழைய தயிர் என்பது, ஒரு குரு

தயிர் என்பது, தான் மனமிருகுதல்

மத்து என்பது, தீவிரமான பயிற்சி

வெண்ணை என்பது, ஞானம்

இப்போது புரிகின்றதா கண்ணன் தேடியது வெண்ணையைப் போன்று 

தண்ணீரின் மேலே சவாரி செய்யும், ஆசையை வென்ற ஞானவான்களை.

ஆசையின் மேல் அமர்ந்து, அதனை அடக்கி அல்லது அதன் பாதையை மாற்றி, இறைவனை நோக்கிய பயணமாக்கும் கலையை கற்றுணர்ந்தவர்களைத்தான்அந்த மாயக்கண்ணன் தேடியிருக்கின்றான் என்பதை நானுணர்ந்தபோது என் மனம் ஆகாயத்தில் மிதந்தது.       


நாம் பார்த்த அந்த கண்ண பரமாத்மாவின் ஞானம் என்பது மிக மேலான நிலை பற்றி சொல்வது.

அந்த நிலை காண்பதற்கு மிக நாளாகலாம்.

நாம் முதலில் ஞானம் என்பதன் பொருள் காண்போம்

ஞானம் என்றால் ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை அல்லது ஒரு காரியத்தை அல்லது ஒரு நிலையை அதன் முழுமையை அறிதல் ஞானமாகும், அதற்குமேல் அதில் காண ஒன்றும் இல்லை என ஒரு முடிவில் நிலையாவது ஞானம் ஆகும். அதாவது அதனை இப்படியும் சொல்லலாம் பரிபூரணமான நிலை காண்பது எனலாம்.

     ஒரு நிலையின் ஞானம் என்பது அதன் பூரணம் காண்பதே.

பூரணம் காண்பவர்கள் முதன் முதலில் காண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதில் அனுபவம் இல்லாத காரணத்தால் முன் வரும் நிலையையே அவர்கள் பூரண நிலை என கருதிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

     ஆதலால்தான் குரு ஒருவர் துணையுடன் நாம் எதையும் அறிய முயலவேண்டும் குரு என்றால் தற்போது நாம் செல்ல நினைக்கும் அல்லது செய்ய நினைக்கும் செயலில் முன்பே அனுபவப்பட்டவர்கள்.

     ஏனென்றால் நாம் ஒன்றை பூரணம் என்று எண்ணி அதை நாம் கண்டதாக நினைத்திருப்போம், நாளடைவில் அதன் பூரணநிலைக்கான பலன்களோ அல்லது அது பூரண நிலையில்லை என வேறு ஒருவரோ நம்மிடம் சொல்லும் போது நமது மனம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் நாம் சங்கடப்பட நேரும்.

     ஞானம் என்பது ஒரு விஷயத்தின் முழு சாரமாகும். அதனை எல்லோரும் அடைய முடியும்.

என்னிடம் ஒருவர் கேட்டார் ஸ்வாமீ யாரெல்லாம் யோகநிலையின் முழுமையைக் காணமுடியும்?

நான் சொன்னேன், யாருக்கெல்லாம் உள் நாக்கு உள்ளதோ அவர்களெல்லாம் தகுதியானவர்களே ! உள் நாக்கின் உபயோகமே அதுதானே என்றேன்.

     நாமே நம்மை ஒவ்வொரு நிலைக்கும் உட்படுத்தி சோதித்து அதனை அறிந்து நாம் முழுமை அடைய வேண்டும். அதற்கு நமக்கு எதனையும் அறிந்த குரு ஒருவர் வேண்டும். அவரின் துணையோடு நாம், நாம் விரும்பும் நிலை அல்லது நாம் அறிய விரும்பும் விஷயம் அல்லது நாம் விருப்பப்படும் பூரணம் ஆகியவையை காண முற்பட வேண்டும்.

