என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, April 6, 2013

படிப்பதும் இடிப்பதும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பு நண்பர்களே, வணக்கம்.
இந்த தலைப்பின் பெயர் படிப்பதும் இடிப்பதும்

எதுகை மோனைக்காக எழுதப்பட்ட தலைப்பு என்று எண்ண வேண்டாம்.
இது கொஞ்சம் மனஆதங்கத்துடன் தேடி சூட்டப்பட்ட தலைப்பு.
பொதுவாகவே நம்மில் பலரும் தவறாமல்  செய்யும் ஒரு காரியம் என்னவென்றால் ..

நாம் எல்லாவிதமான நல்ல விஷயங்களையும், அரிதான தகவல்களையும், பெரியோர் சொன்ன அமுதமான வார்த்தை நிறைந்த வாழ்வியல் சித்தாந்தத்தையும் ஊன்றி படிக்கின்றோம்.
படித்தவுடன் அதனை அப்படியே மனதில் வாங்கி அந்த தகவல்கள் எல்லாம் நமக்கெனவே எழுதப்பட்டதாக மனதினில் ஒரு தாக்கம் ஏற்பட்டு “அடடா , இந்த தகவல் நமது மனதினில் இருக்கும் கேள்விக்கான பதிலாகவே அமைகிறதே என்ன இயற்கையின் கருணை, எப்படியெல்லாம் இயற்கை நம்மை ஆட்கொள்கிறது என்று பலவாறாக சிந்தித்து இனி நாம் இதன்படிதான் நமது நடவடிக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் சந்தோஷித்து அன்றுமுதல் நமது பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள முயற்சி மேற்கொள்வோம்.
ஆனால் ஓரிரு நாட்களில் நமது நண்பர்களோ அல்லது நமது மனமோ நம்மைப் பார்த்து சிரித்து “ நீயென்ன இந்த உலகை மாற்றி அமைக்கவந்த மகானா ? இல்லை நீ ஒருவன் சொல்லிதான் எல்லாம் மாறப்போகிறதா ? என்னமோ நூறு வருஷம் வாழப் போறவனாட்டம் , போடா..போ..இருக்கும் வரை நல்லா இரு! யாருக்கும் தீங்கு நினைக்காதே! அது போதும் சும்மா என்னவோ பேசறான், இப்பத்தான் ஞானம் வந்தவனாட்டம் என்று நம்மை கொஞ்சம் லேசாக அசைத்தவுடன் ...
நாம் உடனே சிந்திக்கின்றோம் , ஆமாம் , இவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது ? அவுங்க சொல்றது சரிதானே ! ஏதோ நாம் சொன்ன உடன் எல்லோரும் திருந்தி உலகமே மாறப்போவது போல நாமே கற்பனையில் நினைச்சிக்கிட்டு அதுக்காக நம்மையும் வருத்தி நம்மைச் சேர்ந்தவர்களையும் வருத்தறோமே ! யாருக்கும் தீங்கு நெனைக்காம இருந்தா இதுவே பெருசு என நம்மேல் நமக்கே பரிதாபமாகி ஒரு சுய பச்சாதாபத்துடன் நம்மை நாமே பார்த்து, ஏண்டா! உனக்கு இந்த வேண்டாத வேலை , போடா போ என்று சொல்லிக் கொண்டு அன்றுடன் நாம் அதுவரை கடைபிடித்த பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்டு எப்போதும் போல் இருக்கத் துவங்குவோம்.
ஏன் இந்த மாறுதல் , அன்று படிக்கும் போது நல்லவைகளாகவும், நமக்கெனவே சொல்லப்பட்டதாகவும் தெரிந்த வாக்கியங்கள் எல்லாம் இப்போது என்னவாயிற்று ? எதனால் இந்த மாறுதல்? இதற்கான காரணம் என்ன ? வாக்கியங்களில் எந்த மாறுதலும் இல்லை, மாற்றம் நம்மிடம் வந்ததின் காரணம் என்ன ?
எந்த ஒரு செயலையும், காரியங்களையும் நாம் அதனைக் கேட்டோ, படித்தோ கடைபிடிக்கத் துவங்கினோமானால் அதனை நாம் கடைபிடிக்க என்னதான் முயன்றாலும் இயலாது போகும். காரணம் நமக்கு அது அப்போது தேவையில்லாததாகும். அதுமட்டுமல்ல, இது நமது ஆழ்மனத்தேடல் அல்ல.
