என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, April 19, 2013

கண்ணனும் வெண்ணையும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பின் உள்ளங்களே, வணக்கம்.

கண்ணனும் , கண்ணன் கவர்ந்த வெண்ணையும்.

கண்ண பரமாத்மாவின் சிறுவயது லீலைகளை படிக்கும் போது ஒரு விஷயம் எல்லோரும் படிப்போம் .அதாவது கண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணையை திருடி உண்டதாகவும் , அதற்காக அந்த நந்தன் கிராமத்து மக்கள் அந்த கிராமத்தின்  தலைவனான (கண்ணனின் வளர்ப்பு தந்தையான) நந்தனிடமும் , கண்ணனின் வளர்ப்புத் தாயிடமும் புகார் சொல்வதாகவும் , அதற்காக கண்ணன் தண்டிக்கப் படுவதாகவும் சம்பவங்கள் நிறைந்து காணப்படும் .

யோசித்துப் பாருங்கள் . . . . .

நந்தனுக்கு சொந்தமான பசுக்கள் ஏராளமாக இருக்க , நந்தன் வீட்டில் இருந்துதான் கம்சனின் அரண்மனைக்கே பால் தயிர் வெண்ணை போன்றவை கொண்டு செல்கின்றார்கள் என்றிருக்க தன் வீட்டில் வெண்ணை கிடைக்காமலா அயலார் வீட்டில் திருடி இருப்பான் கண்ணன்.

மேலும் வெண்ணையை எந்த குழந்தையும் விரும்பி உண்பதில்லை , நெய்யை வேண்டுமானால் குழந்தையின் உணவில் சேர்ப்பார்கள் .

இலகுவாக பிரசவிக்க உதவும் என்பதால் வெண்ணையை கர்ப்பிணி பெண்களுக்கு பிரவச காலத்தில் கொடுப்பார்கள் .

குழந்தைகள் வெண்ணையை விரும்பி உண்பதில்லை, ஆனால் குழந்தை கண்ணன் வெண்ணையை (தன்வீட்டில் இருப்பதை உண்ணாமல் பிறர் வீட்டில் சென்று அவர்கள் இல்லாதபோது திருடி) உண்டான் என்றால் எங்கோ இடிக்கின்றதே..
                                                          
என்று கொஞ்சம் ஆ.............ழ்ந்து யோசித்தபோது புரிந்தது,

அந்த மாயவனின் தெய்வ சூட்சுமம்.

வெண்ணையை காரணியாக்கிய கோபாலனின் பிரம்ம தத்துவம்.

பாலும் தண்ணீரும் இரண்டறக் கலந்தே உள்ளதாகும்.

பாலுடன் கலந்திருக்கும் தண்ணீரை என்ன செய்தாலும் பிரிக்க முடியாது பால் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் பிரிக்கும் ஆற்றலை அன்னம் எனும் பட்சி பெற்றிருந்ததாகவும் அது பாலை குடித்துவிட்டு தண்ணீரை அப்படியே விட்டுவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன ஆனால் நாம் கண்டதில்லை அல்லவா ?

நாம் பாலுடன் உள்ள தண்ணீரை பிரிக்க என்ன செய்யவேண்டும் ?

பாலுடன் இரண்டற கலந்துள்ள தண்ணீர், பாலை விட்டு பிரிய வேண்டுமானால் பாலை பதமாக காய்ச்சி பழைய தயிரை அதில் கொஞ்சம் கலந்து வைத்தால் பால் கெட்டி தயிராக மாறும். இந்நிலையிலும் இதனுடன் தண்ணீர் கலந்தேதான் இருக்கும்.

இப்போது மத்து கொண்டு அதனை கடைந்தால் வெண்ணை வரும் அல்லவா – அந்த வெண்ணையை தண்ணீரில் என்னதான் கலந்தாலும் வெண்ணையும் தண்ணீரும் ஒன்று சேரவே சேராது.

