என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, April 2, 2013

வழிச்செலவும் , கையிருப்பும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.
வழிச்செலவும் கையிருப்பும்.

நாம் செல்லும் பயணத்தின் தன்மைக்கேற்ப வழிச்செலவு மாறுபடுகிறது. நீண்டகால பயணமாக இருந்தால் நிறைந்த அளவும், குறுகியகால பயணத் திட்டமாக இருக்குமானால் குறைந்த அளவும் வழிச்செலவுகள் அமைகின்றன.

பெரும்பான்மையான பயணங்களில் நமது வழிச்செலவு நமது திட்டத்தை மீறியதாகவும் அமைந்துவிடும் , ஒரு சில பயணங்களில் நமது வழிச்செலவு குறைந்ததாகி மிச்சப்படுவதும் நேர்வதுண்டு, ஆனால் இது அடிக்கடி நேர்வதல்ல.

முன்பெல்லாம் வழிச்செலவு கையிருப்பை மீறும் போது நமது மதிப்புமிக்க பொருட்களை விற்பனை செய்து கையிருப்பை அதிகரிக்கச் செய்து சரிசெய்து கொள்வோம் .

கையிருப்பு என்பது நாம் நமது வாழ்நாளில் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் செலவுகளை குறைத்தும், செலவுகள் செய்யாமலும் மீதப்படுத்தியதாகும் . இதனை எழுதுவது இலகுவாக இருந்தாலும் எத்தனை கடினமானது என்பது கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும் .

ஆனால் தற்போது வழிச்செலவானது நமது கையிருப்பை காணாமல் செய்யும்போது ATM, Credit Card , Debit Card  என்று ஏதேதோ வந்து விட்டதால் கையிருப்பைப் பற்றி கவலைப்படாமல் வழிச்செலவு செய்யலாம் எனும் ஒரு நிலை வந்துவிட்டது.

முன்னிருந்த நிலையில் கையிருப்பை எண்ணி வழிச்செலவு செய்யும் போது கொஞ்சம் யோசனையுடன் வழிச்செலவை செய்வோம் , ஆனால் மேலே சொன்ன சில புது யுக்திகளால் மனிதர்கள் கொஞ்சமும் கவலையின்றி வழிச்செலவும் , வாழ்க்கைச் செலவையும் செய்து மகிழ்கின்றனர்.

இந்த ATM மற்றும் Debit Card ல் உள்ள ஒரு வசதி என்னவென்றால் நம்மிடம் கையிருப்பு இருந்தால்தான் நமது வழிச்செலவை நாம் செய்துகொள்ள இயலும். கையிருப்பு இல்லாமல் போனால் செலவு செய்ய முடியாது .

ஆனால் Credit Card - உள்ளதே அது நம்மை மீண்டும் மீண்டும் அதன் பக்கமாகவே இழுக்கச் செய்து நம்மை ஒரு மீளாத சிக்கலில் சிக்கவைத்து விடும், நமது கையிருப்பு இல்லாத போதும் நமக்கு வழிச்செலவுக்கு வேண்டியவை கிடைப்பதால் நாம் கையிருப்பைப் பற்றி துளியும் கவலையின்றி Credit Card- ல் எடுத்துக் கொள்ளலாம் என்று பலவகையிலும் வேண்டியவை, வேண்டாதவை என பாகுபாடின்றி எல்லாவற்றையும் இந்த Credit Card -டினை பயன்படுத்தி பெற்றுக் கொள்வதால் அது ஒரு நாளில் பூதாகரமாக உருவெடுத்து நிற்கும்போது செய்வதறியாது திகைத்துப் போய் திண்டாடுகிறோம்.
காரணம் நமது கையிருப்பென்பது நமது கடின உழைப்பின் வெற்றியாகும்.

இந்த Credit Card என்பது நமது திறமையை முன் நிறுத்தி அதன் அடிப்படையில் கிடைப்பது மாயயை போன்றது . அதனால்தான் நாம் பெற்ற பணம் அவர்களுக்கு திரும்ப கிடைக்க தாமதம் ஆகும் போது அங்கே நமது திறமை, மதிப்பு, பெயர், பதவி எல்லாம் போய் கடனாளியாக மட்டுமே நாம் பார்க்கப்படுகின்றோம்.

இப்படி நமது கையிருப்பு எவ்வளவாக இருந்த போதிலும் , நமது வழிச்செலவுகளால் அது குறையும் என்பதையும் , மேலேகண்ட Credit Card மூலமாக நமது வழிச்செலவை செய்துகொள்ள முற்பட்டால் அது நமது பிற்கால வாழ்வின் போக்கினை மாற்றும் வல்லமையை கொண்டுள்ளதையும் அறிகிறோம்.

குறையாத கையிருப்பு கொண்டுள்ளவர்கள் யாரும் இல்லை என்பதை மிக தெளிவாக புரிந்து கொண்டோம்.