     இன்று எல்லா குருமார்களும் பணம் பண்ணும் கருவியாக, தான் கற்றுக் கொண்ட ஓரிரு வித்தைகளை வைத்துக்கொண்டு செயல் படுகிறார்கள், ஒரு முறை நான் சென்னைக்கு வந்திருந்தபோது ஒரு போஸ்டர் கண்டேன் அதில் ரூபாய் 250/- மட்டுமே! உங்களுக்கு குண்டலினியை ஆறு நிலைகளில் உயர்த்தும் யோகம் கற்றுத்தரப்படும் என்றிருந்தது.

எனக்கு பகீர் என்றிருந்தது. என்ன இது மளிகை கடை சரக்கா ஏற்றுவதற்க்கும் இறக்குவதற்கும். 

இந்த மலிவான விளம்பரங்களை கண்டு அங்கே போகும் அன்பர்களின் காசு மட்டுமே அந்த குருமார்களின் குறியாக இருக்கும். கற்றுக்கொள்பவரின் உயிர் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

     அது மட்டுமல்ல ஒரு குருதான் இந்த பூமியை காப்பாற்ற வந்ததாக சொல்வார், இன்னொருவர், தான் இந்த பூமியில் உள்ளவர்களை வழி நடத்த வந்ததாக சொல்வார், இன்னொருவர், தான்தான் அந்த          இறைவனென்று சொல்வார், இன்னொருவர், எனக்கு கோயில் கட்ட சொல்லி இறைவன் அனுப்பி உள்ளார் என்பார், இருபது அடி உயர லிங்கம் ,  அறுபது அடி உயர லிங்கம், எண்பது அடி உயர லிங்கம் என்று  சிவன் கோயில்களாக கட்டுவார்.

     நமது தேன் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருக்க அதிலே பல ஆயிரம் கோவில்கள் பராமரிப்பின்றி சிதிலமாகி வீணாகிப் போய் இருக்க இவர் புதியதாக கோவில் கட்ட என்ன அவசியமோ தெரியவில்லை, நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏழைகள், குழந்தைகள், ஊனமுற்றோர்கள், வாழ்விழந்தவர்கள், வாழ வழியற்றவர்கள் என இருக்க அவர்களின் தேவைகளுக்கு ஏதோ முடிந்ததை செய்யும்படி அவர்களுக்கு இறைவன் சொல்ல வில்லையா? கோவில்களாக குவிந்துள்ள நமது நாட்டில் புதிய கோவில் கட்ட சொல்லி கட்டளையிட்டார் என்றால் அந்த கோவில்களுக்கு எந்த நால்வர் பாடுவார்கள்? எந்த ஆழ்வார்கள் பாயிரம் பாடுவார்கள்.

இன்று அவர்களால் பாடப்பெற்ற ஸ்தலங்களே பராமரிப்பின்றி போகும் போது இவருக்குப் பின் இந்த கோவில்கள் நிலை என்னவாகும்?
    
     திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் உள்ள குளக்கரையில் ஒரு கல்வெட்டுண்டு அதில் கோவிலை நிர்மாணித்த மன்னன் எழுதி உள்ளான், என்ன தெரியுமா? இந்த கோவிலில் எங்கேனும் முளைத்துள்ள புல் பூண்டுகளை யாரேனும் அகற்றி சுத்தப்படுத்தினால் அவர்களின் பாதங்களை என் சிரம் தாங்குவதாக படிக்கும் போதே உடல் சிலிர்க்கிறதே!

அவன்தான் உண்மையான இறைவனின் தூதன்.
      
     ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரிகிறது. மக்கள் தேடல் துவக்கி விட்டார்கள். அவர்களின் ஞானத் தேடலை வைத்து இவர்கள் சுகவாழ்வுக்கான அஸ்திவாரம் போட்டுக் கொண்டார்கள். ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த சாமியார்களெல்லாம் இப்போது கோடீஸ்வரர்கள், மிக எளிமையான பணம் சம்பாதிக்கும் வழி இன்று இரண்டு. ஒன்று சாமியார் ஆவது. இரண்டு. பள்ளிக்கூடம் கட்டுவது இரண்டிலும் நாம் ஏமாந்து போகத்தான் நிறைய வாய்ப்புண்டு.       