கண்ணன் இந்த வெண்ணெயைத்தான் தேடி இருக்கின்றான் .

சரி என்ன சொல்ல வருகிறீர்கள் , என்கிறீர்களா ? அதைத்தான் சொல்ல வருகின்றேன்.
        
இப்போது மனிதர்களின் சுபாவத்தைப் பார்ப்போம்

மனிதனும் ஆசையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதது!

பாலும் தண்ணீரும் போல அல்லவா !!!

மனிதன் தனது பிறப்பின் நிலையை கண்டுணர்ந்து தனது பிறப்பின்
ரகசியத்தை அறிய முற்படும்போது தனது நான் யார் நான் யார் என்றெழும்பும் 
மனக்கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு தன்நிலையில் உஷ்ணப்பட்டு பதமாகி ஒரு குருவைநாடி அவரது சிட்ஷையால், தான் மனமிருகி தன்னுள் ஆழ்ந்து தன்னை தீவிர பயிற்சியில் ஆட்படுத்தும் போது ஞானம் வெளிப்படும் , ஞானம் வெளியானால் மனிதன் பூரணமான நிலை அடைகின்றான் – இப்போது ஆசை அவனை ஆட்கொள்வதில்லை – இவனை ஆட்டிவைத்த ஆசையை இவன் ஆட்டிவைக்கின்றான் – ஆசையின் மேல் சவாரி செய்கிறான்.

இங்கே

பால்  என்பது, மனிதன்

தண்ணீர் என்பது, ஆசை

பதமாக காய்ச்சுதல் என்பது, தன்னுள்ளே எழும் நான் யார் எனும் கேள்விகள்

பழைய தயிர் என்பது, ஒரு குரு

தயிர் என்பது, தான் மனமிருகுதல்

மத்து என்பது, தீவிரமான பயிற்சி

வெண்ணை என்பது, ஞானம்

இப்போது புரிகின்றதா கண்ணன் தேடியது வெண்ணையைப் போன்று 

தண்ணீரின் மேலே சவாரி செய்யும், ஆசையை வென்ற ஞானவான்களை.

ஆசையின் மேல் அமர்ந்து, அதனை அடக்கி அல்லது அதன் பாதையை மாற்றி, இறைவனை நோக்கிய பயணமாக்கும் கலையை கற்றுணர்ந்தவர்களைத்தான்அந்த மாயக்கண்ணன் தேடியிருக்கின்றான் என்பதை நானுணர்ந்தபோது என் மனம் ஆகாயத்தில் மிதந்தது.       


நாம் பார்த்த அந்த கண்ண பரமாத்மாவின் ஞானம் என்பது மிக மேலான நிலை பற்றி சொல்வது.

அந்த நிலை காண்பதற்கு மிக நாளாகலாம்.

நாம் முதலில் ஞானம் என்பதன் பொருள் காண்போம்

ஞானம் என்றால் ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை அல்லது ஒரு காரியத்தை அல்லது ஒரு நிலையை அதன் முழுமையை அறிதல் ஞானமாகும், அதற்குமேல் அதில் காண ஒன்றும் இல்லை என ஒரு முடிவில் நிலையாவது ஞானம் ஆகும். அதாவது அதனை இப்படியும் சொல்லலாம் பரிபூரணமான நிலை காண்பது எனலாம்.

     ஒரு நிலையின் ஞானம் என்பது அதன் பூரணம் காண்பதே.

பூரணம் காண்பவர்கள் முதன் முதலில் காண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதில் அனுபவம் இல்லாத காரணத்தால் முன் வரும் நிலையையே அவர்கள் பூரண நிலை என கருதிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

     ஆதலால்தான் குரு ஒருவர் துணையுடன் நாம் எதையும் அறிய முயலவேண்டும் குரு என்றால் தற்போது நாம் செல்ல நினைக்கும் அல்லது செய்ய நினைக்கும் செயலில் முன்பே அனுபவப்பட்டவர்கள்.