சில வேளைகளில் சில நோய்களின் அறிகுறிகளை மருத்துவர்கள் சொல்லி  இதுபோன்ற அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட நோயின் அறிகுறி என்று சொன்னால் அந்த அறிகுறிகள் நம்மிடம் நிறைந்துள்ளதாகவே நமக்கு தோன்றும், ஆனால் உண்மையில் நமக்கு நோயே இல்லை, அதுபோல அந்த குறிப்புகள் படிக்கும் போது நமக்கென வந்ததாக நாமே ப்ரேமித்தோம் அவ்வளவே. ஆனால்.....
நாம் வாழ்க்கையில் அடிபட்டு , வாழ்வில் மிக நொந்து , சோர்ந்து போய் நமக்கென ஒரு பிடிப்பும் இல்லை என வரும்போது நாம் அதற்கான விடிவை உயிரைத் தேடுவதைப்போல் தேடுவோம். அப்போது நமது புறக்கண்கள் காணாது அகக்கண்களால் பார்ப்போம் , இதயம் திறந்து வைத்து காத்திருப்போம் , அதுவரை இலகுவாக கிடைத்ததெல்லாம் அப்போது கடினமாக கஷ்டப்பட்டும் கிடைக்காது , சும்மா சும்மா கண்ணில் படும் இப்ப தேடறேன் கிடைக்கலியே என புலம்புவோம், ஆனாலும் கிடைக்காது , மிக சோர்ந்து இனி தேடி பயனில்லை நமக்கு கிடைக்காது என்று சாயும் போது பாலைவன நீராய் கிடைக்கும், அது நமக்கு பானகமாய் இனிக்கும். அப்போது அதனை பின்பற்றத் துவங்கினால் அது நம்மையும் விடாது , அது விட்டாலும் நாம் அதனை விடமாட்டோம்.
லௌகீக வாழ்வில் நமக்கு பிரியமான பல பட்சணங்களை வாங்கி உண்டு மகிழ்கிறோம். அவைகளை நம்மால் அவ்வளவு எளிதில் விட்டுவிட முடிவதில்லை , காரணம் அவைகளின் மேலிருக்கும் தணியாத அவா.
ஆனால் அவைகளை நிறைய, நிறைய உண்டு விட்டால் பிறகு அவற்றை பார்த்தாலே சலித்துவிடும். அப்புறம் நாமே அதனை விரும்பி உண்டாலும் அது குமட்டிக் கொண்டு வெளியேறி விடும். இரண்டுமுறை, மூன்றுமுறை இப்படி ஆகிவிட்டால் பிறகு நாமே அதனை உண்ணாமல் விட்டு விடுவோம்.
நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு பயிற்சி அல்லது மாற்றமாக இருந்தாலும் நாம் அதற்காக துவக்க நினைக்கும் பழக்க மாற்றத்தை, தடுக்கும் நமது வேண்டாத பழக்கங்களை விட்டுவிட வேண்டுமானால், நாம் அதனை தற்காலிக நிறுத்தமாக இல்லாமல், நிரந்தர தீர்வாக நிறுத்தி விடவேண்டும், அப்படியானால் நாம் நிறுத்த நினைக்கும் விஷயத்தில், நாம் நிறைவான மனநிலையில் இருக்கவேண்டும்.
நிறைவான மனநிலையில் இல்லாமல் நீங்கள் துவங்கும் எந்த நல்ல பழக்கங்களையும் கண்டிப்பாக நீங்கள் பாதியிலேயே நிறுத்தி விடும் அபாயம் உண்டு.
காரணம் அந்த விஷயத்தில் நமது மனம் இன்னும் ஆசையை உள்வைத்து இருக்கும். அப்போது யாராவது உனக்கேன் இந்த வேலை என்று சொன்னால் உடனே நமக்குள் நம்மைப் பற்றிய சுயபச்சாதாபம் ஏற்பட்டு நம்மை மாற்றம் கொள்ளச் செய்துவிடும்.
ஏனென்றால் நாம் வலியனாக ஏற்றுக் கொண்ட நிலையில் இருந்து பழைய நிலையை எப்போது அடையலாம் என காத்துக் கொண்டிருக்கும் நமது மனம் உடனடியாக அதிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடும்.  