இப்போது நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும், ஏனென்றால் இறை நம்பிக்கை இல்லாமல் கூட இருந்துவிடலாம். நம்பிக்கையுடன் இருந்து ஏமாற்றப்பட்டால் அது அவர்களை மீண்டும் இறைவழிபாட்டில் ஈடுபடவே செய்யாது. மனம் மிகவும் நொந்துவிடும்.

இவர்களிடம் சிக்காமல் இருக்கவேண்டும், தற்போதைய குருமார்கள்
கிட்டத்தட்ட ஒரு குறுநில மன்னர்களாகவே செயல்படுகிறார்கள், இவர்களைக் காண கட்டணம் வசூல் செய்கிறார்கள், அவரிடம் பேசுவதற்கு பத்தாயிரம் ரூபாய் இருபதாயிரம் ரூபாய் வரை பில் செய்யப்படுகிறது.

     அவரவர்களுக்கு ஒரு யோகாமுறைகள், அவரவர்களுக்கு ஒரு இசைமுழக்கம், அவரவர்களுக்கு ஒரு பக்தர் கூட்டம். ஒரே தமாஷ்தான்.

ஆனால் எல்லாம் ஒரே பரம்பொருளைத் தேடித்தான். ஏனிந்த பேதங்கள். இவர்கள் (குருமார்கள்) ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது கூட இல்லை. ஆனால் இறை கொள்கையாளர்கள்.

ஏன் இவர்களுக்குள் இந்த பேதம்?

இறைவனின் கொள்கையாளர்களே இப்படி பேதப்பட்டால் சாதாரணமானவர்களின் கதி என்ன?    

உண்மையை (ஞானத்தை)உணர நாம் நம்மையே

உட்படுத்தாவிடில் இவர்களின் (இந்த குருமார்களின்)

ஞானப்பந்தாட்டம் தொடரும். 

தொடர விடுவதும் விடாததும் நமது கையில்தான் உள்ளது. அடையாளம் கண்டு. . . . . 

ஒதுங்குங்கள் அல்லது ஒதுக்குங்கள். 

வாழ்த்துக்கள்.

Wednesday, April 17, 2013

வெற்றியாளன் யார்


அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

வெற்றியாளன் யார் ?

நண்பர்களே, வாழ்வியலில் நமது வெற்றிகள் பலவகையிலும் தீர்மானிக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றது.

நாம் குழந்தையாக இருந்தபோதே நமக்கு முன்பிறந்தவர்கள் , பின் பிறந்தவர் களோடு நம்மை ஒப்பிட்டு பேசி நமது செய்கைகளை கண்டு வியந்து நமது வெற்றியை தீர்மானித்தார்கள்.

“ இவனுக்கு ஒன்றரை மாசத்திலேயே தலை நின்னுடுச்சி ன்னு துவங்கி ...
“அந்த குழந்தை ஒன்றரை வருடமாச்சு பேச இவன் குழந்தையிலேயே பேச ஆரம்பிச்சுட்டான்

“அம்மான்னு இவன் கூப்புடர்தே புது தினுசுதான் “

“பாலுங்கரத பாவுன்னுதான் கேப்பான் அதுவே அழகா இருக்கும் “

ஏய் .. ஏய் .. யாரும் புடிக்காமலே நடக்கிறான் பார் “

“ஆனா ஆவன்னால்லாம் சொல்வான், எ பி சி டியே அவனுக்கு அத்துப்படி “
“இன்னும் ஸ்கூல்ல போடல- “அவுங்க அக்கா படிக்கிறத பாத்துக்கிட்டே இவன் கத்துக்கிட்டான் பிரில்லியண்ட் பையன்

“தாளம்ன்னு கேட்டுட்டாபோதும் ஒரே டான்ஸு தான் , யார்கண்டா இவன் அடுத்த பிரபு தேவாவா வந்தாலும் ஆச்சர்யப்படர்துக்கில்ல “

“ஒருதரம் சொன்னா போதுங்க! அப்பிடியே புடிச்சிக்கிறான், அப்புறம் எப்ப கேட்டாலும் அப்பிடியே சொல்றான்னு, அவுங்க டீச்சரே அதிசயமா சொல்றாங்கஎன்று சொல்லி சொல்லி படிப்படியாக நாம் வளர வளர நமது வெற்றி பலவழிகளிலும் கண்டு ஆராயப்பட்டது.