சரி இந்த பூலோக வாழ்வில் வாழும் போதே நமக்கு கையிருப்பு இல்லாத நிலை உருவாகின்றதே!
கையிருப்பென ஒன்றுமே கொண்டுபோக முடியாத பயண நிலையை அடைவோமே`; அப்போது நம்மால் எதையுமே கொண்டு போக முடியாதே அப்போது நம் கையிருப்பும், மனைவியும், குழந்தைகளும், உற்றாரும் ,பெற்றோரும் , நண்பர்களும் , பதவியும், அந்தஸ்தும், கார்களும், பங்களாக்களும் , நிலங்களும் இங்கேயே விட்டுவிட்டு ஏதுமற்ற அனாதையைப் போல் வழிச்செலவிற்கு ஏதுமின்றி ஒரு பிச்சைக்காரனைப் போல் பயணம் செல்வோமே! அதை நினைத்துப் பார்த்தோமா ? நமக்கு அந்த நிலை வராதா என்ன ?

ஒரு கதை ஒன்று நினைவில் வருகிறது , சொல்கிறேன் .

ஒரு பெரிய பணக்காரன் இருந்தான் , அவன் ஒரு சாதாரணமானவன் . ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான், யாரேனும் உதவி கேட்டால் உன் தலையெழுத்து அனுபவி நான் ஏதும் தரமாட்டேன் என்று அனுப்பிவிடுவான் .அவனிடம் ஒரு கார் இருந்தது , அதற்கு காரோட்டியை வேலைக்கு வைத்திருந்தான் , அவனுக்கு மிக சொற்பமாக ஊதியம் தந்து அவனை வேலைக்கு வைத்திருந்தான். அந்த காரோட்டி மிக குறைவான சம்பளம் பெற்ற போதும் அதில் ஒரு சிறுபகுதியை தானம் செய்து வந்தான்.

இந்நிலையில் ஒருநாள் அந்த பணக்காரனிடம் ஒரு ஏழைக்குழந்தை நோட்டு புத்தகம் வாங்குவதற்காக “ஐயா ஐயா , ஒரு நோட்டு புத்தகம் வாங்கணும் ஏதாவது காசு தாருங்கள் எனக் கேட்டது. பணக்காரன் என்ன நினைத்தானோ தெரியவில்லை கொஞ்சம் காசுகளை அந்த ஏழைக் குழந்தைக்கு கொடுத்தான்.

இதனைப் பார்த்த அந்த காரோட்டி , முதலாளி அந்த குழந்தைக்கு ரூபாய் தந்ததற்கு மிகவும் நன்றி என்று கூறினான் , அதற்கு முதலாளி, டேய் , அதெல்லாம் ஒன்றுமில்லை அந்த புள்ள சோத்துக்கு கேக்கல , நோட்டு புத்தகம்னுச்சி , மனச என்னமோ பண்ணுச்சி அதான் என்றான்.

இதெல்லாம் முடிந்து கொஞ்ச நாளில் ஒரு ஆக்சிடெண்ட்டில் இருவரும் சேர்ந்தே இறந்து போனார்கள் . இருவரையும் அழைத்து சென்ற தேவதூதர்கள் ஓரிடத்தில் நிற்க சொல்லி சென்றார்கள் . இருவரும் அங்கே இருந்த இடத்தை சுற்றிப் பார்வையை கொண்டு சென்றார்கள். அங்கே ஒரு மாளிகையும் , அதன் அருகே ஒரு சிறு கொட்டகையும் இருந்தது. அந்த இடமே நல்ல காற்றோட்டமாகவும், அழகாகவும் இருந்தது.

சற்று நேரத்தில் சென்றிருந்த தேவதூதர்கள் திரும்பி வந்து நீங்கள் தங்கும் இடம் இதுதான், இதற்குரிய சாவிகளை வாங்கிவரத்தான் சென்றோம் என்று சொல்லியபடி இருவரையும் அழைத்துப் போனார்கள். சிலர் பணக்காரனையும், சிலர் காரோட்டியையும் அழைத்து சென்றனர் .

மாளிகை இருக்கும் இடத்தை நோக்கி காரோட்டியையும் , சிறு கொட்டகை இருக்கும் திசையை நோக்கி பணக்காரனையும் அழைத்துச் செல்ல பதறிப் போனான் பணக்காரன் , அவனைவிட அதிகமாக பதறினான் காரோட்டி.

பணக்காரன், அவன் எனது காரோட்டி, நான்தான் செல்வந்தன், எனக்குத்தான் மாளிகைவாசம் , இவன் கூலிக்காரன் ,இவனுக்கு இது போன்ற மாளிகையில் வாழவே தெரியாது ஆகவே, என்னை மாளிகைக்கு அழைத்துச் செல்லுங்கள் என உறுதியான குரலில் உத்திரவிட்டான் தேவ தூதர்களுக்கு.

காரோட்டியும், ஐயா அவர் எனது முதலாளி , அவர் சுகபோகமாக வாழ்ந்தவர் அவர்க்கு மாளிகையை தந்துவிடுங்கள், எனக்கு இந்த கொட்டகையே போதும் மேலும் எனக்கு இது ஒன்றும் புதிதல்ல , எனது வீடு இதனின்றும் மிகச் சிறியது இதுவே எனக்கு போதும் என்று தேவதூதர்களிடம் கெஞ்சினான்.