     ஏனென்றால் நாம் ஒன்றை பூரணம் என்று எண்ணி அதை நாம் கண்டதாக நினைத்திருப்போம், நாளடைவில் அதன் பூரணநிலைக்கான பலன்களோ அல்லது அது பூரண நிலையில்லை என வேறு ஒருவரோ நம்மிடம் சொல்லும் போது நமது மனம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் நாம் சங்கடப்பட நேரும்.

     ஞானம் என்பது ஒரு விஷயத்தின் முழு சாரமாகும். அதனை எல்லோரும் அடைய முடியும்.

என்னிடம் ஒருவர் கேட்டார் ஸ்வாமீ யாரெல்லாம் யோகநிலையின் முழுமையைக் காணமுடியும்?

நான் சொன்னேன், யாருக்கெல்லாம் உள் நாக்கு உள்ளதோ அவர்களெல்லாம் தகுதியானவர்களே ! உள் நாக்கின் உபயோகமே அதுதானே என்றேன்.

     நாமே நம்மை ஒவ்வொரு நிலைக்கும் உட்படுத்தி சோதித்து அதனை அறிந்து நாம் முழுமை அடைய வேண்டும். அதற்கு நமக்கு எதனையும் அறிந்த குரு ஒருவர் வேண்டும். அவரின் துணையோடு நாம், நாம் விரும்பும் நிலை அல்லது நாம் அறிய விரும்பும் விஷயம் அல்லது நாம் விருப்பப்படும் பூரணம் ஆகியவையை காண முற்பட வேண்டும்.

     இன்று எல்லா குருமார்களும் பணம் பண்ணும் கருவியாக, தான் கற்றுக் கொண்ட ஓரிரு வித்தைகளை வைத்துக்கொண்டு செயல் படுகிறார்கள், ஒரு முறை நான் சென்னைக்கு வந்திருந்தபோது ஒரு போஸ்டர் கண்டேன் அதில் ரூபாய் 250/- மட்டுமே! உங்களுக்கு குண்டலினியை ஆறு நிலைகளில் உயர்த்தும் யோகம் கற்றுத்தரப்படும் என்றிருந்தது.

எனக்கு பகீர் என்றிருந்தது. என்ன இது மளிகை கடை சரக்கா ஏற்றுவதற்க்கும் இறக்குவதற்கும். 

இந்த மலிவான விளம்பரங்களை கண்டு அங்கே போகும் அன்பர்களின் காசு மட்டுமே அந்த குருமார்களின் குறியாக இருக்கும். கற்றுக்கொள்பவரின் உயிர் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

     அது மட்டுமல்ல ஒரு குருதான் இந்த பூமியை காப்பாற்ற வந்ததாக சொல்வார், இன்னொருவர், தான் இந்த பூமியில் உள்ளவர்களை வழி நடத்த வந்ததாக சொல்வார், இன்னொருவர், தான்தான் அந்த          இறைவனென்று சொல்வார், இன்னொருவர், எனக்கு கோயில் கட்ட சொல்லி இறைவன் அனுப்பி உள்ளார் என்பார், இருபது அடி உயர லிங்கம் ,  அறுபது அடி உயர லிங்கம், எண்பது அடி உயர லிங்கம் என்று  சிவன் கோயில்களாக கட்டுவார்.

     நமது தேன் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இருக்க அதிலே பல ஆயிரம் கோவில்கள் பராமரிப்பின்றி சிதிலமாகி வீணாகிப் போய் இருக்க இவர் புதியதாக கோவில் கட்ட என்ன அவசியமோ தெரியவில்லை, நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏழைகள், குழந்தைகள், ஊனமுற்றோர்கள், வாழ்விழந்தவர்கள், வாழ வழியற்றவர்கள் என இருக்க அவர்களின் தேவைகளுக்கு ஏதோ முடிந்ததை செய்யும்படி அவர்களுக்கு இறைவன் சொல்ல வில்லையா? கோவில்களாக குவிந்துள்ள நமது நாட்டில் புதிய கோவில் கட்ட சொல்லி கட்டளையிட்டார் என்றால் அந்த கோவில்களுக்கு எந்த நால்வர் பாடுவார்கள்? எந்த ஆழ்வார்கள் பாயிரம் பாடுவார்கள்.