கல்வி கற்கையில் கல்வியோடு நமது ஒழுக்கமும் கணக்கிடப்பட்டு நமது வெற்றி தீர்மானமானது.

பணி தேடல் துவங்கியதும் , கல்வியுடன் , ஒழுக்கம், பணபலமும் சேர்ந்து நமது வெற்றியை தீர்மானித்தது.

திருமண வயதில் நமது வெற்றி என்பது கல்வி, ஒழுக்கம், தொழில், வருமானம், குடும்ப பின்னணி இவைகளைக் கருத்தில் கொண்டு நம்கையில் வந்து சேர்ந்தது.

திருமணத்திற்கு பின் மனைவிக்கு நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள், குழந்தைகள் , அவர்களின் கல்விக்காக சேர்த்துள்ள பள்ளி மற்றும் எதிர்காலத் திட்டங்கள், நமது  தொழில் முன்னேற்றம் , நமது வசதியின் பெருக்கம், நமது வாழ்வின் எதிர்காலத் திட்டம் போன்றவைகளை நாம் தீர்மானித்துள்ள முறைகளைக் கொண்டு நமது வெற்றி முடிவாகின்றது.

இறுதியாக நமது வாழ்வின் முடிவில், அதுவரை வாழ்வில் நாம் கடந்து வந்த பாதையில் நாம் செய்த நற்கர்மங்கள் , மற்றவர்களோடு நாம் வைத்திருந்த நல்ல பழக்கங்கள், எல்லோருக்கும் ஒரு மனிதனாக நாம் செய்த நற்பண்பு, தொண்டுகள் ஆகியவைகளைக் மனதில் கொண்டு - நாம் வாழ்நாள் முழுவதும் பெற்ற வெற்றிகளை கருத்தில் கொண்டு நமக்கு வெற்றிக்கனியாக “ அடடா ,ஒரு நல்லவனை இழந்தோமே என மற்றவர்கள் வருத்தப்ப்படும்போது “ அந்த வார்த்தைகளே நமது வெற்றிகரமான வாழ்க்கையின் சான்றாக நமக்கு தரப்படுகிறது.

ஆனால் உண்மையில் நாம் எப்போது வெற்றி பெற்றோம் தெரியுமா ?
கோடானுகோடி அணுக்களிலே ஒன்றாக இருந்த நாம் அத்தனை கோடி அணுக்களையும் பின்னுக்கு தள்ளி, ஒரு முழுவேகத்தை நம்முள் கொண்டு வந்து, அனைத்திற்கும் முன்னே சென்று வேறொரு அணு நம்மை பின் தள்ளி முந்துவதற்குள் , முட்டி மோதி உள் புகுந்து உயிர் பெற்றோமே ! அந்த புனித நாள் நினைவிருக்கின்றதா ? 

அன்றே நமது வெற்றியின் துவக்கம் துவங்கிய பொன்னாள், நன்னாள் .

அந்த நாளை நாம் எல்லோரும் மொத்தமாக மறந்துதான் போனோம் .

இல்லையென்றால் உப்புசப்பற்ற விஷயத்திற்கெல்லாம் “ நான் எடுத்த இந்த காரியமும் உருப்பட்டதே இல்லை என்று புலம்புவோமா ?

சின்ன சின்ன வெற்றி பெறாத நிகழ்ச்சிகளை கண்டு “ தோல்விதான் எனக்கென தரப்பட்டது “ என நம்மை நாமே அதைரியப்படுத்திக் கொள்வோமா ?

எதைப் பார்த்தாலும் பயந்து “ நான் தொட்டாலே எதுவும் சரியா வராது என்னை விடுங்க “ என்று சொல்லி நம்மையே நாம் தரம் தாழ்த்திக் விமர்சிப்போமா ?