இல்லையில்லை, இது எங்களுக்கு இடப்பட்ட ஆணை , இதனை மீற முடியாது என உறுதியாக கூறினார்கள்  தேவதூதர்கள்.

நியாயம் இல்லாத இந்த ஆணையை பிறப்பித்தவரை நான் உடனே காண வேண்டும் , ஏன் இந்த தவறான ஆணை என நான் கேட்கவேண்டும். என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என பணக்காரன் கூற, இருவரையும் நியாயவாதியிடம் அழைத்துச் சென்றனர் அந்த தேவதூதர்கள்.  

இப்படி ஒரு அநியாயமான ஆணையை எப்படி உங்களால் பிறப்பிக்க முடிந்தது ?  இதுதான் உங்கள் நீதியா ? என்று நியாயவாதியைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான் அந்த பணக்காரன்.

மிக அமைதியாக நியாயவாதி பதில் தந்தார் , அய்யா, பணக்காரரே, கேளும் .

இங்கே எந்தவிதமான பொருட்களும் கிடையாது , நாங்கள் வாங்கி வரவும் முடியாது , பூமியில் நீங்கள் செய்கின்ற தானங்கள் இங்கே வரும்போதே உங்களுக்கேற்றவாறு வந்து விடுகின்றன. இதோ இந்த காரோட்டி நிறைய தானங்கள் செய்திருக்கிறார் , அவரது தானங்கள் முதலில் இப்படி ஒரு கொட்டகையாக இருந்து, அவர் தானங்கள் செய்ய செய்ய கொஞ்சம் கொஞ்சமாக அதுவாகவே மாற்றம் கண்டு இன்று நீங்கள் காணும் பெரும் மாளிகையாகி நிற்கின்றது , ஆனால் நீங்கள் ஒரு ஏழைக்கு செய்த ஒரே ஒரு தானம் இங்கு ஒரு கொட்டகையாகி இருக்கிறது, நீங்கள் மேலும் ஏதாவது தானம் செய்திருந்தால் இது மாற்றம் கண்டிருக்கும், ஆனால் நீங்கள் எதுவும் செய்யவில்லை, அதனால் இது இன்னும் கொட்டகையாகவே இருக்கின்றது. இதில் எங்கள் பங்கோ, பணியோ ஒன்றுமில்லை. நீங்கள் வரும்போது அதற்குரிய சாவிகளை தந்து உங்கள் இருப்பிடத்தை உங்களுக்கு காட்டுவதுதான் எங்கள் பணி , இனி அவரவர்கள் இருப்பிடம் செல்லுங்கள் என நியாயவாதி மிகக் கண்டிப்புடன் கூற தலையை குனிந்து கொண்டே தேவ தூதர்களின் பின் சென்றான் அந்த பணக்காரன், அவர்களைப் பின் தொடர்ந்தான் காரோட்டி.

இன்னும் ஒரு நிகழ்வு :

எல்லாவித போகங்களையும் , செல்வங்களையும் , பதவியையும் , புகழையும் தனதாக்கிக் கொண்ட மாவீரன் நெப்போலியன், தனது உடல் அடக்கம் செய்யப்பட போகும்போது, தனது இரண்டு கரங்களையும் சவப்பெட்டியின் வெளியே தெரியும்படி கொண்டு செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான், காரணம் பல நாடுகளையும் , செல்வங்களையும் உரிமையாக்கிக் கொண்ட மாவீரன் நெப்போலியன் தன்னுடன் எதையும் கொண்டு செல்லவில்லை , இங்கிருந்து எதையும் யாரும் கொண்டு செல்ல முடியாது என மக்களுக்கு புரிய வைக்கவேண்டும் என ஆசைப்பட்டான் என மாவீரன் நெப்போலியனின் சரித்திரம் கூறுகிறது .
எல்லாவற்றையும் படிக்கத்தான் செய்கிறோம் ஆனால் எதையும் உள் வாங்குவதில்லை , அனைத்து விஷயங்களுக்கும் நாம் மட்டும் விதிவிலக்கு என்பதாக நினைத்துக் கொள்கிறோம். மற்றவர்களின் வாழ்வு நமக்கான பாடம் என்று நினைவில் கொள்ளவேண்டும்.

வாழ்வின் எல்லா விபரத்தையும் நாம் அனுபவித்துத்தான் ஒப்புக்கொள்வது முடியாததாகும்.

அனுபவச்சொல் மாத்திரையைப்போல் கொஞ்சம் கசக்கும். ஆனால் நாமே அனுபவிப்பது என்பது அறுவை சிகிச்சையைப்போல வலியும் இருக்கும் , சில அவயங்களை இழக்கவும் நேரும்.

வாழும்போது நாம் சேர்த்து வைக்கும் கையிருப்பு என்பது இங்கேயே காணாமல் போய்விடும் – ஆனால் நமது புண்ணியங்களும் , நல்லோரின் ஆசீர்வாதமும் நம்மை என்றும் எங்கும் தொடர்ந்து வந்து காக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இனி உங்கள் கையிருப்பை கூட்டுங்கள் , வழிச்செலவு சுகமாகும். வாழ்த்துக்கள் .

             

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...