எனது நண்பர்கள் பலருக்கும் புலால் உண்ணலை நிறுத்தும்படி நான் எவ்வளவோ எடுத்துச் சொன்ன போதும், அதனை அவர்கள் சற்றும் சிந்தித்துக் கூட பார்க்காமல் இருந்தார்கள், இப்போது அவர்களாகவே அதனை நிறுத்தி விட்டார்கள், அவர்கள் இப்போது புலால் உண்ணுவதால் உள்ள கெடுதல்களை என்னிடம் வந்து சொல்கிறார்கள் , அப்படியா! எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இனி அவர்கள் யார் சொன்னாலும் புலாலை உண்ணமாட்டார்கள், காரணம், இது அவர்களே அவர்களுக்காக எடுத்த முடிவு. நான் சொன்ன சமயத்தில் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பார்களேயானால் மீண்டும் அவர்கள் ஒருக்கால் மாறியிருக்கலாம், காரணம் என் சொல்லுக்காக மாறியிருப்பார்கள். ஆனால் இந்த முடிவு என்பது அவர்கள் அதில் உள்ள திருப்தியில் மாற்றம் கண்டுள்ளார்கள் அல்லது மருத்துவர்களின் ஆலோசனையினால் மாற்றம் கண்டுள்ளார்கள், எதுவான போதும் இது அவர்களின் முடிவு , இது கண்டிப்பாக மாற்றம் காண முடியாதது, மாற்றம் காணாது. இது ஏற்றத்தில் ஏற்றம் காணும்.
ஒரு பழக்கடைக்காரர் எந்த நேரமும் ஏதாவது ஒரு பழத்தை தின்றுகொண்டே இருப்பதை யாராவது பார்த்துள்ளீர்களா ?
இந்த பழம் சாப்பிடுங்கள் நன்றாக இருக்கும் என்று நமக்கு ஒரு பழத்தை எடுத்து தந்துவிட்டு நாம் உண்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார் ! அவருக்கு பழம் பிடிக்காதா என்ன ? பழத்தில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர் புரிந்துகொண்டு தான் உள்ளார் , ஆனால் ஆரம்ப காலத்தில் அவர் பழங்களை சமயம் கிடைத்த போதெல்லாம் ஆசையாய் உண்டு உண்டு வந்ததனால் இன்று அவற்றின் மீது அவருக்கு ஒரு சலிப்பு வந்து விட்டது .
அதனால்தான் இன்று அவர் பழங்களைப் பார்க்கும்போதே, இந்த பழமா? இது இப்படியிருக்கும், அந்த பழமா? அது அப்படியிருக்கும் என பார்க்கும் போதே அதன் ருசி , அதன் தன்மை , தரம் எல்லாமே அவரது மனதில் வந்துவிடும், அதனால் அதன்மேல் அவருக்கு முன்பு போல பழங்களின் மீது ஆசை வருவதில்லை.
அதுபோலவே நாம் ஒன்றின் மேல் வைக்கும் அசாத்தியமான பற்றுதல் ஒருநாள் இல்லை ஒருநாள் குறைந்து போய் நாம் ஒரு அதன்மீது பற்றற்ற நிலையைக் கண்டிப்பாக காண்போம், அதுவரை யார் சொன்னாலும் , ஏன் அந்த இறைவனே நேரில் வந்து சொன்னாலும் கேட்போம்; ஆனால் செயல் படுத்தமாட்டோம். கேட்பதுபோல் கேட்டு அதனை விட்டுவிடுவோம்.
உள்ளார்ந்த நிலையில் மாற்றம் வராமல் யாரோ சொன்னார்கள் என்பதற்காக மாறும், வெளி பூச்சுக்காக பாவனையாக செய்யப்படும் மாற்றங்கள் என்றுமே நிலைக்காது.
அதனால்தான் உள்ளார்ந்து மாறுவோம்; அதுவே பூரணமான மாற்றத்தையும் அதனால் உயர்வையும், ஒளி பொருந்திய மேனியையும், பொலிவையும், முக அமைப்பையும் தரும், வாழ்வினில் பெரும் மாற்றம் நேரும் , அதனால் நமது மனநிலையும் , அதன் காரணமாக வாழ்வியல் சூழ்நிலையும் ஆனந்த நிலை காணும்.
அது இல்லாவிடில் நாம் படிப்பதும் இடிப்பதும் ஒன்றாகி நம்மை பெரும் பாபத்தில் தள்ளி விடுவதாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளது . உஷார்.
இது இராமாயணத்தை படித்துக்கொண்டே பெருமாள் கோயிலை இடிப்பதாக ஆகிவிடும், உஷார், உஷார் .                  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...