நாலுபேர் நம்மைபற்றி பேசும்போது நம்மை முன்னிறுத்தி காட்டாமல் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் பதுங்குவோமா ?

எல்லாம் என்தலையெழுத்து , நானென்ன செய்வேன் என்று விதியின் பின்னே ஒளிந்து கொள்வோமா?

இப்ப நேரம் சரியில்ல , நல்ல நேரம் வரட்டும் அப்ப நான் யாருன்னு காட்டறேன்னு ஜோதிடம் - ஜாதகத்தை துணைக்கு அழைப்போமா ?

சாமிக்கித்தான் கண்ணிருக்கா இல்லையா தெரியல, மோசமானவன்ல்லாம் நல்லாருக்கான், யாருக்கும் ஒரு தப்பும் நினைக்காத எனக்குதான் அடுக்கடுக்கா ப்ரச்சினைன்னு அங்கலாய்ப்போமா  ?

சரி , நாம் ஏன் தோல்வியை தேடவேண்டும் !

ஒரு பேருண்மை தெரியுமா?

நாம் எதனை அதிகம் நேசிக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம் என்பதே உண்மை.

நாம் நினைப்பது என்னவோ சுகமான , சந்தோஷமான , நிம்மதியான வாழ்வைத்தான்.

ஆனால் நாம் அதிகம் சிந்திப்பதும், பேசுவதும் , தோல்வியும் அதன் தொடர்பான வீழ்ச்சியையும்தான் . அதனாலேயே நமது தோல்விகள் நம்மை தொடர்ந்து வருகின்றன.

காரணம் நம்மை அறியாமலேயே நாம் அவற்றை அதிகம் நேசிக்கின்றோம். எந்த நேரமும் தோல்வி , முடியாது , எனக்கு அவ்வளவுதான், என இப்படியே தானே சிந்திக்கின்றோம்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நமது சிந்தனை இப்படியே தொடர்ந்து வீழ்ச்சியின் உருவகமாக இருந்தால் அதுவே தொடர்கதையாவது நம்மாலேயே உறுதியாக்கப்பட்டு விடும்.

ஆகவே முதலில் நம்மை புரிந்து கொள்வோம். 
     
நாம் வெற்றியின் வித்து , வெற்றியின் முழு வடிவம் , வெற்றிக்கு எடுத்துக்காட்டு , வெற்றியின் அடையாளம்.

உயிருள்ள ஒவ்வொரு மனிதனுமே வெற்றியின் சின்னம் என்பதும் , நாமே  சிறந்த வெற்றியாளன் என்பதையும் என்றுமே மறக்கவேண்டாம் .

Saturday, April 6, 2013

படிப்பதும் இடிப்பதும்


அன்பு நண்பர்களே, வணக்கம்.
இந்த தலைப்பின் பெயர் படிப்பதும் இடிப்பதும்

எதுகை மோனைக்காக எழுதப்பட்ட தலைப்பு என்று எண்ண வேண்டாம்.
இது கொஞ்சம் மனஆதங்கத்துடன் தேடி சூட்டப்பட்ட தலைப்பு.
பொதுவாகவே நம்மில் பலரும் தவறாமல்  செய்யும் ஒரு காரியம் என்னவென்றால் ..