இன்று அவர்களால் பாடப்பெற்ற ஸ்தலங்களே பராமரிப்பின்றி போகும் போது இவருக்குப் பின் இந்த கோவில்கள் நிலை என்னவாகும்?
    
     திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் உள்ள குளக்கரையில் ஒரு கல்வெட்டுண்டு அதில் கோவிலை நிர்மாணித்த மன்னன் எழுதி உள்ளான், என்ன தெரியுமா? இந்த கோவிலில் எங்கேனும் முளைத்துள்ள புல் பூண்டுகளை யாரேனும் அகற்றி சுத்தப்படுத்தினால் அவர்களின் பாதங்களை என் சிரம் தாங்குவதாக படிக்கும் போதே உடல் சிலிர்க்கிறதே!

அவன்தான் உண்மையான இறைவனின் தூதன்.
      
     ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரிகிறது. மக்கள் தேடல் துவக்கி விட்டார்கள். அவர்களின் ஞானத் தேடலை வைத்து இவர்கள் சுகவாழ்வுக்கான அஸ்திவாரம் போட்டுக் கொண்டார்கள். ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த சாமியார்களெல்லாம் இப்போது கோடீஸ்வரர்கள், மிக எளிமையான பணம் சம்பாதிக்கும் வழி இன்று இரண்டு. ஒன்று சாமியார் ஆவது. இரண்டு. பள்ளிக்கூடம் கட்டுவது இரண்டிலும் நாம் ஏமாந்து போகத்தான் நிறைய வாய்ப்புண்டு.       

இப்போது நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும், ஏனென்றால் இறை நம்பிக்கை இல்லாமல் கூட இருந்துவிடலாம். நம்பிக்கையுடன் இருந்து ஏமாற்றப்பட்டால் அது அவர்களை மீண்டும் இறைவழிபாட்டில் ஈடுபடவே செய்யாது. மனம் மிகவும் நொந்துவிடும்.

இவர்களிடம் சிக்காமல் இருக்கவேண்டும், தற்போதைய குருமார்கள்
கிட்டத்தட்ட ஒரு குறுநில மன்னர்களாகவே செயல்படுகிறார்கள், இவர்களைக் காண கட்டணம் வசூல் செய்கிறார்கள், அவரிடம் பேசுவதற்கு பத்தாயிரம் ரூபாய் இருபதாயிரம் ரூபாய் வரை பில் செய்யப்படுகிறது.

     அவரவர்களுக்கு ஒரு யோகாமுறைகள், அவரவர்களுக்கு ஒரு இசைமுழக்கம், அவரவர்களுக்கு ஒரு பக்தர் கூட்டம். ஒரே தமாஷ்தான்.

ஆனால் எல்லாம் ஒரே பரம்பொருளைத் தேடித்தான். ஏனிந்த பேதங்கள். இவர்கள் (குருமார்கள்) ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது கூட இல்லை. ஆனால் இறை கொள்கையாளர்கள்.

ஏன் இவர்களுக்குள் இந்த பேதம்?

இறைவனின் கொள்கையாளர்களே இப்படி பேதப்பட்டால் சாதாரணமானவர்களின் கதி என்ன?    

உண்மையை (ஞானத்தை)உணர நாம் நம்மையே

உட்படுத்தாவிடில் இவர்களின் (இந்த குருமார்களின்)

ஞானப்பந்தாட்டம் தொடரும். 

தொடர விடுவதும் விடாததும் நமது கையில்தான் உள்ளது. அடையாளம் கண்டு. . . . . 

ஒதுங்குங்கள் அல்லது ஒதுக்குங்கள். 

வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...