நாம் எல்லாவிதமான நல்ல விஷயங்களையும், அரிதான தகவல்களையும், பெரியோர் சொன்ன அமுதமான வார்த்தை நிறைந்த வாழ்வியல் சித்தாந்தத்தையும் ஊன்றி படிக்கின்றோம்.
படித்தவுடன் அதனை அப்படியே மனதில் வாங்கி அந்த தகவல்கள் எல்லாம் நமக்கெனவே எழுதப்பட்டதாக மனதினில் ஒரு தாக்கம் ஏற்பட்டு “அடடா , இந்த தகவல் நமது மனதினில் இருக்கும் கேள்விக்கான பதிலாகவே அமைகிறதே என்ன இயற்கையின் கருணை, எப்படியெல்லாம் இயற்கை நம்மை ஆட்கொள்கிறது என்று பலவாறாக சிந்தித்து இனி நாம் இதன்படிதான் நமது நடவடிக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் சந்தோஷித்து அன்றுமுதல் நமது பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள முயற்சி மேற்கொள்வோம்.
ஆனால் ஓரிரு நாட்களில் நமது நண்பர்களோ அல்லது நமது மனமோ நம்மைப் பார்த்து சிரித்து “ நீயென்ன இந்த உலகை மாற்றி அமைக்கவந்த மகானா ? இல்லை நீ ஒருவன் சொல்லிதான் எல்லாம் மாறப்போகிறதா ? என்னமோ நூறு வருஷம் வாழப் போறவனாட்டம் , போடா..போ..இருக்கும் வரை நல்லா இரு! யாருக்கும் தீங்கு நினைக்காதே! அது போதும் சும்மா என்னவோ பேசறான், இப்பத்தான் ஞானம் வந்தவனாட்டம் என்று நம்மை கொஞ்சம் லேசாக அசைத்தவுடன் ...
நாம் உடனே சிந்திக்கின்றோம் , ஆமாம் , இவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது ? அவுங்க சொல்றது சரிதானே ! ஏதோ நாம் சொன்ன உடன் எல்லோரும் திருந்தி உலகமே மாறப்போவது போல நாமே கற்பனையில் நினைச்சிக்கிட்டு அதுக்காக நம்மையும் வருத்தி நம்மைச் சேர்ந்தவர்களையும் வருத்தறோமே ! யாருக்கும் தீங்கு நெனைக்காம இருந்தா இதுவே பெருசு என நம்மேல் நமக்கே பரிதாபமாகி ஒரு சுய பச்சாதாபத்துடன் நம்மை நாமே பார்த்து, ஏண்டா! உனக்கு இந்த வேண்டாத வேலை , போடா போ என்று சொல்லிக் கொண்டு அன்றுடன் நாம் அதுவரை கடைபிடித்த பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்டு எப்போதும் போல் இருக்கத் துவங்குவோம்.
ஏன் இந்த மாறுதல் , அன்று படிக்கும் போது நல்லவைகளாகவும், நமக்கெனவே சொல்லப்பட்டதாகவும் தெரிந்த வாக்கியங்கள் எல்லாம் இப்போது என்னவாயிற்று ? எதனால் இந்த மாறுதல்? இதற்கான காரணம் என்ன ? வாக்கியங்களில் எந்த மாறுதலும் இல்லை, மாற்றம் நம்மிடம் வந்ததின் காரணம் என்ன ?
எந்த ஒரு செயலையும், காரியங்களையும் நாம் அதனைக் கேட்டோ, படித்தோ கடைபிடிக்கத் துவங்கினோமானால் அதனை நாம் கடைபிடிக்க என்னதான் முயன்றாலும் இயலாது போகும். காரணம் நமக்கு அது அப்போது தேவையில்லாததாகும். அதுமட்டுமல்ல, இது நமது ஆழ்மனத்தேடல் அல்ல.
சில வேளைகளில் சில நோய்களின் அறிகுறிகளை மருத்துவர்கள் சொல்லி  இதுபோன்ற அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட நோயின் அறிகுறி என்று சொன்னால் அந்த அறிகுறிகள் நம்மிடம் நிறைந்துள்ளதாகவே நமக்கு தோன்றும், ஆனால் உண்மையில் நமக்கு நோயே இல்லை, அதுபோல அந்த குறிப்புகள் படிக்கும் போது நமக்கென வந்ததாக நாமே ப்ரேமித்தோம் அவ்வளவே. ஆனால்.....
நாம் வாழ்க்கையில் அடிபட்டு , வாழ்வில் மிக நொந்து , சோர்ந்து போய் நமக்கென ஒரு பிடிப்பும் இல்லை என வரும்போது நாம் அதற்கான விடிவை உயிரைத் தேடுவதைப்போல் தேடுவோம். அப்போது நமது புறக்கண்கள் காணாது அகக்கண்களால் பார்ப்போம் , இதயம் திறந்து வைத்து காத்திருப்போம் , அதுவரை இலகுவாக கிடைத்ததெல்லாம் அப்போது கடினமாக கஷ்டப்பட்டும் கிடைக்காது , சும்மா சும்மா கண்ணில் படும் இப்ப தேடறேன் கிடைக்கலியே என புலம்புவோம், ஆனாலும் கிடைக்காது , மிக சோர்ந்து இனி தேடி பயனில்லை நமக்கு கிடைக்காது என்று சாயும் போது பாலைவன நீராய் கிடைக்கும், அது நமக்கு பானகமாய் இனிக்கும். அப்போது அதனை பின்பற்றத் துவங்கினால் அது நம்மையும் விடாது , அது விட்டாலும் நாம் அதனை விடமாட்டோம்.
லௌகீக வாழ்வில் நமக்கு பிரியமான பல பட்சணங்களை வாங்கி உண்டு மகிழ்கிறோம். அவைகளை நம்மால் அவ்வளவு எளிதில் விட்டுவிட முடிவதில்லை , காரணம் அவைகளின் மேலிருக்கும் தணியாத அவா.
ஆனால் அவைகளை நிறைய, நிறைய உண்டு விட்டால் பிறகு அவற்றை பார்த்தாலே சலித்துவிடும். அப்புறம் நாமே அதனை விரும்பி உண்டாலும் அது குமட்டிக் கொண்டு வெளியேறி விடும். இரண்டுமுறை, மூன்றுமுறை இப்படி ஆகிவிட்டால் பிறகு நாமே அதனை உண்ணாமல் விட்டு விடுவோம்.
நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு பயிற்சி அல்லது மாற்றமாக இருந்தாலும் நாம் அதற்காக துவக்க நினைக்கும் பழக்க மாற்றத்தை, தடுக்கும் நமது வேண்டாத பழக்கங்களை விட்டுவிட வேண்டுமானால், நாம் அதனை தற்காலிக நிறுத்தமாக இல்லாமல், நிரந்தர தீர்வாக நிறுத்தி விடவேண்டும், அப்படியானால் நாம் நிறுத்த நினைக்கும் விஷயத்தில், நாம் நிறைவான மனநிலையில் இருக்கவேண்டும்.
நிறைவான மனநிலையில் இல்லாமல் நீங்கள் துவங்கும் எந்த நல்ல பழக்கங்களையும் கண்டிப்பாக நீங்கள் பாதியிலேயே நிறுத்தி விடும் அபாயம் உண்டு.
காரணம் அந்த விஷயத்தில் நமது மனம் இன்னும் ஆசையை உள்வைத்து இருக்கும். அப்போது யாராவது உனக்கேன் இந்த வேலை என்று சொன்னால் உடனே நமக்குள் நம்மைப் பற்றிய சுயபச்சாதாபம் ஏற்பட்டு நம்மை மாற்றம் கொள்ளச் செய்துவிடும்.
ஏனென்றால் நாம் வலியனாக ஏற்றுக் கொண்ட நிலையில் இருந்து பழைய நிலையை எப்போது அடையலாம் என காத்துக் கொண்டிருக்கும் நமது மனம் உடனடியாக அதிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடும்.  
எனது நண்பர்கள் பலருக்கும் புலால் உண்ணலை நிறுத்தும்படி நான் எவ்வளவோ எடுத்துச் சொன்ன போதும், அதனை அவர்கள் சற்றும் சிந்தித்துக் கூட பார்க்காமல் இருந்தார்கள், இப்போது அவர்களாகவே அதனை நிறுத்தி விட்டார்கள், அவர்கள் இப்போது புலால் உண்ணுவதால் உள்ள கெடுதல்களை என்னிடம் வந்து சொல்கிறார்கள் , அப்படியா! எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இனி அவர்கள் யார் சொன்னாலும் புலாலை உண்ணமாட்டார்கள், காரணம், இது அவர்களே அவர்களுக்காக எடுத்த முடிவு. நான் சொன்ன சமயத்தில் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பார்களேயானால் மீண்டும் அவர்கள் ஒருக்கால் மாறியிருக்கலாம், காரணம் என் சொல்லுக்காக மாறியிருப்பார்கள். ஆனால் இந்த முடிவு என்பது அவர்கள் அதில் உள்ள திருப்தியில் மாற்றம் கண்டுள்ளார்கள் அல்லது மருத்துவர்களின் ஆலோசனையினால் மாற்றம் கண்டுள்ளார்கள், எதுவான போதும் இது அவர்களின் முடிவு , இது கண்டிப்பாக மாற்றம் காண முடியாதது, மாற்றம் காணாது. இது ஏற்றத்தில் ஏற்றம் காணும்.
ஒரு பழக்கடைக்காரர் எந்த நேரமும் ஏதாவது ஒரு பழத்தை தின்றுகொண்டே இருப்பதை யாராவது பார்த்துள்ளீர்களா ?
இந்த பழம் சாப்பிடுங்கள் நன்றாக இருக்கும் என்று நமக்கு ஒரு பழத்தை எடுத்து தந்துவிட்டு நாம் உண்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார் ! அவருக்கு பழம் பிடிக்காதா என்ன ? பழத்தில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர் புரிந்துகொண்டு தான் உள்ளார் , ஆனால் ஆரம்ப காலத்தில் அவர் பழங்களை சமயம் கிடைத்த போதெல்லாம் ஆசையாய் உண்டு உண்டு வந்ததனால் இன்று அவற்றின் மீது அவருக்கு ஒரு சலிப்பு வந்து விட்டது .
அதனால்தான் இன்று அவர் பழங்களைப் பார்க்கும்போதே, இந்த பழமா? இது இப்படியிருக்கும், அந்த பழமா? அது அப்படியிருக்கும் என பார்க்கும் போதே அதன் ருசி , அதன் தன்மை , தரம் எல்லாமே அவரது மனதில் வந்துவிடும், அதனால் அதன்மேல் அவருக்கு முன்பு போல பழங்களின் மீது ஆசை வருவதில்லை.
அதுபோலவே நாம் ஒன்றின் மேல் வைக்கும் அசாத்தியமான பற்றுதல் ஒருநாள் இல்லை ஒருநாள் குறைந்து போய் நாம் ஒரு அதன்மீது பற்றற்ற நிலையைக் கண்டிப்பாக காண்போம், அதுவரை யார் சொன்னாலும் , ஏன் அந்த இறைவனே நேரில் வந்து சொன்னாலும் கேட்போம்; ஆனால் செயல் படுத்தமாட்டோம். கேட்பதுபோல் கேட்டு அதனை விட்டுவிடுவோம்.
உள்ளார்ந்த நிலையில் மாற்றம் வராமல் யாரோ சொன்னார்கள் என்பதற்காக மாறும், வெளி பூச்சுக்காக பாவனையாக செய்யப்படும் மாற்றங்கள் என்றுமே நிலைக்காது.
அதனால்தான் உள்ளார்ந்து மாறுவோம்; அதுவே பூரணமான மாற்றத்தையும் அதனால் உயர்வையும், ஒளி பொருந்திய மேனியையும், பொலிவையும், முக அமைப்பையும் தரும், வாழ்வினில் பெரும் மாற்றம் நேரும் , அதனால் நமது மனநிலையும் , அதன் காரணமாக வாழ்வியல் சூழ்நிலையும் ஆனந்த நிலை காணும்.
அது இல்லாவிடில் நாம் படிப்பதும் இடிப்பதும் ஒன்றாகி நம்மை பெரும் பாபத்தில் தள்ளி விடுவதாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளது . உஷார்.
இது இராமாயணத்தை படித்துக்கொண்டே பெருமாள் கோயிலை இடிப்பதாக ஆகிவிடும், உஷார், உஷார் .                  

Related Posts Plugin for WordPress, Blogger...